அரசியல் என்கிற சொல்லை அதன் விரிவான அர்த்தத்தில் இக்கட்டுரையில் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு சொல்லிலும் ,ஒவ்வொரு துளியிலும் அரசியல் இருக்கிறது.பண்பாட்டு அரசியல்,பொருளாதார அரசியல்,காலனிய அரசியல்,சாதிய அரசியல்,மதவாத அரசியல்,பெண் அரசியல்,தலித் அரசியல், சிறுபான்மை அரசியல்,அரசியலற்றதன் அரசியல் என விரிவுகொள்ளும் பொருளில் அதைப் புரிந்துகொள்கிறோம்.
முதல் அலை
மேனாட்டார் வருகையுடன் துவங்குவது தமிழ்ச்சிறுகதையின் வரலாறு. ஆகவே இயல்பாகவே ஆங்கிலம் படித்த தமிழர்கள்தான் இவ்விலக்கிய வகையினை அறிவர்.அவர்களே புனைகதையின் இவ்வடிவத்தில் முதலில் எழுதினர்.1920களில் சிறுகதைகள் எழுதிய முன்னோடிகள் என நாம் கொண்டாடும் வ.வே.சு.அய்யர், பாரதி,அ.மாதவய்யா ஆகிய மூவருமே பிராமணக்குடும்பங்களில் பிறந்தவர்கள். முதல் கட்டத்தில் மட்டுமல்ல,’60கள் வரையிலுமே தமிழின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்கள் பெரும்பாலானோர் பிராமண சமூகத்தில் பிறந்தவர்களே. கு.ப.ராஜகோபாலன்,மௌனி,ந.பிச்சமூர்த்தி, ந.சிதம்பரசுப்பிரமணியன், கல்கி, ராஜாஜி,அசோகமித்திரன்,தி.ஜானகிராமன்,தி.ஜ.ரங்கநாதன், சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையா, எஸ்.வி.வி. , வை.மு.கோதை நாயகி அம்மாள்,அநுத்தமா,கிருஷ்ணன்நம்பி, ஜி.நாகராஜன், சுந்தரராமசாமி ,சுஜாதா என அந்தப் பட்டியல் நீளும்.
இப்படி ஒரு பட்டியல் இருப்பதன் பின்னணியில் தமிழகத்தின் கல்வி அரசியல், கல்வி மறுக்கப்பட்ட வரலாறு இயங்குகிறது.ஆரம்பகாலச் சிறுகதைகளில் பிராமண வாழ்க்கையே அதிகம் பேசப்பட்டது.வாசகர்களும் அவர்களே என்பதால் எழுதப்பட்டதும் அப்படி ஆனது.சிறுகதையின் வளர்ச்சி எப்போதும் இலக்கிய மற்றும் வெகுசன இதழ்களோடு தொடர்புடையது.பாரதிக்கு சுதேசமித்திரனும் அ.மாதவய்யாவுக்கு அவரே நடத்திய ‘பஞ்சாமிர்தம்’ இதழும் வ.வே.சு.அய்யருக்கு ‘தேச பக்தன்’இதழும் என வாகனங்கள் அமைந்தன. அப்பத்திரிகைகளின் அரசியலும் அவற்றில் வெளியாகும் சிறுகதைகளின் மீது இயல்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பாரதி,வ.வேசு.அய்யர்,அ.மாதவய்யா ஆகிய இம்மூவருமே பார்ப்பனர்களாகப் பிறந்தாலும் சாதிக்கு எதிராகப் பேசிய அரசியலை முன்னெடுத்தவர்கள்.சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் தம் கதைகளில் சொன்னார்கள்.வ.வே.சு அய்யரும் ,பாரதியும் நேரடியாகச் சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.ஆஷ் துரையைச் சுட்டுக்கொல்ல வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி சுடக்கற்றுக்கொடுத்தவர் வ.வே.சு.அய்யர். மட்டுமின்றி சேரன்மகாதேவியில் பரத்வாஜ ஆசிரமம் ஏற்படுத்தி எல்லாச் சாதிக் குழந்தைகளுக்கும் கல்வியளிக்க முயற்சித்தவர்.ஆனால் அங்கே சமபந்தி இல்லாததால்,அன்றைய சமூகம் ஏற்காததால்,தனிச்சாப்பாடு போட்டு மாட்டிக்கொண்டவர்.பரத்வாஜ ஆசிரமக்கதையையே அ.மாதவய்யா தன்னுடைய ‘ஏணியேற்ற நிலையம்’சிறுகதையில் வெளிப்படையாக எழுதியிருப்பார்.ஆனாலும் வ.வே.சு அய்யரின் குளத்தங்கரை அரசமரம் கதை பால்ய விவாகத்துக்கு எதிராகப் பேசியுள்ளது.
”என் அருமைக் குழந்தைகளே! பெண்களின் மனம் நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது, இனிமேல் இந்தக் கதையை நினைத்துக்கொள்ளுங்கள். பெண்ணாகப் பிறந்தவர்களின் மனதை விளையாட்டுக்குக்கூடக் கசக்க வேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்குக் கொண்டுவந்துவிடும் என யாரால் சொல்ல முடியும்’ என்று வ.வே.சு.அய்யரின் அந்தக்” குளத்தங்கரை அரசமரம்”, கதையை நமக்குச் சொல்லி முடிக்கிறது. ரீதி மட்டும் புதிதல்ல அன்று வழக்கிலிருந்த குழந்தைத் திருமணத்துக்கு எதிராகப் பிரச்சாரமின்றிப் பேசும் உள்ளடக்கத்தோடும் இந்தக் கதை அமைந்ததால் எல்லோரும் கொண்டாடும் கதையாக, பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துள்ள இன்றைக்கும் இது பேசப்படுகிறது.
அ.மாதவய்யா தன்னுடைய கதைகளில் பிராமண சமூகத்தின் பிற்போக்கான கேடுகளை கடுமையாகச் சாடியுள்ளார். ஜனநாயக எண்ணம்கொண்டவரான அ.மாதவய்யா, தமிழ்வழிக் கல்வியையும் ஆட்சியில் தமிழையும் வலியுறுத்துபவராக இருந்தார். மொழியும் ஜனநாயகமும் பிரிக்க முடியாதவை என்கிற புரிதல் அவருக்கு இருந்தது. தனித்தமிழ் மீதும் காதல் கொண்டிருந்தார். கலப்பில்லாத தனித்தமிழ் நடையில் சித்தார்த்தன் என்னும் நூலை (புத்தரின் வரலாறு) எழுதினார்.
“சம்பூர்ண சுயராஜ்யம், அரசியல்ரீதியில் பெறுவதல்ல… வறுமை, அறியாமை நீக்கித் தாழ்த்தப்பட்டவர்கள் விடுதலை பெற்றுச் சமமாகிறபோதுதான் அந்தச் சுயராஜ்யம் கிடைக்கும்” என்று தன் பார்வையை அன்றே தெளிவாக முன்வைத்தவர் மாதவய்யா. தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய அவரது கருத்தும் மனங்கொள்ளத்தக்க வகையில் தெளிவானது.
`ஆரியர், திராவிடர்களுக்கு முன்பே இந்த நாட்டுக்கு உரியவர்கள். இவர்களே இந்த மண்ணின் மைந்தர்கள்” எனப் பொட்டில் அடித்தவர். `தீண்டத்தகாதாரை மனிதரிலும் கீழாய் நடத்திக்கொண்டு நாம் (பார்ப்பன – வேளாளர்), நம்மை ஆள்பவர்களிடமிருந்து (ஆங்கிலேயர்) சம உரிமை கேட்பது வெட்கத்துக்குரியது’ என்று எழுதினார்.
அவருடைய சிறுகதைகளில் இப்பார்வை துலக்கமாக வெளிப்பட்டது.குறிப்பாக குதிரைக்காரக் குப்பன்,தந்தையும் மகனும்,ஏணியேற்ற நிலையம் போன்ற கதைகள் இந்த அரசியலை வெளிப்படையாகப் பேசுகின்றன.சாஸ்தா ப்ரீதி என்கிற கதையில் சொந்த பிராமண சாதியின் கெட்ட குணாம்சங்களைத் தோலுரித்துக் காட்டிச் சொந்த சாதிக்குத் துரோகம் (அன்றே) செய்கிறார்.
பாரதி, நேரடியான ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலில் பங்கேற்றவர்.”பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே..வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே” என்று கவிதையில் பாடிய பாரதி தன்னுடைய ”ஆறிலொருபங்கு” சிறுகதையில் இப்படி எழுதுகிறான்.” `முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ நாம் பள்ளர், பறையருக்குச் செய்வதையெல்லாம், நமக்கு அந்நிய நாடுகளில் பிறர் செய்கிறார்கள். நமது சிருங்ககிரி சங்கராச்சாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நெட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும். சாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் நடக்கக் கூடாது. பிரத்யேகமாக விலகி நடக்க வேண்டும். பல்லக்குகள், வண்டிகள் இவற்றைப் பற்றி யோசனையே வேண்டியதில்லை.
சுருக்கம்: நாம் நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை நீசர்கள் என்று பாவித்தோம். இப்போது நம் எல்லோரையுமே உலகத்தார் மற்றெல்லா நாட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக் கருதுகிறார்கள். நம்முள் ஒரு வகுப்பினரை நாம் தீண்டாத வகுப்பினர் என்று விலக்கினோம். இப்போது வேத மார்க்கஸ்தர், மகம்மதியர் என்ற இரு பகுதி கொண்ட நமது இந்து ஜாதி முழுவதையுமே உலகம் தீண்டாத சாதி என்று கருதுகிறது. உலகத்தில் எல்லா சாதியரிலும் வகுப்புகள் உண்டு. ஆனால், தீராத பிரிவுகள் ஏற்பட்டு சாதியை துர்லபப்படுத்திவிடுமானால், அதிலிருந்து நம்மைக் குறைவாக நடத்துதல் அந்நியர்களுக்கு எளிதாகிறது. `ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.’
ஆக, தமிழ்ச்சிறுகதை பிறக்கும்போதே அரசியல் பார்வையுடனும் சாதியத்துக்கு எதிரான பண்பாட்டு அரசியலை உரக்கப் பேசியபடியுமேதான் தன் முதல் தப்படிகளை எடுத்து வைத்தது. 1925க்குள்ளேயே இம்மூவரும் மறைந்து விட, தமிழ்ச்சிறுகதையின் முதல் அலை தேசிய விடுதலை,பெண்விடுதலை,சாதிய எதிர்ப்பு அரசியலை முன் வைத்து அடங்கியது. அப்பாரம்பரியம் அதே உரத்த குரலில் தொடரவில்லையாயினும்,தமிழ்ச்சிறுகதை தன் பாதாஇ நெடுகிலும் உள்ளடக்கமாக அரசியலைத் தன்னுள் பொதிந்து வைத்திருந்தது.
இரண்டாவது அலை இன்னும் விரிவாக…..
தொடரும்….

முந்தைய தொடர்கள்:
தொடர் 1 ஐ வாசிக்க
தொடர் 2 ஐ வாசிக்க
தொடர் 3 ஐ வாசிக்க
தொடர் 4 ஐ வாசிக்க
தொடர் 5 ஐ வாசிக்க
தொடர் 6 ஐ வாசிக்க
தொடர் 7 ஐ வாசிக்க
தொடர் 8 ஐ வாசிக்க
தொடர் 9 ஐ வாசிக்க
தொடர் 10 ஐ வாசிக்க
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்
தொடர் 11 ஐ வாசிக்க
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்
தொடர் 12 ஐ வாசிக்க
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்
தொடர் 13 ஐ வாசிக்க
தொடர் 14 ஐ வாசிக்க
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்
தொடர் 15 ஐ வாசிக்க
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிக அழகாக ஆரம்பமாகியுள்ளது முதல் அலை. தற்போதைய எனது வாசிப்பில் வெ.சாமி நாதசர்மா வின் நான் கண்ட நால்வர் . இந்த நூலில் தமிழ்ச்செல்வன் அவர்கள் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான முக்கிய இணைப்புகள் வருகின்றன. வ.வே.சு. அய்யர் , பாரதி , கல்கி , தேசபக்தன் , அந்நியர் ஆட்சியில் நம் மக்களின் அரசியல் இப்படி. ஆகவே இரண்டாம் பகுதியை எதிர் நோக்குகிறேன்.
வ.வே.சு.அய்யர் தான் வாஞ்சிநாதனுக்கு தூப்பாக்கி சுட கற்றுக்கொடுத்தார் என்றால் அது பெருமைபடவேண்டிய ஒன்று அல்ல.வாஞ்சிநாதன் எதற்காக ஆஷ்துரையை கொன்றான்.கொல்வதற்கு முன்பாக நடைபெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியென்ன….. ஏன் வாஞ்சிநாதன் ஆஷ்துரையை வி.ஜார்ஜ் ஆகியோரை கோ மாமிசம் தின்னும் ‘பஞ்சமன்’ என்று விளித்தான்.எதறாகாக அவர்களை கொல்வேன் என்று சபதமேற்றான்.வரலாறு மீலெழுகிறது.வரலாற்று தவறுகளை இனியும் புகழ்பாடாமல் உண்மை வரலாற்றை வெளிக் கொணருவோம்.அதுவே சமூகநீதி பாரம்பரியம் கொண்ட தமிழகத்துக்கு வரலாற்றுக்கு நாம் செய்யும் குறைந்தபட்ச மரியாதை.
புதுச்சேரியில் இயங்கிவந்த வ.வே.சு.அய்யர் முடிவெடுத்து நீலகண்டபிரம்மச்சாரி திட்டம்தீட்டி வாஞ்சி அய்யர் நடத்திய படுகொலை பார்ப்பன குலதர்மத்தை காப்பதற்கே என்பது சம்பவத்தின் போது வாஞ்சிநாதன் சட்டையில் இருந்து கைபறாறப்பட்ட கடிதத்திலேயே தெரிந்த விஷயம் தானே.அப்படியிருக்க ஏன் இந்த பெருமை.
ஒவ்வொரு துளியிலும் அரசியல் இருக்கிறது என்ற பேருண்மையைத் தன் கட்டுரையில் தொடக்கமாக்க் கொண்டு எழுதவிருக்கும் அன்புத் தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மிகுந்த மகிழ்வும் நன்றியும்..தொடரட்டும் தங்கள் கட்டுரை…
ஆக தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு ஒரு நூற்றாண்டு தானா? இதே போல் கவிதை, நாவல், … போன்ற பிற இலக்கிய வடிவங்களின் வரலாறு குறித்தும் எழுதினால் நன்றாக இருக்கும்! நன்றி ஐயா!
மதுசூதன்
நன்றி.நீங்கள் குறிப்பிடும் வரலாறு எல்லாம் தெரிந்ததுதான் .வரலாற்று மனிதர்களை புனைவிலக்கியக் கதாபாத்திரங்கள் போலப் பிசிறற்ற கோடுகளால் சித்திரம் தீட்ட முடியாது.ஒன்றில் முற்போக்கான பாத்திரம் வகிப்பவர் ஒன்பதில் பிற்போக்காக இருப்பார்.யாரையும் சட்டென முத்திரை குத்தி நிராகரிக்க அவசரப்பட வேண்டாம்.காலத்தில் வைத்து பார்ப்போம்.என்பது என் பார்வையாக இருக்கிறது.நீங்கள் குறிப்பிடும் வரலாற்றுப் பகுதிகளை மட்டுமே கடந்த 30 வருடங்களாகப் பேசியும் எழுதியும் வந்தவன் நான்.இன்று எல்லாவற்றையும் திரும்ப வாசிப்பதும் நிதானமான பார்வை கொள்வதும் அவசியம் என நினைக்கிறேன்.மேடம் காமாவுடன் சக பயணியாக வாழ்ந்த சில பக்கங்களும் வ.வே.சு க்கு உண்டு.ஆங்கிலேய எதிர்ப்பு என்கிற ஒரு புள்ளியை நான் தொட்டிருக்கிறேன்.பெருமிதம் எங்கே கொண்டேன்?விரிவாக அவர் பற்றி எழுதிய கட்டுரை தமிழ்ச்சிறுகதையின் அரசியல் பாகம் 1 நூலில் வருகிறது.அடுத்த மாதம் புத்தகம் வந்துவிடும்.இப்போது எழுதப்போவத் பாகம் 2.அதன் முன்நுரைதான் இது..வாசித்தமைக்கு நன்றி.
இன்றைய நமது இந்தியாவின் அரசியல் சூழ்நிலையில் பிரமாணத்துவம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது.பிரமாணத்துவத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் பிரமணர்களுக்குள்ளே முற்போக்கான எண்ணமும் செயலும் கொண்டவர்களை தற்போது முன்னெடுப்பது அவசியம் என கருதுகிறேன்.
மு தனஞ்செழியன்
சென்னை.
தமிழ் சிறுகதை வரலாறு மேற்கத்திய நாடுகளில் இருந்து ஆங்கில இலக்கியத்தின் வாயிலாக தமிழில் புனைவு இலக்கியங்கள் ஏற்படுகின்றன என்ற வரலாற்றை நாம் கவனிக்கும் பொழுது ஆங்கில இலக்கியம் கற்க்கும் ஒரு வாய்ப்பு பார்ப்பன சமூகத்தின் இடையே அதிகமாக இருந்ததை உற்று நோக்க முடிகிறது.
இந்த ஆரம்பகட்ட நிலையைத் தாண்டும் பொழுது பெரும்பாலான தமிழ் இலக்கியங்களின் பாடல்கள் வாயிலாகவே கதைகளை சொல்லிக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம் மெல்ல மெல்ல சிறுகதைக்குள் நுழைந்த பின்பு தமிழ் இலக்கியங்களின் சுவையும் இசையுடன் இருந்த கதை சுவைகள் காலங்கள் சென்ற பின் மறைந்து போனதை உணர முடிகிறது.
இந்த மாதிரியான சிறுகதைகளின் வந்த பின்பு தமிழில் இருந்த மிகவும் பழந்தமிழ் சுவையுடன் கூடிய இலக்கிய வார்த்தைகள் அழிந்து போனதை மிகவும் உணரமுடிகிறது ஆகவே இதுவும் கூட ஒரு வகையான தமிழ் சொற்களை அழிக்கும் அரசியலாக கூட இருக்கலாம் என்பது என்னுடைய ஒரு கருத்து.
மிகவும் அருமையான தொடக்கம் தோழர் நன்றி.