கோவி.பால.முருகு கவிதைகள்
மனிதநேயம் வெல்வதற்கு
பழுத்தயிலை பற்றிநிற்கும் பயணத்தை யாரறிவார்?
இழுத்துவரும் முள்காட்டும் இறப்பிற்கு வழிகூட்டும்
கழுத்தளவு ஆசைகளைக் கைப்பற்றி நிற்பவனே!
கொழுத்தநிலை தளர்ந்துவிடும் கொழுகொம்பும் விட்டுவிடும்.
கடுகளவு தவிடுமிகள் கைநீட்டிக் கொடுக்காதான்
நெடுங்குன்றாய்ச் செல்வத்தை நேர்வழியில் சேர்க்காதான்
படுந்துன்பம் கண்டாலும் பார்த்துமனம் வியர்க்காதான்
அடுத்தவர்க்குச் செல்வத்தை அணுவளவும் ஈயாதான்!
கிழிக்கின்ற நாள்காட்டி கிழித்திடுமே வாழ்நாளை
விழிக்கின்ற போதெல்லாம் விரைந்துவரும் புதுப்பிறப்பு
அழிக்கின்ற தீக்குணத்தை அழித்திடுவாய் வாழ்நாளில்
பழித்திடவே வாழாதே பயனற்று வீழாதே!
காலங்கள் விரைந்தோடும் காட்சிகளும் மறைந்தோடும்
ஞாலத்தின் மாற்றங்கள் நாள்தோறும் அரங்கேறும்
ஓலத்தில் உயிர்போகும் உலகெல்லாம் போர்க்களத்தில்
கோலத்தை மாற்றிடுவோம் குவலயத்தைக் காத்திடுவோம்!
பிறப்புண்டேல் இறப்புண்டு பெருமையது உலகிற்கு
அறத்தொண்டு வாழ்நாளில் அளிக்காத வாழ்வெதற்கு?
சிறப்புண்டு செம்மைநெறிச் சீருண்டு கொள்வதற்கு
மறத்தாலும் அறத்தாலும் மனிதநேயம் வெல்வதற்கு!
மடலேறு மங்கையே!
மடலேறு மங்கையே மாற்றங்கள் நிகழட்டும்
நிகழ்கின்ற இலக்கியத்தில் ஆடவர்தான் அதைச்செய்வார்
செய்கின்ற காதலிங்கே செயற்கையாய் ஆகிவிட்டால்
விட்டதையே மீட்பதற்கு மங்கைநீ போராடு!
போராட்டக் குணமிங்கே போற்றலுக்கு உரித்தாகும்
ஆகிடுமே வெற்றியிங்கே ஆடவருக் கிணையாக
இணையாகப் போராடு எதிர்த்திடுவாய் ஆணவத்தை
ஆணவத்தை எதிர்ப்பதனால் ஆகிவரும் காதல்கதை
கதையாகும் காதலெல்லாம் கனவாகப் போகலாமா?
போகாமல் தடுப்பதற்குப் போர்க்குணமே வெற்றிதரும்
தருமவற்றில் சாதிமதம் தறிகெட்டு ஓடிவிடும்
ஓடிவிடும் எதிர்ப்பெல்லாம் உண்மையது சாடிவிடும்
சாடிவிடும் சாத்திரங்கள் சடங்குள்ள கோத்திரங்கள்
கோத்திரங்கள் கூவிநிற்கும் கொள்கையற்ற மூடத்தனம்
மூடத்தனத்தின் முடைநாற்றம் மூர்க்கர்களின் தடைகாட்டும்
தடைகாட்டும் தந்திரத்தை தவிடுபொடி ஆக்கிடுவோம்
ஆக்கிடுவோம் புத்துலகை ஆனவரைக் காதலிப்போம்
காதலிப்போம் என்றவொலி காதுகளைக் கிழிக்கட்டும்
கிழிக்கட்டும் சங்கிகளின் கீழ்ச்செயல்கள் ஒழியட்டும்
ஒழியட்டும் காதலினை ஒழிக்கவரும் சாதிவெறி
சாதிவெறி செத்திடவே மடலேறு மங்கையே!
மங்கையே உன்காதல் மாகடலும் உள்ளடங்கும்
உள்ளடங்கும் உலகமெலாம் உன்னிடத்தில் புகலாகும்
புகலாகும் காதலுக்கு புத்தொளியைத் தந்திடுவாய்!
இரவல் வெளிச்சம்
இரவல் வெளிச்சம் இருளின் வெளிச்சம்
புறவொளி நீங்கின் புத்தொளி பாய்ச்சும்
விரைந்த ஞான விளக்கின் வெளிச்சம்
வரைந்தால் உள்ளம் வான்புகழ் ஓச்சும்!
புறத்தின் வெளிச்சம் புனிதருக் கில்லை
அறத்தின் வெளிச்சம் அருள்தரும் எல்லை
உறத்தின் வெளிச்சம் உள்ளொளி பெருக்கும்
திறத்தின் வெளிச்சம் தீங்கினைச் கருக்கும்
வள்ளல் இராம லிங்கம் போற்று
உள்ளொளி பெருக்கிய உணர்வினை ஏற்று
கொள்ளும் ஞானக் குவலயக் கூற்று
அள்ளிடும் ஞான அகவொளிப் பற்று!
தெள்ளிய சிந்தனை தேர்ந்த அறிவு
அள்ளியேக் குடித்திடும் அருள்நிலைச் செறிவு
எள்ளிடும் பற்றோ இகத்தின் முறிவு
துள்ளிடும் மனத்தைத் துடைத்தால் நிறைவு
ஆசை கோபம் அளவிலாச் செல்வம்
மாசைக் கொண்ட மனத்தை வெல்வோம்
தூசாம் அழுக்கைத் துடைத்துக் கொள்வோம்
பேசா ஞானப் போரொளி அள்வோம்!
கனவு
எட்டு மணிநேர ஓய்வு எதற்கு?
எட்டு மணிநேர உறக்கம் எதற்கு?
கிட்டும் நேரம் எல்லாம் கம்பெனி
கிடந்து வேலை செய்வதே நம்பணி !
மனைவி மக்களைப் பார்ப்பதை வெறுத்திடு
மற்ற நண்பர் பழக்கம் துறந்திடு
கனவிலும் கூட கார்ப்ரேட் நினைத்திடு
கடவுள் அவரென காலைத் தொழுதிடு!
சிறுநீர் மலம்கழி கக்கூஸ் எதற்கு?
சிக்கென பேம்பர்ஸ் இருக்கவே இருக்கு
சிரித்துப் பேசி மகிழ்ந்திடல் எதற்கு?
சிறுவர் செயலென அதனை ஒதுக்கு
பல்லைத் துலக்க பற்பசை வேண்டாம்
பாழும் குளியல் உடலுக்கு வேண்டாம்
கல்லாய் இருப்போம் கம்பெனிக் குழைப்போம்
கையில் கொடுப்பதை வாங்கிப் பிழைப்போம்
வீட்டு உணவு இனிமேல் எதற்கு?
விரையும் ஆன்லைன் உணவே அதற்கு
ஒருகை உணவை வாயில் போட்டு
ஒருகை கொண்டு இயந்திரம் ஓட்டு!
ஒருகண் கொண்டு உறக்கம் கொள்வோம்
ஒருகண் கொண்டு உழைப்பில் வீழ்வோம்
உடலின் உறவு உடலைக் கெடுக்கும்
உருவில் குழந்தைச் செலவைக் கொடுக்கும்.
துறவியாய் இருந்து உழைத்திடு நண்பா!
துளங்குவார் முதலாளி கொழித்திடச் செய்வாய்!
சிறப்பாய் பேசினார் தொழிற்சங்கத் தலைவர்
சிரசை ஆட்டினார் தொழிலாளர் எல்லாம்
ஓங்கும் முழக்க ஒலியின் எதிரொலி
உறக்கம் கலைந்திட எழுந்தார் முதலாளி
பறந்தே வந்து வெளியே பார்த்தார்
பதறியே நெஞ்சம் பற்றிட வியர்த்தார்!
அடடா இதுவரை கண்டது எல்லாம்
அற்பக் கனவில் கண்ட பொய்யா?
எடடா அறப்போர் என்றே நிற்கும்
எழுச்சித் தொழிலார் எழுப்பிடும் முழக்கம்!
எழுதியவர் :
கோவி.பால.முருகு
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.