அமீபாவின் கவிதைகள்
மனசெல்லாம்.
*****************
அந்த ஆணியில்தான்
பளபளக்கும் இளமை நிற
அகல சட்டகத்திலான
காதலின் படம் தொங்கிக் கொண்டிருந்தது
ஒரு காலத்தில்.
அதே போன்றதொரு ஆணியில்தான்
யாருக்கும் தெரிந்து விடாதபடி
துணியில் சுற்றிச் சுற்றி
மறையப் புதைத்து பெரு மூட்டையென
காமம் தொங்கிக் கொண்டிருந்தது
பல காலத்தில்.
இன்று காலையில்
பால் வாங்கப் போனபோது
புதிதாய் பணியில் சேர்ந்திருந்த
இளம் பெண்ணொருத்தி
பார்ப்பதற்குப் பழைய
எனது தோழி போலிருக்க
பால் போல் சிரித்தபடி
“சொல்லுங்கப்பா” என்ற வார்த்தையில் அனாயாசமாகப் பிடுங்கி போடுகிறாள்
தேவையில்லா ஆணியை.
2
பக்கத்து வீட்டில்
அதிசயமாய் இப்போது
சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்
இதைப்பார்த்து
கண் வைக்க கூடாது என்கிறது மனசு
எப்போதும்
காது வைக்க கூடாது என்கிறது
மனசின் மனசு.
எழுதியவர் :
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.