மாரி செல்வராஜும் ஏழு ரைடர்களும்
– முத்து ஜெயா
நிறைய சவால்கள் உள்ள இடங்களில் ஒன்று சினிமாத்துறை. வணிகக் குறிக்கோள்களுக்கு மத்தியில் அதன் மூலமாக இருக்கும் இயக்குனர்கள் சமூக நிலைப்பாடுகளை அப்படியே திரையில் கொண்டு வருவது என்பது கிட்டத்தட்ட வாழ்வைப் பணயம் வைப்பது போன்றது தான்.
ஒரு காலகட்டம் வரை சினிமா கமர்சியல் பக்கமாக விழுந்து கிடந்ததற்கு இது ஒரு முக்கியக் காரணம்.
அது ஓரளவிற்கு சில இயக்குனர்களின் வழியாகத் தன்னை மறு உருவாக்கம் செய்திருக்கிறது என்பது உண்மை.
காட்சி ஊடகத்தின் முக்கியப் பங்கில் இருக்கும் சிக்கல் நல்ல பார்வையாளர்களை உருவாக்குவது தான். அதற்கு நேர்மையான தைரியம் வேண்டும். அதற்கான முன்னெடுப்புக்கான ஒத்த அலைவரிசை கொண்ட நபர்களும் வேண்டும். நிறைய முற்போக்குக் கருத்துக்கள் மட்டுமே பேசும்போது அது மக்கள் மத்தியில் தேக்க நிலையை உண்டு செய்யும். கதையின் ஓட்டத்தில் அதைச் செய்ய முற்படும் இன்றைய இயக்குனர்களில் மாரி செல்வராஜின் முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அவருடைய முதல் வெற்றியே அதற்கு பின்பான படங்களின் வலிமை என்று சொல்லலாம்.
கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட வெண்ணிலா கபடிக்குழு படம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்தது இயக்குனர் சுசீந்திரன் அவர்களுக்கு. அதுவும் கிட்டத்தட்ட பைசன் கதையின் களம் மற்றும் செய்தி தான் என்றாலும் உள்ளார்ந்து அதைத் தைரியமாகச் சொல்லும் சூழல் அப்போது அமையவில்லை; அதற்கான சுதந்திரம் கூட இல்லாமல் இருந்திருக்கலாம். இந்தச் சுதந்திர வெளி இப்போது மாரி செல்வராஜ் அணிக்கு முதல் ரைடர்.

ஆனந்த விகடனில் ‘மறக்கவே நினைக்கிறேன்’ தொடர் எழுதும்போது கவனித்திருக்கிறேன். தேர்ந்த எழுத்து மட்டுமல்லாமல் நேர்த்தியாக முகங்களை வாசிப்பவர்கள் மனதில் பதிய வைக்கும் யுக்தி அவரிடமுண்டு. கலை எப்போதும் தொடர் ஓட்டம் தான். ஒன்றில் இருந்து இன்னொன்றைத் துரத்திப் பிடிக்கும்போது நேரடியான செய்முறையைவிட தெளிந்த காட்சி அமைப்பையும் உருவாக்க முடியும். அந்த வகையில் நாம் சிக்கல் என்று நினைக்கும் ஒன்றை நேர் செய்வதற்கு அவரிடமிருக்கும் இலக்கியமும் தேர்ந்த அரசியல் பார்வையும் இரண்டாவது ரைடர்.
சினிமா கூட்டு முயற்சி மட்டுமல்ல, கிட்டத்தட்ட குழு மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும். இந்த இடத்தில் இயக்குனரின் பங்கு மிகப் பெரியது. கதையை உருவாக்குவது மட்டுமல்லாது இசையில் துவங்கி கலை இயக்குனர் வரை தான் என்ன நினைக்கிறேன் என்னுடைய பார்வை மற்றும் தேவை என்ன என்பதைப் புரிய வைத்து அதற்கான பதிலாகக் காட்சியைப் பெறுவது என்பது சவாலான பணி. அப்படியான கலைஞர்களைத் தொடர்ந்து தக்க வைக்கும் போது தான் தொடர்ந்து படங்களை இயக்க முடியும். அந்த வகையில் மாரி செல்வராஜ் கையில் இருக்கும் மொத்த கலைச் செயல்பாட்டார்கள் மூன்றாவது ரைடர்.

தொடர்ந்து ஜாதி பற்றிய விமர்சனம் கொண்ட பார்வையோடு படங்களை இயக்குகிறார் என்ற குற்றச்சாட்டு மாரி செல்வராஜ் மீது உண்டு. பொதுவெளியில் நானும் இப்படி விமர்சிப்பவர்களைக் கண்டிருக்கிறேன். அந்த இடத்தில் மறுப்புச் சொல்ல முடியாவிட்டாலும் நான் முதலில் நினைத்துக்கொள்வது இவர்கள் படம் பார்க்க இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான்.
சமூகத்தில் நடக்கும் அல்லது நடந்த சம்பவங்களைக் காட்சிகளாகக் கொண்டு வருவதை மறுக்கும் சமூகம் இருக்குமானால் அது இன்னும் ஜாதியக் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். மாரி செல்வராஜின் படைப்பு ஜாதியை மறு உருவாக்கம் செய்கிற முயற்சி என்கிறார்கள். அது உண்மையல்ல. மாரியின் படங்கள் விமர்சிக்கும் அல்லது உண்மைமையை எடுத்து வைக்கும் போக்கு. அவர் சுதந்திரமாகப் படங்களை இயக்க முற்பட்டால் இன்னும் அதன் வீரியமும் காட்சியும் நம்மை செவுளில் அரையும். இது நடு நயமான நான்காவது ரைடர்.
தமிழ் சினிமாவில் இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதையை சினிமாவாக உருவாக்கம் செய்து வென்றதும் தோற்றதும் உண்டு. எழுத்தைத் திறம்பட கையாண்ட நபர்களின் வரிசையில் வெற்றிமாறனைக் குறிப்பிடலாம். அதே நேரத்தில் ஒரு சம்பவத்தை இரண்டரை மணி நேரப் படமாக உருவாக்குவது சவாலான பணி. கர்ணன் படம் பேசிய கரு நிஜத்தில் தமிழ்நாடு முழுவதும் நிறைய இடங்களில் நடந்தது தான். ஆனால் அதன் கோர முகத்தின் வடிவமைப்பு முக்கியமானது. அந்த வகையில் மாரி செல்வராஜ் கையில் கிடைத்திருக்கும் கதை உருவாக்க மனம் ஐந்தாவது ரைடர்.

மிகத் துணிச்சலாக அதே நேரத்தில் வெவ்வேறு கதாப்பாத்திரங்களாகத் தொடர்ந்து ஒரு சில நடிகர்களைக் காட்சிக்குள் கொண்டு வருகிறார். விமர்சனமாகக் கூட இதைச் சொல்லலாம். ஒரு நடிகனுக்கு பரந்தவெளி வேண்டும். ஒரு கைக்குள் சிக்கிக் கிடப்பது ஆகாது. ஆனால் மாரி செல்வராஜிடம் வேறொரு பதில் இருக்கும். அதுவும்கூட தெரிந்தது தான். ஆனால் அந்தச் சவால் வாழையில் இருந்த வள்ளி நாயகத்தின் நடிப்பை பைசனில் அடுத்த இடத்திற்கு நகர்ந்திருக்கிறது என்பதன் வழியாகப் பாராட்டலாம். இது ஐந்தாவது ரைடர்.
ஆதியைச் சுமந்து திரிகிறவர்கள் தான் மனிதர்கள். வளர்ச்சி மேன்மை என்று நினைப்பதைத் தாண்டி அது ஏதோ ஒரு இடத்தில் வெளியேறிவிடும்போது சமூகத்தால் பார்க்க முடியாவிட்டாலும் அது நடக்க வில்லை என்பது பெரும் பொய். அதை இசையின் வழியாகவும் தூண்டலாம் என்பதை அறிந்து வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
பார்வையாளனை நெருங்கிப் போகும் வாய்ப்பை இசை ஏற்படுத்தும். அது அவனுக்கு உள்ளுணர்வு வழியாகக் கலைக்கு இணக்கம் ஆக்கும் என்பது ஆறாவது ரைடர்.
இணங்கிப் போகும் மனப்பாங்கு கொண்டவர்கள் தான் இங்கே பெரும்பான்மையினர். உலகம் அதை நோக்கித் தான் எல்லாவற்றையும் பொருளாதாரக் கைகள் கொண்டு இழுக்கிறது. சமரசமற்ற கலைஞன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய இன்னல் இது. குறியீடுகள் வழியாகக் கூட அரசியல் பேச முடியாத தளத்தில் இருந்து கொண்டு தொடர்ந்து அதைச் செய்யும் வலிமையும் சமரசமற்ற தன்மையும் படைப்பு மனதிற்கு மிகப் பெரிய வெற்றி.
ஆனால் அதே நேரம் இதன் வழியாகப் பொது எதிரியை உண்டு செய்வது போலான பிம்பமும் வளரும். இரண்டுக்கும் நடுவில் புரிதலைக் கொண்டு வருவது இயக்குனரின் மிக முக்கியமான பணி. குறியீடுகள் வழியாக கதை எங்கே துவங்கிறது என்பதையும், அங்கே இருந்து கொண்டு அது பேசும் தீயதை மறுப்பதும் என இரண்டு பக்கங்களின் நியாயங்களைப் பேசுவதில் இருக்கும் சிக்கலை உடைக்கிறார்.
கொஞ்சம் தவறினாலும் பார்வைத் தளத்தில் சிக்கலை உண்டு பண்ணக்கூடிய வேலை இது. சில நேரம் உண்மையைக் கூட அழுத்தமாகச் சொல்ல முடியாத சிக்கலை ஏற்படுத்தும். அதைத் தாண்டி தொடர்ந்து அதில் பயணித்து பார்வையாளர்களுக்கு ஓர் அரசியல் புரிதலைக் கொண்டு வரும் குறியீடுகள் ஏழாவது ரைடர்.
இந்த ரைடர்களைச் சரியாகப் பயன்படுத்துவதால்தான் இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் சேம்பியன்!
எழுதியவர் :
✍🏻 – முத்து ஜெயா
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
