கு. மணியின் ஹைக்கூ கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Haiku Kavithaigal | Tamil Poems | www.bookday.in

கு. மணியின் ஹைக்கூ கவிதைகள்

கு. மணியின் ஹைக்கூ கவிதைகள்

**************************************

யாரையும் அழைக்காமல்
புதுமனைப் புகுவிழா
குருவிக்கூடு…

**************************************

காய்ந்த கைகள்
சொல்கின்றன
ஈர நிலத்தின் கதையை

**************************************

குப்பைத் தொட்டியில்
கதறும் ஹைகூ
பெண் சிசு….

**************************************

தூங்கிய விவசாயியை
தட்டி எழுப்பியது
விழித்துக் கொண்ட விதைகள்….

**************************************

தாளமிடும்
நெசவாளியின் கை கால்களை….
தறியில் பிறக்கும் நாதம்

**************************************

புற்கள் அணியும்
கண்ணாடி மூக்குத்தி….
பனித்துளி

**************************************
மரங்களின் மடியில்
இலைகளின் தூக்கம்
தாலாட்டும் ….தென்றல்

**************************************

நீந்தும் உயிரினங்களின்
அழுகை….
உப்பு

**************************************

மேகம் வெட்டி எடுத்த
வெள்ளி அரிவாள்…
தேய்பிறை நிலவு

**************************************

சுருங்கிய தோல்
வாழ்க்கை அனுபவத்தின்
விரிந்த புத்தகமாய்…..

**************************************
அளவாய்ப் பேசி
மௌனமாய்க் கேட்கும்
வாழ்வின் பொருள்

**************************************
யாரடி சொன்னார்
வெண்மை அழகென்று?
கருமையின் மகளே வெண்மை….

**************************************
அம்மாவின்
வியர்வைத் துளிகளில்
கொதிக்கும் உலை….

**************************************

என்னோடு
துணைக்கு வந்தவன்
இருட்டினில் தொலைந்து போனான்…

**************************************
காகிதமும் பேனாவும்
பேசிக் கொள்கின்றன….
சப்தமே இல்லாமல்

**************************************
மண்ணில் விழுந்தும்
வாசம் விட்டுச் செல்லும்
வாடிய மலர்கள்…..

**************************************

அனைத்து நிறங்களும்
கடைசியில் இங்கே
சாம்பல் நிறமாகின்றன….

**************************************

முற்றும் துறந்தவரும்
தொடாது இருப்பதில்லை…..
கைபேசி

**************************************

உதிர்ந்த இலைகள்
மரத்திடம் சொல்கின்றன
மீண்டும் பிறப்போம் …

**************************************
குடும்பத்தில் தவறுகள்
தண்டிக்காமல் தீர்ப்பளிக்கும்
நீதிபதி…..தாய்

**************************************
கோடை வெயில்
குடையாக் காக்கும்
அம்மாவின் முந்தானை…..

**************************************
நான் விழுந்த போது
வலியால் துடித்தது
அம்மாவின் இதயம்…..

**************************************
அம்மா பிசைந்து தந்த
உருண்டைச் சோறு
அமிர்தம்

**************************************

கிழிந்த முந்தானை
உடைத்த துயரங்கள்
நினைவலைகளாய் நெஞ்சில்….

**************************************
முன்னோக்கி செல்லும்
பின்னோக்கிச் செல்வதில்லை….
ஆறு

**************************************
வெண்ணிற நிலவை
பூமிக்குக் கொண்டு வந்தான்
ஷாஜகான்…..

**************************************
வெள்ளைப் பளிங்குக் கல்லில்
பாரசீக மொழியில் எழுதப்பட்ட
ஒரு காதல் புத்தகம்….

**************************************

தேசிய மலராய் வெகுமானம்
தேர்தலின் சின்னமாய்
அவமானம்….

**************************************
காட்சிகள் மாறின
ஆட்சிகள் மாறின
மாறாத வறுமை…..

**************************************
அரசனும் ஆண்டியும்
ஒரே தகன மேடையில்
ஒன்றாக கலந்த சாம்பல்…..

**************************************
விலை பேசாதீர்
விலையும் போகாதீர்
விலைமதிப்பற்றது உரிமை!

**************************************
ஆயுதம் ஏந்தி
போராடத் தேவையில்லை
ஆட்காட்டி விரலின் மைபோதும்….

**************************************
ஒவ்வொரு முறையும்
கூட்டணி மாற்றம்
பச்சோந்திகள் அரசியல்….

**************************************
அரசியலில்
நண்பனும் இல்லை எதிரியும் இல்லை
கிழிந்து போகும் காகிதங்கள்….

**************************************

வேர்கள் கருகிய பின்பு
மலர்ந்த பூக்களாய்
எங்களின் சுதந்திர தியாகம்….

**************************************
சுதந்திரம் தரப்பட்டது
யாரும் விடுதலையாகவில்லை
பழகிப்போனது அடிமைத்தனம்…..

**************************************
மையூற்றிய பேனாவிடம்
மண்டியிட்டது
கூரியவாள்….

**************************************
பூட்டிய வாய்கள்
திறக்கப்பட்டன
ஓங்கி ஒலித்தது உரிமைக் குரல்….

**************************************
வியர்வை முத்துக்களால்
கோர்க்கப்பட்ட மாலை
அபகரித்துக் கொண்ட முதலாளி…..

**************************************
கடவுளைச் செதுக்கியவன்
கால் கடுக்க நிற்கின்றான்
தர்ம தரிசனத்தில்……

**************************************

கனவு நிஜமானது
எட்டு மணி நேர வேலை
ஏன் இல்லை ஏழை உழவனுக்கு?

**************************************
பழுக்கச் காய்ச்சிய இரும்பில்
வார்த்தெடுக்கப்பட்டதே
அரிவாளும் சுத்தியலும்….

**************************************

எதிர்காலக் கனவு
சுமக்கும் பைகளில்
ஒளிந்திருக்கிறதோ!

**************************************
ஒரு வருடப் போர்
முடிவுக்கு வருகிறது
மூன்று மணி நேரத் தேர்வால்…

**************************************

சுண்ணக் கட்டியின்
வெண்ணிற எழுத்து
சுடர்விடச் செய்கிறது….

**************************************
மரப்பெஞ்சுகளில்
மறையாத எழுத்துகளாய்
அவளின் நினைவுகள்….

**************************************

வலை பின்னும் சிலந்தி
வாத்தியாரை விட
அதிகம் கற்பிக்கிறது…..

**************************************

வலிகள் தாங்கிய
நீண்ட நெடிய பயணம்
பிரிவென்பது முடிவல்ல ஆரம்பம்….

**************************************
எனது முகவரி மாறியது
உறவுகளும் மாறியது
மாறாத திருமண பந்தத்தில்….

**************************************

வெயில் மழை பாராது
ஒரே குடைக்குள்
எங்களின் வாழ்க்கை பயணம்…

**************************************

என் வானத்தில் நிலவாய் இருந்தாய்
இப்போது
மேகமாய் கலைந்து சென்று விட்டாய்…

**************************************

அடுப்பு எரியவில்லை
குழந்தையின் வயிற்றில்
பற்றி எரிகிறது பசி

**************************************
பணக்காரன் இல்ல விழா
ஏழையின் வீட்டு வாசலில்
எச்சில் இலைகள்…

**************************************
பாறை உடைக்கும் உளிக்கு தெரியாது
பாறை கடவுளாக
மாறப்போகிறது என்று….

**************************************
என்னை வருடிச் செல்கிறாள்
உடல் சிலிர்க்கின்றது
எங்கே அந்தத் தென்றல்?

**************************************
என் காதல்ச் செடி வளரவே இல்லை
நான் ஊற்றிய தண்ணீர்
என் கண்ணீர் என்பதாலா?

**************************************
வாங்கிக் குவித்தேன் சொத்துக்களை
ஆறடி நிலமே
சொந்தமென அறிந்தும்…..

**************************************

மனதின் வலிக்கு
ஆறுதல் தந்தது
கண்ணீர்…..

**************************************

மலை அரசனும்
வான் மகளும் கைகோர்ப்பு
மூடியது சேலையால் மூடுபனி.

**************************************

📚 எழுதியவர் : 

✍🏻 கு. மணி
த/பெ: குருசாமி
தெற்குப்புதுத்தெரு
சக்கம்பட்டி- 625512
ஆண்டிபட்டி வட்டம்
தேனி மாவட்டம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *