பெ.விஜயகுமார் - தமிழ்ச் சிறுகதைச் சிற்பிகள் | Tamil short story sculptors

பெ. விஜயகுமார் எழுதிய “தமிழ்ச் சிறுகதைச் சிற்பிகள்” – நூலறிமுகம்

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி ஆங்கிலத்துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; புதிய ஆசிரியன் மாத இதழின் இணை ஆசிரியராக பணிபுரிபவர்; சிறுகதைகள் பற்றியும் சிறுகதை எழுத்தாளர்கள் பற்றியும் நிறைய ஆய்வுத் தொகுப்புகளும் கட்டுரைகளும் வெளியிட்டவர் என பன்முக தளங்களில் இயங்கும் பேராசிரியர் பெ விஜயகுமார் அவர்கள் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த 20 பேர்கள் பற்றிய அறிமுகமும் அவர்கள் எழுதிய சிறந்த சிறுகதைகள் சுருக்கமும் கொண்டு தொகுத்திருக்கும் நூல் இது.

கதை எழுதுதல் கவிதை எழுதுதல் கட்டுரை எழுதுதல் என இலக்கியத்தின் பல்வகைமைகளில் எழுதுவதைவிட அவற்றைப் பற்றிய மதிப்புரையையும் அந்த நூல் கூறும் கருத்துக்களை முழுமையாக எடுத்துரைத்தலும் என்பது உண்மையிலேயே மிகச் சிரமமான ஒரு செயல். பண்டைக் காலம் தொட்டு தமிழர் மரபு என்பது கதை கேட்டலும் கதை கூறலும் என்ற அடிப்படையிலேயே தனது வாழ்வைக் கட்டமைத்துக் கொண்டது.

அந்த வகையில் இலக்கியத்தின் பிற வகைகளை விட சிறுகதை என்பது வாசிப்போரின் மனதில் உடனடியாக சிந்தனையை எழுப்பி முழுமையான இலக்கை அடைவதில் வெற்றி அடைகிறது. உலகின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கு இணையாக பல்வேறு கதைக்கலன்களை அடிப்படையாகக் கொண்டு தங்கள் வாழ்ந்த சூழலிலும் தங்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டும் தாங்கள் அனுபவித்த வாழ்க்கை நிலையைக் கொண்டும் சிறுகதை எழுதியிருக்கும் எழுத்தாளர்களைப் பற்றிய சிறப்பான அறிமுகமும் அவர்கள் எழுதிய சிறுகதைகளில் சிறந்த நான்கு அல்லது ஐந்து சிறுகதைகளை பற்றிய சுருக்கமும் இந்நூலில் எழுதப்பட்டுள்ளன.

மற்ற நூல்களின் மதிப்புரையைக் காட்டிலும் இந்த நூலின் அறிமுகம் என்பது தனி சிறப்பு வாய்ந்தது. அதற்கான காரணங்களாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது நூலின் மூலம் புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு நான்கு விதமான கோணங்களில் நூலை அலசி இருப்பது. முதலில் சிறுகதை எழுத்தாளரின் அறிமுகம் பிறகு அவர் எழுதிய சிறுகதைகள் குறித்தான தனது கருத்து மூன்றாவதாக அந்த சிறுகதை மற்ற சிறுகதைகளுடன் எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது என்பதை பல சிறுகதைகளுடன் ஒப்பிட்டு பார்த்து நாம் அறிய வைப்பது நான்காவதாக மற்ற படைப்பாளிகளின் கதைகளுடன் அந்த கதையை ஒப்பிட்டு பார்ப்பது என இந்த தொகுப்பு நமக்கு நான்கு திசைகளிலும் நூல்கள் பற்றிய அறிமுகத்தை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறது.

இதில் இடம் பெற்றுள்ள 20 சிறுகதை எழுத்தாளர்களும் வாழ்ந்த காலகட்டங்கள் வெவ்வேறானவை. சிலர் மறைந்து போனவர்கள் சிலர் இன்றும் எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஆனாலும் ஒவ்வொரு சிறுகதை எழுத்தாளர்களின் மன உணர்வுகள் அவர்களின் கதைகளில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை மிகச் சிறப்பான ஆய்வுடன் எழுதி இருக்கிறார் நூலாசிரியர்.

சிறுகதை எழுத்தாளர்களின் வகைப்பாட்டை நாம் இரண்டு நிலைகளில் அணுக முடிகிறது. ஒன்று மனித மனங்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு தனது கதைகளை அமைக்கும் எழுத்தாளர்கள். மற்றொன்று சமூகத்தில் ஏற்படும் சிக்கல்கள் பிரச்சினைகள் தேசத்தின் மீதான கவலைகள் என புறவெளியை அலசி ஆராய்ந்து அதை தனது கதைச் கருக்கமாக பயன்படுத்தி மக்களுக்கு எடுத்துரைப்பதும் மக்களை விழிப்புணர்வு அடைய வைப்பதுமான மணப் போக்கு.

இதில் இடம் பெற்றுள்ள 20 சிறுகதை எழுத்தாளர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளத்தில் தங்களின் எழுத்துக்களை விரித்துச் சென்று சிறப்புற சமுதாயத்திற்கான அடுத்த கட்ட நகர்விற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.

நான்கு அல்லது ஐந்து பக்கங்கள் எழுதப்படும் ஒரு சிறுகதையை நான்கு அல்லது ஐந்து வரிகளுக்குள் சொல்ல வேண்டும் என்ற ஆசிரியரின் சூழலை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நட்சத்திரங்களாலும் சூரியனாலும் பறந்து திரியும் வானத்தை கண்ணாடிக்குள் அடக்கி அழகு பார்ப்பது போன்ற சூழலில் இச்செயலை நூலாசிரியர் கவனமுடன் கருத்துகளை முழுமையாகவும் எழுதிச் செல்லும் பாங்கு வியக்கத்தக்கது.

காந்தியத்தின் மீதும் காந்தியின் கொள்கைகளின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டு தனது எழுத்துலகையும் அவ்வாறே அமைத்துக் கொண்ட அசோகமித்திரன் பற்றிய அறிமுகம் மிகச் சிறப்பானது. அமெரிக்க இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் அசோகமித்திரன். இவரின் எழுத்துக்களில் காந்தியத்துவம் வெகுவாக வெளிப்படுவதை சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

எப்போதும் இழந்தவர்கள் பக்கமாக நின்று பேசுகிற கதைகளை எழுதுபவராக திகழும் அழகிய பெரியவனின் கதைகளில் மனிதர்கள் படும் பாடுகளை மனம் கசியும் விதத்தில் சொல்வதோடு நின்று விடாமல் வாசகர்களை ஏன் என்று கேட்பவர்களாகவும் தவறுகளை மறுப்பவர்களாகவும் மாற்றி அமைக்கும் திறமையும் தனது கதைகளுக்குள் வைத்திருக்கும் அழகிய பெரியவன் பற்றிய கட்டுரையும் சிறப்பானது.

திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோயிலின் எதிரே உள்ள சாலைக்கம்போளம் என்னும் கடைத்தெருவை தனது படைப்புகளில் வெகுவாக எழுதி அழியாத கோலமாக மாற்றிக் காட்டியவர் மாதவன். இவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் விளிம்பு நிலை மனிதர்களாக உலவுகிறார்கள். குடும்பப் பின்னணிகள் பிணைப்பு இல்லாதவர்களாகவும் நிரந்தரமற்ற வாழ்க்கையை வாழ்ந்திடுபவர்களாகவும் அவலம் பற்றிய உணர்வோ சிந்தனையோ இல்லாமலும் எதிர்காலத்தைப் பற்றிய எந்தக் கனவும் காணாமலும் அன்றைய பொழுதை அப்படியே கழிக்கும் சாதாரண மனிதர்களையும் தனது கதைக்களத்தில் நமக்கு காட்சிப்படுத்துகிறார் ஆ மாதவன்.

தமிழ் சிறுகதை உலகில் கம்பீரமாய் வலம் வந்த ஜெயகாந்தன் முறையான கல்வி பெரும் வாய்ப்புகள் அற்று சிறுவயதிலேயே இடதுசாரி இயக்கத்தில் இணைந்து போராளியாக வாழ கற்றுக் கொண்டவர். அரசியல் சினிமா பத்திரிகை இலக்கியம் என பல தளங்களிலும் இயங்கி பெயர் எடுத்தவர். இவருடைய கதைகள் அன்றைய காலகட்டத்திலேயே பொதுவெளியில் நிறைய அதிர்வலைகளை ஏற்படுத்தியதை நாம் அறிய முடிகிறது. முற்போக்கு எண்ணங்களும் பெண்கள் மீதான அடிமைத்தனத்தை கேள்வி கேட்கும் வீரமும் விவேகமும் நிறைந்த எழுத்துகளால் நம்மைக் கட்டிப் போட்டவர் ஜெயகாந்தன்.

தமிழில் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியல் அனுபவங்களை ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்திய சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் எதுவும் இன்றி இறுக்கமான சூழலில் வாழும் அவலத்தை இஸ்லாமிய பெண்களின் இருண்மையான பக்கங்களை தனது எழுத்துக்களின் வழியாக உலகறியச் செய்தவர் கவிஞர் சல்மா.

தனது படைப்பும் செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கொண்டு கதை உலகின் காலடி படாத கிராமத்தின் ஒடுக்கப்பட்ட மக்களையும் அவர்களின் பாடுகளையும் தனது கதைகளின் வழியாக மனிதர்களின் துயரற்ற சொற்களால் எழுதி இருக்கும் பா செயப்பிரகாசம் அவர்களின் கதைகள் இந்தியாவின் சாதிய கட்டுமானத்தை கேள்வி கேட்கிறது. சாதி அடிப்படையிலான தீண்டாமைக் கொடுமைகளை நமக்கு மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறது.

படைப்பாளியும் வாசகனும் ஒன்று சேரும் புள்ளி தான் படைப்பின் வெற்றி என்ற நம்பிக்கையில் தனது படைப்புகளின் பெரும்பாலான முடிவுகளை வாசகர்களின் மனதிற்குள்ளேயே விட்டுவிடுவதே லா.ச. ராமாமிர்தம் அவர்களின் சிறுகதைகளின் இலக்கணமாகத் திகழ்கிறது.

சிறுகதை நாவல் கடிதங்கள் நாட்டுப்புற பாடல்கள் வரலாறு வட்டாரச் சொல் அகராதி கதை சொல்லி என்று தமிழின் அனைத்து இலக்கிய வகைகளிலும் தனது கை வண்ணத்தைப் பதித்தவர். மழைக்குப் பள்ளிக்கூடம் ஒதுங்கிய போதும் மழையை ரசித்ததில் பள்ளியை பார்க்க மறந்து தனது எழுத்துக்களால் மிகப் பெரும் உயரத்திற்கு சென்ற கி ராஜநாராயணன் தமிழ் இலக்கியத்திற்கு செய்த தொண்டு மிகப்பெரியது. சாதியையும் அதன் கொடூர வடிவமான தீண்டாமையையும் விளிம்பு நிலை மனிதர்கள் அன்றாடம் சந்திக்கும் அவலத்தையும் அவமரியாதையையும் கி.ரா வின் கதைகள் வழியே நாம் உணர முடிகிறது.

நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது தன்னுடைய ஒவ்வொரு நாளையும் துயரத்துடனேயே கடந்துள்ளார்;மனநோய் பற்றிய சிகிச்சையை நன்கு கற்று அறிந்த அவரே மன நோய்க்கு ஆளாகி மருந்துகளுடனே தனது வாழ்வை கழித்தவர் கோபி கிருஷ்ணன். அவருடைய சிறுகதைகளின் வழியே சமூகத்தின் அதீதமான கட்டுப்பாடுகளும் நெறிமுறைகளுமே மனதை மிரளச் செய்கின்றன என்ற கருத்தை உணர முடிகிறது. சாதாரண மனிதர்களின் அலுப்பு மிகு வாழ்வை நகைச்சுவையோடு சித்தரிக்கும் கோபி கிருஷ்ணன் தனக்கான மனநோய் பற்றியும் அதன் மீதான பயத்துடனேயும் வாழ்வை கழித்திருக்கிறார்.

தொழிற்சங்கத்தின் தலைவராய் திகழ்ந்தவர் தமிழ் சிறுகதை எழுத்தாளராக மாறி தனது வாழ்நாள் முழுவதும் இடதுசாரி சிந்தனைகளில் இயங்கி தனது கதைகளிலும் அதையே அச்சாரமாக்கி சமூக அவலங்களை எழுதி இருக்கும் கந்தர்வனின் ஒவ்வொரு சிறுகதைகளும் அடித்தட்டு மக்களின் வாழ்வை பிரதிபலிக்கின்றன.

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இலங்கையின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் செறிவான பங்களித்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் பாரம்பரிய தமிழர்கள் கண்டி மற்றும் நுவரெலியா பகுதிகளில் வாழும் மலையகத் தமிழர்கள் வடக்கு தெற்கில் வாழும் முஸ்லிம்கள் என மூன்று வகையினரும் தங்களது வாழ்வியல் அனுபவங்களை தமிழில் அழகாகப் பதிவு செய்துள்ளதை நூலாசிரியர் நமக்கு எடுத்துரைக்கிறார்.

சிறுகதை, குழந்தை இலக்கியம், புதினம், கட்டுரைத் தொகுப்பு,உலக சினிமா, மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைகள் தொடர்பான கட்டுரைகள் என இலக்கியத் துறையின் அனைத்து வகைமைகளிலும் தனது காலடியைப் பதித்து இன்று பதிப்பகமும் வைத்து நிறைய நூல்களை வெளியிடும் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் பற்றிய அறிமுகம் நூலில் மிகச் சிறப்பான கட்டுரையாக மிளிர்கிறது.

சிறுகதை என்பது குதிரைப் பந்தயம் போல தொடக்கமும் முடிவும் சுவை மிக்கதாக இருக்க வேண்டும் என்ற அறிஞரின் கூற்றைப் போல இந்தத் தொகுப்பு நூலும் தமிழ் சிறுகதை எழுத்தாளர்களை நமக்கு மிகச் சிறப்பாக அறிமுகம் செய்வதோடு நின்று விடாமல் அவர்களின் சிறுகதைகளின் வழியே சமூக நிகழ்வுகளை நமக்குப் புரிய வைத்து அதன் வழியே சமூகத்தின் சிறப்பான நகர்விற்கு நமது பங்களிப்பையும் செலுத்தத் தூண்டுகிறது. தமிழ்ச் சிறுகதைச் சிற்பிகள் நூல் நம்முள் நிறைய சிந்தனைகளை எழுப்பி அகம் புறம் என இரு வகைகளிலும் நம்மை உணர வைக்கிறது.

 

நூலின் தகவல்கள் 

நூல் : தமிழ்ச் சிறுகதைச் சிற்பிகள்

தமிழில் : பெ.விஜயகுமார்

வெளியீடு : பட்டறிவுப் பதிப்பகம்

முதல் பதிப்பு  : ஜுலை 2022

பக்கம் 128

விலை ரூ 120

தொடர்புக்கு : 9500740687

 

எழுதியவர் 

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *