முல்லைவாசன் கவிதைகள்
1. தடிகள்
—–
தடிகள் எப்போதும்
தடிகளாக இருப்பதில்லை
தடிகளின் நுரையீரலில்
சிம்மாசனத்திற்கு
சுவாசக் கோளாறு வராமல்
சுகமாக வைத்துக் கொள்கின்றன
காலோடு காலாக
ஊன்றி நடக்கும் தடிகள்
செருப்பை போல் தேய்வதில்லை
புது செருப்பை போல் கடிப்பதுமில்லை
தடிகளுக்கு
ஆதார் எண்ணுடனோ
வங்கி எண்ணுடனோ
நல்லறவுக் கருத்து இல்லை
வாக்கு சீட்டு எண்ணுடன்
கட்டாய வல்லுறவு கொள்கின்றன
தடிகள்
நூல் பிடிக்கவும் உதவுகின்றன
ஆள் பிடிக்கவும் உதவுகின்றன
தடிகளின் அனுபவத்தில் தான்
அமைதி செயலிழந்து விடுகிறது
நிழல் போல தொடரும்
தடிகள்
நிழலின் நிறத்தை விரும்புவதில்லை
குருதியின் நிறத்தையே
குறி வைத்துள்ளது.
2 . ஜனநாயகம்
———————–
தலைகளை
எண்ணும் கணக்கே
ஜனநாயகத்தின் தலையெழுத்தாகும்
தலைகளுக்கு
விலை வைக்கும் போது
ஜனநாயகம் சவக்கிடங்கிற்குள்
நுழைந்து விடுகிறது
தாங்கும்
தூண்கள் எல்லாம்
தூள் தூளாய் நொறுங்கியது
இடிபாடுகளின் நடுவே
ஜனநாயகம்
எதற்குத் துதி பாடுகிறது ?
சொக்குப்பொடி
வண்ணப் பொடி
எல்லாம்
பூசி மெழுகி
ஜனநாயகம் எப்படியோ
கோலம் கொண்டு விடுகிறது
ஜனநாயகம்
குசேலன் கையில் இருக்கும் அவல்
கண்ணன் வாய்க்கு
எப்போது எட்டுமென்று தெரியாது
சவுரி முடியாய்க் கிடக்கும்
ஜனநாயகம் தான்
மணி முடியையெல்லாம்
மண் கவ்வச் செய்கிறது
எழுதியவர் :
குடியாத்தம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.