அ.குமரேசனின் கவிதைகள்
கவிதைப் பொழுது
– அ. குமரேசன்
அநாகரிகங்களுக்கு எதிராய்
ஒரு நாகரிகம் தன்னை
நிறுவிக்கொள்வதற்கு மட்டுமல்ல
ஒரு நாகரிகம் தன்னை
நிறுவிக்கொண்ட வரலாற்றை
நிறுவுவதற்கும் தேவைப்படுகிறது
இங்கொரு போராட்டம்.
•••••••••••••
எப்போதும் இருக்கிறது
கவிதைக்கான பொழுது
எங்கேயும் கிடைக்கிறது
கவிதையின் கரு
வண்டியின் வேக ஓட்டத்தில்
பொழுதுகளைத் தொலைப்பதில்
கதவோடு சன்னலையும் மூடி
கருக்களைக் கடப்பதில்
நீ (நானும்தான்) இழப்பது
கவிதையை அல்ல
உன்னை (என்னையும்தான்)
இழக்கிறது கவிதை.
•••••••••••
மன்னர்கள் வெற்றிபெற்றதாக
வரலாறு சொல்லும்.
மக்கள் தோல்வியடைந்ததை
வாழ்க்கைதான் சொல்லும்.
•••••••••
சன்னல் வெயிலில்
அறைக்குள் வெளிச்சம்
இரைக்காகப் பறந்துவிட்டதால்
மரங்களில் நிசப்தம்
ஈடு செய்வதாக
சக்கரங்களின் சத்தம்
சாலைகளில் விரையும்
சனங்களின் நடமாட்டம்
விழித்தெழுந்தும் வேலையில்
இறங்கவிடாத அழுத்தம்
கைப்பேசியில் காணவில்லை
இதயத்தின் முத்தம்
எடுத்துக்கொள் உன் தவணையை
கொடுத்துவிடு என் காலையை
••••••••••••••••
அம்பு பாய்ந்த இதயத்தைக்
கரும்பலகையில் வரைந்ததற்காக
வகுப்பறை வாசலில்
முட்டிக்காலில் உட்கார்ந்தான்
நவமணி ஆறுமுகம்.
முத்தம் பதித்த இதயத்தைக்
கைப்பேசியில் அனுப்புவதற்காக
டவர் கிடைக்கும்
வாசல்படியில் உட்கார்ந்திருக்கிறாள்
நேசமணி ஆயிஷா.
•••••••••••
அணைத்துக் கொள்ளும்
எமோஜி பார்த்து
நிஜமாய் அணைத்ததாய்
நெகிழ்ந்து மகிழ்ந்தபோது
காதலியிடமிருந்தா என்றார்கள்
காதல் மகளிடமிருந்து என்றேன்.
•••••••••••
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவள்
கைப்பேசியை எடுத்துத் தட்டினாள்
வந்தவனின் தோளைப் பிடித்து
பின்னால் ஏறி உட்கார்ந்ததும்
சட்டெனப் புறப்பட்டு
சிட்டெனப் பறந்தபோது…
எவன்னே தெரியாதவன் பின்னாடி
தோளையும் பிடிச்சிக்கிட்டு போறது
அப்புறம் அப்படிப் பண்ணிட்டானுக
இப்படிப் பண்ணிட்டானுகன்னு புலம்புறது
நாகரிகமாம்… என்னத்தைச் சொல்றது?
இயல்பாகப் பார்த்திருந்த மற்றவர்களுக்கு
எப்படிப் பார்ப்பதென்று பாடம் நடத்தியவனை
என்னத்தைப் பண்றது?
••••••••••••••
சில சீட்டுகளை
சேர்த்து வைத்துக்கொள்கிறது.
சில சீட்டுகளை
வேண்டாமெனக் கீழே போடுகிறது.
ஒரு சீட்டைப் பார்த்ததும்
ஆகாவெனத் துள்ளுகிறது.
வேறொரு சீட்டைக் கண்டால்
அடச்சே என அலுத்துக்கொள்கிறது.
வென்றாலும் தோற்றாலும்
சீட்டுகளைக் கலைத்தும் கலக்கியும்
ஆட்டத்தைத் தொடங்குகிறது
மீண்டும் புதுசாய்.
ஆட்ட மேசையில்
முந்தைய ஆட்டம் மறந்து
சீட்டுகளைக் கலைத்துப் போடுவது
நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
கால மேசையில்
வாழ்க்கை ஆடுகிற
சீட்டாட்டமா உறவுகள்?
••••••••••••
கொதித்துப் போயிருந்தேன்
கீழே வந்து
உங்களையெல்லாம் பார்த்ததும்
குளிர்ந்து போனேன்.
–சன்னலுக்கு வெளியேயிருந்து
பேசிய கோடை மழை.
••••••••••••
எழுதியவர் :
அ. குமரேசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கொதித்துப் போயிருந்தேன்
கீழே வந்து
உங்களையெல்லாம் பார்த்ததும்
குளிர்ந்து போனேன்.
–சன்னலுக்கு வெளியேயிருந்து
பேசிய கோடை மழை.
அட்டகாசம். 👏👌💙💐
பெரும் மகிழ்ச்சியும் வாழ்த்தும். மூத்த பத்திரிகையாளர் தோழர் அ. குமரேசன் அவர்கள் கவிஞராக இன்று நம்முன். வாழ்க்கையின் வலிகளைப் பேசும் அற்புத கவிதைகள். வாழ்க தோழர் குமரேசன். வளர்க்க மக்கள் குரலாய் அவரின் கவிதைகள்
அருமை.
கவிதைகள் யாவும் சிறப்பு தோழர்