கோவி.பால.முருகு கவிதைகள்
1. வில்போல் வளைவோம்
எல்லோர்க்கும் நல்லவராய் இருப்பதுவே தீதாகும்
எதிரிகளை எதிர்த்துநின்று இடிப்பதுதான் இனிதாகும்!
புல்லான பேர்வழியைப் புறங்காணல் நலமாகும்
பூத்திருக்கும் அமைதியினை போற்றுகின்ற செயலாகும்!
வில்போல வளைந்திருந்து வீணர்களை முறியடிப்போம்
விடுதலையின் இன்பத்தை விருந்துவைத்து மகிழ்ந்திடுவோம்!
சொல்லாலே போராடி சொந்தமண்ணைக் காத்திடுவோம்
சுமையான மதவெறியைச் சூழ்ந்துநின்று துரத்திடுவோம்!
நன்மையினைச் செய்தபடி நல்மழையாய்ப் பெய்திடுவோம் !
நாட்டினிலே ஒற்றுமையை ஓங்கிவரச் செய்திடுவோம்
உண்மையினை உரைத்தபடி உயர்தமிழை விதைத்திடுவோம் !
உதவாத சாதிவெறிப் பேய்களையேப் புதைத்திடுவோம்
புன்மையினை எதிர்த்தபடி புத்தியினைப் பதித்திடுவோம் !
புகுந்திருக்கும் வருணத்தைப் புறங்காட்டச் செய்திடுவோம்!
இன்மையினைத் துடைத்தபடி ஏற்றத்தைப் படைத்திடுவோம் !
இல்லாமை இல்லாமல் இருந்திடவே வழிசெய்வோம்!
உழைப்பவரைப் போற்றுகின்ற உள்ளத்தை ஏற்றிடுவோம்
உழைக்கின்ற வர்க்கத்தின் உயர்வுக்கே போரிடுவோம்!
பிழைப்பதற்கே வழியில்லா பிழைகளையே களைந்திடுவோம்!
பிழைத்துவரும் முதலாளி வர்க்கத்தை மாற்றிடுவோம்!
2. தளராது காதல்!
தளராத நினைவோடு தாங்கிடுவேன் என்னவளே
தடுக்கின்ற கூட்டத்தைத் தவிடுபொடி ஆக்கிடுவேன்
உளமிணைந்த நம்காதல் உலகத்தில் நிலைத்துநிற்கும்
உண்மையாய் வரலாற்றில் உயர்ந்திடவே பெயரிருக்கும்!
காதலில்லா உயிரொன்றைக் காட்டிடவே திறனுண்டா?
காதலின்றி இவ்வுலகம் கடுகளவு வளர்ந்ததுண்டா?
காதலுக்காய் கவிபாடும் காப்பியங்கள் மறைந்ததுண்டா?
கரும்பினையே மென்றுதின்னும் கைகளுக்கு விலங்குண்டா?
காதலிக்க ஆண்பெண்தான் கட்டாயம் வேண்டுமிங்கே
காதலிக்க சாதிமதம் காட்டிபகை மூட்டுமிங்கே
மோதலுக்கு வழிசெய்யும் மூடர்களின் கூட்டமிங்கே
மூளுகின்ற ஆணவத்தின் முகம்காட்டும் ஆட்டமிங்கே!
கடவுளரின் கதைகூட காதலதை வெறுத்ததில்லை
காப்பியங்கள் அனைத்திலுமே காதல்வழி மறுத்ததில்லை
காட்சியிலே திரைப்படங்கள் காதலதைத் துறந்ததில்லை
காதலின்றிக் காமமின்றிக் கதையெதுவும் வளர்ந்ததில்லை!
ஆருயிரே அன்பேயென் அறிவுமிகுப் பெண்ணணங்கே
ஆதவனை மறைத்திடுமா ஆயிரமாய்க் கைகளிங்கே?
தாருவெனத் தழைத்திடுவோம் தண்ணிழலாய்க் காதலிப்போம்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தளராது காதலிங்கே!
எழுதியவர் :
-கோவி.பால.முருகு
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

