பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் எழுதியுள்ள சிறு நூல் , ஆனால் 43 நூல்களை ரெபரன்ஸ் செய்து எழுதிய குறு ஆய்வு நூல். நமது தமிழர் திருமணம் பழங்காலம் தொட்டு இன்று வரை எத்தகைய மாண்புகளை , சடங்குகளை , சம்பிரதாயங்களை அடுக்குகளாகப் பெற்று புதுப் பொலிவுடன் அதே சமயத்தில் பழமைவாதப் போக்குடன் வளர்ந்துள்ளது என்பதை காட்சிப்படுத்தியுள்ளார் பேரா ச.மாடசாமி .
மேற்கத்திய கோட்டும் , விஸ்கியும் கலந்த அளவுக்கு துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் திருமணத்தை தனிப்பட்ட சொந்தச் சடங்காக எளிய விருந்துடன் நடத்தும் முறையில் மேற்கத்திய பண்பாடு வந்துக் கலக்கவில்லை என இந்நூலின் வழியாகப் புரிந்து கொள்ளலாம்
இந்திய இளைஞன் பீட்சாவுக்கும் பர்கருக்கும் பழகி விட்டான். கேளிக்கை விடுதிகளுக்கு கூச்ச உணர்வின்றி செல்கிறான் .ஆனால் திருமணம் என்று வந்து விட்டால் ஜாதி, ஜாதகம் என்றே தொடங்குகிறான். இந்த இரட்டை நிலை புத்திசாலித்தனமா ? சந்தர்ப்பவாதமா ? பாசாங்கா ? என நம் முன் கேள்விகளைத் தொடுக்கிறார்.
அவரவரின் குடும்பம் அவரவருக்குள் ஒண்டிக் கிடக்கிறது என்ற வரி நமக்கு ஆயிரம் அர்த்தங்களை விளக்குகிறது. சிந்தனை , நம்பிக்கை , பண்பாடு பழக்க வழக்கங்கள் அனைத்திலும் ‘சமூக மனிதனின் ‘ ஆதிக்கம் ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்படுத்துகிறது என்பதிலிருந்து மனிதனை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு என்ற குடும்பம் குறித்து ஐ.நா கூறியதாகக் குறிப்பிடும் வரிகள் இன்றைய காலகட்டத்திற்கு நம்ம ஊருக்கே பொருந்துமா என்ற ஐயம் வர வைக்கிறது .
குடும்பம் கூரையோடு மட்டுமில்லை , மறித்து எழுப்பப்பட்ட சுவர்களோடும் , எல்லைகளைக் குறுக்கும் வேலிகளோடும் தான் இன்று மாறிப் போயிருக்கிறது என்பதை யாரேனும் மறுக்க முடியுமா ?
பெண்ணுக்கான பாரபட்சமான இடமாகவும் , உளுத்தும் பண்பாட்டுப் பிரச்சனையாகவும் தானே திருமணங்கள் எழுதப்படாத சட்டங்களாக சிலவற்றை உள்ளடக்கியுள்ளது.
கல்யாண மண்டபங்களும்
சட்ட சபைகளும்
இந்த நாட்டின்
அர்த்தம் இழந்த ஆடம்பரங்கள் …
சடங்குகள்
ஆடைகள் என்று தான்
அறிமுகமாயின
வெகுவிரைவில்
ஆடைகள்
ரத்தங்குடிக்கக் கற்றுக் கொண்டன …..
இந்த சொல்லப்பட்ட வரிகள் தான் மிகப் பொருத்தமானவையாகத் தோன்றுகின்றது.
பெண்ணின் உடல் சார்ந்த சடங்குகளை வெறுக்கும் போக்கு தற்காலத்தில் உருவாகினாலும் , வேறு வேறு ரூபங்களில் சடங்குகள் புதுப்பிக்கப்பட்ட சடங்குகளாயின.
குடும்ப அமைப்பின் அடிப்படையாகத் திகழும் திருமணம் என்பது பாலியல் ஒழுக்கத்தை வரன்முறைப்படுத்தப்பட தேவையாக இருப்பதாகக் கூறப்படும் விளக்கங்களே , திருமணத்தின் அடிப்படை உண்மையாகப் புரிதலை எனக்குள் தருகிறது.
சங்க காலம் தொடங்கி , தொல்காப்பியம் அகநானூறு , புறநானூறு ,குறுந்தொகை , நற்றிணை , ஐங்குறு நூறு , நெடுநல்வாடை ,சிலப்பதிகாரம் வரை திருமணக் குறிப்புகளைக் கையாண்டு இப்புத்தகத்தை அடர்வு மிக்க பெட்டகமாக மாற்றியுள்ளார்.
பெரியார் அறிமுகப் படுத்திய சுயமரியாதைத் திருமணங்கள் குறித்தும் பேசுகிறது புத்தகம் .ஆனால் அன்று முதல் இன்று வரை தீராக் காயங்களை விதைக்கும் வேர்களாகப் பரவியுள்ள வலிகளைத் தான் ஒவ்வொருவருக்கும் திருமணங்கள் பரிசாக அளிக்கின்றன. பெண் தேடும் படலமும் , வரதட்சணை முறையும் வேறு வேறு உருவம் பெற்றுள்ளன என்பதே எதார்த்தம். பெண் தேடும் புரோக்கர்கள் இன்று மேட்ரிமோனியலாகவும் மாடு பெற்ற மாப்பிள்ளை கார்பெறுபவராகவும் இன்றைய திருமணங்கள் முன்னேறியுள்ளன.
அதே சாதி வெறுப்பு அழுக்கு , வெறுப்பு , ஆண் மேலாதிக்கம் , மாப்பிள்ளை முறுக்கு , மாமியார் ஜம்பம் , சீர் செணத்தி பிரச்சனை எதிலும் மாற்றங்கள் இல்லை. வீட்டில் எளிமையாக சொந்த பந்த உறவுகளுடன் நடந்த திருமணங்கள் மனிதர்களின் பணப் பாட்டை நிரூபிக்கும் பல்வேறு கூறுகளாகி வீடியோக்களில் மட்டும் செயற்கை மகிழ்வை சுமந்து திரியும் ஞாபகச் சுவடுகளாக மாறி இருக்கும் திருமணங்களையும் நாம் கூர்ந்து அணிக வேண்டும் .
வளர்ச்சி , முன்னேற்றம் , நாகரிகம் , சமூக அந்தஸ்து இவை தமிழர் திருமணத்தை எந்தத் திசையில் வார்த்தெடுத்துக் கொண்டு வரலாற்றுப் பிழைகளாக மாறியுள்ளன என்பதை அவரவர் சொந்தத் திருமணங்கள் சொல்லும் .
தோழமையுடன்
உமா