தமிழக சட்டம் ஒழுங்கு: பாஜகவின் அப்பட்டமான அரசியல் நாடகம்..!
– என்.குணசேகரன்
திமுக ஆட்சியில் “சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது”, “பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு இல்லை”, “காவல்துறை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” “இது ஆட்சியின் “நிர்வாகத் தோல்வி” என்றெல்லாம் குய்யோ முறையோ என்று பாஜகவினர் கூக்குரலிடுகின்றனர். அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இவ்வாறு பேசுவது தேர்தலில் வாக்கு அறுவடை செய்வதற்கான முயற்சியே.போதாக்குறைக்கு,பிரதமர் மோடியும் காணொளி வாயிலாக பேசிய போது “திமுக ஆட்சியில் பெண்கள் சிறுமிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது; போதை பொருள் விற்பனை கட்டுக்கடங்காமல் உள்ளது” என்று ‘வருத்தப்பட்டார்’.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றிய பாஜகவின் விமர்சனங்கள், தார்மீக அடிப்படையற்றவை மட்டுமல்ல, அவை அப்பட்டமான அரசியல் நாடகம். தாங்கள் ஆட்சி நடத்தும் வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும், மனித உரிமை மீறல்களையும் கட்டுப்படுத்தத் தவறிய ஒரு கட்சிதான் இந்தக் குற்றச்சாட்டுக்களை பிரச்சாரம் செய்கிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை,பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் பெரும் அளவில் நடக்கின்றன என்பதை மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் பாஜக தலைவர்கள் இப்படி பேசி வருகின்றனர்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இப்பிரச்சனையை எழுப்பினார். முதலமைச்சர் 2024-இல் தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் 6.8% குறைந்துள்ளதாகவும்,பழிவாங்கும் குற்றங்கள் 42.7 சதவீதம் குறைந்துள்ளது என்றும் புள்ளி விவரங்களைக் குறிப்பிட்டார்.காவல்துறையின் உறுதியான நடவடிக்கைகள் காரணமாக குற்றங்கள் குறைந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் இருந்ததை விட குறைவு என்பதை அவர் சுட்டிக் காட்டினார். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் மற்றும் மாநில உள்துறை அதிகாரிகளின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி வாதிட்ட முதல்வரின் கருத்துக்களுக்கு எதிர்க்கட்சியினரிடமிருந்து உருப்படியான பதில்கள் எதுவும் வரவில்லை.
பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!
தமிழ்நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களின் விகிதம் பல வட மாநிலங்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது. 2023-ல் தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் பெண் மக்கள் தொகைக்கு 23.2 குற்றங்கள் நடந்துள்ளன. ஆனால் தேசிய சராசரி 66.2-ஆக உள்ளது. அதாவது பாஜக ஆளுகிற 19 மாநிலங்களில் நிகழ்கிற பெண்கள் மீதான குற்றங்களின் எண்ணிக்கை விட தமிழ்நாட்டில் குறைவு என்று புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கின்றன. அந்த மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை நிலவுகிறது .
பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் (பலாத்காரம், வரதட்சணை கொடுமை போன்றவை) குறைவாகவே இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை – 2022 குறிப்பிடுகிறது.பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் தேசிய அளவில் மிக அதிக எண்ணிக்கையில் 66,381 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் தமிழ்நாட்டின் எண்ணிக்கை 8,943 .
இந்தியா முழுவதும் நடக்கும் குற்றங்களில் பாதிக்கும் மேல் பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கின்றன. ராஜஸ்தானில் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு 114 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.இது தமிழ்நாட்டின் எண்ணிக்கையான 23- விட சுமார் 5 மடங்கு அதிகம். மத்தியப் பிரதேசம்: 78.8;மகாராஷ்டிரா 76.8;ஹரியானா:110 என்றவாறு நிலைமை உள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் (பலாத்காரம், வரதட்சணை கொடுமை போன்றவை) குறைவாகவே இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை – 2022 குறிப்பிடுகிறது.இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில் பெண்களுக்காக பாஜக தலைவர்கள் பேசுவது கேலிக்கூத்தானது.
தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களில் 86% வழக்குகள் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன .இதுவும் தேசிய சராசரியை விட அதிகம்.
2023 -ல் கொலை வழக்குகள் உத்தரப் பிரதேசம்: 3,307 பீகார்: 2,862 மகாராஷ்டிரா: 2,274 எனப் பதிவாகியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் சுமார் 1,500–1,600 எனவும் 2025-ல் 1,461 எனவும் பதிவாகியுள்ளது. ஆக,பாஜக ஆளும் மாநிலங்கள் கொலை எண்ணிக்கையும் அதிகம்.
2023-அறிக்கையில் இந்தியாவில் மொத்த குற்றங்கள் சுமார் 62.4 லட்சம் (7.2% உயர்வு 2022-ஐ ஒப்பிடுகையில்);ஒரு இலட்சம் மக்களுக்கு குற்ற விகிதம் 440 என உள்ளது. அதாவது ஒவ்வொரு 5 வினாடிக்கும் ஒரு குற்றம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டை குற்றம் சாட்ட பிரதமருக்கு என்ன அருகதை உள்ளது ?
போதைப் பொருள் கடத்தல்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசும் பாஜகவினர், போதைப் பொருள் புழக்கம் மற்றும் கடத்தலில் தங்கள் மாநிலங்களின் நிலைமைகளை மறைக்கின்றனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா,மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகள் மற்றும் பிடிபடும் போதைப் பொருட்களின் மதிப்பு மிக அதிகம். குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் போன்ற இடங்கள் சர்வதேசப் போதைப் பொருள் கடத்தலின் முக்கிய நுழைவாயில்களாக மாறியிருப்பதை ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளே உறுதிப்படுத்துகின்றன.
பாஜக ஆளும் மாநிலங்களில் போதைப் பொருள் கடத்தல் ஒரு பெரும் நிழல் பொருளாதாரமாகவே வளர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் அரசு எடுத்து வரும் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது விஷயத்தில் தமிழகத்தை விமர்சிப்பதற்கு முன், தங்கள் மாநிலங்களில் பெருகி வரும் போதைப் பொருள் மாஃபியாக்களைக் கட்டுப்படுத்த பாஜக கவனம் செலுத்தட்டும்.
மார்க்சிஸ்ட் கட்சி தலையீடு
மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் புள்ளி விவரங்கள் ஒரு புறம் இருந்தாலும் குற்ற சம்பவங்கள் நிகழ்வதை முற்றாகத் தடுக்க அரசு நிர்வாகமும் காவல்துறையும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி வலியுறுத்தி வந்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த போதெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சி கண்டனததை எழுப்பியதோடு இந்த சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வந்துள்ளது. போதைப்பொருள் விற்பனை ,கொலைகள், கொள்ளைகள் சம்பவங்கள் நடந்தபோதும் உரிய நடவடிக்கை கோரி அரசாங்கத்திற்கு தனது அழுத்ததை கட்சி அளித்து வந்துள்ளது. இதனால் அரசாங்கமும் உடன் நடவடிக்கைகளை எடுத்தது.
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் பெண்கள் மற்றும் பட்டியலினப் பெண்கள் மீதான வன்கொடுமைகள் நடக்கின்றன. மற்ற மாநிலங்களை விடக் குறைவாக இருந்தாலும் அவை தடுக்கப்பட வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கட்சி தொடந்து குரலெழுப்பியும், போராடியும் வருகிறது. ஆனால் பாஜக -அதிமுக கூட்டணி இதில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முயல்வதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமென மக்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது.
தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியினர் இப்பிரச்சனையை பயன்படுத்தி மக்கள் கவனத்தை திசை திருப்பி ஆட்சிக்கு வர துடிக்கின்றனர் .பாஜக அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி ஒருவேளை தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் உத்தரப்பிரதேசம் ராஜஸ்தானில் நடப்பது போன்று சங்கப் பரிவாரங்களால் திட்டமிட்டு நடத்தப்படுகிற படுகொலைகள், கும்பல் வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிற நிலைமை தமிழ்நாட்டில் ஏற்படும். தற்போது அவ்வப்போது நிகழ்கிற குற்றங்கள் எல்லாம் திட்டமிட்டு அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆதரவோடு நடக்கும் கொடுமையாக மாறுகிற ஆபத்து உள்ளது. எனவே பாஜக -அதிமுக கூட்டணி தமிழ்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தடுக்கப்பட வேண்டும்.
நவதாராளமயத்தின் சமூகத் தாக்கம்
குற்றங்கள் நிகழ்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பாஜக அரசு தொடர்ந்து அமலாக்கி வரும் நவ தாராளமயக் கொள்கைகளின் சமூகத் தாக்கம் முக்கியமானது. இந்தக் கொள்கைகளால் வாழ்வாதார இழப்புக்கள் நிகழும் சூழலில் குற்றங்கள் அதிகரிக்கின்றன. பாலின சமத்துவம் போன்ற விழுமியங்கள் சித்தாந்த ரீதியில் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்துத்துவ சித்தாந்ததில் பாலின சமத்துவத்திற்கு இடமில்லை என்பது மட்டுமல்ல;மனு சட்டம் அடிப்படையில் பெண்கள் அடிமைகளாக நடத்த வேண்டும் என்ற கண்ணோட்டம் உள்ளது.
மனு ஸ்மிருதி பெண்களின் சுதந்திரம், சமத்துவத்திற்கு எதிரானது.உதாரணமாக:
“ஒரு பெண் குழந்தைப் பருவத்தில் தந்தையிடமும், இளமையில் கணவனிடமும், முதுமையில் மகனிடமும் பாதுகாப்பு பெற வேண்டும்; அவள் சுதந்திரமாக இருக்கக் கூடாது.” (மனு ஸ்மிருதி 9.3)
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாலினப் பாகுபாடற்ற சமத்துவத்தை பேசுகிற நிலையில் சங்கப்பரிவாரங்கள் மனு வலியுறுத்தும் பெண்ணடிமைத்தன பார்வையை தூக்கிப் பிடிக்கின்றனர். தமிழ்நாட்டில் கம்யூனிச இயக்கமும் திராவிடக்கருத்தியலும் பாலின சமத்துவத்தை உயர்த்திப் பிடித்து வந்துள்ளன.
சட்டம் ஒழுங்கு குறித்த பாஜகவின் அக்கறை என்பது உண்மையில் மக்களின் பாதுகாப்பு சார்ந்தது அல்ல; மாறாக, இந்துத்துவ சித்தாந்தத்திற்கு எதிரான தமிழகத்தின் முற்போக்குச் சூழலைச் சிதைக்கும் முயற்சியே.தமிழகத்தின் முற்போக்கான பாரம்பரியத்திற்கு விரோதமான அதிமுக-பாஜக கூட்டணியை தேர்தலில் முறியடிப்பது தமிழக வாக்காளர்களின் கடமை!
========================================================.
எழுதியவர்:
– என்.குணசேகரன்
மத்தியக்குழு உறுப்பினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

