கவிதை : 1
காட்சிகள்
அரைவட்டம் முடியும் இடத்திலிருந்து
தொடங்கும் ஒரு முழுவட்டம்
அதன் மீது ஒரு நேர் கோடு
பிறகு ஈசிஜி கோடுகள்
எப்படி பார்த்தாலும்
வானம் என்பது சிறுதுரும்புதான்
முன்னிரவில்
வழிதப்பிய வெண்நாரைக்கு
அடர் சிவப்பில் உதட்டுச்சாயம் பூசி
இடுப்பை வெட்டி உதட்டை சுழித்து
உங்களை பார்த்துப் போகிறவளை
ஒரு புன்னகையுடன்
நீங்கள் கடந்துவிட்டாலும்
தேவகுமாரன் சபிக்கப்பட்ட வாழ்க்கையை
கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டேதானிருக்கிறார்
கைப்பிடிச் சோற்றுக்கே
சுற்றுச்சுவரில் சிம்பொனி
இசைத்துக்கொண்டிருக்கும்
காக்கை கூட்டங்களின் எண்ணிக்கையில்
நீங்கள் ஒன்று
நான் ஒன்று
இந்த கவிஞன் மற்றொன்று
குயில் முட்டைகளை
அடையாளம் காணத்தெரியாமல்
அடைகாக்கும் புதிர்மைகளில்
தவறேதும் நேர்ந்திடவில்லை
காக்கைகளுக்கு
தளாத விசும்பல்களால்
உறக்கத்தை கலைக்கும்
அலைகளின் மீது
தீராத சாபங்களேதுமில்லை
கடலுக்கு
சாவின்மீது நையாண்டி
மேளம் கொட்டி
பாடை தூக்கிப் போகும் போது
முன்னால் ஆடிப்போகும்
மனிதர்களுக்கு
எப்படி இசை விருந்தோ
அப்படியே கூட்டத்தில் புகுந்த நாய்களுக்கும்
நல்ல விருந்து தான்
கவிதை : 2
ஒரு கதை சொல் என்றாள்
சரி என்றேன்
வேண்டாம்
ஒரு பொய் சொல் என்றாள்
சரி என்றேன்
வேண்டாம் வேண்டாம்
நீ கதையே சொல்லி விடு என்றாள்
சரிதான் என்றேன்
கவிதை : 3
பெருவெளியில்
நேசமென்னும் பெருவெளியில்
நீலோத்பவமாய் உருளும்
மானுட சமுத்திரத்தில்
நானொரு துளி
என்னை பாலினத்தின் பெயரால்
மதத்தின் பெயரால்
சாதியின் பெயரால்
எல்லைக்கோடுகளின் பெயரால்
மற்றும் எது ஒன்றின் பெயரால் பிரித்தெடுத்து போகும்
எந்த மனிதனின் கைகளிலிருந்தும்
சிறகு முளைத்த வல்லூறென
வீறிட்டெழுந்து விண்ணில் பாய்வேன்
கவிதை : 4
விண்வெளியில்
மண்ணை முத்தமிட தோன்றாத புறாக்கள்
சிறகுகளை உதிர்க்கின்றன அணுக்களாய்
சுய மழிந்து நடனமாடி
நடனமாடி
இதை
கண்டடைந்தவளும்
சுயமழிய நடனமிடும்
அணுக் கூட்டத்திற்குள் நடனமிட்டுக் கொண்டிருக்கிறாள் ஏனோ
மிதக்கும் துகளாக
இன்று பறவையாய் பிறப்பெடுத்த
அவளே தான்
கவிதை : 5
என் இனிய கடவுளே
நீ குழைத்து விளையாடும்
களிமண் பொம்மையிலிருந்து
ஒரு தீற்றலை எனக்கும் பூசிவிடு
பச்சை களி மண்ணின் கர்ப்பவாசம்
எனக்குள் ஆழமாக இறங்குகிறதா
என்று பார்க்கலாம்
என் மீது வளர்ந்து கொண்டிருக்கும்
பாறையியின் செதில்கள்
கொஞ்சம் உடைகிறதா
என்று பார்க்கலாம்
என்னால் வறண்டு போன நதி
கொஞ்சம் துளிர்விடுகிறதா
என்று பார்க்கலாம்
பட்டுப் போன சருகுகள்
என்னிடம் ஒருமுறை
கடைசி முத்தம்
கேட்கிறதா என்று பார்க்கலாம்
சோறெடுக்க வந்த காக்கை
தோள்களின் ஓரம்
உரசி செல்கின்றதா என்று
பார்க்கலாம்
இவைகள் எதுவுமே நிகழவில்லையென்றால்
வா இருவரும் சேர்ந்து
புதியதொரு கடவுளை படைக்கலாம்
கவிதை : 6
எழுதியவர் :
தங்கேஸ்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

