ரவி அல்லது கவிதைகள்
1 . ஒன்றாகாத ஒரே ஒன்றுகள்
இடுகாட்டின் நெருப்பிற்குத் தெரியாது
எப் பாதையில்
வருகிறார்களென?
வேகின்ற உணவிற்குத் தெரியாது
விழுங்கப்போவது யாரென?
வீசுகின்ற காற்றிற்குத் தெரியாது
சுவாசிப்பது எவரென?
சுழலும் பூமிக்குத் தெரியாது
சுமப்பவர்களின் இனம் எதுவென?
கோடு கிழித்த மனிதன்தான்
சிரச்சேதம் செய்கிறான்
விதியென.
கூட்டுறவாகக் கோவிலுக்குள்
வழிபட முடியாதென்கிறான்
ஒரே குலமென
கூடி வாழ முடியாதென்கிறான்
ஒரே நிறமென.
விடைகள் தெரியாத கேள்விகளுக்கிடையில்
விண்ணதிரும்
வெற்றுக் கோசங்களைக் கடந்து
ஒரே தெருவில் வசிக்கலாம்
நாம் மனிதரென.
ஒரு கடவுளை வணங்கலாம்
நாம் மனிதரென.
அதன் பிறகு
பார்க்கலாம்
ஒரே நாடு
ஒரே தேர்தலில்
ஜனநாயகம்
திளைக்கிறதாவென.
அதுவரை
சூட்சிக்கயிறின் முடிச்சுகளால்
குரல்வளையை நெறித்துக்கொண்டே
இருங்கள்
வஞ்சித்துவிட்டதாக.
நாங்கள்
அவிழ்த்துக்கொண்டே இருக்கிறோம்.
இல்லை
அறுத்தெறிந்து கொண்டே இருக்கிறோம்
போராளிகளென
யாவும்
சமத்துவமாக.
***
2. இயக்க விசையின் இன்னொரு திசை
துரித இயக்கப் போக்கின்
யாவிலும் சுணங்கிடாத
அழுத்தப் பொருளாக இருந்ததில்
சற்றைக்கும் குறைவில்லாத ஏக்கம்தான்
பாரிய அமைதியாகிடாத
அலைச்சலில்.
வினோத கதியில் நிகழும்
வீடடைந்த தருணங்களில்
இயக்க விசையிலொரு
இதம் வியாபிக்கும்
பூரித்தலாக
புரிதலுக்கு அழைத்தபடி.
சட்டென சூழும்
இச் சந்தோசம்
இதய இரத்த சுத்திகரிப்புக்கு மட்டுமல்லவென
நிராகரிக்க முடியாதபடியான நித்தியத்தின்
தோற்றப்பொலிவிலும்
துள்ளித் திரிவதிலுமாக
மாறிவிடுகிறது
இவ் வாழ்வு
இதம் கூட்டும்
இணக்க உன்னதம் உள்ளதென
பேணுதலாக
பிறவற்றையும்
நேசிக்க வைத்து.
***
3. வெற்றுக் கோப்பையினாலொரு விசேசப் பருகல்
இருப்பின் நிலையாமையில்
ததும்பும் அன்பைப் பருகாமல்
தள்ளாடவிடுகிறது
மிடறுகளில்
தன்நிலையை மறக்க வைத்து.
பாரியக்
குடித்தலின் பாடுகள்
நின்றபாடில்லை
இருக்கும்வரை சேர்ந்திருக்கும்
சேதாரமற்ற உறுப்புகளின் தயவால்.
இறக்கும்வரை சேர்ந்திருக்கும்
மாயை.
எழுந்ததும் இறங்கிவிடுவதில்
தேடுகிறது கொண்ட
அசத்திய குவளையின்
பானங்களை.
ஒரு பருகல்
ஒரு கோப்பை
ஓயாத அழைப்பென
வசீகரிக்கும் விருந்தின்
கொண்டாட்டக் குடித்தலை
அறியாத பொழுது.
இல்லாமையிலும்
இருக்கும் உறவை
எப்படிச் சொல்வது
பருகிடாத போதையின்
பரவச தள்ளாட்டத்தைப் பற்றி
இப்பொழுது.
***
4.வராது போயின்
என்னை இயக்க
சில சொற்கள் தேவையாக இருக்கின்றன
சில சமிக்ஞைகள்
சில கீச்சொலிகள்
சிறு தூரல்
சிலிர்க்கும் தென்றல்
சிறு கூடலின் மௌனம்
மேகமற்ற இவ்வானம்
யாவுமே கிட்டாது போயின்
உங்களின்
மீச்சிறு நிராகரிப்பு
இவைதான்
எப்பொழுதும்
இருத்தலில்
உயிர்ப்பாக்கிக்கொண்டே இருக்கிறது
என்னை
எப்பொழுதும்
இங்கு
மூர்ச்சையாகாமல்
வாழுமாசைகள் திளைக்க
***
5. யாவிற்குள்ளும் யாவுமாகி
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்
உன் நினைவுகளில் லயித்த பொழுதில்
யாவையும் மறந்துபோனேன்.
எனக்குள் விழுந்த குறுஞ்செய்திதான்
சொன்னது
ஆட்டிக் கொண்டிருப்பது
நீதானெனும் நிதர்சனத்தை.
***
எழுதியவர் :
ரவி அல்லது
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.