நூல் அறிமுகம்: தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு – பெ. அந்தோணிராஜ்

       தமிழ் எழுத்துக்களை படைத்தவர் யாரென தெரியுமா?! எழுத்துக்கள் எத்தனை கதியாக பிரிக்கப்பட்டுள்ளது எனத்தெரியுமா?! எழுத்துக்களில் உள்ள பால்பேதம் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?! எழுத்துக்களின் சாதி தெரியுமா உங்களுக்கு?! எழுத்துக்களில் எது நல்லவை, எது தீயவை எனப் பகுத்துப்பார்க்கத்தெரியுமா? நட்பு எழுத்துக்கள், உதாசீன எழுத்துக்கள், பகையெழுத்துக்கள் என உள்ளது அது பற்றி நீங்கள் எப்போதேனும் அறிந்துள்ளீர்களா? இல்லைதானே!! அப்படியென்றால் வாருங்கள் புத்தகத்தினுள் சென்று தேடுவோம். நிற்க, முதலில் இந்நூல் ஆசிரியரைப்பற்றி தெரிந்துகொள்வோம்.
    இந்நூல் ஆசிரியர் முனைவர் ஏர் மகாராசன் அவர்கள் மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு என்ற ஊரில் பிறந்து வளர்ந்து தற்போது தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் வாழ்ந்து வருகிறார். தமிழ் மீது மாறாப் பற்றுக்கொண்டிருப்பதினாலே ஏறு தழுவுதல், வேளாண் உற்பத்தியும் நிகழ்த்து பண்பாடும் வரலாறும், மொழியில் நிமிரும் வரலாறு, பெண்மொழி இயங்கியல், தமிழ் நிலமும் புத்துவன்குடியாதிக்க எதிர்மரபும், முல்லைப்பாட்டு உறைபனுவல், தமிழில் பெண்மொழி மரபு போன்ற ஆய்வு நூல்களும், சொல்நிலம் என்ற கவிதை நூலும் ஆக்கியுள்ளார். இதற்க்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் இவர் பணிபுரிகின்ற பெரியகுளம் வி. நி. அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் படைப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையாக “கழனி “என்ற மாணவ மாத இதழ் தொகுப்பாளராக பணியாற்றி அரசு பள்ளிகளுக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி “முன்னத்தி ஏர்” ஆக விளங்குகிறார். சரி புத்தகத்திற்குள் செல்வோம்.
** மனித வரலாற்றின் முதல் நிபந்தனையாக உயிருள்ள தனிமனிதர்கள் இருக்கவேண்டும் என்று மார்க்ஸும் ஏங்கல்சும் கூறுகின்றனர்.
**பூமி உருண்டையானது, அது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருகிறது என்று கோபர்நிக்கஸ் கூறியபோது இயற்கை விஞ்ஞானம் தனது சுதந்திரத்தை பிரகடனம் செயததாக ஏங்கல்ஸ் கூறுகிறார்.
**டார்வினின் பரிணாமக்கோட்பாடு 19ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.
**மனித இனவளர்ச்சியில், முன்னங்கால்கள் கைகளாகவும், குரல்வளை பேசும் உறுப்பாக மாறியதுதான் மனிதபடிநிலை மலர்ச்சியில் ஏற்பட்ட முதல்புரட்சி என்று ஏங்கல்ஸ் கூறுகிறார்.
**பேச்சு என்பது மனிதனின் தேவையினால் உண்டாக்கப்படுகிறது.
**மனிதர் வெளிப்படுத்தும் பேச்சும், அப்பேச்சு வெளிப்படுத்தும் போது உடன்பிறக்கும் சிந்தனையும்தான் மனிதரை மற்ற உயிர்களிடமிருந்து திட்டவட்டமாக வேறுபடுத்திக்காட்டுகிறது.
**சமூகமாக மாறும் வளர்ச்சி காலகட்டங்களில் மனிதனால் வெளிப்படுத்தப்பட்ட பேச்சொலிகளும், சைகைகளும் அர்த்தம் கொள்ளத்தொடங்கின.
**அந்த அர்த்தபுலப்படுத்தான் “மொழி “எனப்படுகிறது
**தன் இனத்தவருடன் கருத்து பரிமாற்றத்திற்காக மனிதன், முதலில் உருவத்தை சித்தரித்தான். குறுக்கெழுத்துபோல ஒருபொருளுக்கு ஒரு எழுத்து இட்டு வழங்கினான். அடுத்து பேச்சு வகையால் சொற்றொடர்களைக் குறித்த அடையாளம் தந்தான். இவ்வாறுதான் ஒரு மொழி உருப்பெற்றிருக்க முடியும் என்று எஸ்பிரசன் கூறுகிறார்
**எழுத்தானது கையால் எழுதப்படுவதாலும், வாயால் ஒலி எழுப்பப்படுவதாலும் எழுத்து எனப்பெயர்பெற்றது என தொல்லெழுத்தியல் அறிஞர் பவானி குறிப்பிடுகிறார்.
** பாவாணர் எழுத்தை,
 1.படவெழுத்து
 2.கருத்தெழுத்து
 3.அசையெழுத்து
 4. ஒலியெழுத்து
 என நான்கு வகைப்படுத்துகிறார்.
**சங்க காலத்தில் கண்ணெழுத்து என்ற ஒரு வகை எழுத்து வழக்கில் இருந்ததாக சிலப்பதிகாரம் கூருகிறது. சரக்கு பொதிகளின் மேல் எழுதப்பட்ட எழுத்து கண்ணெழுத்து எனப்பட்டது.
**அகநானூறு குயின்ற (குயில் )என்றொரு எழுத்தை குறிப்பிடுகிறது. மேலும் இதே அகநானூறு “கோடு மாய்ந்த எழுத்து “என்றொரு எழுத்தையும் குறிப்பிடுகிறது.
**சீவக சிந்தாமணி “கரந்த எழுத்து “என்றொரு எழுத்தை குறிப்பிடுகிறது
**நடுகல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களை எழுத்துடை நடுகல் என அகநானூறு குறிப்பிடுகிறது.
**எழுத்துக்களின் தோற்றத்திற்கு முதல் அடிப்படையாக அமைந்திருப்பது ஓவியங்களே ஆகும்.
**தமிழகத்தில் இதுவரை சுமார் 80க்கு மேற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
**கருத்து எழுத்து, ஓவிய எழுத்து போன்றவற்றில் இருந்து தோன்றிய புரட்சிகரமான மாற்றமே ஒலி எழுத்தாக பரிணமித்தது என்கிறார் நாகசாமி.
**இவ்வாறாக ஓவியத்திலிருந்து கருத்துரு குறியீடுகளாக மாறும்போது எழுத்துக்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்திருக்கவேண்டும், இதுபோன்றே கருத்திலிருந்து அசை, அசையிலிருந்து ஒலி எழுத்துக்கள் பரிணமிக்கும் போது எழுத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து, நெடுங்கணக்கு என்னும் அகரநிரல் தோன்றிய பின்னர் எழுத்துக்கள் மிகவும் குறைத்திருக்கவேண்டும்.
**வளர்ச்சியடைந்த நிலையாகக் கருதப்படுவது ஒலியன் எழுத்து நிலையாகும், அவை உணர்வொலி, ஒப்பொலி, குறியொலி, வாய் செயகையொலி, குளவி வளர்ப்பொலி, சுட்டொலி என ஆறு வகையாக ஒலி எழுத்துக்களாகப் பிரிக்கிறார் பாவாணர்.
**மொழி பிறந்ததில்
1.பவ் வவ் கோட்பாடு
2. பூ பூ கோட்பாடு
3. டிங் டாங் கோட்பாடு
4. யோ கி கோட்பாடு
5. தானனனக் கோட்பாடு
என ஐந்து வகையாக எழுத்து வளர்ந்துள்ளது.
**எழுத்து என்பது ஒரு மொழியின் தனித்துவமான அடிப்படைக்கூறாகும். மொழிக்கு நிலை பேறு அளிப்பது எழுத்தே.
**அசோகர் காலத்து பிராமி எழுத்தை விட தமிழி எழுத்துக்கள் காலத்தால் முந்தியது என இந்நூலில் பல்வேறு சான்றுகளை தந்து நிறுவுகிறார். அசோகரின் காலத்தைவிட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தையது தமிழியின் காலமாக நிரூபிக்கிறார் ஆசிரியர்.
**பாண்டிய நாட்டில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் வட்டெழுத்து வழக்கில் இருந்துள்ளது, இமயமலை அடிவாரத்தில் உள்ள கோபாலேஸ்வரர் ஆலயத்தில் தமிழ் வட்டெழுத்துக்கள் உள்ளது.
**தமிழ் வட்டெழுத்தும், பல்லவ கிரந்த எழுத்துக்களும் ஒரே கால கட்டத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளன.
**ஓலைச்சுவடிகளே தமிழின் பயன்பாட்டு வடிவமாக அதிகளவு கையாளப்பட்டு வந்துள்ளன.
**ஓலைச்சுவடிகளில் உள்ள எழுத்துக்களுக்கும், கல்வெட்டில் உள்ள எழுத்துக்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன.
**தமிழ் எழுத்துக்களுக்கு அடிப்படையான ஒலிகளின் பிறப்பை குறித்து தொல்காப்பியமும், நன்னூலும் கூறுகின்றன. உரம், கண்டம், உச்சி, மூக்கு, இதழ், நா, பல், அண்ணம் ஆகியவை எழுத்தின் பிறப்பிடங்களாக அறிகிறோம்.
**பேச்சு என்பது கண்ணுக்குத் தெரியாத ஒலிவடிவத்தையும், எழுத்து என்பது செவிக்கு புலனாகாத வரி வடிவத்தையும் கொண்டிருப்பதாகும்.
**ஓரெழுத்து ஒரு மொழியென தமிழில் 42 எழுத்துக்கள் உள்ளன. உ – ம், சோ – மதில்,
து – உண், ஐ – அழகு, ஓ – மதகு நீர் தாங்கும் பலகை இவ்வாறாக.
**வெண்பா பாட்டியலும், பன்னிரு பாட்டியலும் எழுத்துக்களில் பேதங்களை ஏற்படுத்துகிறது.
**உயிர் எழுத்துக்களை பிரம்மன் படைத்தார்,சிவன் – க் ங், திருமால் – ச் ஞ், முருகன் – ட் ண், இந்திரன் – த் ந், சூரியன் – ப் ம், சந்திரன் – ய் ர், குபேரன் – ல் வ், கூற்றுவன் – ழ் ள், வருணன் – ற் ன் யும் படைத்தனர். பாதகமில்லாமல் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது. நிறைய சாமிகள் இருப்பதும் (?!) ஒருவிதத்தில் வசதியே.
**தெய்வகதி எழுத்துக்கள் -அ, இ, உ, எ, க ச ட த ப
மக்கள் கதி –ஆ ஈ ஊ ஏ ங் ஞ் ண் ந் ம்
விலங்கு கதி –ஒ ஓ ய ர ல ழ ற
நரகர் கதி –ஐ ஒள  வ்  ள் ண்
**ஆண் எழுத்துக்கள் : அ இ உ எ ஒ எனும் குறிலும் இவற்றோடு18 மெய்யெழுத்துக்கள்  இணைந்து உருவாகும் 90 எழுத்துக்கள்.
பெண் எழுத்துக்கள் : மீதமுக்குள்ள நெடிலும், மீதமுள்ள உயிர்மெய்யெழுத்தும்
அலி எழுத்துக்கள்: அனைத்து மெய்யெழுத்துக்களும்
எப்பூடி !!!
***சாதியெழுத்துக்கள்
அந்தண எழுத்துக்கள்: உயிர் பன்னிரண்டும், க் ங் ச் ஞ் ட் ண்.
சத்திரிய எழுத்துக்கள்: த் ந் ப் ம் ய் ர்.
வைசிய எழுத்துக்கள்: ல் வ் ற் ன்
சூத்திர எழுத்துக்கள்: ழ் ள்
மக்களே இப்படியெல்லாம் இருக்குமா?! இருக்கிறது.
**நல்ல எழுத்துக்கள்: உயிர் குறில் எழுத்துக்களோடு க் ச் த் ந் ப் ம் வ்.
நஞ்செழுத்துக்கள்: ய் ர் ல் யா யோ ரா ரோ லோ ஆய்தம் அளபெடைகள், குறுக்கங்கள், குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தக்குறுக்கம் போன்றவை.
அடுத்து பிள்ளையார் சுழியான “உ” பற்றி ஆசிரியர் ஏறக்குறைய முப்பது பக்கத்திற்கு எழுதியுள்ளார்.
         தமிழ்நாட்டிற்கு பிள்ளையார் வருவதே கி.பி 600க்கு மேல்தான், ஆனால் தமிழகத்தில் அதற்கு முன்பாகவே இந்த “உ” போட்டு எழுதும் வழக்கம் இருந்துள்ளது. இந்த “உ” என்பது தமிழர்களின் உலகளாவிய பார்வைதான் காரணம் என்று பல்வேறு சான்றுகளுடன் நிறுவுகிறார். இந்நூல் ஒரு வரலாற்று ஆய்வு நூல் மாதிரி சிறப்பாக ஆக்கியுள்ளார் முனைவர் ஏர் மகாராசன்.
  இந்நூல் தமிழைப் பற்றியும், தமிழர் தம் பண்பாட்டைப்பற்றியும் அறிந்துகொள்ள அவசியமான நூலாகும்.
பழுதில்லாத  ஆய்வு நூலாக இருந்தாலும் ஒரு வரலாற்று நூல் படிப்பது போன்றே உள்ளது. வாசித்து இன்பம் பெருக.
அன்புடன்,
பெ. அந்தோணிராஜ்
தேனி.
நூல்: தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு.
ஆசிரியர்: ஏர் மகாராசன்
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை
விலை: ரூ. 120