’குழந்தைகள் என்ன செய்தாலும் அழகு… குழந்தைகளுக்காக என்ன செய்தாலும் அழகு!’ என்ற அழகான வார்த்தைகளுடன் அழகாக ஆரம்பித்தது தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க நிகழ்வு.
சிறுவர்களுக்கான வாசிப்பு உலகை, விளையாட்டை, கலையைப் பேச சிறார் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இந்த புதிய அமைப்பைத் தொடங்கியிருக்கின்றனர்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் துவக்கவிழா மாநாட்டில் ‘மாயக்கண்ணாடி’, ‘சூரியனுக்குக் கோபம்’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை நூல்களை எழுதியவரும், ‘சிறுகதை’ இதழின் ஆசியருமான எழுத்தாளர் உதயசங்கர் தலைவராகவும், ‘பென்சில்களின் அட்டகாசம்’, ‘மலைப்பூ’ உள்ளிட்ட பல நூல்களை எழுதிய சிறார் எழுத்தாளர் விழியன் செயலாளராகவும், ‘பஞ்சுமிட்டாய்’ எனும் சிறார் இதழ் மற்றும் இணையதளத்தின் ஆசிரியர் பிரபு பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
சிறார் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் சுகுமாரன் துணைத்தலைவராகவும், குழந்தைகளுக்கான சமூகச் செயல்பாடுகளை முன்னெடுத்துவரும் பதிப்பாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் சாலை செல்வம் துணைச்செயலாளராகவும் அறிவிக்கப்பட்டனர்.
இந்த சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக மூத்த எழுத்தாளர் கமலாலயன், எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி நீதிமணி, பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளியின் முதல்வர் வெற்றிச்செழியன், சிறார் எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் கொ.மா.கோ.இளங்கோ, ஆசிரியர் சுடரொளி, பாரதி புத்தகாலயம் பதிப்பக நிர்வாகி நாகராஜன், வானம் பதிப்பக நிறுவனர் மணிகண்டன் வெள்ளைப் பாண்டியன், ஆசிரியர் சிவா, கதைசொல்லி வனிதாமணி, நல செயற்பாட்டாளர் இனியன் ராமமூர்த்தி, சிறார் அறிவியல் செயற்பாட்டாளர் அறிவரசன் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த சங்கத்தின் ஆலோசனைக்குழுவில் மூத்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் ஆயிஷா நடராசன், முனைவர் வசந்திதேவி, எழுத்தாளர் யூமா வாசுகி ஆகியோர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மூத்த எழுத்தாளர் கொ.மா.கோதண்டம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச்செல்வன், கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொது செயலாளர் இரா.காமராசு, சிறார் எழுத்தாளர் ஆயிஷா நடராஜன், சிறார் எழுத்தாளர் யூமா வாசுகி, சிறார் எழுத்தாளர் ஏ.எஸ். பத்மா, ‘துளிர்’ மாத இதழின் ஆசிரியர் முனைவர் இராமானுஜம், விடுதலை சிறுத்தைகள் கலை இலக்கிய பேரவையின் மாநில செயலாளர் கவிஞர் யாழன் ஆதி, மலையாள சிறார் எழுத்தாளர் பி.வி.சுகுமாரன், கல்வியாளர் முனைவர் அருணா ரத்தினம் மற்றும் கோவா சிறார் எழுத்தாளர் ராஜஸ்ரீ, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், சமூக நல செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நன்றி: Nam Tamil Media