பொன்.தெய்வாவின் கவிதைகள்
1 . நீயற்ற இரவு
இலையுதிர்க்கால
பூவரசம் மரத்தில்
காக்கைகள் உறங்கிவிட்டன
என் கண்களில்
தனிமையின் துயர்
ஈர வரட்டியாய் அப்பியிருக்கிறது
சுட்டெரிக்கும் நிலவை
சற்றே அண்ணாந்து
இரசிக்க இயலவில்லை
ஊசியாய்த் தழுவுகிறது
மேனியை அடர்பனி
நீயற்ற இரவு
நரகத்தின் இன்னல்களால்
ஓய்வின்றி வதைக்கிறது
தூரத்தில் அலரும்
கூகையின் ஒப்பாரி
செவிக்குள் அமிலத்தைக்
காய்ச்சுகிறது
வசந்தத்தின் சோலையில்
நறுமண மலர்களோடு உறவாடி
சுகமாய் எங்கிருக்கிறாய் நீ?
2. கொடிய வாழ்தல்
அந்தியில் குளிர்ந்தெழும்
வளரும் நிலவென
இதயத்தின் வெளியை
நிறைவாய்ப் பரவி வசீகரித்த
உயிர்நிகர் நீயேதான்
விழியெங்கும் தணல்நெய்து
அரவமற்ற பூனையின் கால்களால்
நட்சத்திரங்களை உடைத்து
மௌனமாய் எங்கோ நகர்ந்தாய்
ஒளியற்ற வனத்தில்
தனித்தலையும் இராப்பாடியின்
துயர்மிகுந்த ஓலத்துடன்
தினம் விடிகிறது
கொடிய என் வாழ்தல்.
3. தணல் மிகுந்த கரை
நானற்ற இதயமுடன்
இனிதலர்ந்து கமழ்கிறாய் நீ
என் பூரண விலகலைச்
செங்கால் நாரையென
விரும்பிக் காத்திருந்தாய்
இரவின் யாமத்தை
மை நிரம்பிய விழிகளால்
நெஞ்சம் நேர் புதியரோடு
இமைக்காமல் களவாடுகிறாய்
உன்னில் கிறங்கிய
கடுந்துயர் நெஞ்சுடன்
சுடரற்று மங்கிக் கிடக்கிறேன்
வானெங்கும் நிரம்பி
மின்னல் இடியுடன்
காலிறங்கிப் பொழிகிறது
பருவம் தவறிய பெருமழை
மீன்களின் கனவில்
வற்றிய கடலுடன்
தணல் மிகுந்த கரை.
எழுதியவர் :
பொன்.தெய்வா
ஐவேலி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

