கவிதை : அவன் இருப்பது – அ. குமரேசன்
மற்றதெல்லாம் முடித்தபின்
நாசிக்கும் உதட்டுக்கும்
நடுவிலே தூரிகையைத்
தீட்டி முறுக்கிக்கொண்டிருந்த
ஓவியக்கார நண்பனிடம் கேட்டேன்
கடைசியாய் எப்போதும்
கண்ணைத்தானே வரைவீர்கள்?
என்னைப் பார்த்துச் சிரித்தான்.
“மீசையில்தானே இவன் இருக்கிறான்.”
இல்லை என்றேன், கண்களை விரித்தான்.
அச்சம் தவிர்க்க
உடலினை உறுதி செய்ய
ஊண் மிக உண்ண
ஏறு போல் நடந்திட
ஒற்றுமை வலிமை கொள்ள
ஓய்தல் ஒழிக்க
ஔடதம் குறைக்க
கற்றது ஒழுகியிருக்க
காலம் அழியாதிருக்க
குன்றென நிமிர்ந்து நிற்க
கூடித் தொழில் செய்ய
கேட்டிலும் துணிந்து நிற்க
கொடுமையை எதிர்த்து நிற்க
சரித்திரத் தேர்ச்சி கொள்ள
சாவதற்கு அஞ்சாதிருக்க
செய்வதைத் துணிந்து செய்ய
சொல்வதைத் தெளிந்து சொல்ல
சோதிடந்தனை இகழ
சௌரியந் தவறாதிருக்க
ஞேயம் காத்திருக்க
தீயோர்க்கு அஞ்சாதிருக்க
தூற்றுதல் ஒழித்திட
தெய்வம் நீயென உணர்த்திட
தேசம் காத்தல் செய்திட
தையலை உயர்வு செய்திட
நாளெல்லாம் வினை செய்ய
நுனியளவும் செல்ல
நூலினைப் பகுத்துணர
நேர்படப் பேச
நையப் புடைக்க
பணத்தினைப் பெருக்க
பிணத்தினைப் போற்றாதிருக்க
புதியன விரும்ப
பெரிதினும் பெரிது கேட்க
முனையிலே முகத்து நிற்க
மூப்பினுக்கு இடம் கொடாதிருக்க
ரீதி தவறாதிருக்க
ருசிபல வென்றுணர
ரூபம் செம்மை செய்ய
ரேகையில் கனி கொள்ள
ரௌத்திரம் பழக
லோகநூல் கற்றுணர
லௌகிகம் ஆற்ற
வருவதை மகிழ்ந்துண்ண
வானநூல் பயிற்சிகொள்ள
விதையினைத் தெரிந்திட
வீரியம் பெருக்க
வெடிப்புறப் பேச
வேதம் புதுமை செய்ய
வையத் தலைமை கொள்ள
வௌவுதல் நீக்க
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும்
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை மலர
திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம்
எய்தியிந்த நாட்டிலே வாழ்ந்திட
ஏழையென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை –ஜாதியில்
இழிவு கொண்டமனிதரென்பது
இந்தியாவில் இல்லையென்றாக்கிட
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம் மகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்ந்திட
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்திட
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையினும் நமக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும்
–திருநங்கைகளும் நம்பிகளும்–
சரிநிகர் சமானமாக
இந்த நாட்டிலே வாழ்வதற்கே
விடுதலையென -நூற்று
முப்பது கோடி ஜனங்களின் சங்கமம்
முழுமைக்கும் பொதுவுடைமை நாட்ட
ஆசைப்பட்டவன்…
மீசையில் இல்லை – அவன்
ஆசையில் இருக்கிறான்.
(பாரதி புத்தகாலயம் நடத்திய புத்தகங்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் நிகழ்வில் வாசித்த கவிதை)
எழுதியவர் :

அ. குமரேசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

