அ.சீனிவாசனின் கவிதைகள்
1.
உன்னிடம் மட்டும்
தோற்கும் வரத்தை,
அன்பே, எனக்களி!
எல்லோரையும்
வென்று வருவேன்!
—
2.
அவர்களை
வேறு யாருக்கும்
பிடிப்பதில்லை;
அதனால் அவர்களுக்கு
பைத்தியம் பிடிக்கிறது.
அவர்களுக்கும்
பைத்தியம் பிடித்திருக்கின்றது.
எனவே, சிரித்தவாறே,
எப்போதைவிடவும்,
எவரை விடவும்,
அமைதியாய் இருக்கின்றார்கள்.
பொறாமையில்
அவர்கள் மீது
கற்களையோ,
சொற்களையோ,
எறியாதிருப்பீராக!
—
3.
நாமாக
வரவழைத்துக் கொள்பவை,
தாமாக
நமக்கென்று வருபவை—
எல்லாக் குழப்பங்களும்
நொடியில் தீர்ந்து,
தொலைந்து போகின்றன.
தெருமுக்கில் வீற்றிருக்கும் கடவுளைவிடவும்,
வீதியில் வீசப்பட்டிருக்கும்
மனம் பிறழ்ந்தவளைத் தரிசிக்கும் கணத்தில்.
என்றாவது ஒரு நாள்,
ஒரு கண்ணாடியை முன்னே நீட்டி,
ஊரையே தெளிவாக்கும்
அவளைக் குணப்படுத்தலாமே!
அவள்தான் முற்றிய கணத்தில்
முழுதாய்த் தெளிந்தவள் அன்றோ?
கடவுளுக்குப் போய்,
எந்தக் கடவுள் தேவைப்படுகிறார்?
—
4.
அசோகர் சாலையின்
ஓரங்களில் ஏன்
போதிமரங்களை நடவில்லை?
5.
பெயரை மாற்றலாம்
ஊரை மாற்றலாம்,
நாட்டை மாற்றலாம்,
வேலையை மாற்றலாம்,
ஆதார் கார்டை மாற்றலாம்,
ரேசன் கார்டை மாற்றலாம்.
கடவுளை மாற்றலாம்,
மதத்தை மாற்றலாம்,
பாலினத்தைக் கூட
ஒரு அறுவை சிகிச்சையால்
மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால்,
இந்தச் சாதியை மட்டும்
மாற்ற முடியாது.
அதென்ன
வெட்ட வெட்ட வளரும்
அவ்வளவு நீள
முடியா???
6.
பூமியை விடவும்
ஒரு நரகம்
இருக்கப்போவதில்லை.
பூமியை விடவும்
ஒரு சொர்கமும்
இருக்கப்போவதில்லை.
உன்னை விடவும்
ஒரு சாத்தான்
இருக்கப்போவதில்லை.
உன்னை விடவும்
ஒரு கடவுளும்
இருக்கப்போவதில்லை.
எப்படியும் தொலையப் போகிறாய்
அதற்காக
எப்படியோ போய்த் தொலைய வேண்டுமா?
எழுதியவர் :
அ.சீனிவாசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.