நட்பு ,காதல் உணர்வுகள், குடும்ப சூழல் , நிறைவேறாத கனவுகள் குறித்து பேசும் தமிழ் செல்வனின் சிறுகதைகள்…!

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள இப்புத்தகம் 2011 இல் முதல் பதிப்பாகவும் 2017 இல் இரண்டாம் பதிப்பாகவும் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது. விலை 180 ரூபாய் .

நூலாசிரியர் குறித்து

கோவில்பட்டியைச் சேர்ந்த இவர் இலக்கியக் கர்த்தாக்களில் முக்கியமானவர். தமிழின் முக்கிய சிறுகதையாளர். பண்பாட்டுப் போராளி , மிகச் சிறந்த கட்டுரையாளர் , தமுஎகச வின் மாநிலத் தலைவராக இருந்து தற்போது கெளரவத் தலைவராக செயல்படுபவர் .அறிவொளி இயக்கத்தில் நீண்ட காலம் களத்தில் நின்று மாற்றங்களை உருவாக்கியவர்.
கல்வி குறித்தும் பேசியும் செயல்பட்டும் வருபவர்.

இவரது முதல் சிறு கதைத் தொகுப்பு வெயிலோடு போய் . பெண்மை ஒரு கற்பிதம் , எசப்பாட்டு ஆகிய இவரது நூல்கள் சமூகத்தில் ஆண்கள் பெண்கள் இருவரும் படித்து உரையாடலுக்கு உட்பட வேண்டிய முக்கியமான நூல்கள். எனக்கு அரசியல் பிடிக்கும் , ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள் உட்பட இன்னும் இவரது படைப்புகள் ஏராளம்.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

நூலைப் பற்றி

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் என்ற இந்த புத்தகத்தின் அட்டைப் படமே நமக்கு பல கதைகளைச் சொல்கின்றது. ஆம், அட்டைப் படத்திற்கும் உள்ளே இருக்கக்கூடிய பல கதைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஏனென்றால் கதைகள் ஒவ்வொன்றும் விளிம்பு நிலையில் வாழும் சாதாரண மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. பெரும்பாலான கதைகள் தீப்பெட்டி தொழில் செய்யும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பதிவு செய்கின்றன. பீடி சுற்றும் தொழில் , காட்டு வேலை செய்பவர் , அலுவலகத்தின் கடைநிலை ஊழியர் இவர்கள் தான் கதை மாந்தர்களாக வலம் வருபவர்கள் .

கதைகளின் ஓட்டத்தில் பல வித சமூகப் பொருளாதார அரசியலையும் நாம் அறிந்துகொள்ளலாம். அதிகாரவர்க்கம், முதலாளித்துவம் இவர்களிடம் தொழிலாளர் வர்க்கம் படும்துயரங்கள் ஆகியவை மிகவும் நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர்களுக்கான நட்பு ,காதல் உணர்வுகள், குடும்ப சூழல் , நிறைவேறாத கனவுகள், அன்றாட வாழ்க்கைத் தேவைக்காக போராடக்கூடிய தருணங்கள் இப்படி நிறைய விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குடும்ப அமைப்புகளில் உள்ள ஆண் – பெண் உறவுச் சிக்கலைக் குறித்து யதார்த்தமாக உள்ளது உள்ளபடியே பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்

 

32 கதைகளும் அவற்றுக்கான 239 பக்கங்களும் நம்மை பல இடங்களில் நெகிழச் செய்து மனசைப் பிசைகின்றன.

இவரது படைப்புகள் நுட்பமும் அழகும் இனிமையும் கூடிய எளிய மொழியில் படிப்பதற்கு இணக்கமாக இருக்கின்றன .
இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள பல கதைகளில் வறுமை தான் பிரதானமாக இருக்கிறது வறுமையினால் உருவாகும் அடுத்தடுத்த விளைவுகள் கச்சிதமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. எதுவுமே கற்பனை அல்ல என்பது போல எல்லாக் கதைகளுமே நிஜமாகவே இருக்கின்றன. நாம் சந்திக்கும் ஏதோ ஒரு மனிதருக்கான அனுபவங்கள் , நம் வீட்டில் , நட்புகளின் , உறவினர்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகள் தான், புத்தகத்தை வாசிக்க வாசிக்க நமது மனக் கண்ணில் காட்சிகளாக விரிகின்றன.

பாவனைகள் என்ற தலைப்பில் வரும் கதையை வாசிக்கும் போது சிறு வயதில் நமக்கே ஏற்பட்ட அனுபவமாகப் பார்க்க முடிகிறது. அதே போல அசோக வனங்களும் வெயிலோடு போயும் அடுத்தடுத்த தொடர்புடைய கதைகளாகப் படுகின்றன . மூன்றாவது கதைதான் பூ என்ற திரைப்படமாக வந்தது என அறிகிறேன். அதைப் படித்த பிறகு தான் எனக்கு தெரிந்தது.

26 ஆம் பக்கத்து மடிப்பில் வரும் மணியைப் போல எல்லோருக்குமான அழுகையுடன் கூடிய நெகிழச் செய்யும் இளவயது நட்பும் கிழிந்து போன தாள்களைப் போன்ற கனவுகளும் இந்த பூமி முழுவதும் சுற்றி வருகின்றன .

Swachh Bharat Urban on Twitter: "A wall painting drive was carried ...

ஒரு பிரம்பு ஒரு மீசையின் கதை எல்லா ஊர்களின் பள்ளிக்கூடங்களின் சுவர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் கதை. அதற்குள்ளே கனன்று சாம்பல் பூக்கும் சாதித் தாழ்வு மனப்பான்மைகள் எப்போதாவது நெருப்புப் பொறி அணையாமல் தீ பற்றி எரியும் காரணிகளாய் மாறி விடுமே … அப்படியான கதை அது.

பதிமூணில் ஒண்ணு கதை எனக்குத் தெரிந்து பல லட்சம் குழந்தைகளின் கல்விக்கான கதை… விநாயகரும் ஏசுவும் பாஸ் பண்ண வைக்கும் கடவுள்களாக ஏராளமான குழந்தைகளை ஆக்ரமித்து இருப்பார்கள் என்பதை நாமறிவோம்
எதார்த்தமாக இங்கு அதுசித்தரிக்கப்பட்டுள்ளது.

அவரவர் தரப்பு கதையின் இறுதி வரிகள் தான் நிஜமான வரிகள். இந்த உலகின் காலங்காலமான பெண்கள் மீதான கற்பிதங்களும் ஆண்கள் மீதான விசாரணைகளும் மாறுவதே இல்லை.

ஒவ்வொரு கதைக்குள்ளும் நிறைய உப கதைகள் மறைந்து நமக்கு வலியை ஏற்படுத்துகின்றன. ஏழ்மை , பெண்கள் மீதான குழந்தைகள் மீதான வன்முறைகள் , பெண்கள் மீதான சமூகக் கற்பிதங்கள் , சாதிக் குறியீடுகள், பாசம் , காதல் , நட்பு இவற்றின் முடிச்சுகள் அவிழ்ந்து கொண்டே இருக்கின்றன.

அட்டை படத்தைப் பார்க்கும்போது எனக்கு தனிப்பட்ட முறையில் அதன் மீது அப்படி ஒரு பாசம், ஏனெனில் நான் பிறந்த வீடு இப்படியேதான் இருக்கும் , சாணி தெளித்து வாசலில் கல்லுக்கட்டு , ஒரு கட்டில் ஓலைக்குடிசை . ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நான் திருமணம் செய்து கொண்டு போனபோது என்னுடைய கணவர் வீடும் தத்ரூபமாக இப்படியே இருந்தது .அதில் இந்தத் ஆட்டுக்குட்டி கட்டி இருக்கிறதல்லவா இதே மாதிரி வீட்டில் இருக்கும் . அந்தக் கட்டிலின் மீது இருக்கும் அந்த துணிகள், மேலே தூக்கில் தொங்கும் துணிகள் ,அந்தக் காட்சி எங்கள் வீட்டிலும் தான் அன்றாடம் பார்த்து வந்தேன்.

பதிமூன்று வருடங்கள் இந்த மாதிரியான ஒரு சூழலில்தான் வாழ்ந்ததால் எனது மனதிற்கு மிக நெருக்கமாக இருந்தது .எங்க வீட்ல ஆடு வளர்ப்போம் அந்த ஆடு மாதிரியே ஒன்று அமர்ந்து அசை போட்டுக் கொண்டு இருக்க, அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு கட்டில் மேல துணி கொடியில் தொங்கும் .அதே மாதிரி முன்பக்கம் கூரையிட்ட இந்த மாதிரி ஒரு வீடு இருக்கும் , ஆகவே எனக்கு நெருக்கமானதாக இருக்க கூடிய ஒரு அட்டைப்படம், அது மட்டுமல்ல உள்ளே வரக் கூடிய ஒவ்வொரு கதையும் நெருங்கிய தொடர்பு இருக்கும் மனிதர்களுக்கான சமூக சூழல் ,பொருளாதாரம் இவையும் என் சமூக மனிதர்களுக்கானதாகப் பார்க்கிறேன். ஆகவே கதையில் வரும் மனிதர்களுடைய மனப்போக்கும் அவருடைய உணர்வுகளையும் ரொம்ப அழகா புரிந்து கொள்ள முடிகிறது.

உள்ளத்தை கிளரிச் செல்லும் , நீண்ட நேரம் அசை போட வைக்கும் மிக நல்ல புத்தகம் இது என்று கூறலாம்.

புத்தகம் : தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்

ஆசிரியர்: எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம் 

விலை : ரூ.180

புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/product/tamilselvan-sirukathaikal-7961/

– ஆசிரியர் உமா