பாரதிய ஜனதா கட்சியின் ஹிந்துத்துவ சித்தாந்தம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கவர்ச்சிக்கு எதிரான எதிர்ப்பில், இந்திய மாநிலங்களுக்கிடையே தனித்ததொரு மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலின் போது, 2014இல் மாநிலத்தில் வென்றிருந்த ஒரு தொகுதியையும் பாஜக இழந்து முற்றிலும் காணாமல் போனது. மாநிலத்திற்கு மோடி வருகை தரும் ஒவ்வொரு முறையும், அது உணர்வுப்பூர்வமாக கொதிப்படையும் நிலைக்குச் செல்கிறது. எடுத்துக்காட்டாக, 2018ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சியைத் துவக்கி வைக்க சென்னைக்கு மோடி பறந்து வந்தபோது “மோடி கோ பேக்” என்ற வாசகம் அவரை வரவேற்றது. சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மாமல்லபுரத்தில் நடந்த சந்திப்பிற்காக மோடி வருகை தந்தபோதும், அந்த முழக்கம் ட்விட்டரில் மிகவும் பிரபலமடைந்தது, பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு பத்து சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது போன்ற மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்திருந்தன.
தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கான காரணங்கள் குறித்து. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக இருக்கும் கலையரசனுடன் தனித்து இயங்கி வருகின்ற பத்திரிகையாளரான அஜாஸ் அஷ்ரஃப் உரையாடினார். பாஜகவும், அதன் கருத்தியல் பிதாமகருமான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கமும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்ற பிராமணிய ஹிந்து மதத்தை எதிர்த்து நிற்பதில் இந்த மாநிலத்திற்கென்று இருக்கின்ற மிகநீண்ட வரலாறே, பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான தடையாக இருப்பதாக கலையரசன் குறிப்பிட்டார்.
தமிழ் அடையாளத்தை உருவாக்குவதில் சாதி எதிர்ப்பு இயக்கங்களின் முக்கிய பங்கு குறித்தும், ஹிந்துத்துவ எதிர்ப்பை சிதறடிப்பதற்கு மோடியும், அவரது குழுவினரும் கடைப்பிடித்து வருகின்ற உத்திகள் குறித்தும் கலையரசன் விவாதித்தார். மாநிலத்தில் உள்ள முஸ்லீம் சமூகம் பற்றி குறிப்பிடுகையில், ’இஸ்லாமிய சிந்தனை, சாதிய அடுக்குமுறையில் கீழே வைக்கப்பட்டிருப்போரை இழிவுபடுத்துகின்ற சமஸ்கிருத மொழி பேசுகின்ற மேல்தட்டு வர்க்கத்தினரின் சிந்தனைக்கு முற்றிலும் மாறுபட்டதாக சமத்துவம் குறித்ததாக இருக்கிறது’ என்று குறிப்பிட்ட கலையரசன், முஸ்லீம்களைத் தமிழ்நாட்டில் தனிமைப்படுத்த வேண்டும் என்பது பாஜக மேற்கொண்டு தோற்றுப் போன திட்டமாகும் என்று கூறினார்
கேரவன் இதழில் வெளியான நேர்காணலின் பகுதி
அஜாஸ் அஷ்ரஃப்: ஜியை மாமல்லபுரத்தில் மோடி சந்தித்தபோது, #GoBackModi என்ற ஹேஷ்டேக் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ட்வீட்களை உருவாக்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரை, எந்த அளவிற்கு மோடி ஏற்றுக்கொள்ள முடியாதவராக இருக்கிறார்?
கலையரசன்: தமிழ்நாட்டில் மோடியை ஏற்றுக்கொள்வது என்பது மிகக் குறைவான அளவிலேயே இருக்கிறது. ஹிந்தி-ஹிந்து-பிராமண அடையாளத்தின் மேலாதிக்கத்தை தமிழ்நாட்டின் மீது திணிப்பதற்கான மற்றொரு கருவியாக பாரதிய ஜனதாவை மக்கள் கருதுவதே, இவ்வாறு மிகக்குறைந்த அளவில் மோடி ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான காரணமாக இருக்கிறது. இந்த மேலாதிக்கத்தின் முந்தைய கருவியாக காங்கிரஸ் இருந்தது. தமிழ் மொழியை நேசிக்கின்ற சேவகன் என்று தன்னைத்தானே மோடி சித்தரித்துக் கொண்ட போதிலும், அவரும் அவரது கட்சியும் பிராமணியம் மற்றும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட தமிழின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று இங்கே நிலவுகின்ற கருத்தை அவரால் மாற்ற முடியவில்லை.
அஜாஸ் அஷ்ரஃப்: சமஸ்கிருதமயமாக்கப்பட்ட தமிழ் என்பதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?
கலையரசன்: தமிழ் அடையாளத்தை வெறும் மொழி சார்ந்தது என்று நினைப்பது தவறு. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், தமிழ் அடையாளம் என்பது சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்திற்கும், சாதிப் படிநிலைக்கு எதிராகவுமே உருவாகியுள்ளது. உயர்சாதி ஹிந்துக்கள் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் பேசுவதால், அவர்களைப் பொறுத்தவரை, தமிழில் பேசுவது என்பது தங்களை விடத் தாழ்ந்தவர்களின் பேச்சைக் குறிப்பதாகவே இருக்கிறது.
அஜாஸ் அஷ்ரஃப்: அப்படியென்றால் தமிழ்நாட்டில் மொழியும் சாதியும் வலுவாக பிணைக்கப்பட்டுள்ளனவா?
கலையரசன்: ஆமாம். இந்த பிணைப்பு மதச்சார்பற்ற தமிழால் ஏற்பட்டதாகும். முஸ்லீம்கள், இந்த தமிழ் அடையாளத்திற்கு வெளியே இருப்பதாக யாரும் இங்கே காண்பதில்லை. தமிழ் அடையாளத்தின் உள்ளார்ந்த அங்கமாகவே அவர்கள் காணப்படுகிறார்கள்.
அஜாஸ் அஷ்ரஃப்: தமிழ் அடையாளத்தின் ஒரு அங்கமாக முஸ்லீம்கள் எவ்வாறு மாறினர்? மறைந்த அறிஞர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனும் இதே விஷயத்தைச் சொன்னது எனக்கு நினைவிலிருக்கிறது.
கலையரசன்: 1930களில் ’இஸ்லாம் எங்கள் பாதை; இனிமைத் தமிழ் எங்கள் மொழி’ என்ற முழக்கம் முஸ்லீம்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. புகழ்பெற்ற பிரபலமான தமிழ்க் கவிஞர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம் சமூகத்திலிருந்து வந்தவர்களே. முஸ்லீம்கள் என்பதாலேயே, தமிழகத்தில் அவர்களை யாரும் ஏற்றுக் கொள்ள மறுத்ததில்லை. 2017 ஜூன் மாதம் மறைந்த அப்துல் ரஹ்மான், பல கவிஞர்களையும் ஆதரித்து வந்த காரணத்திற்காக, ’கவிஞர்களின் அன்னை’ என்றே போற்றப்பட்டார்.
அஜாஸ் அஷ்ரஃப்: இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிராமண ஹிந்து மதத்தை விமர்சனம் செய்து வந்த, சமூக ஆர்வலர் பெரியார் தொடங்கிய சாதி எதிர்ப்பு சுயமரியாதை இயக்கம் முஸ்லீம்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதும் இதற்கு காரணமாக இருக்கிறதா?
கலையரசன்: சுயமரியாதை இயக்கம் வரையறுத்த முக்கியமான அம்சமாக சாதி சமத்துவம் இருந்தது. இஸ்லாமிய மதம் சமத்துவத்திற்கான மதம் என்ற புரிதலும் இருந்தது. எடுத்துக்காட்டாக, ’இஸ்லாத்தில் பிராமணர்கள், சூத்திரர்கள், பஞ்சமர்கள் [தாழ்ந்த சாதி] என்று யாருமில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு கடவுள், ஒரு சாதி அதாவது ஒரு குடும்பம், ஒரு தெய்வம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று பெரியார் கூறினார். ஒரே நேரத்தில் சாதி-எதிர்ப்பு, ஹிந்து மதத்தை விமர்சிப்பது, தமிழ் அடையாளத்திற்குள் இஸ்லாத்தை ஒருங்கிணைப்பது போன்ற அனைத்தும் இணைந்து நிகழ்ந்தன. திராவிடத் தலைவர்கள் இஸ்லாத்தில் இருந்த சில அம்சங்களை விமர்சிக்கவே இல்லை என்றும் சொல்ல முடியாது.
அஜாஸ் அஷ்ரஃப்: எது போன்ற அம்சங்கள்?
கலையரசன்: பர்தா அணிவது, இஸ்லாத்திற்குள் நுழைந்த ஆச்சாரிய முறை – இத்தகைய பிரிவு மதக் கோட்பாட்டு ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் – போன்றவற்றை அவர்கள் விமர்சித்தனர். சமத்துவம் குறித்த இஸ்லாத்தின் சிந்தனை, சாதிய அடுக்குமுறையில் கீழ் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு நன்மை பயக்கும் என்று பெரியார் கூறினார். அவர்களுக்கு சமஸ்கிருத மொழி பேசுபவர்கள் இழைத்த அவமதிப்பிற்கு முற்றிலும் மாறுபட்டதாகவே சமத்துவம் குறித்த இஸ்லாமிய சிந்தனை இருந்தது. முஸ்லீம்களும், பிராமணரல்லாத மற்ற சாதியினரும் தமிழைப் பேசினர், கொண்டாடினர் என்பதால், மொழியின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர்.
அஜாஸ் அஷ்ரஃப்: இது வட இந்தியாவில் இருப்பதைப் போன்றதாக இருக்கவில்லை. அங்கே முஸ்லீம்களும், சாதிய அடுக்குமுறையில் கீழ் வைக்கப்பட்ட மக்களும் இயக்கம் மூலமாக ஒன்றிணைக்கப்பட்டிருக்கவில்லை. தேர்தல்களுக்காக மட்டுமே அங்கே இவர்கள் ஒன்றிணைந்தனர்.

கலையரசன்: ஆமாம். 1980களில் ராம ஜென்மபூமி இயக்கம் தொடங்கும் வரையிலும், வட இந்திய முஸ்லீம் மேல்வர்க்கத்தினர் ஹிந்து மேல்வர்க்கத்தினர் அல்லது உயர்சாதியினருடன் மிகவும் இணைந்தே இருந்து வந்தார்கள். அதற்கு மாறாக, இங்கே தமிழ் அடையாளத்தை உருவாக்குவதில் முஸ்லீம்களுக்கு குறிப்பிடத்தக்க பங்கு இருந்தது.
அஜாஸ் அஷ்ரஃப்: வட இந்திய சகோதரர்களிடமிருந்து வித்தியாசமானதொரு பாதையை தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஏன் ஏற்றுக் கொண்டனர்?
கலையரசன்: முஸ்லீம்களின் கல்வி நிலை குறித்த குறியீட்டில் மாநிலங்கள் அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பொருளாதார ரீதியாக அது கேரளாவிற்கு அடுத்ததாக, இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மாநிலத்தின் சமூக நீதி கட்டமைப்பின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்ததால்தான். தமிழ்நாட்டில் முஸ்லீம்களின் சமூக முன்னேற்றம் நடைபெற்றது. அவர்கள் நீண்ட காலமாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் மூலமாக இட ஒதுக்கீடு பெற்று வந்திருக்கின்றனர். 2007ஆம் ஆண்டில், இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்குள் மூன்று சதவீத பங்கு அவர்களுக்கு தனியாகப் பிரித்து வழங்கப்பட்டது. இத்தகைய அமைப்புமுறை அவர்கள் கல்வி பெறுவதற்கு உதவியது. 1919 – 1957க்கு இடைப்பட்ட காலத்தில் வெளியான தாருல் இஸ்லாம் என்ற தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியர் தாவூத்ஷா, தங்கள் மதத்தைப் பற்றிய புரிதலை முஸ்லீம்களிடையே ஏற்படுத்துவதற்காக தமிழ் பயன்படுத்தப்படுவதை ஊக்குவித்தார். அனைத்து முஸ்லீம்களும் தமிழில் கல்வி கற்க வேண்டும் என்றும் தேசிய பிரச்சனைகள் குறித்து பிராமண நிலைப்பாடுகளை எடுப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.
அஜாஸ் அஷ்ரஃப்: மற்ற மாநிலங்களைப் போல முஸ்லீம்களை ’பிறர்’ என்று இங்கே அடையாளம் காட்டுவது அவர்களுக்கு எளிதாக இருக்கவில்லை என்பதால், பாஜகவால் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியவில்லை என்று கூற முடியுமா?
கலையரசன்: மிகச் சரி. ஆனால் முஸ்லீம்களை ’பிறர்’ எனக் காட்டுவதற்கோ அல்லது ’மோசமானவர்கள்’ என்று காட்டுவதற்கோ பாஜக இங்கே முயற்சிக்கவே இல்லை என்று கூறி விட முடியாது. எடுத்துக்காட்டாக, 1998இல் கோயம்புத்தூரில் குண்டுவெடிப்பு மற்றும் வன்முறை ஏற்பட்டபோது அவர்கள் அந்த முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் அதை வைத்து தேர்தல் ஆதாயங்களை பாஜகவால் பெற முடியவில்லை என்பது மட்டுமல்லாமல், அவர்களால் ஹிந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தவும் முடியாது போனது. தமிழ்நாட்டில் உள்ள முஸ்லீம்கள், தங்களுடைய தமிழ் அடையாளத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மையின் குறிப்பான்களாக, தமிழ் அடையாளமும், மொழியும் இருப்பதால், சாதிய அடுக்குமுறையில் கீழ் வைக்கப்பட்டிருப்பவர்களும், முஸ்லீம்களும் ஒன்று சேர்வதற்கான தளத்தை மாநில அரசியல் உருவாக்கித் தந்திருக்கிறது.
அஜாஸ் அஷ்ரஃப்: தமிழ்நாட்டில் முஸ்லீம்களை ’பிறர்’ அல்லது ’மோசமானவர்கள்’ என்று காட்டுவது, நிறைவேற்ற முடியாத மிகவும் கஷ்டமான திட்டம் என்று சொல்கிறீர்களா?
கலையரசன்: வெளிப்படையாகச் சொல்வதென்றால், அது தோற்றுப் போன திட்டம்.
அஜாஸ் அஷ்ரஃப்: தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு பாஜக பல்வேறு முறைகளில் முயன்று வருகிறது. எடுத்துக்காட்டாக, ஜி உடனான சந்திப்பின் போது வேஷ்டி அணிந்து வந்த மோடி, அண்மையில் ஹூஸ்டனில் நடந்த நிகழ்ச்சியில் தமிழில் ஒரு வரி பேசுவதை முக்கியம் என்று கருதினார். பலமுறை அவர் தமிழ் மொழி மீதான தனது காதலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
கலையரசன்: அவருடைய செயல்பாடுகள் ஹிந்துத்துவாவை தமிழர்களுக்கு இணைவானதாக உருவாக்குகின்ற பாஜகவின் தந்திரங்களின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன. 2014ஆம் ஆண்டு மோடி பிரதமராக வருவதற்கு முன்பாகவே, ஆர்.எஸ்.எஸ்ஸின் ஹிந்தி வார இதழான பஞ்சஜன்யாவின் ஆசிரியராக இருந்த மாநிலங்களவை [முன்னாள்] உறுப்பினரான தருண் விஜய் தமிழ் மொழியையும், தலைசிறந்த தமிழ்ப் புலவர் திருவள்ளுவரையும் கொண்டாட முயன்றார். ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலையை ஆர்.எஸ்.எஸ் – பாஜக அமைத்தது. ஆர்.நாகசாமி என்ற தொல்பொருள் ஆய்வாளருக்கு 2018ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது கொடுத்தார்கள். ஏன் கொடுத்தார்கள் என்றால், நாகசாமி செம்மொழித் தமிழ் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை நிறுவ முயல்பவராக இருக்கின்றார். அவருடைய இந்த முயற்சி, கடந்த காலத்தை வேறு மாதிரி மாற்றி எழுதுவதாக இருக்கின்றது.
அஜாஸ் அஷ்ரஃப்: செம்மொழி சமஸ்கிருதம் மற்றும் வேத இலக்கியங்களிலிருந்து, செம்மொழித் தமிழ் எவ்வாறு வேறுபடுகிறது?
கலையரசன்: செம்மொழித் தமிழ் சாதியுடன் இணைக்கப்படவில்லை என்பது மட்டுமல்லாது, அது ஒழுங்கமைக்கப்பட்ட மதவழிபாட்டுடனும் தொடர்புடையதாக இருக்கவில்லை. இதுவே செம்மொழித் தமிழை சமஸ்கிருதத்திற்கு எதிரானதாக ஆக்குகிறது. மேலும் செம்மொழித் தமிழ் வேத மரபிற்கு முந்தையது என்பதுவும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அஜாஸ் அஷ்ரஃப்: மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில், தமிழின் கலை மற்றும் இலக்கியத்தின் மகுடமாக கருதப்படுகிற பொ.ஆ.மு.400 மற்றும் பொ.ஆ.200க்கு இடைப்பட்ட காலமான சங்க காலத்திற்கு முந்தைய தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே பெரும்கூட்டத்தை அவை ஈர்த்திருக்கின்றனவா? செம்மொழித் தமிழ் கலாச்சாரத்தின் காலத்தை இன்னும் பின்னுக்குத் தள்ளி, நகர்ப்புற குடியேற்றங்கள் அப்போதே இருந்தன என்று கீழடி அகழ்வாராய்ச்சிகள் நிறுவுகின்றன.
கலையரசன்: ஆமாம். அது செம்மொழித் தமிழ் வேத மரபிலிருந்து வேறுபட்டது என்பதையும் நிறுவுகிறது. முஸ்லீம்களை ’பிறர்’ என்றாக்குவது வேலை செய்யாததைப் போலவே, தமிழ்நாட்டிற்குள் பாஜக நுழைவதற்கான வழியை மொழியும் ஏற்படுத்தித் தரவில்லை. தமிழ்நாட்டில் மொழிப் பிரச்சினை என்பது சாதி சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இங்கே ஹிந்தி மொழியானது, தமிழ்நாட்டிற்குள் நுழைய விரும்புகிற சமஸ்கிருதம் சார்ந்த மேல்வர்க்கத்தினரின் அல்லது பிராமணர்களின் வாகனமாகவே பார்க்கப்படுகிறது. டெல்லி என்றாலே அது இன்னும் ஹிந்தி என்பதற்கான மறுமொழியாகவே இங்கே காணப்படுகிறது.
அஜாஸ் அஷ்ரஃப்: ஆதிக்க குழுக்களுக்கு எதிராக சாதிகளைத் திரட்டுவதில் தன்னுடைய மகத்தான நிபுணத்துவத்தை பாஜக நிரூபித்திருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டிற்குள் தங்களுடைய அந்த சாதி அரசியலை அவர்களால் கொண்டு வர முடியவில்லையா?
கலையரசன்: தமிழ் நாட்டில் சாதிக் குழுக்களிடையே இருக்கின்ற சமமற்ற வளர்ச்சியை அவர்கள் ஏற்கனவே பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் சாதிகளுக்கிடையில் இருந்த சமமற்ற வளர்ச்சியை ஆதிக்கம் செலுத்திய யாதவர்களுக்கு எதிராக பாஜக எவ்வாறு பயன்படுத்தியது என்பதைப் பற்றி அரசியல் அறிவியலாளரான கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட்டும் நானும் எழுதியிருக்கிறோம். தமிழ்நாட்டிலும் சாதி முரண்பாடுகள் உள்ளன.
அஜாஸ் அஷ்ரஃப்: அந்த சாதி முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான பாஜகவின் தந்திரம் எவ்வாறு இருக்கிறது?
கலையரசன்: தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்காக, கோவில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்ற சாதி சங்கங்கள் சிலவற்றைப் பயன்படுத்திக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது. புதிய தமிழகம் கட்சி மூலமாக தென்தமிழ்நாட்டு தலித்துகளின் ஒரு பிரிவினரை தன்னுடன் இணைத்துக் கொள்ள அது முயற்சித்து வருகிறது. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை அந்த கட்சியின் தலைவர் கே.கிருஷ்ணசாமி சந்தித்தார். தேவேந்திரகுல வேளாளர் என்ற தன்னுடைய சாதியை இதர பிற்படுத்தப்பட்டவர் என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதே கிருஷ்ணசாமியின் கோரிக்கை. பின்தங்கிய சாதியினரிடையே, பொருளாதார வளர்ச்சியால் பலனடைந்திருக்கும் நாடார்களை கவர பாஜக முயற்சிக்கிறது. ஹிந்து நாடர்களுக்கு கன்னியாகுமரி பகுதியில் கிறிஸ்துவ நாடர்களுடன் உள்ள பிரச்சினையைப் பயன்படுத்திக் கொள்ளவும் பாஜக முயற்சிக்கிறது. திருப்பூர் – கோயம்புத்தூர் பகுதியில் உள்ள கவுண்டர்களை குறிவைக்கின்ற பாஜக, பாட்டாளி மக்கள் கட்சியுடனான கூட்டணியைப் பயன்படுத்தி வன்னியர் பகுதிக்குள்ளும் நுழைகிறது.
அஜாஸ் அஷ்ரஃப்: பாஜகவின் இந்த சாதி தந்திரங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா?
கலையரசன்: அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. சாதிகளிடையே இருக்கின்ற சமத்துவமின்மையைக் களைவதற்கான தீர்வைக் காண தமிழ்-திராவிட அரசியல் முயன்றதே அதற்கான காரணம். எடுத்துக்காட்டாக, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்த வன்னியர்கள் தாங்கள் ஒதுக்கப்படுவதாக உணர்ந்தபோது, 1989ஆம் ஆண்டில் அவர்கள் மிகவும் பின்தங்கிய சாதி என்ற பிரிவில் சேர்க்கப்பட்டனர். இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டில் இருந்து 20 சதவிகிதம் மிகவும் பின்தங்கிய சாதியினருக்கு ஒதுக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டில், இட ஒதுக்கீட்டிற்காக தலித்துகள் உள்வகைப்படுத்தப்பட்டனர். இந்த இரண்டு நடவடிக்கைகளையும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி செயல்படுத்தினார். தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டில் பல்வேறு சாதிக் குழுக்களின் நலன்களுக்கும் இடமளிக்கப்பட்டிருக்கிறது. எனவே திராவிடக் கட்சிகள் தங்களை ஏமாற்றி விட்டன என்று சாதிகளை நம்ப வைப்பது பாஜகவுக்கு மிகவும் கடினமான வேலையாகிப் போகிறது.
ஆனாலும் தமிழர்களிடமிருந்து திராவிடக் கட்சிகளைப் பிரித்து விட திட்டமிடுகின்ற தமிழ் தேசியவாதிகளின் அரசியலைப் பயன்படுத்திக் கொள்வதே, தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு பாஜகவிடம் இருக்கின்ற ஒரே வழியாக இப்போது இருக்கிறது.
அஜாஸ் அஷ்ரஃப்: யார் அந்த தமிழ் தேசியவாதிகள்?
கலையரசன்: ஒருவர் தமிழராக இருப்பதற்கு, அவர் அல்லது அவள் தமிழ்நாட்டில் பிறந்திருக்க வேண்டும் என்று கூறுபவர்கள் அவர்கள்; அவன் அல்லது அவள் தமிழ்நாட்டில் வரலாற்றுரீதியாக வேரூன்றி இருக்க வேண்டும். தமிழர் யார் என்பதை தமிழ் தேசியவாதிகள் எவ்வாறு அடையாளம் காண்கிறார்கள்? அவர்கள் அதை சாதி பரம்பரை மற்றும் வீட்டில் பேசுகின்ற மொழி மூலமாகச் செய்கிறார்கள். தேசியவாதிகளால் தமிழர் என்று கருதப்படும் ஒருவர், அவர்களின் பார்வையில் தூய தமிழர். தெலுங்கு அல்லது மலையாள வம்சாவளியைக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சி சார்ந்தவர்களை தமிழர்களாகப் பார்ப்பதற்கு அவர்கள் மறுக்கிறார்கள். தமிழ் தேசியவாதிகளின் இந்த வாதம் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை என்றாலும், அது இன்னும் விவாதிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயமாகவே உள்ளது.
’ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் ஏன் பங்கேற்றீர்கள்’ என்று 2017இல் சீக்கியர் ஒருவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, ’நான் தமிழர் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்?’ என்று உடனடியாக அந்த சீக்கியர் எழுப்பிய கேள்வி தமிழ் தேசியவாதிகளின் அணுகுமுறையை சிறப்பாக விளக்குவதாக இருக்கிறது. அந்த சீக்கியரைப் பொறுத்தவரை, அவருடைய சீக்கிய அடையாளத்துடன் இந்த தமிழ் அடையாளம் எந்த விதத்திலும் முரண்படவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியைப் பொறுத்தவரை, சீக்கியர்கள் தமிழராக இருக்க முடியாது, உருது மொழி பேசும் முஸ்லீம்களும் தமிழராக இருக்க முடியாது. கடந்த நூறு ஆண்டுகளில் திராவிட இயக்கத்தால் வடிவமைக்கப்பட்ட தமிழ் அடையாளத்தை மாற்றியமைப்பதே, இந்த தமிழ் தேசியவாதிகளின் திட்டமாக இருக்கிறது.
அஜாஸ் அஷ்ரஃப்: தமிழ் தேசியவாதிகள் தமிழ் அடையாளத்திற்கும், திராவிட அடையாளத்திற்கும் இடையில் வேறுபாட்டை எற்படுத்துவதாகத் தெரிகிறது.
கலையரசன்: திராவிட அடையாளம் என்பது ஓர் அரசியல் அடையாளம். அது இனத்தை அடிப்படையாகக் கொண்ட அடையாளம் அல்ல. திராவிட அடையாளம் என்பது எதிர்காலத்தின், நவீனத்தின் அடையாளம். தமிழ் வரலாறு, சாதி எதிர்ப்பு இயக்கம், வெவ்வேறு மதச் சிறுபான்மையினர் என்று அதற்கான பல ஆதரவுகள் இருக்கின்றன. ஆனால் மறுபுறத்தில், தமிழ் தேசியவாதிகளின் அடையாளம் இனத்தை அடிப்படையாகக் கொண்டதாக, மற்றவர்களை ஒதுக்குவதாக இருக்கிறது. தமிழ் மொழியைப் பேச்சு மொழியாக கொண்டுள்ள எவராலும், சாதி சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை கொள்கைகளாகக் கொண்டுள்ள திராவிட அடையாளத்தை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் வம்சாவளியை அடிப்படையாகக் கொண்டிருக்கும் தமிழ் அடையாளத்தை அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக மதச் சிறுபான்மையினரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
அஜாஸ் அஷ்ரஃப்: தமிழ்த் தூய்மை பற்றி பேசுகின்ற தமிழ் தேசியவாதிகளின் வாதம், பிராமணத் தூய்மை மற்றும் மேன்மை பற்றி பேசுகின்ற பாஜகவின் வாதங்களை எதிரொலிப்பதாகவே இருக்கிறது. இவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனரா?
கலையரசன்: தமிழ் தேசியவாதிகள் மற்றும் பாஜக இடையே தெளிவான ஒருங்கிணைப்பு இருப்பது உண்மைதான். தற்போதைய நிலவரப்படி, தமிழ் தேசியவாதிகளின் எண்ணிக்கை சிறிய அளவிலேயே உள்ளது. அவர்களுடைய கட்சியான நாம் தமிழர் கட்சி இப்போதுதான் வளர்ந்து வருகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் சுமார் ஒரு சதவீத வாக்குகளையும், 2019 மக்களவைத் தேர்தலில் நான்கு சதவீத வாக்குகளையும் அது பெற்றிருக்கிறது.
பத்து – பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து முன்னணி ஆற்றி வந்த பங்கை ஓரளவு ஒத்ததாகவே நாம் தமிழர் கட்சியின் பங்கு இப்போது இருக்கிறது. தன்னை மாநிலத்தில் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் – பாஜக விரும்பிய நேரத்தில்தான், ஹிந்து முன்னணி உருவானது. பிராமணர்களுடன் தொடர்புடைய எதுவும் தமிழ்நாட்டில் அதிக கவனத்தைப் பெறுவதில்லை என்பதால், பெரும்பாலும் சாதிய அடுக்குமுறையில் கீழ் வைக்கப்பட்டுள்ள மக்களையே ஹிந்து முன்னணி தன்னுடைய உறுப்பினர்களாக்கி கொண்டது. அப்போது பாஜகவிற்கு வழி ஏற்படுத்தி தருகின்ற வகையில் ஹிந்து முன்னணி ஆற்றிய பங்கை, இப்போது தமிழ் தேசியவாதிகள் செய்து வருகின்றனர்.
அஜாஸ் அஷ்ரஃப்: தமிழ் தேசியவாதிகள் முஸ்லீம்களையும் உள்ளார்ந்து எதிர்க்கிறார்களா?
கலையரசன்: இனத்தூய்மை குறித்த அவர்களுடைய கோட்பாடு, தானாகவே முஸ்லீம்கள் மட்டுமல்லாது பிற மதம் சார்ந்த மற்றும் மொழிச் சிறுபான்மையினரையும் விலக்கியே வைக்கிறது.
அஜாஸ் அஷ்ரஃப்: தமிழ் தேசியவாதிகள் பாஜகவிற்கு எவ்வாறு வழி ஏற்படுத்தித் தர முடியும்?
கலையரசன்: தமிழ்த் தேசியவாதிகள் திராவிடக் கட்சிகளை எவ்வளவு அதிகமாக தாக்குகிறார்களோ, அந்த அளவிற்கு அது பாஜகவிற்கு நல்லது. திராவிடக் கட்சிகள் தமிழர் நலன்களுக்காக அதிகம் செய்யவில்லை என்று அவர்கள் குறை கூறுகிறார்கள். திராவிடக் கட்சிகளை விமர்சிப்பதற்கு அவர்கள் துரோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அஜாஸ் அஷ்ரஃப்: துரோகம் என்று சொல்வது அவர்களுக்கு ஆதரவைப் பெற்றுத் தரும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
கலையரசன்: தலித்துகளுக்கென்று அதிகம் கிடைக்கவில்லை என்றாலும், அவர்களுடைய வளர்ச்சி சில இடைச்சாதிகளிடம் கவலையைத் தூண்டி விட்டுள்ளது. அதற்குப் பிறகு ஊழல் மற்றும் திராவிடக் கட்சிகளின் அரசியல் அணிதிரட்டல் சாதி அடிப்படையில் இருக்கிறது என்று முத்திரை குத்துவது போன்ற சிக்கல்களும் திராவிட அடையாளத்திற்கு இருக்கின்றன. மறுபுறத்தில், தேசியவாதிகளின் மொழி அடிப்படைவாதம்; தலித் இயக்கங்களை எதிர்க்கின்ற இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான குழுக்களின் சாதிய அடிப்படைவாதம்; பாஜகவின் மத அடிப்படைவாதம் என்று மூன்று அடிப்படைவாதங்கள் ஒன்றாக வருவதை நீங்கள் காணலாம். இந்த மூன்று அடிப்படைவாதங்கள் முன்வைக்கின்ற சவாலை திராவிடக் கட்சிகளால் எதிர்கொள்ள முடியுமா என்பதே இப்போதுள்ள கேள்வி.
அஜாஸ் அஷ்ரஃப்: இந்த மூன்று அடிப்படைவாதங்கள் பயன்படுத்தக்கூடிய கூறுகள் எவை?
கலையரசன்: வட இந்தியாவில் பாஜகவிற்கு அணிதிரட்டுவதற்கு தனது வளர்ச்சித் திட்டங்களின் மூலம் மோடி உதவினார். அதில் கழிப்பறைகள் கட்டுவது, எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் மின்சாரம் வழங்குவது போன்ற சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளும் அடங்கும். குஜராத் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களை விட சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகளில் தமிழகம் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், அத்தகைய கொள்கைகளின் மூலம், இங்கே பாஜகவால் செல்வாக்கைப் பெற முடியாது. மேலும் குஜராத்தை விட அனைவரையும் உள்ளடக்குவதாக தமிழ்நாடு இருக்கின்றது. எவ்வாறாயினும், திராவிடக் கட்சிகளின் பிரச்சினை என்னவென்றால், பிரச்சனைகளைச் சந்திப்பது கடினம் என்ற அளவிற்கு அவர்கள் எதிர்பார்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர். 18 முதல் 23 வயதுக்குட்பட்ட தமிழ்நாட்டு இளைஞர்களில் 48 சதவீதம் பேர் உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். இதன் தேசிய சராசரி 24 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது. படித்து முடிக்கும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு சந்தையில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இந்த 48 சதவிகிதம் பேரில் ஏராளமானோர் முதல் தலைமுறையாக கற்பவர்கள். கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காவிட்டால், திராவிடக் கட்சிகள் மீது அவர்கள் அதிருப்தி அடைய வாய்ப்புள்ளது.
அஜாஸ் அஷ்ரஃப்: மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதற்கான அறிகுறிகள் ஏதாவது உங்களுக்குத் தெரிகிறதா?
கலையரசன்: உணவகங்களிலும், சென்னையில் கட்டுமானத் துறையிலும் உள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று மக்கள் கோபப்படுகிறார்கள்.
அஜாஸ் அஷ்ரஃப்: ஆனால் படித்தவர்கள் இந்த மாதிரியான வேலைகளுக்குச் செல்லத் தயாராக இருக்க மாட்டார்கள்.
கலையரசன்: நீங்கள் சொல்வது சரிதான், அது நியாயமற்றது, தர்க்கமற்றது என்றாலும், அவர்களுடைய இருப்பு மற்றும் அவர்களைக் காண்பது இவர்களிடம் எதிர்வினையைத் தூண்டுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் சிவசேனா செய்ததைப் போல, இதுபோன்ற வெளிமாநிலத்தவர்களுக்கு எதிராக தமிழ் தேசியவாதிகள் உணர்வுகளைத் தூண்டுவதற்கு இது உதவக்கூடும். திராவிடக் கட்சிகள் தமிழர்களைப் புறக்கணிக்கின்றன என்ற தமிழ் தேசியவாதிகளின் கூற்றை நியாயப்படுத்தும் வகையிலான சமூகச் சூழல் இப்போது இருக்கிறது.
அஜாஸ் அஷ்ரஃப்: ஆனால் தமிழ் தேசியவாதிகளும், பாஜகவும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை, இல்லையா?
கலையரசன்: இல்லை. ஆனாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் அதிகம் விமர்சித்துக் கொள்வதில்லை. இருவரின் நோக்கமும் திராவிடக் கட்சிகளைப் பலவீனப்படுத்துவதாகவே இருக்கிறது.
அஜாஸ் அஷ்ரஃப்: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் எதிர்காலம் பெரும்பாலும் பாஜகவுடன் இணைக்கப்பட்டுள்ளதா?
கலையரசன்: அதிமுக என்பது தலைவர்களின் உந்துதலால் நடக்கும் கட்சி. அதற்கு திமுகவைப் போன்று கட்சி அமைப்பு கிடையாது. ஆகவே, அதிமுகவுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை, அதனுடைய இடத்தை எந்த அளவிற்கு பாஜக கைப்பற்றும் என்பதே தீர்மானிக்கும். அதிமுகவின் அரசியல் பாஜகவுடன் நெருக்கமாக உள்ளது. பெரும்பாலும் பாஜகவுக்கு மாற்றாக மாநிலத்தில் வளர்க்கப்படும் கட்சியாகவே அதிமுக தோன்றுகிறது. வலுவான தலைவர் இல்லாததால், அது பாஜகவுக்கு வளைந்து கொடுக்கின்றது. ஜெயலலிதாவின் தலைமையில் கூட பிராமணியம் அல்லது சமஸ்கிருதம் பற்றி அதிமுக அதிகம் பேசியதில்லை என்றாலும், அவரது மறைவிற்குப் பிறகு, பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கான இடஒதுக்கீடு மற்றும் 370ஆவது பிரிவை நீக்குதல் உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசின் ஆதிக்கத்தையும், கொள்கைகளையும் அந்தக் கட்சி ஏற்றுக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
அஜாஸ் அஷ்ரஃப்: இதற்கு நேர்மாறாக, 370ஆவது பிரிவை நீக்கியது போன்ற விஷயங்களை விமர்சிப்பதில் திமுக உரத்து குரல் கொடுக்கிறது.
கலையரசன்: கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சி குறித்த கருத்துக்களுடன் காஷ்மீர் பிரச்சனை தொடர்புடையதாக இருப்பதால் திமுக உரத்து குரல் கொடுத்துள்ளது. ஆனால் காஷ்மீர் பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாடு தேர்தல் சாத்தியக் கூறுகளைக் கொண்டுள்ளது என்பதும் உண்மைதான். தன்னுடைய நிலைப்பாடு வாக்குகளைப் பெற்றுத் தராது என்று நினைக்கின்ற நாளில், காஷ்மீர் பிரச்சனை குறித்த திமுகவின் குரல் அடங்கி விடும். டெல்லியின் காஷ்மீரக் கொள்கை இன்றைய தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, பாஜகவின் ஒருமைப்படுத்தும், மையப்படுத்தும் போக்குகள் மற்றும் பிராமணிய ஹிந்து மதத்தின் ஆதிக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகவே அமைந்திருக்கிறது.
அஜாஸ் அஷ்ரஃப்: பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீட்டை திமுக ஏன் எதிர்க்கிறது?
கலையரசன்: 1979ஆம் ஆண்டில், எம்.ஜி.ராமச்சந்திரனின் தலைமையில் இருந்த அதிமுக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு வழங்கியது. ஆனாலும் மக்களவைத் தேர்தலில் தன்னுடைய கட்சி தோல்வியடைந்ததும், அவர் அந்த அரசாங்க உத்தரவைத் திரும்பப் பெற்றதோடு, இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும் உயர்த்தினார். தமிழக அரசியல் குறித்து இது உங்களுக்கு ஏராளமான செய்திகளைச் சொல்லும்.
அஜாஸ் அஷ்ரஃப்: தமிழ்நாட்டை வெல்வதற்காக பாஜகவிடம் இருக்கின்ற வாய்ப்புகளை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்?
கலையரசன்: தமிழ் மொழியை முழுமையாகத் தழுவுவது மட்டுமல்லாமல், சாதி குறித்த படிநிலை இல்லாத அணுகுமுறையைப் பின்பற்றுவதோடு, தன்னுடைய பிராமண பிம்பத்தை முற்றிலும் தவிர்த்து விட்டு, அனைவரையும் உள்ளடக்குகின்ற தமிழ் அடையாளத்தை ஏற்றுக் கொள்கிற வரையிலும், தமிழ்நாட்டிற்குள் பாஜகவால் நுழைய முடியாது. தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு, தன்னையே முழுமையாக பாஜக மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.
அஜாஸ் அஷ்ரஃப்: ஒரு வேளை தமிழ்நாட்டை பாஜக வென்று விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் வெற்றி எதைக் குறிக்கும்?
கலையரசன்: அரசியல் அணிதிரட்டல், பணத்தைப் பயன்படுத்துதல், கட்சிகளை உடைத்தல் மற்றும் அதிருப்தியில் இருக்கின்ற தலைவர்களைக் கவர்வது போன்றவற்றையே அதன் வெற்றி குறிக்கும். தமிழ்நாட்டில் பாஜகவின் வெற்றி, நிச்சயம் இதுவரையிலான மாநில வரலாற்றிற்கு முற்றிலும் எதிரானதாகவே இருக்கும்.
அஜாஸ் அஷ்ரஃப், டெல்லி பத்திரிக்கையாளர்
2019 அக்டோபர் 23
தமிழில்
தா.சந்திரகுரு