கம்பம் சந்திப்பு: புத்தக வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் மாதாந்திர நிகழ்ச்சி - தேனி சுந்தர் | தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - www.bookday.in

கம்பம் சந்திப்பு: புத்தக வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் மாதாந்திர நிகழ்ச்சி – தேனி சுந்தர்

தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சார்பில் புத்தக வாசிப்பு மற்றும் கலந்துரையாடலுக்காக மாதாந்திர நிகழ்ச்சியாக “கம்பம் சந்திப்பு” தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சந்திப்பின் 30வது அமர்வு நேற்று (மே 30 சனிக்கிழமை முற்பகல்) ஜே கே பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள, இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற, தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் நூல் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நூல் தமிழ்ச் சிறுகதையின் ஒரு நூற்றாண்டு வரலாற்றில் முதல் ஐம்பது ஆண்டுகளை மட்டும் வரையறையாகக் கொண்டு எழுதப்பட்ட விமர்சன நூல். இது ஒரு முழுமையான ஆய்வு நூல் அல்ல. ஆய்வுக்கான அனைத்து அம்சங்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்டதும் அல்ல. இக்காலகட்டத்தில் எழுதிய அனைவரது படைப்புகளையும் உள்ளடக்கிய ஒன்றும் அல்ல. தோழர் ச. தமிழ்ச் செல்வன் இடது சிந்தனையாளர், எழுத்தாளர் என்பதால் அவர் தொடர்புடைய படைப்பாளிகளை மட்டும் அறிமுகப்படுத்தும் நோக்கமும் கொண்டதல்ல..

கலை கலைக்காவே, கலை இலக்கியம் யாவும் மக்களுக்காகவே எனும் இரண்டு தரப்பில் இருந்தும் அவர் வாசித்த பரந்து பட்ட நூல்களின் செய்திகளில், படைப்புகளில் தோழரின் தனிப்பட்ட, ஒரு முற்போக்கு இலக்கியவாதியின் பார்வை என்ன என்பதையே நூல் முழுவதும் பதிவு செய்திருக்கிறார்.. ஒரு படைப்பை அந்த படைப்பை மட்டும் வைத்து பார்க்காமல், அந்த படைப்பாளியின் வாழ்நிலை என்ன, சூழ்நிலை என்ன? சுற்றம் என்ன? எங்கிருந்து எதை எந்த கண்ணோட்டத்தில், யாராக இருந்து அணுகினார். அந்த படைப்புகளை அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்த சக படைப்பாளிகள், பின்னர் வந்த ஆய்வாளர்கள் எப்படி அணுகினர். இவற்றை சம்பந்தப்பட்ட படைப்பாளிகள் எப்படி பார்த்தனர். அந்த மதிப்பீடுகள் சரியானதா? போதுமானதா? என்பதை எல்லாம் மிக அழகாக எழுதியுள்ளார்.

இப்படி எழுத வேண்டும்.. பெரிய ஆய்வு நூலாக கொண்டு வந்து தன் வாழ்நாளுக்குள் ஒரு சாகித்ய அகாடமி விருதை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்பதெல்லாம் தோழரின் கனவோ இலக்கோ அல்ல.. அவர் தன் சொந்த படைப்புகளை கவனம் செலுத்தி இருந்தால் நிச்சயம் இருநூறு நூல்களை எழுதி தள்ளி இருப்பார். அவர் தான் சார்ந்த அமைப்புக்கு என்ன தேவை? தான் சந்திக்க வேண்டிய மக்களுக்கு என்ன தேவை? முற்போக்கு இலக்கிய முகாமில் தொடர்ந்து இயங்கி வரும் இளம், மூத்த படைப்பாளிகளுக்கு, என்ன விதமான புரிதல், பார்வை தேவை என்கிற வழக்கமான, தன் இயல்பான அக்கறையில் அவர் உருவாக்கி இருக்கிற ஒரு அற்புதமான கலைக் களஞ்சியம் தான் இந்நூல்.

படைப்புகளை விட, அந்த படைப்புகளில் வெளிப்படும் பார்வை மிக முக்கியமான ஒன்று. அது தான் அந்த படைப்பாளி அவரை அறியாமலேயே, அவருடைய மூளைக்குள் யாரை உட்கார வைத்திருக்கிறார்? யாராக இருந்து இவர் ஒரு கருத்தை, ஒரு படைப்பை, ஒரு பிரச்சினையை அணுகுகிறார் என்பதை தீர்மானிக்கும். அப்படியான சரியான, முற்போக்கான பார்வையை தங்களுக்குள் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் அனைத்து படைப்பாளிகளுக்கும் இந்நூல் ஒரு கையேடு என்று நிச்சயம் சொல்ல முடியும்.

படிப்பும் படைப்பும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையது. நான் எதையும் படிப்பதில்லை. என் படைப்புகள் யாவும் என் சிந்தனையில் அப்படியே சுயமாக உருவானவை என்போரும் கூட மக்களைப் படித்தவர்கள்.. மக்கள் சமூகத்தைப் படித்தவர்கள்.. சமூகம் கடந்த கால, நிகழ்கால சரக்குகள் அனைத்தையும் தன்னுள் சுமந்து கொண்டிருக்கக் கூடியது தான். தங்களுக்கென்று முற்போக்கு இலக்குகளை கொண்டிருக்கும் படைப்பாளி அப்படி இருக்க முடியாது, அப்படி சொல்லக் கூடாது. அவர் தன்னை வடிவமைத்துக் கொள்ள வாசிப்பு அவசியம். அப்படியாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தோழர் ச. தமிழ்ச் செல்வன் அவர்கள் மேற்கொண்ட வாசிப்பின் விளைச்சல் தான் இந்நூல்.

இந்த நூலை, இந்த கதையை முதன்முதலாக எழுபதுகளில் நான் வாசித்தேன் என்று நிறைய இடங்களில் தோழர் சொல்கிறார். ஆக அவரது வாசிப்பின் வயதை நாம் அறிந்து கொள்ள முடியும். அந்த வரியிலேயே இன்னொரு செய்தி இருக்கிறது. “முதன்முதலாக வாசித்தேன்” என்கிறார். அப்போ, மறுவாசிப்பு, மீள்வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் தோழர் சொல்கிறார்.

சாகித்ய அகாதமி விருது பெற்றதால் இந்த நூல் கொஞ்சம் கூடுதலான கவனம் பெறும். ஒரு வெளிச்சம் கிடைக்கும். நம்மை இதுவரை அறியாத சிலரும் கூட புத்தகத்தை வாங்கி வைக்க, வாசிக்க ஒரு வாய்ப்பு என்பதைத் தாண்டி வேறொன்றும் பெருமை இல்லை.. லட்சம் பேர் வாழ்த்து சொல்வார்கள். சில ஆயிரம் பேர் நூலை வாங்குவார்கள். சில நூறு பேராவது அதை உள்ளார்ந்து வாசிப்பார்கள். அப்படி பரவலாக ஒரு நூல் வாசிக்கப் படுவது தான் உண்மையான கொண்டாட்டம் என்பது போல தோழர் தமிழ்ச் செல்வன் அவர்கள் சில நேர்காணல்களில் பேசி இருக்கிறார். மிக யதார்த்தமாக, உண்மையைப் பேசுகிறார்.

அந்த சில நூறு பேரில் நாமும் இருப்போம் என்ற வகையில் “தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” நூலை இந்த மாத வாசிப்பிற்கு எடுத்துக் கொண்டோம். நூல் முழுமைக்கும் வாசிப்பதும் அதைக் கூட்டத்தில் பகிர்வதும் சிரமமான ஒன்று அடிப்படையில் பத்து பேர் மட்டுமே பேசுவது என்று திட்டமிட்டுக் கொண்டதன் அடிப்படையில் திராவிட இயக்க படைப்பாளிகள் பற்றி திலீபன், பெண் படைப்பாளிகள் பற்றி ஆபிதா பர்வீன், கவிதா, சுந்தர ராமசாமி – முத்துக்கண்ணன், கந்தர்வன் – லட்சுமண குமார், இன்குலாப் – மணியரசன், நாஞ்சில் நாடன் – வெங்கட்ராமன், ஜானகிராமன் – முரளி ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். நிகழ்விற்கு தலைமை வகித்த நானும் ஒருவரை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்ற வகையில், சிறுகதைகள் தொடர்பான எல்லாவிதமான பட்டியலிலும் கவனமாக தவிர்க்க பட்ட படைப்பாளி என்று தோழர் தமிழ்ச் செல்வன் குறிப்பிட்டுள்ள தொ.மு.சி.ரகுநாதன் அவர்களை இந்த சிறு அமர்வில் விடுபடாமல் பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு அவரைப் பற்றி பேசினேன். ஒரு படைப்பாளிக்கு பொது விமர்சனப் பார்வையும் சுய விமர்சன உணர்வும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அந்த அத்தியாயம் ஒரு முன்னுதாரணம்..!

இந்த சிறு அமர்விலேயே குறைந்தபட்சம் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள் பற்றிய செய்திகள் பகிர்ந்து கொள்ளப் பட்டிருக்கின்றன. தோழரின் 50 ஆண்டுகால சிறுகதைகள் பற்றிய பார்வையை, அவரது ஐம்பது ஆண்டுகால வாசிப்பை, இந்நூலுக்காக அவர் வாசித்த 6500 சிறுகதைகளின் சிறு முன்னோட்டத்தை, பின் குறிப்பில் அவர் சொல்லி இருக்கும் 200 நூல்களின் இளம்சூட்டை, ஒரு காலப் பயணம் சென்று பார்த்து வந்த மிக நிறைவான ஒரு சந்திப்பாக அமைந்தது.

📚 எழுதியவர்:

– தேனி சுந்தர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *