ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் – கவிதைகள்
1
அப்பா
————————
அங்கீகரிக்கப்படாத
அன்புக்குச் சொந்தக்கார்கள்!
அப்பா எனும்
மூன்றொழுத்து மந்திரத்தை
உச்சரிக்கும் உதடுகளுக்கு
இங்கு பஞ்சமே!
ஹிட்லரின் முகமூடியில்
உலாவரும் அப்பாக்களுக்குள் இருக்கும்
சார்லிசாப்ளினைக் கண்டுபிடிக்கப்
பேரக்குழந்தைகளால் மட்டுமே முடியும் !
திருவாய் மலராது
திருமதிக்கு உத்தரவிடும்
மாயக்காரர்களுக்கு
பொதுவான பெயருண்டு வில்லன் என்று!
ஓடிஓடி உழைப்பவர்களை
ஓப்பனையோடு பார்க்கலாம்
கல்யாண புகைபடத்தில் !
பசிக்கு உணவு,பாந்தமாக
ஒரு வண்டி,சிலநிமிட செய்திகள், பதினொரு மணி தேநீர்,
ஆண்டுக்கொரு சட்டை
இவையே
அவர்களின் அதிகபட்ச தேவையாக இருப்பினும்
அயராது ஓடுபவர்கள் !
தேடிச்சேர்த்த சொத்தையெல்லாம்
பங்கு பாகம் பிரிப்பவர்கள்
மறந்தும் வெளியிடுவதில்லை
வட்டிக்கடன் போடும் குட்டிகளைப் பற்றி!
2
சின்னச் சின்னக் கவிதைகள்
பெரிதான காரணங்கள்
ஒன்றும் தேவையில்லை
கொசுறாகக் கிடைக்கும்
கருவேப்பிலைக் கொத்துபோல
சின்னச் சின்னக் காரணங்களே
போதுமானதாகிவிடுகின்றன
அவளின் சிரிப்புக்கும்
முறைப்புக்கும்
பேறுகால
அறுவைசிகிச்சையின்
அடையாளம் போல
வயல்வெளிகளைப்
பிளந்து செல்கிறது
நான்குவழிச்சாலை
சுகப்பிரசவத்திற்கு
வழியிருந்தும்
முப்போகம்
விளைந்த நிலத்தில்
நாற்புறமும் வாகனச்சத்தம்
கற்காலத்தில் பிறந்த
அம்மா அங்கலாய்கிறாள்
கணினி காலத்தில் பிறந்த
மகன் கைபேசியில்
கைதானது பற்றி
எழுதியவர் :
ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

