“திராவிடம் தமிழ்த்தேசம் கதையாடல்” – நூல் அறிமுகம்
அமைப்பியல் – பின்அமைப்பியல் குறித்து தமிழ் அறிவுலகில் அறிமுகம் செய்தவரும் மாய யதார்த்த/பின் காலனீய படைப்புப் பிரதிகளைத் தந்தவருமான ஆய்வாளர் தமிழவன் இந்நூலில் ஒரு நூற்றாண்டு (20ம் நூற்றாண்டு) கால தமிழ்ச் சிந்தனை வரலாற்றினை கோட்பாட்டுருவாக்கம் செய்ய முயன்றுள்ளார். 2009-ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்குப் பிறகு தமிழ்த்தேச ஓர்மை என்ற அடிப்படையில் கடந்த ஒரு நூற்றாண்டின் சிந்தனை வரலாற்றினைத் தமிழவன் தொகுத்துள்ளதாகக் குறிப்பிடலாம். ஏக இந்தியம், காந்தியம், மார்க்சியம், தனித்தமிழ்ச் சிந்தனை உள்ளிட்ட எல்லா வகை சிந்தனை மரபிலும் தமிழ்த் தொல் மரபினை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக தமிழ்த்தேச உருவாக்க ஓர்மை என்ற சரட்டின்வழி ஓர் இணைப்பை உருவாக்க முயல்கிறார். மேற்படி நூலில் கவனம் கொள்ளத்தக்க புள்ளிகளாகக் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
20ம் நூற்றாண்டின் தமிழ்ப்புலச் சிந்தனையை மாற்றியவர்களாக, தொல் தமிழ்ச் சிந்தனை மரபின் வழி நின்று அரசியல் களத்தில் அண்ணாவையும், இலக்கியச் செயல்பாட்டினில் பாரதிதாசனையும் சென்ற நூற்றாண்டின் முன்னோடிகளாகக் காட்டுகிறார். அதற்கு முன்பு வரை சில நூற்றாண்டுகளாக – அதிலும் குறிப்பாக சோழப் பேரரசு தனது அரச உருவாக்கத்தின் வழி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடித்ததனாலும் – தமிழ் வடமொழி மரபில் கட்டுண்டு பக்தி மரபில் திளைத்து மயங்கியிருந்தது என்றும் அதிலிருந்து தமிழை மீட்டு சங்க இலக்கியங்களின் தொடர்ச்சியாக பாரதிதாசன் தனது கவிதைகளின்வழி இலக்கியச் செயல்பாடு தொடங்கினார் என்றும் மேற்கத்திய புத்தொளி மரபின் தாக்கத்தில் பெரியார் முன்னெடுத்த நாத்திக மரபின் தொடர்ச்சியாக அண்ணா secular தமிழைக் கண்டறிந்து அரசியல் களத்தில் சங்க இலக்கிய மரபினைத் தொடர்ந்தார் என்றும் எடுத்துரைக்கிறார். அதற்கு தொல்/ஆதித் தமிழ் மரபு (மூலப்படிம நினைவு – primordialஆக நனவிலியில் செயல்படுகிறது) காரணமாக இருந்துள்ளது என்கிறார். திராவிடம் என்று பெரியார், அண்ணா மொழிந்தாலும் அந்தச் சூழலில் திராவிடம் என்பது வடமொழி மரபு எதிர்ப்பு, ஆதிக்க எதிர்ப்பு என்ற நிலையில் ஒரு புரட்சிகரச் சொற்பயன்பாடாகவே மொழியப்பட்டது என்றும் திராவிட மொழிக்குடும்பத்தில் உள்ள மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் தமிழ் அளவுக்கு திராவிடச் சிந்தனை வேர் விடாததற்குக் காரணம் இந்தத் தொல் தமிழ் சிந்தனை மரபுதான் என்றும் நிறுவுகிறார். அந்த மொழிகளில் எல்லாம் சங்க இலக்கிய வளம் போன்ற 2000 ஆண்டு பழமையான இலக்கிய வளமும் வரலாற்றுத் தொடர்பும் இல்லை என்கிறார்.
நாவல் என்ற நீள்புனைகதை உருவாக்கத்திற்கும் தேச உருவாக்கத்திற்கும் உள்ள தொடர்பையும் அதன் நீட்சியாக தேச உருவாக்கத்தால் மொழி வளரும் என்பதையும் இரண்டும் ஒன்றுடன் தொடர்புடையது என்பதையும் விளக்கிச் செல்கிறார். இந்தியா என்ற தேச உருவாக்கத்தால் இந்தி என்ற மொழி வளர்ச்சியை காட்டாகச் சுட்டுகிறார்.
பிராந்தியத்தனத்தையும் அகிலத்துவத்தையும் ஒருங்கே தமிழ் மரபு வழிச் சிந்தனை கட்டமைக்கப்பட வேண்டும் என்கிறார்.
தமிழ் மரபு வழிச் சிந்தனையின் தொடர் கண்ணிகளாகவும் ஏதோ ஒரு வகையில் (அது எதிர் எதிர் அணிகளாக வேறு வேறு மரபுகளாக இருப்பினும்கூட) தமிழ்ச் சிந்தனைத் தளங்களை தீர்மானித்தவர்களாகவும் அயோத்திதாசர், திரு.வி.க., பாரதி, பெரியார், அண்ணா, பாரதிதாசன், ம.பொ.சி., வ.உ.சி, மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார், மயிலை.சீனி. வேங்கடசாமி, கா.அப்பாதுரையார், ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., சி.சு.செல்லப்பா, கு.ப.ரா, சி.மணி, புதுமைப்பித்தன், நா.வானமாமலை, எஸ்.பொ., மஹாகவி, ஏ.ஜே.கனகரட்னா ஆகியோர்களைக் குறிப்பிடுகிறார்.
இன்னொரு முக்கியமான கருத்து – படிமம்/இருண்மை/புதிர்மை என்ற உத்தியின்பால் தமிழ்ப் புனைவுலகம் ஏன் வந்து சேர்ந்தது – அதற்கும் பெரியாரின் நாத்திக புத்தொளி மரபு அரசியல் சிந்தனை செயல்பாட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்தான கருத்து.
திராவிடக்கட்சிகள் ஒப்பீட்டளவில் நகரங்களிலும் பாரம்பரியக் கிராமங்கள் சிதைந்து புதிய வாழ்க்கை முறை தோன்றும் பகுதிகளிலும் உள்ள பண்பாட்டை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தின. திராவிட அரசியலில் நாட்டுப்புறவியலின் புறக்கணிப்பு நிலை குறித்த நோக்கு.
முதல் தமிழ் நாட்டுப்புற ஆய்வாளராகக் குறிப்பிடப்படும் ‘திராவிட பூர்வ காலக் கதைகள்’ எழுதிய பண்டித நடேச சாஸ்திரி, ‘திராவிடப் பிரகாசிகை அல்லது தமிழ் வரலாறு’ நூல் எழுதிய சபாபதி நாவலர் குறித்த தகவல்கள் வியப்பளிக்கிறது.
1980களில் தோன்றிய புதிய மேற்கத்திய வழி சிந்தனை அறிமுகங்கள் பழைய தமிழ் மரபின் தொடர்ச்சியையும் உள்வாங்கி ஒரு புதிய அ-நேர்கோட்டுப் பாணியையும் (Non Linear) ஒரு புதிய கோட்பாட்டையும் இலக்கியம் சார்ந்த சொல்லாடலில் உருவாக்கிய சட்டக மாற்றம் (paradigm shift) பற்றிய கருத்து. சமூக அளவில் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள் – குறிப்பாக தலித் மற்றும் பெண்கள் விடுதலை உணர்வு தமிழ்ப் படைப்புகளில் புதிய விளைவுகளை ஏற்படுத்தியது.
மேற்கண்ட கருதுகோள்களின் அடிப்படையில் சில எழுவினாக்களும் அதன் தொடர்பான தேடல்களும் உரையாடல்களும் இயல்பாக எழுகின்றன.
மூலப்படிம நினைவு/ஆதி/தொல் மரபு என்ற பதங்கள் வழியாக உருவாக்கப்படும் தமிழ் மரபைப் போலவே ஒவ்வொருவரும் தத்தம் சாதி, மதம், தொழில் ஆகியவற்றை தொல் மரபாக உயர்த்திப் பிடித்தால் என்னவாகும்?
அமைப்பியல்/பின்நவீனத்துவம் போன்ற கோட்பாடுகளின்படி ஆதி/சாராம்சம்/மூலம் போன்ற கதையாடல்கள் கேள்வி கேட்கத்தக்கன என்ற கருத்து காலாவதியாகிவிட்டதா?
தமிழாராய்ச்சி தனித்துறையாக இருக்கவேண்டும் என்றும் அதில் சினிமாக்காரர்கள் நுழைவது தரமற்றது என்ற தொனி சில கட்டுரைகளில் தெரிவது தமிழவனின் ஆழ்மன கல்விப்புலத் தராசு மேலெழுகிறதா என்று தோன்றச் செய்கிறது.
தனது இந்த நூலானது ‘தமிழையும் தமிழ் அறிதலியலையும் அடிப்படையாகக் கொண்ட சர்வதேச மார்க்சிய நவீன வியாக்கியான மரபைச் சார்ந்தது’ என்ற தமிழவனின் பிரகடனமானது, அவரே நூலின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு ‘எப்போதும் கருத்துகளையும் ஆளுமைகளையும் வரலாற்று இயங்கு போக்குகளையும் அக்காலத்திற்குப் பின்வரும் நிகழ்ச்சிகள்தாம் கணிக்கின்றன. இது தவிர்க்க இயலாதது’ என்பதன் அடிப்படையில் நூல் முதன்முதலில் வெளிவந்த 2014க்குப் பத்தாண்டுகளுக்குப் பின்னரும் இந்நூலுக்கான தேவையும் நூல் வெளிப்படுத்தும் கருத்துருவாக்கத்தின்பாற்பட்ட உரையாடல் எழுவதற்கான சூழலும் உள்ளதை அவதானிக்கலாம். அப்படியான ஓர் ஆய்வுப்புல நோக்கில் சரி தவறுக்கப்பாற்பட்ட பார்வையில் அனைத்து வகைமாதிரிகளும் எடுத்தாளப்பட்டு அந்தந்த காலசூழலையும் கணக்கில் கொண்டு ஆராயப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய கேள்வி எழுப்புதலையும் உரையாடலைத் தொடர்வதற்கும் சிந்தனைகளை மேம்படுத்துவதற்கும் ஒரு முன்னெடுப்பை நிகழ்த்துவதையே இந்நூலின் முதன்மையான விளைவாகக் காண்கிறேன். இத்தகைய உரையாடல்கள் வழி ஏற்கனவே சொல்லப்பட்ட கோட்பாடுகளையும் தாண்டி தமிழ் சிந்தனை மரபு வளரவேண்டும் என்பதே தமிழவனின் அவாவாக இருக்கிறது.
தொடராக வெளிவந்தபோது எழுந்த விமர்சனங்கள்/
கேள்விகளுக்கான விளக்கமாகவே நூலாக்கத்தில் பின்னிணைப்பாக தமிழவனின் உரையாடல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. திராவிடம் தமிழ்த்தேசம் போன்ற கதையாடல்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தமிழ் அறிவுசார் குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு இந்நூல் வேறு ஒரு திறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | திராவிடம் தமிழ்த்தேசம் கதையாடல் (ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு) |
| ஆசிரியர்: | தமிழவன் |
| வெளியீடு: |
அடையாளம் பதிப்பகம்
|
| விலை: | ₹.260 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 அன்புச்செல்வன் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
