உலகின் தலைசிறந்த பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிகளைப் பட்டியலிட்டால், அதில் அமீரகத்தின் ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்குத் தனி இடம் உண்டு. ஷார்ஜாவில் ஆட்சியாளர் மேதகு டாக்டர். சுல்தான் பின் மொஹம்மத் அல் காசிமி அவர்கள் தேர்ந்த புத்தக ஆர்வலர் என்பதால் புத்தகக் கண்காட்சியை செம்மையாக நடத்துவதில் தனிக்கவனம் செலுத்துபவர்.

அந்த வகையில், 41வது பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி, நவம்பர் 2 முதல் 13 வரை சிறப்பாக நடைபெற்று, இனிதே நிறைவுற்றது. 11,000 சதுரமீட்டர் பரப்பில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த வளாகம், 95 நாடுகளிலிருந்து வந்திருந்த 2213 பதிப்பகங்கள் அமைத்திருந்த அரங்கங்கள், பன்னாட்டு உணவகங்கள், தூய்மையான கழிவறைகள், சிறார் செயல்பட்டறைகள் (Workshops), ஆங்காங்கே உதவி மையங்கள், ஆயிரக்கணக்கான கார்களை உள்ளரங்கில் நிறுத்தும் வசதி என்று என சிறப்பான கட்டமைப்புடன் திகழ்ந்தது.

பன்னாட்டுக் கண்காட்சிகள் ஒவ்வொரு வருடமும் ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது வழக்கம். அதன்படி ஷார்ஜா கண்காட்சி, இவ்வருடம், ‘சொற்களைப் பரப்புங்கள்” (Spread the Words) என்ற கருத்தியலை நோக்கமாக வைத்திருந்தது. நேரிலும் சமூக ஊடங்கள் வாயிலாகவும் புத்தகங்கள் பற்றிய செய்திகளைப் பரப்பவேண்டும்; அதன்வழியே சமூக, பண்பாட்டு முன்னேற்றத்தை முன்னெடுக்க முடியும் என்பதே இதன் பொருளாகும்.

கையெழுத்து மூலப் பிரதியான லாரன்ஸ் ஆஃப் அரேபியா புத்தகத்தின் ஒரு பிரதியின் விலை 1.45 கோடி ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா? அப்படி, விலையுயர்ந்த புத்தகங்கள் முதல் ஐம்பது ரூபாய் மதிப்பு வரையிலான புத்தகங்கள் வரை, பல்வேறு நாட்டுப் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. விலைகள் வெவ்வேறாக இருந்தாலும், புத்தகங்கள் தரும் உயர்ந்த விழுமியங்கள் ஒன்றுதானே!

கண்காட்சி துவங்குவதற்கு முன்பான மூன்று நாட்கள் (30 அக்டோபர் – 01 நவம்பர்) பதிப்பகத்தாரின் மாநாடு ஒன்றை நடத்தி, காப்புரிமைகளை முறைப்படி விற்று வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருப்பம் தெரிவித்த பதிப்பாளர்களுக்கு, அதற்கென அமைக்கப்பட்டிருந்த தனி அரங்கில், மூன்று வேளை உணவு, தேநீர் வசதிகளுடன்  958 மேஜைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. காப்புரிமை மாற்றம் மூலமாகவே சில சர்வதேசப் பதிப்பாளர்கள், கண்காட்சி விற்பனையைவிட அதிக லாபத்தை கண்காட்சி துவங்கும் முன்னே ஈட்டிவிட்டனர் என்றால் அது மிகையாகாது.

2018ஆம் ஆண்டுவரை, பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி என்றால் அதில் தமிழ்ப் புத்தகங்களைப் பார்க்க முடியாத நிலையே இருந்தது. பிறகு கோவிட் பெருந்தொற்று காரணங்களால் மீண்டும் மந்த நிலை தோன்றியது. சென்ற வருடம் (2021), ஒரே ஒரு அரங்கில் தமிழ்ப்புத்தக அரங்கத்தை டிஸ்கவரி பதிப்பகமும் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகமும் அமைத்திருந்தன.

இம்முறை ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் மூன்று தமிழ்ப் புத்தக அரங்கங்கள் கம்பீரமாக வீற்றிருந்தது தமிழ் வாசகர்களுக்கு ஒரு இலக்கிய விருந்தாகவே அமைந்தது.

சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் அமைத்திருந்த அரங்கில் அவர்களது பதிப்பகத்தின் புத்தகங்களுடன் பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட வேறு சில பதிப்பகங்களின் புத்தகங்களும் இடம்பெற்றன.

டிஸ்கவரி பதிப்பக அரங்கில் அவர்களுடைய புத்தகங்களுடன் யுனிவர்சல் பதிப்பகம், வம்சி, ஸீரோ டிகிரி, அகநி போன்ற  பதிப்பகங்களின் புத்தகங்களும் இடம்பெற்றன. கவிஞர்கள்  நா.முத்துக்குமார் & வைரமுத்து ஆகியோரின் கவிதைப் புத்தகங்கள், வேல. ராமமூர்த்தி அவர்களின் ‘குற்றப் பரம்பரை’, எம்.ஆர்.எம். அப்துற்- றஹீம் அவர்களின் புத்தகங்கள் ஆகியவற்றுடன் புதிய தலைமுறை எழுத்தாளர்களின் புத்தகங்களும் வாசகர்களைக் கவர்ந்தன.

காலச்சுவடு அரங்கின் பதிப்பாளரிடம் பேசியபோது சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அம்பை, தொ.பரமசிவம் ஆகிய எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக அறிந்தேன். பொன்னியின் செல்வனுக்கும் சிறார் புத்தகங்களுக்கும் வழக்கத்தைவிட அதிக வரவேற்பைப் பார்க்க முடிந்தது.

குறைந்தது இருபத்தைந்து புதிய தமிழ்ப்புத்தகங்கள் இந்தக் கண்காட்சியின்போது வெளியிடப்பட்டன. முனைவர் ஜாஹீர் உசைன் அரபி மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த ‘உப்பு’ என்னும் கவிதை நூல், எழுத்தாளர் பிரியா தமிழில் மொழிபெயர்த்துள்ள அமீரக எழுத்தாளர்களின் சிறுகதைகள் (‘ஒரு வசீகரமான கைம்பெண்ணின் முகம்’), கிட்ஸ் தமிழ் ஸ்டோரீஸ் குழுவின் 34 சிறார் எழுதியுள்ள ‘கதைக்கும் நட்சத்திரங்கள்’ சிறுகதைத் தொகுப்பு, எழுத்தாளர் சிவமணியின் ‘ஆதிராவின் மொழி’, எழுத்தாளர் ப்ரீத்தி எஸ் கார்த்திக் எழுதிய ‘வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள்’ ஆகியவை அவற்றுள் சில.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் கல்விச்சுற்றுலாவாக 67 மாணவ மாணவிகள் தமிழகத்திலிருந்து ஷார்ஜா கண்காட்சியைக் காண நேரில் வந்திருந்தார்கள். நம் தமிழக அரசு, புத்தகக் கண்காட்சியின்மீது வைத்திருக்கும் மதிப்பை வெளிப்படுத்துவதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

இனி அடுத்தடுத்த வருடங்களில் பாரதி புத்தகாலயம் போன்ற பதிப்பகங்கள் தனி அரங்கங்களை அமைக்கவேண்டும்; இன்னும் பல தமிழ்ப் பதிப்பகங்கள் பன்னாட்டுக் கண்காட்சியில் கலந்துகொண்டு, தம்முடைய புத்தகங்களைக் கண்காட்சியில் இடம்பெறச் செய்யவேண்டும் என்பதே அயலகத் தமிழ் வாசகர்களின் விருப்பமாக இருக்கிறது.

பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிகளில் தமிழ் அரங்குகளும், தமிழ் பதிப்பாளர்களும் எதிர்கொள்ளவேண்டிய சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன (தனியாக வேறொரு கட்டுரையே எழுதலாம் என்னும் அளவிற்கு).
எது எப்படியிருந்தாலும், கடந்த காலத்தை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்ப் புத்தக அரங்கங்கள் அதிகரித்து வருவதும், பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிகளில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதும் புதிய வெளிச்சமாகவே தெரிகிறது.

கட்டுரையாளரைப்  பற்றிய குறிப்பு :-

துரை ஆனந்த் குமார்
அமீரகத்தில் அபுதாபியில் வசிப்பவர். சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிபுணராக அரசுத்துறையில் பணியாற்றி வருகிறார். 2019 முதல் கதை சொல்லியாகவும், சிறார் இலக்கிய எழுத்தாளராகவும் இருக்கிறார். ‘கிட்ஸ் தமிழ் ஸ்டோரீஸ்’ என்ற சிறார் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்துவருகிறார். இதுவரை எட்டு சிறுகதைத் தொகுப்பு நூல்களையும் ஐந்து சிறார் நாவல்களையும் எழுதியிருக்கிறார். நான்கு சிறார் புத்தகங்களைத் தொகுத்திருக்கிறார்.

[email protected]          Mobile & Whatsapp +971501974975

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *