செல்லகுரு கவிதைகள்
1 . விளையாட்டுப் பொம்மைகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாரோ வேண்டாமெனத் தூக்கியெறிந்த
விளையாட்டுப் பொம்மைகளின் வழியே ஆரம்பிக்கிறது
எங்களின் புதுப்புது விளையாட்டு
பகலுக்குள் ஒளிந்திருக்கும் இருட்டில் விளையாடும்
வவ்வாலைப் போல
எல்லாம் கிடைத்துவிட்டதாய் மகிழும் விளையாட்டு அது
புத்தாடையின் வாசமறியாதவர்கள் நாங்கள்
வகை வகையான உணவுகளின்
தோற்றமறியாதவர்கள் நாங்கள்
காலாவதியான தின்பண்டங்களாகிப் போன
குழந்தைப் பருவம் எங்களுடையது
எனினும்
திகட்டத் திகட்டத்
தெரிந்து வைத்திருக்கிறோம்
தாய்ப்பால் வாசனையை.
2. அப்பா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அப்பா உழைப்பதை நிறுத்திக்கொண்ட பிறகு
அம்மாதான் எல்லாமுமாய் இருக்கிறாள்
அக்காவின் திருமணம்
எனது மேற்படிப்பென
யாவற்றையும் நினைத்து
அவ்வப்போது சலனமுறும் அம்மா
மீசைகளற்ற என் உருவம்
அப்பாவின் இளம்பிராயச் சாயலில்
இருப்பதாய்ச் சொல்வாள்
அப்போதெல்லாம்
கண்ணாடிச் சட்டகத்துக்குள்
சிரித்துக் கொண்டிருக்கும் அப்பாவின் பின்னால்
பல்லி ஒன்று எப்போதும் கத்தும்.
எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

