நாடக விமர்சனம்: ‘சிவசங்கரி’ - தாரிணி கோமல் நாடகக் குழுவினரின் நாடகம் | தமிழ் மேடை நாடகங்கள் | www.bookday.in

நாடக விமர்சனம்: ‘சிவசங்கரி’ – தாரிணி கோமல் நாடகக் குழுவினரின் நாடகம் – இரா.இரமணன்

நாடக விமர்சனம்: ‘சிவசங்கரி’ – தாரிணி கோமல் நாடகக் குழுவினரின் நாடகம்

– இரா.இரமணன்

எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் எழுதிய கதைகளில் ஆறு சிறுகதைகளை நாடகமாக்கி அரங்கேற்றினர் தாரிணி கோமல் நாடகக் குழுவினர். கதைகள் 70 மற்றும் 80 களில் குமுதம்,கல்கி போன்ற இதழ்களில் வந்தவை. எல்லாமே நடுத்தர, மேல்தட்டு பிரிவினரின் உளவியல், குடும்ப சிக்கல்கள், சில சமூக பிரச்சினைகள் என இருந்தன. ஒவ்வொன்றும் 20 நிமிடங்களே நீடித்ததால் காட்சிகள் மாற்றம் விரைவாக இருந்தது. பெரும்பாலும் வீட்டிற்குள் நடப்பதால் ஒரு மேசை, இரண்டு நாற்காலிகள் கொண்ட செட்கள். வெளிப்புறத்தில் நடக்கும் கட்சிகளுக்கு எல் இ டி திரைகள் மிகப் பொருத்தமாக இருந்தன. நடிகர்கள் வசனத்தை தங்கு தடையின்றி பேசியதும் உணச்சிகளை கச்சிதமாக வெளிப்படுத்தியதும் பாராட்டுக்குரியவை. குறிப்பாக கிராமத்து தாயாக நடித்த பெண்மணி மிகச் சிறப்பாக நடித்தார். அந்த நாடகம் முழுவதுமே அவர் பேசும் வசனம்தான். இருந்தாலும் எந்த இடத்திலும் பிசிறில்லாமல் உணர்ச்சி பொங்க அவர் பேசியது ரசிகர்களின் பெரும் கைதட்டலை பெற்றது. மனோரமா ஆச்சியை மேடையில் பார்த்தது போல் இருந்தது.

முதல் நாடகத்தில் செய்தித்தாளில் சிறுநீரகம் பழுதடைந்த ஒரு ஏழைக்குடும்பத் தலைவனின் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி கோரப்படுகிறது. அதை படிக்கும் ஒரு குடும்பத் தலைவி உணர்ச்சி வசப்பட்டு கணவனிடம் ஐநூறு ரூபாய் அனுப்பலாம் என்கிறார். கணவனும் ஒத்துக் கொள்கிறார். மனைவி அக்கம் பக்கத்தாரிடமும் திரட்டலாம்; சிறு துளி பெரு வெள்ளம் என்கிறார். கணவன் வேண்டாம் என்கிறார். மறுநாள் காலையில் இருவர் மனமும் சிறிது மாறி 250 அனுப்பலாம் என்கிறார்கள். அதுவே 100 ரூபாயாகி இறுதியில் ஒன்றுமே அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள். நிறைய பேர் செய்வார்கள்; நாம் அனுப்பும் பணம் ‘கடலில் கரைத்த பெருங்காயம்’ ‘தனக்கு மிஞ்சித்தான் தானம்’ என்கிறார்கள். ஆக பழமொழிகள் உதவி செய்வதற்கும் பயன்படுகிறது; மறுப்பதற்கும் பயன்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஊடே 20 தேதிகளுக்கு பின் நடுத்தர வர்க்கத்தின் சம்பளம் காலியாவது, மனைவி தன் குடும்பத்தையும் கணவன் குடும்பத்தையும் வேறு வேறு விதமாக நடத்துவது, சினிமா, வெளியில் சாப்பிடுவது ஆகியவற்றால் பணம் செலவாவது என பல பிரச்சினைகள் நகைச்சுவையுடன் சொல்லப்படுகின்றன.

‘தலைவர் வருகிறார்’ நாடகம் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரும்போது பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வருவது, இரவோடு இரவாக ரோடு போடுவது போன்றவற்றை பகடி செய்கிறது. இதில் காட்டப்படும் ஒரு பாத்திரம், தன் மகளின் வளைகாப்பைக் கூட தள்ளி வைத்துவிட்டு தலைவரை பார்க்க வரும் தொண்டன்; இது அண்மையில் நடக்கும் சில அரசியல் கூட்டங்களில் கைக்குழந்தையுடன் வந்து காலையிலிருந்து மாலை வரை காத்து கிடைக்கும் நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது. எளிய மக்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் போன்றோர் சென்னை சிலாங் பேசுவார்கள் எனும் மனப்பான்மையை படைப்பாளர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

இன்னொரு நாடகத்தில் கிராமத்து இளைஞன் வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டு பம்பாய் சென்று வசதியாக வாழ்கிறான். கிராமத்தில் மற்றவர்கள் பெற்றோரை சாதி மாறி திருமணம் செய்ததற்காக பழிக்கிறார்கள். அதோடு மகனும் அங்கு வந்து அவர்களை கவனிப்பதில்லை. இதனால் மனமுடைந்த தந்தை இறந்துவிடுகிறார். தாய் மட்டும் தனியாக கிராமத்தில் வாழ்கிறார். அவரை பம்பாய்க்கு அழைத்து சென்ற மகன் அவருடைய நடை உடை பாவனைகள் மனைவிக்கு பிடிக்காததால் அவரை திருப்பி அனுப்பிவிடுகிறார். ஆனால் குழந்தை பிறந்த பிறகு அதைக் கவனித்துக் கொள்வதற்காக மீண்டும் அழைத்துக் கொள்கிறான். அன்பினால் அழைத்திருக்கிறான் என்று தவறாக நினைத்த தாய் உண்மை தெரிந்து உடைந்து போகிறார். வழக்கமான கதைதான். ஆனால் தாயாக நடித்தவர் தன் உணர்ச்சிகரமான நடிப்பினால் நம்மை ஒன்ற வைத்து விடுகிறார்.

‘தெப்பக்குளம்’ சற்று வித்தியாசமான நாடகம். ஒரு சிறுமி தன் தாய் தந்தையுருடன் ஒரு நகரிலுள்ள தெப்பக் குளத்திற்கு செல்கிறாள். பச்சைப் பசேலென்ற தண்ணீரும் நடுவில் அமைந்த மண்டபமும் பறவைகளும் அவளை மிகவும் கவர்கின்றன. பின்னர் ஒரு விபத்தில் பெற்றோர் இருவரும் இறந்து விடுகின்றனர். இவள் உறவினர் வீட்டில் வளர்கிறாள். பெரியவளாகி திருமணமும் நடக்கிறது. அவள் மனத்தில் தான் சிறு வயதில் போன தெப்பக்குளம் ஆழமாக பதிந்திருக்கிறது. ஆனால் அது எங்கிருக்கிறது என்பது அவளுக்கு தெரியவில்லை. ஒரு உறவினர் திருமணத்தில் உறவினர்களிடம் அந்த தெப்பக்குளம் எங்கிருக்கிறது என்று கேட்கிறாள். அதை தெரிந்துகொண்டு கணவருடன் ஆவலாக அங்கு செல்கிறாள். தெப்பக்குளம் வறண்டு கிடக்கிறது. எருமை மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. நடுவிலுள்ள திட்டில் மரங்கள் காய்ந்து போய் கிடக்கின்றன. மண்டபமும் பொலிவிழந்து நிற்கிறது. பறவைகள் எதுவும் இல்லை. அவள் மிகுந்த ஏமாற்றத்துடன் செல்கிறாள்.

‘சண்டை’ எனும் நாடகத்தில் புதிதாக திருமணம் ஆன இணையர்கள். கணவனின் நண்பனுக்கு விவாகரத்து ஆகிவிடுகிறது. அது குறித்து இவர்கள் இருவரும் பேசும்போது ஆணின் மீதுதான் தவறு, பெண்ணின் மீதுதான் தவறு என்று விவாதமாகி சண்டையாகி இவர்களும் விவாகரத்து என்று பேசும் அளவுக்கு போய்விடுகிறது. விவாதம் வருவதை புரிந்து கொள்ளலாம். ஆனால் அது விவாகரத்து வரை போகுமா?

தி.ஜானகிராமன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி போன்றோரின் கதைகளை நாடகமாக்கியுள்ள தாரிணி கோமல் குழுவினர் இப்போது சிவசங்கரி அவர்களின் கதைகளை மேடையேற்றியிருக்கிறார். நகைச்சுவை, நல்ல நடிப்பு, சில சமூக பிரச்சினைகள் என உள்ளன. கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ அந்தக் காலத்தை பிரதிபலித்தது. இந்த நாடகங்கள் நகரமயமாகி வரும் சூழலையும் குடும்ப உறவுகள் பொருளாதார அடிப்படையில் அமைந்து பழைய தலைமுறையினரின் ஏக்கத்தையும் வருத்தத்தையும் காட்டுகின்றன. ஆனால் இவையெல்லாம் 70,80களிலேயே சிவசங்கரி எழுதியுள்ளார் என்பது வியப்பாக உள்ளது.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *