“ஷம்பாலா” ஓர் அரசியல் நாவல் – நூல் அறிமுகம்
“ஷம்பாலா” ஓர் அரசியல் நாவல்.
நூலின் தகவல்கள்:
நூல் : “ஷம்பாலா” ஓர் அரசியல் நாவல்
ஆசிரியர் : தமிழவன்
பக்கங்கள்: 224
விலை :₹225
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
அரசின் சிந்தனை போலீஸ் என்ற துறை, நாட்டின் முக்கியமான எழுத்தாளர்களின் செயல்கள் மற்றும் சிந்தனைகளை உளவு பார்க்கிறது. அவர்களின் சிந்தனை மற்றும் எழுத்து நாட்டுக்குப் பிரச்சினையை தரக்கூடும் என்று. அது போல் அமர்நாத் என்ற எழுத்தாளரின் வீட்டுக்குச் சிந்தனை போலீஸ் துறை விசாரணைக்கு வருவதில் நாவல் தொடங்குகிறது. அரசு பல்வேறு வகைகளில் மிரட்டல் கொடுத்து அமர்நாத் குடும்பத்தை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.அதே போல் அமர்நாத் நண்பர் சுரேஷ் என்பவரும் ஒரு எழுத்தாளர். அவரும் சிந்தனை போலீஸ் கண்காணிப்பில் உள்ளவர்.
அதே நேரத்தில் இணையாக ஹிட்லர் என்ற சிறுவனின் கதையும் தொடங்குகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வருங்காலத்தில் ஹிட்லர் என்ற சிறுவன் அமைச்சராக மாறுகிறான். பள்ளி,கல்லூரி,காதல், அரசியல் என பல்வேறு கால கட்டங்களில் கதை நகர்கிறது.
இறுதியில் அமர்நாத், சுரேஷ் நிலை என்ன..? அரசியலில் ஹிட்லர் நிலை என்னவானது என்பது மீதி நாவல்..
நாவலை வாசிக்கும் போது பல்வேறு பிரமுகர்கள் உங்கள் மனக்கண்ணில் நிழலாடுவார்கள்.
ஷம்பாலா அரசியல் நாவல் என்ற உப தலைப்புக்கு ஏற்றாற்போல், அமர்நாத் மற்றும் ஹிட்லர் பாத்திரத்தின் இரு கதைகளும் வலது சாரி சிந்தனைகள்,இடது சாரி சிந்தனைகள் மற்றும் செயல்கள்,மத கலவரம்,ஊடகவியல் அடக்கு முறை, தலித் அடக்குமுறை மற்றும் பணியில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், சிறுபான்மை இன மக்களின் மனநிலை, பணமதிப்பிழப்பு என பெரும்பாலான அரசியல் நிகழ்வுகளைத் தொட்டுச் செல்கிறது.
நாவலில் பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் இருந்தாலும்..
குறிப்பாக ராபர்ட் என்கிற விநாயக் என்கிற… இளைஞன் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தில் சேர்ந்து ஏமாற்றப்பட்டு சிறை சென்று வெளி வந்த பிறகு தன் வாழ்வின் நிகழ்வுகளை கூறும் உணர்ச்சிகரமான காட்சி..
காவல் துறையில் உயர்ந்த பதவியில் இருந்தாலும் தலித் என்ற காரணத்தால் லக்ஷ்மன் என்ற அதிகாரி படும் வேதனைகள் மற்றும் அவமானங்கள் பற்றிச் சொல்லும் காட்சிகள்..

தன் காதல் தோற்கக் காரணமாக இருந்த காவல் அதிகாரியை பழி தீர்க்கும் இடமும், அதே காவல் அதிகாரியின் வேண்டுகோளை நிறைவேற்றுவதும் சினிமாவில் கூட பார்த்திராத புதுமையான மற்றும் புரிந்து கொள்ள இயலா மனிதனின் மனநிலை..
அமர்நாத் என்ற எழுத்தாளருக்கு அரசு உளவியல் ரீதியான தொந்தரவுகள்..
போன்ற காட்சிகளைச் சொல்லிய விதம் சிறப்பு.
அது போல் புத்தகங்களைப் பற்றி ஒரு இடத்தில் சொல்லிய, எனை கவர்ந்த வரிகள்…
“எவ்வளவு பெரிய புத்தகமானாலும் ஓரிரு நாளில் படித்துவிடுவேன். அப்படித்தான் புத்தகங்களுக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. புத்தகங்களே எனக்குத் தாயும் தந்தையும் தங்கையும் அண்ணனும் ஆனார்கள்..”
“உங்கள் புத்தகங்கள் கொஞ்சம் கடினமானவை. ஆனால் எனக்குப் பிடிக்கின்றன. யார் கடினமாக எழுதுகிறார்களோ அவை எனக்கு ஒரு கவர்ச்சியை இப்போது ஏற்படுத்துகின்றன…”
மொத்தத்தில் நாவலின் தொடக்கம் சற்றே வங்காள, மலையாள படம் பார்க்கும் உணர்வோடு தொடங்கினாலும் ,சில இயல்களுக்குப் பிறகு நாவல் வேகம் எடுக்கிறது.
ஷம்பாலா.. ஓர் அரசியல் நாவல்…
ஷம்பாலா என்ற சொல் பற்றி நூலின் முன்னுரையில்..
“ஷம்பாலா என்ற சொல் கருணையின் மையமான இடம் எனப் பொருள்படும். இச்சொல் விஷ்ணுபுராணத்தில் வருகிறது என்பர்.
ஷம்பாலா என்ற இடம் திபெத்தில் இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
உலகில் அதிகமான அதிகாரம் உள்ள இடமென்றும், அந்த இடம் உலகத்தை அழிக்கவும் ஆக்கவும் வல்லது என்றும் கூறுவர். ஹிட்லரின் ஜெர்மனியில் சமஸ்கிருதம் பரவிய போது இச்சொல் மிகப் பலரின் கவனத்திற்கு வந்தது.”
நூல் அறிமுகம் எழுதியர் :
ச. கணேசன்
“மேலும் இதுபோன்ற புத்தகங்களைப் பெற” – thamizhbook.com இணையதளம் தொடர்பு கொள்ளுங்கள்….
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

