பீப்பிள்ஸ் டெமாக்ரசி கட்டுரை: புதிய மின்சார சட்டம் – விவசாயிகள் மீது ஒரு லட்சம் கோடி சுமை | தேஜல் கனிட்கர் (தமிழில் இரா.இரமணன்)ஷாக் அடிக்கும் சட்டம்

(புதிய மின்சார சட்டம் – விவசாயிகள் மீது ஒரு லட்சம் கோடி சுமை – பீப்பிள்ஸ் டெமாக்ரசி டிசம்பர் 21-27 2020 இதழில் தேஜல் கனிட்கர் கட்டுரையை தழுவியது)

தம்பி – அண்ணே ! இந்த மின்சார சட்டத்தை எல்லாரும் ஏண்ணே எதுக்கறாங்க?

அண்ணன் – எல்லாரும் எதுக்கலட. விவசாயி, கூலி தொழிலாளி, சாமானியர்கள் இவங்கதாண்டா எதுக்கறாங்க. பெரிய முதலாளி எல்லாம் ஆதரிக்கிறாங்கடா.

தம்பி – அப்படி அதில என்னதான் இருக்குண்ணே?

அண்ணன் – ஒருத்தருக்கு மின்சாரம் கொடுக்கிறதுக்கு என்ன செலவாகுதோ அத அவங்ககிட்டிருந்து கரெண்ட் பில்லா வாங்கணும்னு சொல்லியிருக்கு.

தம்பி – சரியாத்தானே சொல்லியிருக்கு?

அண்ணன் – உங்க வீடு எங்க இருக்கு?

தம்பி – என்னண்ணே தெரியாத மாதிரி கேக்கிறீங்க? ஊருக்கு வெளியில் தள்ளி இருக்கு.

அண்ணன் – அப்படின்னா உனக்கு எங்கள விட கரெண்ட் பில் அதிகம் போடணும்.

தம்பி – ஏண்ணே ?

அண்ணன் – ஊருக்குள்ள இருக்கற போஸ்ட்டில இருந்து உங்க வீட்டுக்கு எவ்வளவு தூரம் கம்பி இழுக்கணும்? அதில எவ்வளவு மின்சாரம் வேஸ்டாகும். அதையெல்லாம் கணக்கு பண்ணினா உனக்கு அதிகமாத்தானே வரும். அதே மாதிரி தொலைவில இருக்கிற கிராமங்கள்,நகரங்களுக்கும் கரெண்டு சார்ஜ் அதிகமா விதிக்கணும். சரி இப்ப நாம ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டறோம்?

தம்பி – அதென்னமோ 100யூனிட் வரை 1 ரூபா, 200 வரை 1.5ரூபா அப்படின்னு சொல்றாங்கண்ணே.

அண்ணன் – ஆனா ஒரு யூனிட் கரெண்ட் உற்பத்தி செய்யறதுக்கு 6ரூபா ஆகுதுடா. ஆறு ரூபா கட்டறியா?

தம்பி – என்னண்ணே எங்களுக்கு வர கூலியே குறைச்சல்தானே. நாங்க எப்படிண்ணே கட்ட முடியும்? நாங்க என்ன உல்லாசமா இருக்கறதுக்கு பெரிய பெரிய லைட் ஏசி எல்லாம போட்டுக்கறோம்? அவசியத்துக்குத்தானே நாலு லைட், ஃபேன் போட்டுக்கறோம்?

அண்ணன் – அதத்தாண்டா அம்பேத்கார் 1948 எலெக்டிரிசிடி சட்டத்தில சொன்னாரு.

தம்பி – அம்பேத்காரா ? அவரு இந்த இட ஒதுக்கீடு அது இதுன்னுதானே சொன்னாரு?

அண்ணன் – அப்படி சொல்லி நம்மள ஏமாத்தறாங்க. அவரு என்ன சொல்லியிருக்கிறாரு தெரியுமா?

தம்பி – என்னண்ணே சொல்லியிருக்கிறாரு?

அண்ணன் – மின்சாரம்கிறது ஒரு அத்தியாவசிய பொருள். அது எல்லோருக்கும் கொடுக்கணும். அது சொகுசுப் பொருள் இல்ல. லாபம் சம்பாதிக்கிறதுக்கான பொருள் இல்லன்னு சொன்னாருடா.

தம்பி – சரிண்ணே இப்ப ஒரு யூனிட்டுக்கு ஆறு ரூபா ஆகுதுன்னு சொன்ன. நாம எல்லாம் அதவிட குறைச்சலா கட்டினா, மிச்சத்த எப்படிண்ணே சரிக்கட்டறாங்க?

அண்ணன் –ஒரு பகுதிய பெரிய தொழிற்சாலைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு அதிக கட்டணம் விதிச்சு சரிக்கட்டுறாங்க. மீதிய அரசாங்கம் மானியமா கொடுக்குது.

தம்பி – அண்ணே இந்த மின்சாரம் நம்ம தமிழ்நாடு கவர்மெண்டுதானே உற்பத்தி செய்யுது? விநியோகம் செய்யுது? அவங்களாண்ணே இந்த சட்டத்த போட்டிருக்காங்க?

அண்ணன் – இல்லடா. டெல்லியில இருக்கில்ல மோடி கவர்மெண்டு போட்டிருக்காங்க. அதில நிறைய விஷயங்கள் இருக்குது.

தம்பி – சுருக்கமா சொல்லுங்கண்ணே.அண்ணன் – மின்சார உற்பத்தியும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கரண்ட கொண்டு போறதும் அம்பானி அதானி மாதிரி பெரிய ஆளுங்கள்ட்ட இருக்கணுமாம். ஜனங்களுக்கு கரண்ட கொடுக்கிறதும் கரெண்டு பில் வசூலிக்கிறதும் மாநில அரசாங்கம் பண்ணணுமாம்.

தம்பி – அப்படினா கரெண்டு பில் ஒசராதண்ணே. இவங்க ஓட்டுக்கு நம்மகிட்ட வரணும்கிறதனால மானியம் கொடுத்து சரி பண்ணிடுவாங்க.

அண்ணன் – டேய் நீ கூட அரசியல நல்லா தெரிஞ்சு வச்சிருக்கே. ஆனா தமிழ்நாடு கவர்மெண்டுகிட்ட பணம் இருந்தானே கொடுக்க முடியும்?

தம்பி – என்னண்ணே அவங்கதான் அந்த வரி இந்த வரின்னு போட்டு வச்சிருக்காங்களே?

அண்ணன் – அதெல்லாம் முன்னால. இப்ப ஜிஎஸ்டின்னு போட்டு எல்லாம் மத்திய சர்க்கார்கிட்ட போயிருது. அவங்ககிட்டருந்து நம்ம பங்க வாங்கறதுகுள்ள நாக்கு தள்ளியிருது. ஒவ்வொரு வருசமும் ரூ50000/ கோடி கணக்கில கடன் வாங்குதுடா நம்ம தமிழ்நாடு.

தம்பி – எனக்கு என்னவோ நம்ம ஸ்டேட் கவர்மெண்டு மானியம் கொடுத்துருவாங்கன்னு தோணுது அண்ணே.

அண்ணன் – அங்கயும் ஒரு கண்டிஷன் போட்டுட்டாண்டா மத்திய சர்க்கார்.

தம்பி – என்னண்ணே ஒண்ணுண்ணா சொல்ற?

அண்ணன் – ஆமாண்டா. மானியம் கொடுத்தாலும் நேரடியா கொடுக்கக் கூடாது. முதல்ல நாம் புதுசா போடற ரேட்டில கரெண்டு பில்லா கட்டிரணும். அப்புறம் அந்த பில்ல காட்டி மானியத்த வாங்கிக்கணுமாம்.

தம்பி – அதினால என்னண்ணே? வாங்கிகிட்டா போச்சு.

அண்ணன் – உங்க வீட்டில கேஸ் அடுப்பு வெச்சிருக்கீங்களா?

தம்பி – வெச்சிருக்கோம்.

அண்ணன் – அந்த கேசுக்கு மானியம் உண்டு தெரியுமா? அது ஒழுங்கா உடனே வந்துருதா? ஸ்டேட் கவர்மெண்டுகிட்ட பணமே இல்லாதபோது உடனே கொடுத்துருவாங்களா? ஆதி திராவிட மாணவர்கள் உதவித் தொகை ஒழுங்கா வருதா? நூறு நாள் வேலை கூலி உடனே கொடுத்திராங்களா? அப்படியே போராட்டம் எல்லாம் நடத்தி அவங்க பணத்த பேங்கில போட்டாலும் அது பொம்பளைங்க கைக்கு வராதுடா.

தம்பி – நம்மள விடுங்கண்ணே. இந்த மானியம் எல்லாம் பணக்கார விவசாயிகளுக்குத்தான் போகுதுன்னு சொல்றாங்களே?

அண்ணன் – அதெல்லாம் பொய். பம்ப்செட் வெச்சு விவசாயம் பண்றவங்கள்ள கணிசமானவங்க சிறு குறு நடுத்தர விவசாயிங்கதான். தெலிங்கானாவ எடுத்துகிட்டா நிலத்தடி நீரைப் பயன்படுத்தறவங்கள்ள 40% ஒரு ஏக்கருக்குக் குறைவா வெச்சிருக்கிற விளிம்புநிலை விவசாயிங்க. இன்னொரு 50% பேர் சிறு நடுத்தர விவசாயிங்க (1-4 ஏக்கர்கள்). பஞ்சாப் ராஜஸ்தான்ல் 40%பேர் சிறு நடுத்தர விவசாயிங்க. ஒரு 30-40% நடுத்தர விவசாயிங்க(4-10ஏக்கர்) நிலத்தடி நீரைப் பயன்படுத்தறாங்க. உனக்கு இன்னோண்ணும் சொல்றேன்.

தம்பி – என்னண்ணே?

அண்ணன் – இந்த மானியம் எல்லாம் நிலம் சொந்தமா வெச்சு விவசாயம் பன்னரவங்களுக்குதான் கிடைக்கும். குத்தகை விவசாய்களுக்கு கிடைக்காது. ஹரியானாவிலும் பஞ்சாபிலும் ஆற்றுப்பாசனம் போன்ற நிலப்பரப்பு நீர்ப்பாசனம் செய்யறவங்கள்ள பெரிய விவசாயிங்கதான் நிறைய இருக்காங்க. அதுக்கும் மானியம் இருக்கு. ஆனா அதப்பத்தி யாரும் எதுவும் கேக்க மாட்டேங்கிறாங்க.

தம்பி – ஏற்கனவே விவசாயிங்க கடன் தொல்லையால தற்கொல பண்ணிக்கிறாங்க சொல்றாங்களே அண்ணே?

அண்ணன் – ஆமாண்டா . இந்த புதிய சட்டத்தினால விவசாயிங்களுக்கு ஒரு லட்சம் கோடி நஷ்டம் ஏற்படும்.

தம்பி – அண்ணே இத விளக்கமா எல்லார்கிட்டயும் சொல்லணும்.