பிப்ரவரி 19 : 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா- வின் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை  மேட்டுக் கிணறுகளும் பொய்யாக் காவிரியும்| U. V. Swaminatha Iyer - https://bookday.in/

மேட்டுக் கிணறுகளும் பொய்யாக் காவிரியும்

பிப்ரவரி 19 : ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா-வின் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை 

– மணி மீனாட்சிசுந்தரம்

“இளமையில் எனக்கு ஒரு தக்க ஆசிரியரைத் தேடித் தந்த அரிய செயலை என்னால் மறக்கவே முடியாது”.
– தனது தந்தையார் குறித்து உ.வே.சா.

தனது எண்பத்தைந்தாவது வயதில் ‘என் சரிதம்’ எனும் தன் வரலாற்று நூலை எழுதிய உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகனார் சாமிநாதர், அந்நூலில் தனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்கள் அனைவரையும் அதில் கூறியிருக்கிறார் . பழித்துக் கூறுதலும் குறை கூறுதலும் அவரது எழுத்தில் இல்லை.ஆனால், அவரது தந்தைக்கு நன்றிகூறும் விதத்தில் (இக்கட்டுரையின் முகப்பில் கூறப்பட்டுள்ள வரிகள்) கூறியிருக்கும் ‘ஒரு தக்க ஆசிரியர் ‘ என்ற சொல்லின் மூலம் உ.வே.சா தனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்கள் பலரில் ஒருவரை மட்டுமே முன்னிறுத்துகிறார். ‘ தக்க ஆசிரியர் ‘ என்ற அச்சொல் தனக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன்,கற்பிக்கும் முறை,மாணவர்களுடனான இணக்கம், பருவத்துக்கேற்ற பாடமுறை ஆகியவற்றை மதிப்பிட்டுக் கூறும் நோக்கில் அமைந்து, ஆசிரியர்களில் ஒருவரை மட்டுமே தகுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அது குறித்தே இக்கட்டுரை பேச விழைகிறது.

பிப்ரவரி 19 : 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா- வின் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை  மேட்டுக் கிணறுகளும் பொய்யாக் காவிரியும்| U. V. Swaminatha Iyer - https://bookday.in/

மனனமே கற்றல் ; பிரம்படியே உத்தி
——————————————————————–

உ.வே.சா தனக்கு முதன்முதலில் அரிச்சுவடியையும் எண்சுவடியையும் கற்பித்த நாராயண ஐயரை நினைகூர்ந்திருக்கிறார்.” அவரை நினைக்கும் போதெல்லாம் அவருடைய பிரம்படிதான் எனக்கு ஞாபகம் வருகிறது” என்கிறார். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் மறக்காத பிரம்படி, நிகழ்காலத்தில் அவருக்கு எவ்வளவு அச்சத்தைத் தந்திருக்கும்?!தனக்குத் தெரிந்ததைப் பிரம்பைக் கொண்டு, மாணவர்களைப் பயமுறுத்தித் திணிக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது.

உ.வே.சா தனக்குத் தமிழும் கணக்கும் கற்பித்த சாமிநாதைய்யர் பற்றிக் கூறும்போது,”அந்தக் காலத்துக் கிராம உபாத்தியாயர்களுக்குப் பிரம்பு ஆடா விட்டால் மாணவர்கள் படிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் பரம்பரையாக இருந்து வந்தது,

அவருக்கும் அந்தக் கொள்கை உண்டு” என்கிறார்.
படிக்காததற்கு மட்டுமன்றி, திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இருந்து காலை உணவு சாப்பிடச் செல்லும் மாணவர்களை, காலையில் தாமதமாக வந்ததற்கு அடி கொடுத்து வீட்டுக்கு அனுப்பும் வழக்கமும் இருந்திருக்கிறது.
“அக்காலத்தில் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் இந்த முறையில்தான் நிகழ்ந்து வந்தன” என்கிறார் உ.வே.சா.

கற்பிக்கப்படும் பாடம் மாணவர்களின் வயதுக்கு ஒத்தவைதானா என்பது பற்றிய எண்ணமெல்லாம் ஆசிரியர்களுக்கு அன்று இருந்ததாகத் தெரியவில்லை.ஆசிரியர் தாம் படித்ததை மறந்து போகாமல் இருக்க அதை மாணவர்களுக்குப் பாடம் சொல்லுவதும்,மாணவர்களுக்கு அந்தப் பருவத்தில் அது அவசியமா, அவசியமில்லையா என்பது குறித்த

அக்கறை இல்லாமலும் அன்றைய கற்பித்தல் முறை இருந்திருக்கிறது.
தன்னுடைய மற்றொரு ஆசிரியரான கிருஷ்ண வாத்தியார் பற்றிக் கூறும்போது, “நாலடியார்,
குறளென்னும் நூல்கள் அவ்வளவு
இளம் பிராயத்தில் நன்றாகப் பொருளறிந்து கற்பது சாத்தியமன்று.
ஆனாலும், அவற்றை மனப்பாடம் செய்யும்படி கிருஷ்ணவாத்தியார் மாணவர்களை வற்புறுத்துவார்” என்கிறார் உ.வே.சா.

கம்பத்துக்குக் கற்பித்தல்
———————————————–

உ.வே.சாவின் ஏழாம் வயதில் அவருக்குப் பாடம் சொன்ன சடகோப ஐயங்காரைப் பற்றி உயர்வாகவே குறிப்பிடுகிறார். அவரைத் ‘தமிழ் விதை விதைத்தவர்’ என்று மெச்சுகிறார். சவைபடக் கற்பிப்பவராக அவர் இருந்திருக்கிறார்.

” எந்த விசயம் சொன்னாலும் அதில் ஒரு தனியான சுவை உண்டாகும்படி சொல்வது‌ அவர் வழக்கம். ஒரு வேளைக்கு இரண்டு மூன்று செய்யுள்களே சொல்லுவார். ஆயினும், அச்செய்யுள்களைத் தெளிவாக மனத்தில் பதியும்படி சொல்வார்” என்று கூறுகிறார் உ.வே.சா.

ஆனால், சடகோப ஐயங்கார் தனது கற்பிக்கும் நோக்கம் பற்றி அவரே கூறியதாக இப்படிக் கூறுகிறார்.

” கம்பத்தை வைத்துக் கொண்டாவது பாடம் சொல்ல வேண்டும், கேட்பவனை மாத்திரம் உத்தேசித்துச் சொல்லக் கூடாது.பாடம் சொல்வதனால் உண்டாகும் முதல் லாபம் நம்முடையது.பாடம் சொல்லச்சொல்ல நம் அறிவு உரம் பெறும்”.

திறமையாகப் பாடம் சொல்லும் சடகோப ஐயங்காருக்குக் கவலை, பாடத்தைப் பற்றியதாக இருக்கிறதே தவிர மாணவர்களைப் பற்றியல்ல எனத் தெரிகிறது.

உ.வே.சா தனக்குப் பாடம் சொன்ன கஸ்தூரி ஐயங்கார்,சாமி ஐயங்கார் பற்றிக் கூறிவிட்டு ” எதையும் ஐயமின்றித் தெளிவாகவும், விளக்கமாகவும் தெரிந்துகொள்ள முடியவில்லை” என்று வருந்துகிறார்.

பிப்ரவரி 19 : 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா- வின் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை  மேட்டுக் கிணறுகளும் பொய்யாக் காவிரியும்| U. V. Swaminatha Iyer - https://bookday.in/

” படித்து அறிவு பெறுவது ஒரு வகை.படித்தவற்றைப் பாடம் சொல்வது ஒரு வகை.பாடம் சொல்லும் திறமை சிலரிடமே சிறப்பாகக் காணப்படுகிறது” என்ற உ.வே.சாவின் கருத்தை அவருக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களைப் பற்றிய மதிப்பீடாகவும்,ஆசிரியப்
பணி குறித்த மதிப்பீடாகவும் கருதவேண்டியிருக்கிறது.

 

தக்க ஆசிரியர்
—————————

இயல்பிலேயே தமிழார்வம் கொண்ட ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சாவிடம் விருத்தாசல ரெட்டியார் என்பவர், ” உமக்குத் திருப்தி உண்டாகும்படி பாடம் சொல்லக் கூடிய பெரியவர் ஒருவரே. நாங்களெல்லாம் மேட்டு நிலத்தில் மழையினால் ஊறுகின்ற கிணறுகள், பொய்யாமல் ஓடுகின்ற காவிரி போன்றவர் அவர்.” என்று கூறுகிறார். விருத்தாசல ரெட்டியார் கூறும் அந்த ஒருவர்தான் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார். அவரைத்தான் உ.வே.சா.’ தக்க ஆசிரியர் ‘ என்று தன்னுடைய சுயசரிதையில் வைத்துப் போற்றுகிறார்.

