இலக்கியம் என்பது மொழியின் செம்மையை சுட்டுவது மட்டுமல்ல, பெரு  நீதியை போதிப்பதுடன், வாழ்வியல் நெறிகளை எடுத்தியம்புகிறது.  அகம், புறம் என பண்டைய தமிழனின் வீரத்தையும்  கதாலையும் சிலாகித்து மகிழ்வதுடன்,  முல்லைக்கு தேரும், மயிலுக்கு போர்வையும் கொடுத்த வள்ளல்களின் பெரும் கொடையளித்த புகழை விண்டுரைக்கிறது. வேந்தர்கள் தொல்குடிகள் மீது தொடுத்த போரின் காட்சிகளை விவரனை செய்வதுடன், பொருள் பெற்று வரும் பாணன் பொருள் வேண்டி செல்லும் பிற பாணர்ளை ஆற்றுபடுத்துவதை பதிவு செய்துள்ளது. பத்தினி பெண்டீர் கணதியை மீறி எழும் பரத்தையர் வீதிகளின் விசும்பல் ஓசைகளையும், பெண்பாற் புலவர்களின் வெடிப்புற பேச்சுக்களையும் ஆவணபடுத்தியுள்ளது.

தொல்காப்பியம் துவங்கி, ஐம்பெரும் காப்பியங்களினூடாக, பதிணென் கீழ்கணக்கு நூல்களின் பரவியுள்ள பவுத்த, சமண கருத்துககள் புத்தொளி பாய்ச்சுவன.  கம்பனும், வள்ளுவனும், இளங்கோவடிகளும், பாரதியும் உலக்குகளித்த கொடைகள் மகத்தானவை.  திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருக்காரென எழுந்த பக்தி இலக்கியங்கள் மாபெரும் பவுதீக சக்தியாய் இன்றும் கோலோச்சுகின்றன.

இப்போக்குகளையெல்லாம் இணைத்து அன்றைய சமுதாயத்தை அறிந்துக்கொள்ள சங்க இலக்கியம் ஒரு நந்தா ஒளி விளங்கு எனவும் தொடர்ந்து பேசபட்டுவருவதை கேட்கிறோம், படித்தும் இருக்கிறோம். பள்ளி காலங்களில் மணப்பட பகுதிக்காக மணனம் செய்த குற்றால குறவஞ்சியும், நந்தி கலம்பகமும், கனியன்பூங்குன்றனும் இன்னும் பிறவும் அது தொடர்புடைய துணுக்குகளை படிக்கும் போது, அப்பள்ளியின்  பிரத்யோக வாசனையுடன் நினைவில் வந்து ஊடாடுவது மனித இயல்பெனெனினும்,  இலக்கியம் உண்மையில் என்னதான் பேசியது என்பது பல நாட்கள் புரியாமல்தான் இருந்தது.  இலக்கியத்தை இலக்கியமாக பாருங்கள், அதன் சுவை உணருங்கள் என்றே எமது ஆசிரியர்கள் போதித்தனர்.

தென்திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம், கொன்த் ஆகியவற்றுள் தமிழ், வரலாற்று முதல் நிலையில் உடையது என்பதில் இரு கருத்தில்லை. ஆனால் நம்முடைய செம்மொழியில் இல்லதது எதுவும் இல்லையெனவும், தமிழ் இலக்கியங்கள் சுட்டாத பொருள்ளில்லை எனவும் குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருப்பது போதுய அறிவுடை விமர்சனமா? தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை ஏற்று போற்றும் அதேசமயம் அதில் உள்ள பிற்போக்கு கருத்துக்களையும் புரிந்துக்கொள்ள வேண்டுமல்லவா? சங்ககால தமிழர்கள் மத்தியில் சாதி பிரிவினையே இல்லை என்பது உண்மையா அதற்கான சான்றுகள் உள்ளதா? அல்லது ஆரியர்கள்தான் சாதியை கொண்டு வந்தனர் என்பது மட்டுமே உண்மையா? என்பது துவங்கி ஒரு காலத்தின் வந்த இலக்கியங்களை அந்த காலத்திற்கு பின்பு வந்த ஆளும் வர்க்கம் எப்படி திரித்து எழுதியது என்பது வரை அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய அவசியம் இருக்கிறது.  இவைகளை அறிந்துக்கொள்ள நிறைய ஆய்வு நூல்கள் வந்துள்ளன, வந்துக்கொண்டும் இருக்கின்றன்.

அத்தகைய நூல்களில் குறிப்பிடதக்கது இலக்கியங்களை வரலாற்று இயக்கவியல் நோக்குடன் ஆய்வு செய்கின்ற கே.முத்தையாவின் ”தமிழ் இலக்கிய – ஒரு புதிய பார்வை” என்ற நூல். இலக்கியம் சார்ந்து அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இப்படியான நூல்களை படிக்கும்போதுதான் இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தின் சமூக நிலையை புரிந்துக்கொள்ள முடியும். இதுவரை இலக்கியம் சார்ந்து நீங்கள் புரிந்துக்கொண்ட பார்வைக்கும்,  இலக்கியம் எழுதப்பட்ட காலத்தின் பின்புலத்தில் இருக்கும் பார்வைக்கும் வித்தியாசம் புரியும். இந்நூல் மிக முக்கியமான பல கேள்விகளை எழுப்புகிறது.

BSNLEU MADURAI: இன்று-june 10, தோழர் கே ...

இந்த நூலில் கே.முத்தய்யா அவர்கள் தமிழ் இலக்கிய பரப்பு முழுவதும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. சிலப்பதிகாரம், திருக்குறல், பாரதியர் கவிதைகள் என்பவைகளை அதிகம் விவாதித்துள்ளார். ஆனால் அதற்கு தமிழ் இலக்கிய பரப்பின் பல நூல்களை ஒப்பீட்டிற்காக  பயன்படுத்தி உள்ளார்.

”வடவேங்கடம், தென்குமரி, ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்” என்ற எல்லை எப்படியெல்லாம் உருவானது, மாறியது?

”தேறா மன்னா செப்புவது உடையேன்” என அறம் பாடிய கண்ணகி,  ”பார்ப்பார் ரறவோர் பசுப்பத்தினிபெண்டிர் / மூத்தோர் குழவின் எனுமிவரைக் கைவிட்டுத் / தீத்திறத்தோர் பக்கமே  சேருக” என பேதம் பிரித்தது ஏன்?

அந்த பேதகூற்று கண்ணகி வழியாக பேசிய இளங்கோவடிகள் கூற்றா?, அல்லது சிலப்பதிகாரத்தின் இடைசொருகல்களை இணைத்த பிற்கால புரட்டர்களின் சேர்க்கையா?

சிலப்பதிகாரத்தில் கோவலன் – மாதவிக்கு பிறந்த மகள் மணிமேகலை என எந்த இடத்திலும் இளங்கோவடிகள் குறிப்ப்பிடாத போது, எந்த ஆதாரமும் இல்லாமல் திடீரென கோவலன் – மாதவிக்கு பிறந்த மகளே மணிமேகலை என்று கூலவணிகர் சாத்தனார் கூறுவது ஏற்றுக்கொள்ளதக்கதா?

அதைவிட முக்கியமாக சிலப்பதிகாரத்திற்கு சில நூற்றாண்டுக்கு  பின்புவந்ததுதான்  மணிமேகலை காப்பியம் என்பது உண்மையா?

”காவற் கணிகையர் ஆடல் கூத்தியர் / பூவிலை மடந்தையர், ஏவற்சிலதியர் / பயில்தொழில் குயிலுவர் பன்முறை கருவியர் / நகைவேழ்ம்பரோடு வகை தெரி இருக்கையும்!” என பெண்களை தரம் பிரித்தது எது?

”வேளொடு நின்றான் இடுஎன்றது போலும் / கோலொடு நின்றான் இரவு’ என்ற திருவள்ளுவனின் குரல் யாருக்கானது?

இலக்கியங்களில் நல்ல இலக்கியம் நச்சு இலக்கியம் என இரண்டு வகைமை உளதா, எப்படி பேதம் பிரிப்பது?

