தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 (பள்ளிக்கல்வி)
புதிய பார்வையில் கல்வி
உள்ளடங்கிய சமத்துவம் மற்றும் எதிர்கால ஆயத்தம்
மறுமலர்ச்சி காலத்துக்குப் பின் குறிப்பாக மத அமைப்புகளின் பிடியிலிருந்து விடுபட்டு அறிவியல் பரவத் தொடங்கிய பின்னர் 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டிலும் மேலை நாடுகளில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின் விளைவாக வேலை வாய்ப்புகள் பெறுகின. அதற்கு தக்கவாறு மக்களை தயார்படுத்த கல்வி பரவலாகி அனைவருக்கும் பொதுவாக ஆனது. அறிவியலிலும் கணிதத்திலும் நிபுணத்துவம் பெறும் வகையில் கல்வி முறை உருவாக்கப்பட்டது. மாணவர்களின் முழு திறமையை வெளிப்படுத்த தாய்மொழி கல்வியே சிறந்தது என 2016 யுனெஸ்கோ ஆய்வு அறிக்கை தெரியப்படுத்துகிறது.
மாணவர்கள் எதிர்காலத்தின் சாலையை கட்டியமைக்கும் சின்னஞ்சிறிய கற்களாக இருக்கின்றனர், அந்த மாணவர்களுக்கு வலுவான அடித்தளம் கல்வியின் மூலமே அமையும். பள்ளிகள் தான் நாளைய சமூகத்தை அறிவியலிலும் கலாச்சாரத்திலும் முன்னோக்கி செல்ல துணை புரியும் மாபெரும் அடித்தளம். “எதிர்கால பள்ளி” என்பது சுவர்களுக்குள் சுருங்கிய கல்வி மையம் அல்ல, மாறாக சமூகத்தையும், சுற்றுச்சூழலையும், தொழில்நுட்பத்தையும் இணைத்து உருவாக்கப்படும் முழுமையான “கற்றல் உலகம்” இதுவே. இன்றைக்கு ஆரம்பக் கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில் மூன்றில் இருவர் எதிர்காலத்தில் தற்போது நடைமுறையில் இல்லாத, என்னவென்றே தெரியாத, இனிமேல் புதிதாக உருவாகும் துறைகளில் தான், வேலை பார்க்கப் போகிறார்கள். அந்த அளவுக்கு “டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவு” போன்றவை துரித கதியில் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இது மாணவர்களை எக்காலத்துக்கும் எவ்வாறு தயார்படுத்துவது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதன் காரணமாக பல நாடுகள் பள்ளி கல்வியில் சீரிய கவனம் செலுத்த தொடங்கியிருக்கின்றன. இந்த சூழலில் பள்ளி கல்வித்துறை பல முக்கிய அம்சங்களை முன்னெடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் முன்னோக்கு பார்வை, இன்றைய கல்வி உலகம், நாளுக்கு நாள் பல மாற்றங்களை கண்டு கொண்டு வருகிறது. கற்றல் முறைகள், பாடப்பிரிவுகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக மாற்றங்கள் ஆகியவை எல்லாமே பள்ளி கல்வியின் வடிவத்தையும் நோக்கத்தையும் மாற்றி அமைத்து வருகின்றன. இந்த நிலையில் எதிர்கால பள்ளிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக தமிழ்நாடு போன்ற கல்வியில் முன்னேற்றம் கண்ட மாநிலத்திற்கு நவீனத்துவத்துடன் சேர்த்து மனதளவில் வலிமையான மாணவர்களை உருவாக்குவது அவசியம் ஆகிறது.
பசுமை பள்ளிகள்: சுத்தமான குடிநீர், பசுமை தோட்டங்கள், சூரிய ஆற்றல், மின்சாரம், பிளாஸ்டிக் இல்லா வளாகம் போன்றவை சிறந்த முறையில் செயல்பட்டு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது.
டிஜிட்டல் சமத்துவம்: நகர்ப்புற, கிராமப்புற இடைவெளியை குறைத்து ஒவ்வொரு மாணவருக்கும் டேப்லட்(Tablet) அல்லது லேப்டாப்(Laptop) போன்ற கருவிகளை வழங்கும் திட்டங்கள், இவற்றைக் கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல் ஒரு மாணவர் எதிர்காலத்திற்கு தயாரான சூழலில் பிரச்சனைகளை தீர்ப்பவர்களாகவும் படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர்களாகவும் நாளைய கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும் அறிவாற்றல் மிக்கவர்களாகவும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உலகில் வெற்றி பெற தகுதியானவர்களாகவும் உருவாக வேண்டும். கற்றல் முறையில் நெகிழ்வுத் தன்மை மிகவும் அவசியம். மாணவர்கள் தங்கள் ஆர்வம், திறமை மற்றும் எதிர்கால கனவுகளுக்கு ஏற்ப படங்களை தேர்வு செய்யும் சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். மதிப்பெண்களை வைத்து மாணவர்களின் திறமையை சுருங்கச் செய்தல் கூடாது. ஏதேனும் ஒரு சூழலில் மாணவனின் காக்னிடிவ் திங்கிங்கில்(Cognitive Thinking) மாற்றம் ஏற்பட்டு அவன் பாதை சிறந்ததாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த மாற்றத்திற்கு தீனி போட்டு வளர்க்கும் ஆற்றல் மாணவர்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது. இவைகள் சரியான வகையில் மாணவர்களிடம் சென்று சேர வேண்டும்.
பாரம்பரியம் மற்றும் நவீனம் இணைந்த கல்வி: தமிழ்நாடு தனது பாரம்பரிய கலைகளை (தமிழ் இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரம்) சிறந்த வகையில் பாதுகாக்கிறது. சீனாவில் பள்ளி வயது குழந்தைகளுக்கு சிறு சிறு தொழில்கல்வி பள்ளி வயதிலேயே பயிற்றுவிக்கப்படுவதால், வளரிளம் பருவம் முடியும் தருவாயில் போதுமான வருமானம் ஈட்டும் வகையில் மாணவர்கள் தயாராகின்றனர். “கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்பதை இன்றளவும் கடைப்பிடிப்பதை கண்கூடாக காணலாம். இவற்றுடன் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தையும், சிறிய அளவிலேனும் பள்ளி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
பாட புத்தகங்களை மையமாகக் கொண்ட கற்றல் முறையில் இருந்து, திட்டம் அடிப்படையிலான (Project Based), செயல்பாடு அடிப்படையிலான (Activity Based) ஆராய்ச்சி அடிப்படையிலான (Research Based) கற்றலுக்கு மாறுதல் தேவையாக உள்ளது. தமிழ்நாடு அரசின் இளையோர் நலன் மற்றும் கல்விக் கொள்கை பல்வேறு தளங்களில் இந்த மாற்றத்தை வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence), ரோபாட்டிக் (Robotic), நுண்ணறிவு கணினி, பசுமை ஆற்றல் தொழில்நுட்பம் போன்ற துறைகள் பற்றி பள்ளி மட்டத்திலேயே அறிமுகப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. பாரம்பரிய கலைகள் கற்பதுடன், மனத்திடம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் மிக மிக கடினமான சூழலையும் சாமர்த்தியமாக கையாளும் திறமை படைத்தவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும். தைரியமாக வாழ்க்கையை எதிர்கொண்டு வாழ்வதற்கான அனைத்து யுத்திகளையும் பள்ளி பருவத்தில் போதிப்பதன் மூலம் எதிர்காலத்தை அவர்கள் எளிதாக எதிர்கொள்வார்கள்.
கல்வி என்பது குழந்தைகளின் மூளைக்குள் செய்திகளை திணிப்பதல்ல, அவர்களின் அறிவை தூண்டும் கருவிதான் கல்வி என்ற கருத்தும், சுய சிந்தனையுடன் கற்பனை வளமும் படைப்பாற்றலும் கொண்டிருப்பது ஒவ்வொருவருடைய வெற்றிக்கும் அடிப்படையாக அமைகிறது என்ற கருத்தும், சேப்பியன் புத்தகம் தந்த யுவால் நோவா ஹராரியின் கூற்றுப்படி மனிதன் மற்ற உயிரினங்களில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டதற்கு மிக முக்கிய காரணம் அவனுடைய கற்பனை வளமே. கற்பனையில் விளைந்ததை சக மனிதர்களிடம் புனைவாக சொல்லக் கூடிய வல்லமை தான் மனிதனை தனித்தன்மை கொண்ட உயிரினமாக மாற்றியது. என்பது உலகறிந்த உண்மை.
மாணவ மாணவிகள் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை இழக்காமலும், எந்த ஒரு தவறான செயல் மூலமும் என் வாழ்க்கை இதோடு முடிந்து விட்டது என்ற எண்ணம் மேலோங்காமலும், பந்து சுவற்றில் மோதி திரும்பி வருவது போன்று எத்தனை முறை விழுந்தாலும் விழுந்ததை விட வேகமாக எழுவேன் என்ற உறுதி குழந்தைகள் மனதில் உருவாகுமாறு அவர்கள் வளர வேண்டும். இதை அவர்கள் பள்ளி வயதில் இருந்தே கற்கும் போது, அடித்தளம் மிகவும் வலிமையானதாக மாறுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பள்ளி குழந்தைகளுக்காக உளவியல் அடிப்படையிலான ஆழமான பயிற்சிகள் தரப்பட வேண்டும். என் வாழ்க்கையை என்னால் திறம்பட அமைத்துக் கொள்ள முடியும் என்ற புரிதல் பள்ளி அளவிலேயே, கற்கும் கலையை மாணவர்கள் பெற வேண்டும். ஐஐடி(IIT) போன்ற சிறந்த கல்லூரிகளில் படிக்கும் சில மாணவர்களின் மன வலிமை குறைபாட்டால், தன்னையே மாய்த்துக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்படுவது யாருடைய தவறு?, பெற்றோர்? ஆசிரியர்? சமூகம்? இதற்கு யார் பொறுப்பேற்பது?.
ஒவ்வொரு மனிதனும் விரும்புவது விடியும் நாட்கள் அனைத்தையும் சந்தோஷமாக கடக்க வேண்டும் என்பதுதான். இதற்கான முறையான விழிப்புணர்வு பள்ளி வயதிலிருந்து தேவைப்படுகிறது. பெண்களுக்கான அடிப்படை சட்டங்கள், ராகிங்(Ragging) குறித்தான விழிப்புணர்வு, காவல் நிலையம் சென்று புகார் எழுதுவது போன்றவை பள்ளியளவில் தெரிந்திருத்தல் அவசியமாகிறது.
முடிவுரை. ஐம்பது வருடங்களில் கல்விமுறையில் மேம்பாட்டுடன் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் பல வருடங்கள் செய்யக்கூடிய வேலையை சில நிமிடங்களில் செய்து முடிக்கும் தன்மைதான் குவாண்டம் கம்ப்யூட்டிங்(Quantum Computing) ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்(Artificial Intelligence- AI), ஆர்டிபிசியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ்(Artificial General Intelligence- AGI) ஆர்டிபிசியல் சூப்பர் இண்டெலிஜென்ஸ்(Artificial Super Intelligence-ASI) இவைகள் இனி வரும் காலத்தில் பெரிய அளவில் சமூகத்தை வடிவமைக்கும் என்பதால், சிறு சிறு அளவிலேனும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது அவர்களின் கற்றல் அளவை மேம்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நோக்கத்துடன் மாணவர்கள் செயல்படும்போது ஒரு மேம்பட்ட சமுதாயம் உருவாகும்.
📚 எழுதியவர் :
✍🏻 – மனோகரி.ஆர்,
பட்டதாரி ஆசிரியர்,
வேலூர் மாவட்டம்
Email: gmts737@gmail.com
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