ரெட்டியாரின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை மீனாட்சிசுந்தரனாரிடம் மாணவராகச் சேர்ந்த சில நாள்களிலேயே உ.வே.சா உணர்ந்து கொள்கிறார். மீனாட்சி சுந்தரனார் – உ.வே.சா இருவருக்கிடையேயான ஆசிரிய – மாணவர் உறவு என்பது உணர்வும் அறிவும் கலந்த உறவு. தமிழ் கற்றல் மரபில் அவ்வுறவு தனித்துப் போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.உ.வே.சா (U. V. Swaminatha Iyer) தன்னுடைய தள்ளாத வயதில் எழுதிய சுயசரிதையில் தனது ஆசிரியரைக் கூறும்போதெல்லாம் பெயரைக் கூறாமல் ‘ பிள்ளை அவர்கள்’ என்றே கூறியிருப்பது ஒரு மாணவன் தன்னுடைய ஆசிரியருக்கு வாழ்நாளெல்லாம் அளித்த மரியாதைக்குச் சான்றாகும்.

பொய்யாக் காவிரி
———————————-

மீனாட்சிசுந்தனாரை முதன்முதலில் சந்தித்த அனுபவத்தை உ.வே.சா இப்படிக் கூறுகிறார்,

“அவர் கண்களில் எதையும் ஊடுறுவிப் பார்க்கும் பார்வை இல்லை. அலட்சியமான பார்வையும் இல்லை.தன் முன்னே உள்ள பொருள்களில் மெல்ல மெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வையாக இருந்தது”.

தொடர்ந்து கூறுகிறார்,” அவர் பேச்சில் அன்பும் மென்மையும் இருந்தன”.

முதல் சந்திப்பிலேயே ஒரு மாணவனை ஆசிரியர் கவர இதைவிட வேறென்ன குணங்கள் அவருக்கு வேண்டும்?

பிப்ரவரி 19 : 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா- வின் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை  மேட்டுக் கிணறுகளும் பொய்யாக் காவிரியும்| U. V. Swaminatha Iyer - https://bookday.in/

அவர் கற்பிக்கும் முறை பற்றி ‘தமிழ்த்தாத்தா’ உ‌.வே.சா (U. V. Swaminatha Iyer) கூறுகிறார்,” அவர் பாடம் சொல்லுகையில் எந்த இடத்தில் விளக்க வேண்டியது அவசியமோ அதை மாத்திரம் விளக்குவார்.

மாணவர்களுக்குச் சின்ன விசயம் தெரியாதென்பதை அவர் எவ்வாறோ தெரிந்துகொள்வார். நான் படித்து வரும்போது எனக்கு விளங்காத இடத்தை நான் கேட்பதற்கு முன்னரே அவர் விளக்குவார்‌. நமக்கு இது தெரியாதென்பதை இவர் எப்படிக் கணக்காகத் தெரிந்துகொண்டார் என்று ஆச்சரியம் உண்டாகும்”.

மேலும் சொல்கிறார்,” அவர் ஒவ்வொருவருடைய அறிவையும் விரைவில் அளந்தறிந்து அவர்களுக்கு ஏற்பப் பாடம் சொல்வதில் இணையற்ற வராக விளங்கினார்”.

அன்பு காட்டுதல், கனிவாகப் பேசுதல்,மாணவரின் பருவமறிந்து உளமறிந்து கற்பித்தல்,பாடப் பொருளில் தெளிவு, எதிர்கால வாழ்வின் திசை காட்டுதல் ஆகிய பண்புகளைக் கொண்ட ஒருவரையே

உ.வே.சா ‘தக்க ஆசிரியர் ‘ எனப் பெருமைப்படுத்துகிறார்.

மேட்டுக் கிணறுகளால் பசுமை தோன்றாது ; காவிரிப் பெருக்கால் கழனி வளரும் ; காடு பெருகும் ; பாலைவனம் சோலைவனமாகும் ; பஞ்சம் அழியும் ; பசுமை நிலைக்கும்.

காவிரி போன்ற ஆசிரியர்களால்தாம் மனிதவளம் சிறக்கும் ; மாண்புடைய நாடு மலரும்.”என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே” என்று உ.வே.சா (U. V. Swaminatha Iyer) மகிழ்ந்ததைப் போலவே மாணவரான அனைவரும் மகிழ்வர்.

சான்று நூல் :

என் சரித்திரம் – உ.வே.சாமிநாதர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை – 600090.

கட்டுரை ஆசிரியர்  :

மணி மீனாட்சி சுந்தரம்

மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.
தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்.
அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.

மேட்டுக் கிணறுகளும் பொய்யாக் காவிரியும்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *