1. வழிசெய்வோம்!
இல்லாமை இல்லாமல் இருந்திடவே வழிசெய்வோம்
இருப்போர்கள் குவித்திருக்கும் செல்வமெலாம் பகிர்ந்தளிப்போம்!
கல்லாமை இல்லாமல் அனைவர்க்கும் அறிவளிப்போம்!
கற்றிடவே கல்வியினை இலவசமாய் ஆக்கிடுவோம்!
பொல்லாத மதவெறியைப் போக்கிடவே களமமைப்போம்
போராட்ட குணத்தாலே பகைமைதனை முறியடிப்போம்!
எல்லோரும் தாய்மொழியை ஏற்றமுறச் செய்திடுவோம்.
இந்தியொடு வடமொழியை திணிப்பதையே தடுத்திடுவோம்!
வல்லானின் தீக்குணத்தை வளராமல் வெட்டிடுவோம்
வழிகாட்டும் நற்கருத்தை வாசலுக்குக் கொண்டுசெல்வோம்!
நல்லவர்கள் நாட்டினிலே நடமாட வழிவகுப்போம்
நாளெல்லாம் ஒற்றுமையாய் நலம்பெற்று வாழ்ந்திடுவோம்!
இருப்பதையே அனைவர்க்கும் இலவசமாய்ப் பகிர்ந்தளிப்போம்
எல்லையிலா அன்புடனே இணைந்துவளம் பெருக்கிடுவோம்!
விரும்பாத சாதிமதம் விடைபெற்றுச் போகச்செய்வோம்
விருப்பமுடன் சமதர்மச் சமுதாயம் மலரவைப்போம்!
கருணையிலா ஆட்சியதன் கதைமுடித்து விரட்டிடுவோம்
கள்ளமனம் கொண்டோரின் கருத்ததனை முறியடிப்போம்!
அருள்நயந்த சன்மார்க்கர் ஆள்வதற்கு வழிசெய்வோம்
ஆகாத மதவெறியின் ஆட்டத்தின் காலொடிப்போம்!
2. பொய் மறைக்கும் புனிதர்கள்
நிலவுடன் கதிரவன் நெருங்கியே ஆய்வார்
நித்திரை கொண்டே சாதியில் தேய்வார்!
தலைமுதல் கால்வரை மருத்துவம் ஆய்வார்
தறிகெட் டறிவின்றி மதத்திலே சாய்வார்!
ஆயிர மாயிரம் அறிவியல் காண்பார்
ஆயினும் சாதகம் சோதிடம் பார்ப்பார்!
தாயினைப் போற்றும் தன்மை அறிவார்
தையலர் உரிமைக்குத் தடையாய் இருப்பார்!
பெண்களின் ஆற்றலைப் பேசிக் களிப்பார்
பெண்சிசு எனிலோ முகத்தைச் சுளிப்பார்!
ஆண்களும் பெண்களும் சமமெனச் சொல்வார்
ஆதிக்கம் கொண்டே பெண்களை அடைப்பார்
நீதியும் நேர்மையும் பேச்சில் உரைப்பார்
நீங்கிட உண்மை வாழ்வில் துறப்பார்!
பாதியைக் கூடச் சொல்வதில் செய்யார்
பார்த்திட நல்லவர் போலவே நடிப்பார்!
மக்கள் நலனைப் பெரிதாய்ப் பேசுவார்
மதவெறி கொண்டே கலவரம் செய்வார்!
சிக்கலைச் செய்தே நாட்டை அழிப்பார்
சிந்தனை கொண்டால் சிரசை அறுப்பார்!
பொய்யை மறைத்துப் புனிதராய் வாழ்வார்
போற்றிடும் வாய்மை போற்றா தழிவார்!
வாயால் வடையைச் சுட்டுத் தருவார்
வாய்மை அதுவென சொல்லி வருவார்!
நாயின் பிழைப்பே அவருக் காகும்
நானிலம் தழைக்க இதுவா ஆகும்!
பேயின் ஆட்சி பிணத்தின் காட்சி
பேரிடர் நீங்க ஒழிவதே மாட்சி!
3. போரிடுவோம்
எல்லோர்க்கும் நல்லவராய் இருப்பதுவே தீதாகும்
எதிரிகளை எதிர்த்துநின்று இடிப்பதுதான் இனிதாகும்!
புல்லான பேர்வழியைப் புறங்காணல் நலமாகும்
பூத்திருக்கும் அமைதியினைப் போற்றுகின்ற செயலாகும்!
வில்போல வளைந்திருந்து வீணர்களை முறியடிப்போம்
விடுதலையின் இன்பத்தை விருந்துவைத்து மகிழ்ந்திடுவோம்!
சொல்லாலே போராடி சொந்தமண்ணைக் காத்திடுவோம்
சுமையான மதவெறியைச் சூழ்ந்துநின்று துரத்திடுவோம்!
நன்மையினைச் செய்தபடி நல்மழையாய்ப் பெய்திடுவோம் !
நாட்டினிலே ஒற்றுமையை ஓங்கிவரச் செய்திடுவோம்
உண்மையினை உரைத்தபடி உயர்தமிழை விதைத்திடுவோம் !
உதவாத சாதிவெறிப் பேய்களையே புதைத்திடுவோம்
புன்மையினை எதிர்த்தபடி புத்தியினைப் பதித்திடுவோம் !
புகுந்திருக்கும் வருணத்தைப் புறங்காட்டச் செய்திடுவோம்!
இன்மையினைத் துடைத்தபடி ஏற்றத்தைப் படைத்திடுவோம் !
இல்லாமை இல்லாமல் இருந்திடவே வழிசெய்வோம்!
உழைப்பவரைப் போற்றுகின்ற உள்ளத்தை ஏற்றிடுவோம்
உழைக்கின்ற வர்க்கத்தின் உயர்வுக்கே போரிடுவோம்!
பிழைப்பதற்கே வழியில்லா பிழைகளையே களைந்திடுவோம்!
பிழைத்துவரும் முதலாளி வர்க்கத்தை மாற்றிடுவோம்!
எழுதியவர் :
கோவி.பால.முருகு
வடலூர்
கோவி.பால.முருகுவின் கவிதைகள்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.