Tamil Haiku in Universal Languages book review written by C Tamilraj

மு.முருகேஷின் “தமிழ் ஹைகூ அப்துல் ரகுமான் முதல் மித்ரா வரை”

தமிழ் கவிதை உலகம் சங்கத்தமிழ் துவங்கி நவீன வாமன வடிவமான ஹைகூ கவிதை வரை யாவற்றையும் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஓரடியில் அவ்வை, ஈரடியில் வள்ளுவர், மூவடியில் ஹைகூவையும் ஆரத்தழுவியதில் வியப்பேதுமில்லை. அதன் ஆதி அந்த வரலாற்றை 20 கட்டுரைகளில் நமக்கு எளிய
முறையில் புரிய வைத்துள்ளார் மு.முருகேஷ் அவர்கள். ஹைகூ கவிதை உலகில் மிகப்பெரிய இளையோர் படையை கட்டி எழுப்பியதில்
மு.முருகேஷ் அவர்களுக்கு பெரும் பங்குண்டு. ஹைகூ கவிதையை பெரும் இயக்கமாக ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழி நடத்தி செல்கிறார். இவரால் உருவான ஹைகூ கவிஞர்களை தொகுத்தால் அனுமார் வாலாய் விரியும். அந்த வகையில் ஜப்பானில் தோன்றிய இந்த வாமன வடிவம் வந்த வரலாற்றை ஆதாரபூர்வமாய் தொகுத்து தந்துள்ளார். தமிழில் உள்ள கவிதை வரலாற்றை எழுதவே பாடுபடும் சூழலில் ஜப்பானிய கவிஞர்களை கண்டறிந்து எழுதியது மிகுந்த
ஆச்சர்யமாக உள்ளது. ஏழைதாசன் எனும் சிற்றிதழில் எழுதிய கட்டுரைகளே நூலாக்கம் பெற்றிருக்கின்றன. பாஷோதான் இந்த
மூன்றடி கவிவடிவத்தின் முதல் படி.

                       “பழையகுளம் தவளைக் குதித்தது நீரில் சத்தம்”
                          அதற்கு அடுத்ததாக பூசன் எழுதிய

                         “மாலைக்காற்றில்கொக்கின் கால்களில் நீரலை ததும்பும்”
                         என காட்சிபடுத்தினர்

                      “இதனை தொடர்ந்து இஸ்ஸா
                       செவிட்டு ஊமை பிச்சைக்காரனின் பாத்திரத்தை மழை தட்டுகிறது”.
என்று எழுதினார் ஷிகி யின் கவிதையோ இப்படி பேசுகிறது.

                     “விளக்கை ஏற்றியதும் துலக்கமாய் பொம்மை நிழல்படிந்து 
                      ஒருவர்க்கொருவர் துணை.”
எனப் பலர் வந்து வடிவத்தை ஒழுங்குபடுத்தினர். ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவமானது சிறகு முளைத்த பறவையாய் உலகெங்கும் வலம்வரத்துவங்கியது. அது வந்தமர்ந்ததில் தமிழ் மரக்கிளையும் ஒன்று. தமிழ்நாட்டு மகாகவி பாரதியும் வங்கத்து தேசிய கவி தாகூரும் ஒரே காலகட்டத்தில் ஜப்பானிய ஹைகூவை தத்தம் தாய்மொழியில் மொழிபெயர்த்து வரவேற்றிருக்கிறார்கள் என்பது மிகுந்த
ஆச்சரியத்திற்குரியது.

                    “தீப்பற்றியெறிந்தது வீழு மலரின் அமைதி யென்னே”
என பாரதியும்”

                  “நட்சத்திரங்கள் தோன்ற  பயப்படுவதில்லை  
                   மின்மினிப்பூச்சிகளைப் போல”

என்று தாகூரும் எழுதியிருக்கிறார்கள். 1916 ஆம் ஆண்டு துவங்கிய ஹைக்கூவின் பயணம் ஒரு நூற்றாண்டை கடந்து பீடுநடையிட்டுக்கொண்டிருக்கிறது இந்த மூன்றடிக்குழந்தை. தொடர்ந்து வானம்பாடிக்கவிஞர் படிமம் நுட்பம் என தமிழின் அழகியல் பாடிய அப்துல் ரகுமான் அவர்கள்

                 “இரவெல்லாம் உன் நினைவு கொசுக்கள்”

என்று எழுதி தொடர்கிறார் அவரை தொடர்ந்து ஹைகூ உலகில் முன்னத்தி ஏராய் அனைவரின் நினைவிற்கும் வருபவர் ஒவியக்கவிஞர் அமுத பாரதி அவர்கள். அவரின் பல கவிதைகள் வெகு பிரசித்தம் என்றாலும் இந்தக் கவிதை ஹைகூ எழுத வரும் அனைவருக்கும்
பாலபாடமெனலாம்.

                 “அந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்”

ஒரு புதிய மொழியின் சொற்களோடு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் அறிவுமதி அவர்கள். புல்லின் நுனியில் வானம் என்ற
தொகுப்போடு உள்ளே வந்தவரின் துயரமான ஹைகூ.

                 ” சாகும் தாய் அருகில் சிரிக்கும்குழந்தை
                   விளிம்பு வரை நடந்தேன் அங்கேயும் துவங்குகிறது பூமி”

என்றெழுதிய கழனியூரன் ஆகப்பெரிய ஆளுமையான தமிழன்பனின் சூரியப்பிறைகள் நூலிருந்து

                “சுதந்திரத்தை சாப்பிட முடியவில்லை சோறு கொடு
                பயம்  ஊர்ந்து கொண்டிருக்கும்  இது பாம்பு போனதடம்”

என்று முத்திரை பதித்த கவிதைகளையும் வரிசைப்படுத்தியுள்ளார் சு.முரளிதரனின் கூடைக்குள் தேசம் நூலிலிருந்து மலையகத்
தமிழர்களின் வியர்வைபாடுகளை

                 ” கூடையை கனக்க கனக்க சுமந்து சென்றார்கள் உள்ளே இந்த தேசம்”

என்றெழுதி தீர்க்கிறார் இதய கீதாவாய் உள்நுழைந்து இன்று அய்யப்ப மாதவனாய் மலர்ந்திருக்கும் ஆரம்பகால கவிதையொன்று

அந்தப் பாடையை மூன்றே பேர்தான் தூக்க வேண்டுமாம் ஹைகூ இறுதியாக எனக்கு மிகவும் பிடித்த பேராசிரியர் மித்ரா அவர்களின்
கவிதை குடையில் கேட்ட பேச்சு நூலில் இருந்து தலைமுறை கோபம் அடிக்க அடிக்க அதிரும் பறை மு.மேத்தா, ப.சுப்பிரமணியன். தமிழ்நாடன், கலா ரமேஷ்,
அ.தியாகராஜன், செ.வெற்றிவேல், டாக்டர் எ.மு.ராஜன் அவை நாயகன் என்று ஒவ்வொரு கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு அவர்கள் எழுதிய
நூற்கள் அதில் பிரபலமான கவிதைகள் எனத் தேனீயாய் சிறகடித்து சேகரித்திருக்கிறார்.

ஹைகூ கவிதையெனும் வரலாற்றுத் தேனை நாமெல்லாம் பருக புதிதாக கவிதை எழுத உள்நுழைவோர் இந்நூலை வாசித்து உட்கொண்டால் தரமான உண்மையான ஹைகூ கவிதைகளை எழுத முடியும். ஹைகூ இலக்கணம் சொல்லியிருக்கிறார் எது உண்மை போலி என்று தரம் பிரித்திருக்கிறார். இதொரு கடின முயற்சி தவம்போல் செய்வோர்க்கு மட்டுமே வசப்படும். மிக விரைவில் இதன் தொடர்ச்சியை எதிர் பார்க்கலாம். அன்புத்தோழர் மு.முருகேஷ்

அவர்களுக்கு வாழ்த்துகள்.

                           

நூலின் தகவல் 

நூல்              : தமிழ் ஹைகூ அப்துல் ரகுமான் முதல் மித்ரா வரை [கட்டுரை நூல்]

ஆசிரியர்  : மு.முருகேஷ்

பக்கம்         : 152

விலை         : 130

ஆண்டு       : 2022

திப்பகம் : அகநி வெளியீடு

 

 எழுதியவர் 

செ. தமிழ்ராஜ்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. கந்தசாமி வே

    நூலைக் குறித்த நல்ல பதிவு. நூலினைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்குகிறது. வாழ்த்துகள்🦚🦜🌲

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *