தமிழில் இன்னும் சினிமா என்பதே வரவில்லை என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இப்போது சினிமாவை சினிமாவாக எடுப்பதற்கான முயற்சிகள் ஆரம்பித்திருப்பதாக வேண்டுமானால் சொல்லலாம் என்று சலுகை காட்டுகிறவர்களும் உண்டு. சினிமாதான் என்றில்லாமல் கலை-இலக்கிய ஆக்கங்களில் சில என்னை ஈர்க்கக்கூடும், சில என்னை ஈர்க்காமல் போகக்கூடும். அதை வெளிப்படையாகச் சொல்கிற விமர்சன உரிமை இருக்கிறது. ஆனால் என்னை ஈர்ப்பவை மட்டும்தான் சரியான படைப்புகள் என்று சான்றிதழ் வழங்குகிற அதிகாரமாக அது மாறிவிடக்கூடாது.
இப்படியான நிராகரிப்புகளைத் தாண்டி இங்கே தமிழ் சினிமா ஏற்படுத்தியிருக்கிற தாக்கம் சாதாரணமானதல்ல. அரசியல், சமூகம் ஆகிய இரண்டு தளங்களிலும் அந்தத் தாக்கம் இருக்கிறது. சினிமா உலகிலிருந்து தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர்கள் வந்திருக்கிறார்கள், அடுத்து நாங்கள்தான் என்று வரிசை கட்டுகிறார்கள் என்பதை மட்டுமே அரசியல் தாக்கம் என்று சொல்லவில்லை. இளைஞர்கள் திரையரங்க வளாகங்களில் தங்களுடைய நாயக நடிகர்களின் கட்டவுட்டுகள் முன்பாகக் குவிகிறார்கள், பாலாபிஷேகம் செய்கிறார்கள் என்பதை மட்டுமே சமூகத் தாக்கம் என்றும் சொல்லவில்லை. இரண்டிலுமே ஆக்கப்பூர்வமான விளைவுகளும் உண்டு, எதிர்மறையான நிகழ்வுகளும் உண்டு.
பண்பாட்டு அடையாளமாகவும்
இன்று ‘‘ஹோம் தியேட்டர்’ என வீடுகளுக்குள்ளேயே சுவரோடு ஒட்டியிருக்கிற பெரிய தொலைக்காட்சித் திரைகளில், நவீன ஒலிபெருக்கி அமைப்புகளோடு சினிமாக்களைப் பார்க்க முடிகிறது. தொழில்நுட்பம் சார்ந்த இந்த வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்?
திருமணமாகிப் “புருசன் வீட்டுக்கு வாழப்போன பெண்” வெகுநாட்கள் கழித்துப் பிறந்த வீட்டுக்கு வருகிறாள் என்றால், அல்லது புகுந்தவீட்டுக்குப் பெற்றோர் வருகிறார்கள் என்றால், தனியாகப் பேசிக்கொண்டிருக்கிற நேரத்தில் தாய் இப்படிக் கேட்காமல் இருக்க மாட்டார்: “என்னம்மா உன் வீட்டுக்காரன் உன்னை நல்லபடியா கவனிச்சுக்கிடுறாரா? வெளியே அழைச்சிட்டுப் போறாரா? சினிமா கினிமான்னு கூட்டிட்டுப் போறாரா?”
சினிமா கினிமா என்று போவது வெறும் படம் பார்க்கிற அனுபவம் மட்டுமல்ல. அது ஒரு சமூகத் தொடர்பு வெளி. இணையரின் இதயங்கள் மேலும் நெருங்குவதற்கான தளம். ஆகவேதான், தனது இயல்பிலேயே தொழில்நுட்பமும் வணிகமும் இணைந்த கலையாகிய சினிமா இங்கு ஒரு பண்பாட்டு அடையாளமாகவும் உருவெடுத்தது.
நாடகங்கள் ஆளுமை செலுத்திய நிலையிலிருந்து சினிமாவுக்கு மாறிக்கொண்டிருந்ததன் அந்தப் பண்பாட்டு அடையாள வளர்ச்சியைப் புரிந்துகொண்டதால்தான் இங்கே, குறிப்பாகப் பெரியாரிய வழி திராவிட இயக்கத்தைச் சேர்ந்தோர் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். பொதுவுடைமைச் சிந்தனையாளர்களும் அதில் பங்கேற்றார்கள். இன்று மார்க்சியப் புரிதல்கள் உள்ளோரும், அம்பேத்கர் லட்சியங்களை ஏற்றோரும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்திற்கு வந்திருக்கிறார்கள். அந்தப் பயணம் அப்படியொன்றும் எளிதானதாக அமைந்துவிடவில்லை என்பது தனி வரலாறு.
ஒப்பீட்டுத் தடங்கள்
பல்வேறு கடினமான சூழல்களுக்கிடையே அரசியலிலும், சமூகத்திலும் தமிழகம் ஒப்பீட்டளவில் சில முற்போக்கான வளர்ச்சிகளைச் சாதித்திருக்கிறது. எடுத்துக்காட்டாக சமூகநீதி, மதநல்லிணக்கம், மொழியுரிமை, பெண்ணுரிமை, கல்வியுரிமை போன்றவற்றிற்கான போராட்டங்களில் தமிழகம் தனித் தடம் பதித்திருக்கிறது. பகுத்தறிவுப் பரப்புரைக்குத் தமிழகத்தில் மதிப்பிருக்கிறது. ஏன், தேர்தல் அரசியலில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிலைமைகள் பிரதிபலித்தபோது தமிழகம் மாறுபட்ட ஒளிரவில்லையா?
இவ்வாறு கேட்கிறபோது இங்கே சாதிய ஆணவ எதிர்ப்பு, பாலின சமத்துவ ஏற்பு, மூடநம்பிக்கைகள் மறுப்பு, பொது இயக்கங்களில் பொதுமக்கள் பங்களிப்பு உள்ளிட்ட முழுமையான சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதென்று சொல்வதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை, அப்படி நிகழவுமில்லை. அதற்கு இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. ஆயினும் இதுவரையில் ஏற்பட்டிருக்கிற முன்னேற்றத்தை அங்கீகரிக்கத்தானே வேண்டும்?
இந்த அளவுக்கான மாற்றங்கள் அனைத்தும் சினிமாவால் தான் ஏற்பட்டதென்று கண்டிப்பாகச் சொல்ல முடியாது. ஆனால், சினிமா இல்லாமல் இந்த மாற்றங்கள் வந்துவிடவில்லை என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். தமிழ் மண்ணின் மகத்தான அரசியல் இயக்கங்களும் சமூக எழுச்சிகளும்தான் இந்த மாற்றங்களுக்கு அடிப்படை விசைகள். ஆனால் அந்த விசைகள் செயல்படுவதற்கு ஏற்ப மக்கள் மனநிலையை உருவாக்கியதில் சினிமா சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறது.
மசாலாப் படத்திலும்
ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது, அப்போது வெளியாகியிருந்த ஒரு திரைப்படத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்துக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவன ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இடம்பெற்ற வசனங்களைப் பாராட்டினேன். மற்றொரு படத்தில் வந்த, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வசனங்களையும் வரவேற்றேன். அந்த இரண்டுமே பெரிய நட்சத்திரங்கள் நடித்த, மசாலாத் தயாரிப்பு என்று சொல்லப்படுகிற, வசூல் குவிப்பில் வெற்றி கண்ட படங்கள்தான்.
விவாதத்தில் உடன் பங்கேற்ற ஒரு மூத்த எழுத்தாளர், “இதெல்லாம் ரசிகர்களைக் கவர்வதற்காகவும், தங்களை முற்போக்காகக் காட்டிக்கொள்ளவும் எழுதப்படுகிற வசனங்கள். இப்படிப்பட்ட சினிமாக்கள் வருவதால் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுமா” என்று கேட்டார்.
அதற்கு நான், ”ரசிகர்களை இப்படிப்பட்ட வசனங்களால்தான் கவர முடியும், தங்களை முற்போக்காகக் காட்டிக்கொள்ள இப்படிப் பேசியாக வேண்டும் என்பதே ஒரு ஆரோக்கியமான அறிகுறிதானே? ஒரு சினிமா வந்து சமூக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? இத்தகைய வசனங்கள் மூலம் மக்களிடைய பரவக்கூடிய கருத்துகளை அரசியல், சமூக இயக்கங்கள் பயன்படுத்திக்கொள்வதில்தான் மாற்றங்களுக்கான வாய்ப்பு இருக்கிறது,” என்று வாதிட்டேன்.
பெரும்பகுதி மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட, அறிவியல் கண்ணோட்டம் பரவலாகாத, சமமான பங்கேற்புகளுக்கான வாய்ப்புகள் அடைக்கப்பட்ட சமூகத்தில் சினிமா எல்லோரையும் சென்றடைந்தது. நாடகங்கள் கூட சாதிய வேலிகளுக்கு உள்ளேதான் நடத்தப்பட்டன. அப்படியிருந்த சமூகத்தில், டிக்கெட் எடுத்து உள்ளே வந்து சமமாக உட்கார்ந்து பார் என்று அழைத்த சினிமா அன்றிலிருந்து இன்று வரையில் இந்தப் பங்களிப்பைச் செய்துவருகிறது.
தொடக்கத்தில் குறிப்பிட்டது போல, தமிழ் சினிமாவின் எதிர்மறை நிகழ்வுகள் எவை? பிம்பங்களோடு நட்சத்திர நடிகர்களின் செல்வாக்கு வளர்க்கப்பட்டது எவ்வாறு? நாலு பாட்டு, இரண்டு ஃபைட்டு என்ற விதிகள் வரையறுக்கப்பட்டது எப்படி? கதையோடு ஒட்டுகிறதோ இல்லையோ நகைச்சுவைக் காட்சிகள் கண்டிப்பாக ஒட்டப்படுவது ஏன் வந்தது? பெண் கலைஞர்களின் இடம் என்ன?
நாம் பகிர்ந்துகொள்வதற்கான சிந்தனைகள் நிறையவே இருக்கின்றன. இப்போதைக்கு இந்த முதல் காட்சி முடிகிறது. லைட்ஸ் ஆஃப், பேக் அப்.
—
அ. குமரேசன்
என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com