போன்ற கேள்விகளை எழுப்பி, சங்ககால  இலக்கியம் துவங்கி தற்கால இலக்கியம் வரை  மிகவும் ஆதாரத்துடன் பதில்களை சொல்லுவதனூடாக தனது இலக்கிய ஆய்வை மேற்கொண்டுள்ளார் தோழர் கே.முத்தையா.  மேற்கொண்ட கேள்விகளுக்கான பதிலை பல்வேறு தரவுகள் துணையுடன் இந்த நூலில் நிறுவி உள்ளார். ”உலகின் வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறு”  என மாமேதை காரல் மார்க்ஸ் சொன்னது சங்க காலத்திற்கு மட்டும் பொறுந்தாமல் போகுமா என்ன? அன்றைய வர்க்க சூழலும், உழைப்பாளி மக்கள் நிலையையும் மிகவும் சிறப்பான முறையில் ஆவணப்படுத்தியுள்ளார்.

வரலாறு படைத்த  ...
என். ராமகிருஷ்ணன்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தோழர் ஆதவன் தீட்சண்யா நடத்திவந்த புதுவிசை இதழில் ”இப்படியும் இருக்கலாம் சிலம்பு” என்று ஒரு இலக்கிய மறுவாசிப்பு எழுதினேன். அதில்   உரைபெறு கட்டுரை “பாண்டியன் பத்தினி வழிபாடு” பகுதியின் பாடல் 1 ல்  ”அன்று  தொட்டுப் பாண்டியனாடு மாழைவறங் / கூர்ந்து வறுமையெய்தி வெப்புநோயும் குருவும் / தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் / நங்கைக்கு பொற்கொல்லர் ஆயிரவரைக் / கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய, / நாடு மலிய மழிபெய்து நோயும் துன்பமும் நீங்கியது”  என்ற பாடலின் அரசியல்தான் எனது மறு வசிப்பின் மைய்யமாக  இருந்தது.

பவுத்த, சமண, ஆசீவீக மதங்கள் மேல்லெழுத்த சூழ்லில் அந்த மதங்களை வீழ்த்திட ஆழ்வார்கள் ஆசைக்கிணங்க எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றியதுப்போல, ஆயிரம் பொற்கொல்லர்களை கொலை செய்ததும் பக்தி இலக்கிய காலத்தின் பழிவாங்கும் நடவடிக்கையே என நிறுவுவுவதே என நோக்கம். கோவலனும் கண்ணகியும் ஆசீவீக மதத்தை தழுவியவர்கள் என்பதும், அக்காலகட்டத்தில் பொற்கொல்லர்களிடம் புகழ்பெற்ற மதமாக ஆசீவீகம் விளங்கியது எனது ஆய்வுக்கு முக்கிய சான்றாக இருந்தது.

அது எழுதிய சமயத்தில் கே.எம் அவர்களுடைய இந்த நூலை வாசித்திருக்கவில்லை. ஒருவேலை வாசித்திருத்திருந்தால் இன்னும் கூட வீரியத்துடன் அந்த எழுத்துக்கள் வந்திருக்குமோ என்ற எண்ணத்தை இந்த நூல் கொடுத்தது. பிற மத இலக்கியங்களை கொலை செய்திட அல்லது அதன் உண்மை அடையாளத்தை திருத்திட, அவைகளில் வைதீக நெறிகளை புகுத்திட பக்தி இலக்கிய காலம் எவ்வுளவு வண்மத்துடம் செயலாற்றி உள்ளது என மிகவும் ஆதரத்துடன் இதில் பதிவு செய்துள்ளார்.

இந்த நூலை அவசியம் வாசியுங்கள், பின்பு இலக்கியங்களை வாசியுங்கள் புதிய பார்வையும் இதுவரை நமது இலக்கியங்களில் நீங்கள் அறிந்துக்கொள்ளாத புதிய கதைகளும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். இலக்கியம் இலக்கியத்திற்கு மட்டுமல்ல அது மக்களுக்கானது. மக்கள் வாழ்க்கையை பாடாத எந்த இலக்கியமும் இலக்கியம் இல்லை.

தமிழ் இலக்கியம் – ஒரு புதிய பார்வை

– கே.முத்தையா

தொகுப்பு: என்.ராமகிருஷ்ணன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

விலை: 350

பக்கங்கள்: 448

– எஸ்.ஜி.ரமேஷ்பாபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *