சித்திரத்தில் பார்ப்போம். சிலையென்று கும்பிடுவோம்.
புத்தகத்தில் போற்றிப் புகழ்ந்திருவோம்-இத்தரையில்
சந்தப் பொதிகை தமிழ்முனியென்று உன்னைநிதம்
சிந்தையில் கொள்வோம் தெளிந்து.
தமிழ்த்தாத்தா உவே சாமிநாதய்யர் 1855ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 19ஆம் நாள் உத்தமதானபுரத்தில் ஓர் ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவரின் 163ஆவது பிறந்த தினத்தைத் தமிழ் இலக்கிய அமைப்புக்கள் நன்றியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. ‘நன்றியுடன்’ என்ற வார்த்தை ஆழ்ந்த பொருள் பொதிந்ததாகும். நாம் இன்று தமிழன் என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்பதற்கும், உலகின் பிரம்மாண்டமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹாவர்ட் கல்விப் புலத்தில் தமிழ் இருக்கை அமையப் போகிறது என்பதை ஆனந்தப் பெருக்கோடு வரவேற்றுக் கொண்டிருப்பதற்கும் அடிப்படை அமைத்துத் தந்தவர் நம் தமிழ்த்தாத்தா ஆவார். தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்றதற்கும் கூட அவரின் அயராத உழைப்பினால் கிடைத்த தமிழ் இலக்கியப் புதையல்கள்தான் காரணம். நீரோட்டத்தின் வேகத்தில் மின்சாரம் என்ற சக்தி இருக்கிறது என்பது இயற்கை. அதை வெளிக் கொண்டுவரும் மனித முயற்சிக்குப் பெயர்தான் விஞ்ஞானம். மறைந்து கிடந்த மாபெரும் இலக்கியச் சொத்துக்களைக் கண்டுபிடித்து மனிதகுலத்துக்குத் தந்தவர் என்பதால் உவேசாவை ஓர் இலக்கிய விஞ்ஞானி என்று கூறலாம்.
கதாக்காலட்சேத்தின்மூலம் கிடைத்த குறைந்த வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த குடும்பத்தில் பிறந்தவர் ‘சாமா’ என்ற இயற்பெயருடைய உவே சாமிநாதய்யர். அவருக்கான பூணூல் தறிப்பு நிகழ்வின்போது அவருக்கு ‘வெங்கட்ராமன்’ என்ற பெயர் சூட்டப் பட்டது. அவர் ஒரு நல்ல ஆசிரியரிடத்தில் தமிழ் கற்கவேண்டும் என்று ஆசைப் பட்டார். ஆங்கிலம் படித்தால் பெரிய அளவில் வருவாய் ஈட்டலாம் என்று அவரின் சுற்றத்தார் வற்புறுத்தியபோது நிராகரித்துவிட்டு, தமிழ் படிப்பது என்ற லட்சியத்தில் காலூன்றி நின்றார். அரியலூர் சடகோப ஐயங்காரிடம் தமிழ் இலக்கியமும் செங்கணம் விருத்தாச்சல ரெட்டியாரிடம் தமிழ் இலக்கணமும் கற்றறிந்தார். அவர் தனது 15ஆவது வயதில் மாயூரம் சென்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்க ஆசைப்படுவதை வெளிப்படுத்தினார். சிலபல சோதனைகளுக்குப்பின் அவரைத் தன் மாணாக்கராக ஏற்றுக் கொண்டபோது எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார் உவேசா. ஆனாலும் வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் குருகுலத்தில் உணவு அருந்த அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. காரணம் சாமா ஒரு வைணவர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளையோ சைவர். தமிழ் மாநிலம் எங்கும் சைவம் தழைத்தோங்கி இருந்த காலம் அது. சாமா அல்லது வெங்கட்ராமன் என்ற வைணவப் பெயரை ‘சாமிநாதய்யர்’ என்ற சைவப் பேராய் மாற்றியமைத்தது மீனாட்சி சுந்தரம் பிள்ளைதான். அவரின் இன்னொரு சீடராகிய ‘சபரிநாத பிள்ளை’ என்ற கிறுத்துவரை ‘சிவகுருநாத பிள்ளை’ என்று நாமமிட்டு அவரையும் சைவராய் மாற்றினார். எல்லாச் சிந்தனைகளும் சித்தாந்தங்களும் சைவ சனாதனத்தை மையமிட்டே சுழன்றுகொண்டிருந்த காலத்தின் நிர்ப்பந்தத்தை தமிழ்க் கல்வி கற்றே தீரவேண்டும் என்ற ஆவலின் காரணமாக ஏற்க வேண்டியதாயிற்று. உவேசா அதை முழுமையாய் ஏற்றுக் கொண்டு கடைசிவரை வாழ்ந்து நிறைந்தார்.
பிள்ளைத் தமிழ், கலம்பகம், அந்தாதி போன்ற சிற்றிலக்கியங்கள் மட்டுமே அவருக்குக் கற்பிக்கப் பட்டன. ஒருசில வேளைகளில் கம்பராமாயணம் சொல்லித் தரப் பட்டது.
சேலம் முன்சீப் கோர்ட் ஜட்ஜும் தமிழறிஞருமான ராமசாமி முதலியார் நட்புக் கிடைத்தபோது தமிழறிவுப் பாதையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. உவேசா சைவமதம் சார்ந்த எல்லாப் பனுவல்களையும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றியது உட்பட, ராகத்தோடு பாடிக்காட்டினார். “இவ்வளவுதான் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு சீவக சிந்தாமணியை அறிமுகப் படுத்தினார் ராமசாமி முதலியார். சீவகசிந்தாமணி ஒரு சமண இலக்கியம்: சைவம் தழைத்திருந்த தமிழ்மண்ணில் சமண பௌத்த இலக்கியங்கள் இருட்டறைக்குள் தாழிடப் பட்டுக் கிடந்தன. அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து அந்தக் காவியத்துக்கு மகுடாபிஷேகம் சூட்டவேண்டும் என்று அறிவுறுத்தினார் முதலியார். அதன்படியே சிந்தாமணியைப் பதிப்பித்து தமிழ் இலக்கிய உலகுக்குப் புதுவெளிச்சம் பாய்ச்சினார். உவேசாவுக்கு அப்போது வயது 25.

சீவகசிந்தாமணி பலரின் பாராட்டைப் பெற்றபோது பெரும் உற்சாகம் அடைந்தார் உவேசா. மண்மூடிக் கிடக்கும் தமிழ்ப் புதையல்களைக் கண்டெடுத்துப் பதிப்பிக்க வேண்டும் என ஆவல் கொண்டார். தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் சைவ மடங்களுக்கும் வித்துவான்களின் வீடுகளுக்கும் சென்று வாழ்நாள் முழுவதும் நூல்களைத் தேடிக் கொண்டே இருந்தார்.
சிலப்பதிகாரம் என்ற காவியத்தைப் பதிப்பிக்க எண்ணிய அவர் தமிழகத்தின் பல ஊர்களுக்கும் சென்றார். குன்றக்குடி ஆதீனத்துக்குச் சொந்தமான மடத்துக்குச் சென்று அங்கு எழுத்தராகப் பணியாற்றிக் ;கொண்டிருந்த அப்பா பிள்ளையைச் சந்தித்து, தமிழ் ஏட்டுச் சுவடிகள் ஏதும் கிடைக்குமா எனக் கேட்டபோது அவர் உடனடியாக மடத்துக்குள் போய் சில சுவடிகளைக் கொண்டு வந்து தந்தார். வாங்கிப் பார்த்த உவேசாவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அதில் சிலப்பதிகார மூலமும் மணிமேகலை மூலமும் இருந்தன. மூலம் மட்டும்தான் இருந்தது. சீவகசிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதி இருந்தார். இந்தக் காப்பியங்களுக்கு உரை என்பது இல்லை. சங்க இலக்கியங்களை உரையின்றி வாசித்தறிவது சிரமம். உரையைக் கண்டறிய அவர் பயணம் மேலும் தொடர்ந்தது. 1880ஆம் ஆண்டு ‘சோடாசதாவதானம்’ சுப்புராய செட்டியார் பதிப்பித்த சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையுடன் இருந்த்தைக் கண்டு மகிழ்ந்தார். ஆனாலும் அடியார்க்கு நல்லார் உரையின் முழுப் பகுதியும் அதில் இல்லாமல் இருப்பது கண்டு மனம் வருந்தினார். அவர்தம் தேடல் மேலும் தொடர்ந்தது. சென்னையில் வாழ்ந்த குருசாமி ஐயர் என்பவர் வீட்டில் சிலப்பதிகார அரும்பத உரையின் ஒற்றை ஏடுகள் பத்து கிடைத்தன. அவை போதுமானவையாக இல்லை.ஆனாலும் நிறைவாக உவேசா அவர்களே உரை எழுதிப் பதிப்பிப்பது என முடிவெடுத்தார்.
அரும்பதங்களைஎயல்லாம் தொகுத்து அகராதியாக எழுதிக் கொண்டார். அரிய விஷயங்களையெல்லாம் ஒன்றாக்கி ‘விஷய சூசிகை’ என்று தலைப்பிட்டுத் தனியே ஓர் அகராதி எழுதினார். இப்படியே நூலாலும் உரையாலும் தெரிந்த அரசர்கள், நாடுகள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், தெய்வங்கள், புலவர்கள் பெயர்களுக்கும் தனியான அகராதியும், அடியார்க்கு நல்லார் தன் உரையில் குறிப்பிட்டிருந்த நூல்களுக்குத் தனியாக ஒரு தொகையகராதியும் ‘விளங்கா மேற்கோள் அகராதியும் அபிதான விளக்கமும் (இதுதான் என அபிப்பிராயப் படும்படியான விளக்கம்) எழுதிக் கொண்டார்.
எல்லாவற்றையும் முழுமைப் படுத்தி முன்னுரையும் எழுதியாயிற்று. இனி அச்சிடுவதற்குப் பணம் தேவை. கொழும்புவில் வாழ்ந்த தமிழன்பர் பொ. குமாரசாமி முதலியார் அச்சிடும் செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாக ஏற்கனவே உறுதிமொழி தந்திருந்தார். அந்த நினைவினால் உடனடியாக இந்தச் செய்தியை அவருக்குத் தெரிவித்தார். தயக்கத்தோடு ரூபா முன்னூறு மட்டும் அனுப்பி வைத்தார் முதலியார். பணம் போதவில்லை என்றபோதும் வேறு வழிகளில் திரட்டிக் ;கொள்ளலாம் என நம்பிக்கை கொண்டு அதை வாங்கிக் கொண்டார்..
சிலப்பதிகாரக் காவியத்தைப் பதிப்பிக்கும்போது அவருக்கு உண்டான துன்பதுயரங்கள் ஏராளம். அந்த அற்புதக் காவியத்தைத் தமிழ் உலகுக்கு அறிமுகப் படுத்த ஊண் உறக்கமின்றி இரவுபகலாக உழைத்தார்.
அன்று வெள்ளிக் கிழமை! மறுநாள் சிலப்பதிகாரத்தின் முன்னுரை அச்சிடப் பட்டு நூல் வெளியாகவேண்டும். சென்னையில் இருந்த விசுவநாத சாஸ்திரியார் அவர்களின் வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் முன்னுரை எழுத உட்கார்ந்தார். பலநாள் தூக்கமின்மையும் உண்ட மயக்கமும் சேர்ந்துகொள்ள கொஞ்சநேரம் தூங்கிவிட்டு எழுதிக் கொள்ளலாம் எனப் படுத்துவிட்டார். கனவுக் காட்சிகள் அனைத்தும் சிலப்பதிகார வெளியீடாகவே நின்றது. அந்த இரவைப் பற்றி அவர் எழுதுகிறார்.

“நன்றாகத் தூங்கினேன். இரவில் இடையே விழிப்பு ஏற்பட்டது. பூர்த்தியாகாத சிலப்பதிகாரப் புஸ்தகம் என் அகக்கண்முன் நின்றது. எழுந்து விளக்கேற்றிப் பார்க்கையில் இரண்டு மணிதான் ஆகியிருந்தது. அரைத் தூக்கத்தில் எழுந்தமையால் மீட்டும் படுத்துக் கொள்ளவேண்டும் என்ற உணர்ச்சியே மேலோங்கி நின்றது.
படுத்துக் கொண்டால் நான்கு மணிக்கு எழுந்துகொள்ள முடியுமா? அயர்ச்சியால் வெகுநேரம் தூங்கிவிட்டால் காரியம் அரைகுறையாக நின்றுவிடுமே: என்று பலவிதமான் சிந்தனைகள் எழுந்தனவேயொழிய எழுதவேண்டும் என்ற வேகம் உண்டாகவில்லை……..
கண்கள் சுழன்றன. கொட்டாவி விட்டேன். அண்ணாந்தபோது எதிரே சுவரில் இருந்த ஒரு படம் என் கண்ணில் பட்டது. இன்னாருடைய படம் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. படத்தில் இருப்பவர் மிக்க சுறுசுறுப்பும் முயற்சியும் உடையவர் என்பது தோற்றத்தில் இருந்தே தெரிந்தது. அந்தத் தோற்றம் என் உள்ளத்துள்ளே ஊக்கத்தை எழுப்பியது. இவர் யாரோ தெரியவில்லை: என்ன துடிப்பாய் இருக்கிறார்! நாம் சோர்விலே மூழ்கி இருக்கிறோமே: என்று எண்ணினேனோ இல்லையோ, உடனே பேனாவை எடுத்து எழுதத் தொடங்கினேன்.”
கருமமே கண்ணாகி நிற்கும் பெரியவர்கள் தமது உடல், உள்ள அசதிகளை சிறு உத்வேகத்தின்மூலம் முறியடிப்பார்கள் என்பதற்கு இந்த விவரணை ஒரு சான்று.
தமிழகம் பனிரெண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு சைவ வைணவ தத்துவ சாகரத்தில் மூழ்கி, பழைய தமிழ் மரபை மறந்துவிட்டது. பிரபந்தம், அந்தாதி, பிள்ளைத் தமிழ், கோவை முதலிய சிற்றிலக்கியங்களின் வழியே தனது பயணப் பாதையை மாற்றிக் கொண்டது. 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டு தமிழ்ப் புலவர்கள் பழைய இலக்கியங்களைக் கற்பதிலிருந்து விலகி நின்றனர். விலக்கி வைக்கப் பட்டனர் என்று சொல்லலாம். மத ஆச்சார நியதிகள் தமிழுக்குள் நழைந்தபின் பழைய இலக்கியங்கள் கற்பிக்கப் படாமலேயே ஒதுக்கப் பட்டன. அதிலும் குறிப்பாக பௌத்த சமண இலக்கியங்கள் வாசிப்புத் தளத்துக்கு வராமலே மறைத்து வைக்கப் பட்டன. விளைவாக ஏராளமான ஏட்டுச் சுவடிகள் கரையான் அரித்தும் இயற்கை மாற்றத்தால் அழிந்தும் போயின. அவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற உந்துதல் இடைக்காலத் தமிழ்ப் புலவர்களுக்கு உண்டாகவில்லை. உவேசா சில நூல்களை அச்சிட்டபோது 18ஆம் நூற்றாண்டுப் புலவர்கள் ஆச்சர்யமும் பெருமிதமும் அடைந்தனர். உவேசா சொல்கிறார்.
“சீவக சிந்தாமணியும் பத்துப் பாட்டும் தமிழகத்தில் உலாவத் தொடங்கிய பிறகு பழந்தமிழ் நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புறும் பழக்கம் தமிழர்களிடையே உண்டாயிற்று. அவற்றின் பின்பு சிலப்பதிகாரம் வெளிவரவே, பண்டைத் தமிழ்நாட்டின் இயல்பும் தமிழ் இலக்கியக் கலைப் பரப்பின் சிறப்பும் யாவர்க்கும் புலப்படலாயின. ‘கண்டறியாதன கண்டோம்’ என்று புலவர்களும் ஆராய்ச்சியாளர்களும் உவகைக் கடலில் மூழ்கினர்.
சிலப்பதிகாரம் மிக அரிய சரித்திரச் செய்திகளை உடையது. தமிழ்நாட்டு அரசனாகிய செங்குட்டுவன் வடநாடு சென்று வடவேந்தர்களை வென்று கண்ணகியின் படிமச் சிலை கொணர்ந்த செய்தி மிக்க விம்மிதத்தை உண்டாக்கியது: அன்றியும் சங்க காலத்தை நிர்ணயிப்பதற்கு சிலப்பதிகாரம் மிகவும் முக்கியமான ஆதாரமாக இருக்கிறது.”
நாம் இன்று தமிழை செந்தமிழ் என்று போற்றவும் தொன்மை வரலாற்றை பெருமிதத்தோடு அறிவிக்கவும் செய்கிறோம் என்றால் உவேசாவின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பே காரணம். சேலம் ராமசாமி முதலியார் புதிய திசைவழிகாட்ட, அவ்வழியே பயணித்த உவே சாமிநாதய்யர் சரியான இலக்கை நேர்த்தியான முறையில் சென்றடைந்தார். அவரின் கண்டுபிடிப்பு நிகழாமல் இருந்திருந்தால் இன்று நாம் மதவாத மரபுக்குள் மூழ்கடிக்கப் பட்டிருப்போம். செம்மொழி அந்தஸ்து நமக்குக் கிடைத்திருக்காது என்பதோடு திராவிட எழுச்சியும் நிகழ்ந்திருக்காது.
போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உவே சாமிநாதய்யர்.
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….


மிக முக்கியமான கட்டுரையை தனக்கே உரிய பாணியில் செதுக்கியிருக்கிறார் தோழர். தோழருக்கு வாழ்த்துகள்.