சித்தபிரமையின் பாடல்கள்
1. ஆயிரம் பொன்
நடைமேடையிலிருந்து
தவழ்ந்து இரயிலுக்குள் நழுவியவள்
கைநீட்டி அனத்தியபடியிருந்தாள்
அழுக்குப்பொதிச் சட்டைக்குள்
குழந்தையாக தவழத் துவங்கியவள்
தன்னையே இரண்டாய் மடித்து
தரையைத் துடைப்பதற்கு ஆயத்தமானாள்
விரல்பட்டு நடுங்கும் கால்களை
உள்ளிழுத்துக் கொண்டவர்கள்
கைகள்கூப்பி பணத்தை நீட்டினார்கள்
காகிதத்தைக் கண்டு முகம் சுளித்து முணங்கியவள்
சில்லரைகளை உள்ளங்கைக்குள் குலுக்கி உக்கிரமாய்ச் சிரித்தாள்
நாணயங்களை நீட்டுபவரிடம் ஊர்ந்துபோய்
ஒருகணம் பார்த்து நிதானித்துச் சிரித்தவளிடம்
ஆயிரம் பொற்காசுகளின் சப்தங்கள்.
2. அலைகள் மண்டியிடும் கரைகள்
ஆழிப்பேரழிவின் சாட்சியமாக
கடல்முன் மண்டியிட்டு ஒலமிட்டு அழுகிறாள்
மனம்பிறழ்ந்த கிழவியொருத்தி
தன்னையே தனக்குள் சமைத்த பிள்ளைகளை
அழிவிற்குக் கொடுத்த காட்சியை
அடிக்கடி நினைவுபடுத்தி இறைஞ்சுகிறாள்
பெருவாழ்வைப் பார்த்தவள்
கடந்த காலத்திலேயே தேங்கிவிட்டதைப் போல
கடலின் இடிபாடுக்குள் பிள்ளையைத் தேடிச் சலிக்கிறாள்
கடலே கண்ணீராய்ப் பெருகிவிட்டதைப் போல
காலடியில் வந்து அலைகளோ மண்டியிடுகின்றன
காலமெங்கும் மன்னிக்கப்படாத அவஸ்தையில்
வழி தப்பிய பாணனாய் கரையெங்கும் கடல்
அவளது கண்ணீரையும் ஓலத்தையும் பாடித்திரிகிறது..
மரி எனும் நாய்க்குட்டி
தேநீர்க் கடைவாசலில்
கையேந்துகிற மனப்பிறழ்வுற்றவனின் காலடியில்
பசித்த நாய்க்குட்டியொன்று மண்டியிட்டு அமர்கிறது.
அழுக்குப்பொதியோடு நாய்க்குட்டியையும்
அரவணைத்துக் கொஞ்சுபவனுக்கு குழந்தைமனம்.
அவனுக்கெனத் தரப்படுகிற
குவளைத் தேநீரையும் குட்டிக்கே ஈந்தவனுக்கு
மரித்த இயேசுவின் கரங்கள்.
தேநீரைத் திராட்சை இரசமாக்கித் தருகிற
இரவாசதத்தை அறிந்தவன் அவன்.
அத்தனைக்கும் பின்பு அதன் தடித்த உதட்டில்
ஆயிரம் முத்தங்களால் நன்றி சொல்லிக் குரைக்கிறது
மரி எனும் நாய்க்குட்டி…
3. குலவை
நீர்க்கரங்களால்
கூழாங்கல்லில் நதி கிறுக்கி வைத்த
வரிகளைத் தொடுத்துப் பாடுவேன் நான்
துதி வந்து ஆடும் பேரலைக்கு
குலவைச் சத்தம் அப்பாடல்
4. காதல் மிடறு
குவளைத் தண்ணீர் தேநீராகும்
இரசவாதம் நீ..
நுரைக்க நுரைக்கத் தருகிற குமிழ்கள்
அத்தனையிலும் சிமிட்டும் உன் கண்கள்..
சுவைக்கிற சில மிடறுகளில் மீளப்பெருகிற
அதிகாலையை உனக்கே சமர்ப்பிக்கிறேன்..
கொஞ்சம் பொறு,
நறுமணமாகும் இக்கணத்தை ஒருமுறை
சப்புக் கொட்டிக் கொள்கிறேன்..
எழுதியவர் :
மனநல மருத்துவர் மந்திரிகுமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

