தங்கேஸ் கவிதைகள் (Thanges poems) - Thanges Kavithaikal | Bookday Kavithaikal | Tamil Poems | 1. அலகிலா விளையாட்டு - https://bookday.in/

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

1. அலகிலா விளையாட்டு

நேற்று சொன்னது போல இருக்கிறது
ஆனால் இந்த மஞ்சள் அரளிக்கன்று
மொட்டை மாடி கைப்பிடிச் சுவரளவு
வளர்ந்து விட்டது

நேற்று விடிவெள்ளி முளைத்திருந்த
இடத்தை
இன்று எதை இட்டு நிரப்பும் வானம் என்று
எண்ணிக் கொண்டிருக்கும் போது
இணையாக பறந்து செல்லும்
ஒரு சோடி வெண்புறாக்கள்
வானத்தை மறக்கடிக்கின்றன

அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே
கரும் மேகங்களுக்குள் மறையும் போது
காரணமற்றுப் பொங்கிப் பெருகும்
உன்னுடைய துக்கம்
அதற்கொரு அலகிலா
விளையாட்டாக இருக்கிறது

2. கதவு

ஒரு தானியங்கி கதவைப் போல
திறந்து மூடுகிறது மனது

யார் வருகிறார்கள்
யார் போகிறார்களென்று
சொந்தக்காரன்
அறிய வேண்டியதில்லை
போலும்

இந்த வழியாகத்தான்
அவள் வந்து போனான்

ஒரு நட்பின் துரோகம்
வந்துவிட்டுப் போனது

உறவுகள் ஒரு கடைசி புன்னகையை
மட்டும் உதிர்த்து விட்டுச் சென்றன

பச்சைப் பசேலன்று
துளசிக் கொழுந்து போல
ஒரு குழந்தையும் வந்து
முத்தமிட்டுப் போனது

எடுத்துக் கொள்வதற்கு
இனி எதுவுமில்லை என்றான பிறகு
சாத்தான் கிளம்பி போனான்

கடைசியில் தன் பங்கிற்கு
கடவுளும் வந்து
தேடிப் பார்த்து விட்டு
நிரம்பியிருந்த வெறுமையை
எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்

3. வடிவெடுத்து

வைத்த
சோறு தண்ணி எடுக்காமல்
காலையிலிருந்து வீட்டு வாசல்
வேப்பமரத்திலேயே அமர்ந்து
கரைந்து கொண்டிருக்கும்
இந்தக் காகத்திற்கு
என்ன வேண்டுமென்று
தெரியவில்லை

எனக்கென்னவோ உன்னையே
நினைத்து நினைத்து
கரைந்து கொண்டிருக்கும்
என் பாழும் மனம் தான் இப்படி
காகத்தின் வடிவெடுத்து
என் முன்னால் வந்து
கரைகிறதோ என்று தோன்றுகிறது

4. நாம் பார்த்த நதியில்லை

நாம் பார்த்த நதியில்லை
இப்போது ஓடிக்கொண்டிருப்பது

படித்துறைகளில் முட்டாமல்
பாதங்களைக் கழுவாமல்
சுழல்களில் சுற்றாமல்
நுரைகளைத் தேய்க்காமல்
செத்த உடல்கள் மிதக்காமல்
நீத்தார் கருமங்களைச் சுமக்காமல்
தனியே போகும் நதியது
மீன்குஞ்சுகளற்றது

காலடிக்கு கீழே காய்ந்த செதில்களோடு
விரிந்து கொண்டிருக்கும் மணற்பரப்பை எட்டவே
எத்தனை காலமாகுமோ
இந்த நதிக்கு

நாம் பார்த்த நதியில்லை
இப்போது நமக்குள்
ஓடிக்கொண்டிருப்பது

5. மெளன லயம்

மௌனத்தை விட மெதுவாக
உதிர்கிறது மஞ்சள் அரளிப்பூ

கடப்பாரையையும் மண்வெட்டியையும்
தாங்கும் பூமியால் கூட
மெளனத்தின் மென்மையை
தாங்க முடியவில்லை

இவ்வளவுக்கும் சருகு கூட இல்லை
வாளிப்பான மஞ்சள் வாகு

சொல்லொண்ணா துயரத்தில்
குலுங்குவது போல் இருக்கிறது மரம்
இரண்டாவது முறை பார்த்த போது
காற்றில் கிளைகள்
ஆனந்தமாக ஆடிக்கொண்டிருந்தன
கூடவே பூத்திருந்த பூக்களும்

இலைகளையே பார்த்துக்கொண்டிருந்தவள்
“எதுவுமே சொல்லமாட்டியா”
என்றாள்
“எதுவுமே சொல்லத் தோன்றவில்லை”
என்றேன் நான்

6. அலகிலா விளையாட்டு

முன்னும் பின்னும்
பறக்கும்
இறகுப் பந்து
அந்தரத்தில் தான்
எப்போதும்
உயிர்ப்போடு இருகிறது

பூப்பந்து
நட்சத்திரப் பந்தாக
மாறிவிடுவதும்
அப்போது தான்

சீரான பறத்தலின் லயத்தில்
மட்டை தொடுகிறதா
பந்து தொடுகிறதா
என்று தெரியாமல்
ஒன்றை ஒன்று முத்தமிட்டு
கொஞ்சிக் கொண்டிருக்கும்
களி நடனத்தில்

மோதிக் கொள்ளும் போதே
சமயத்தில்
உக்கிரமான போர் மூண்டு விடும்
இரண்டுக்குமிடையில்

ஆவேசம் ஆவேசம் ஆவேசம்
அத்தனையும் அடங்கி
மரணமுற்றவனைப் போல
சட்டென்று இரண்டுமே
தரையில் சாய்ந்து விடும்
விளையாட்டு முடிந்த பின்பு

எழுதியவர் : 

தங்கேஸ்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *