சிறுகதை: ஓட்டம் தீட்டம் – அய்.தமிழ்மணிஓட்டம் – ஒன்று

அனுசுயா சுதாகரின் முதுகில் தன் பூக்கரங்களால் தட்டிக்கொண்டே இருந்தாள். அவனுக்கு அவளின் தட்டுதல் ஒருவிதமான இனம்புரியாத நிம்மதியைக் கொடுத்தது. இருவரும் காதலர்கள் தான்., இதுவரை ஒருவரையொருவர் தொட்டுப் பேசாத காதலர்கள். கண்களாலேயே அதிகம் பேசிக் கொண்டவர்கள். நேரில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தாலும் ஒரு சில வார்த்தைகளும் சிறு சிறு புன்னகைகளும் அவர்களது நேரத்தை நிரப்பிக் கொண்டுவிடும்.

அவன் இதயம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. முதன் முறையாக அவன் மேல் அவளது கை படுகிறது. இது அவனுக்கு புதிய அனுபவமாய் இருந்தது. ஆனால் அனுசுயாவிற்கு அப்படி அல்ல. தன் ஒற்றை வார்த்தைக்கு அவன் மறுப்பேதும் தெரிவிக்காமல் உடன் வந்துவிட்டான். இதற்குப் பின்னால் என்ன மாதிரியான சம்பவங்கள் நடக்கப் போகிறதோ என்கிற பதட்டம் அவளுக்குள் படபடத்துக் கொண்டிருந்தது. காற்றின் கோதலில் குழந்தையைப் போல சிணுங்கும் அவனது தலைமுடி அவன் அவள் மீது வைத்திருக்கும் அன்பிற்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்தது.

அவர்கள் இருவரையும் சுமந்துகொண்டு அந்த பைக் கரிய நெடுஞ்சாலையின் மீது நூலாய் வரையப்பட்ட வெள்ளைக்கோடுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு விரைந்து கொண்டிருந்தது. அனுசுயா அவன் முதுகில் தட்டுவதை நிறுத்தாமல் சீரான இடைவெளியில் தட்டிக் கொண்டே இருந்தாள். அவள் மனசு அப்படி இருக்கவில்லை. மனசு தன் நிலையாமையைக் கட்டுப்படுத்த அவளது கைகளை தன் கரமாக்கிக் கொண்டது. சுதாகர் சாலையில் கவனமாய் இருந்தான் அவளது செய்கைக்கு மெல்லிய புன்னகையைப் பரிசளித்தவாறு.

குலம் காத்த அம்மன் கோவில் திருவிழாவிற்கு அந்த சுற்றுப்பகுதி கிராம மக்கள் எல்லாம் முன்முனைப்பாக இருந்தார்கள். முந்நூறு ஆண்டுகால பழமையான அந்த அம்மன் கோவில் ஊரிலிருந்து அரைக்கிலோமீட்டர் தூரம் தள்ளியிருந்தது. ஒரு வாரத் திருவிழாவாகக் குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டுமே முன்னெடுத்துக் கொண்டாடுகிற விழாவாக இருந்தாலும் சுத்துப்பட்டு அனைத்து கிராமத்தின் அனைத்து சாதியினரும் ஒன்றுபட்டுக் கொண்டாடும் விழா. வாரத்தின் நாளொன்றுக்கு அந்தக் கிராமத்தில் வாழும் முன் சாதியினருக்கு முறைப்படி மரியாதை செலுத்தப்படும்.

செவ்வாய்க்கிழமை நடு இரவு வாக்கில் ஆண்களாகச் சேர்ந்து அம்மன் சிலையை குயவர் வீட்டிலிருந்து  எடுத்து வர., கோயிலின் கர்ப்பத்தில் வைத்து புதன்கிழமை நடு இரவு தொடங்குவதற்கு முன்வரை அம்மனுக்கான எல்லாம் செய்து கொண்டாடுவார்கள். பின் திரும்பவும் ஆண்களாகச் சேர்ந்து சிலையைக் கர்ப்பத்திலிருந்து தூக்கி ஊருக்குள் வலம் வந்து கடைசியாக குளத்தில் வைத்து ஆளும் பேருமாய் விளக்குமாத்தால் அடித்து கரைத்துவிட்டு பயபக்தியாய் வீடு வந்து சேர்வார்கள். இப்பொழுதெல்லாம் முன்புபோல் விளக்குமாத்தால் அடிக்காமல் கட்டையை வைத்து அடித்துக் கரைக்கிறார்கள்.

அதென்னய்யா சாமிக்குன்னு தனிப்பேரு இல்லாம குலம் காத்த அம்மன்னு கேட்டால் அதற்கு பலகதைகளைக் கடந்த முந்நூறு ஆண்டுகாலமாக இப்பொழுது வரை பெருமை கொள்ளும்படியாய் சொல்லி வந்தார்கள்.

விழா களைகட்டிக் கொண்டிருந்தது., இன்று புதன்கிழமை அம்மனைத் தூக்கிக் கரைக்கும் தினம். பெண்கள் விளக்குப் பூஜை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்தார்கள். கோவிலில் ஆண்கள் மட்டும் மேளதாள வாத்தியங்குளுடன் தயாராகிக் கொண்டிருந்தார்கள். சில பெரிய மனுஷிகள் மட்டும் அங்கேயே இருந்து குலவையிட பூசாரி கர்ப்பத்திலிருந்து அம்மனைத் தூக்கி ஆட…

ஆசாரம் குலையக்கூடாது சாமி என்ற குரலுக்கு அம்மன் கரைப்பு ஊர்வலம் தொடங்கியது. ஊருக்குள் நுழைந்து அப்பால் இருக்கிற குளத்தை நோக்கி அம்மன் நகர அருள்பாலிப்பு பெற்றுக் கொண்ட பெண்கள் வீடடங்கினார்கள். ஆண்கள் கூட்டம் ஆர்ப்பரித்தவாறு குளத்தை நோக்கி அம்மனோடு சென்றது.

ஊரின் எதிர் எல்லையில் சுதாகர் பைக்கோடு காத்துக் கொண்டிருந்தான். அனுசுயா அவள் அம்மாவோடு வந்து சேர்ந்தாள்.

“பத்திரமா பாத்துக்கய்யா.. எங்கயாவது கண்காணாத எடத்துக்குப் போயிருங்க..” அனுசுயாவின் அம்மா அழுதுகொண்டே சொல்ல..

“பாத்துக்கிறேம்மா..” என்ற சுதாகர் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டான். கண்ணீர் முட்டி நிக்கிற கண்களோடு அனுசுயா அம்மாவிற்கு விடைகொடுத்தாள்.

இவர்களின் பதட்டம் தெரியாத பைக்  சாலையோடு காதல் கொண்டு பயணித்துக் கொண்டிருந்தது.ஓட்டம் – இரண்டு

அந்த அதிகாலை இருட்டில் ஊரைத் தாண்டியிருக்கும் அந்த அடர்த்தியும் அடர்த்தியிமில்லாத காட்டுக்குள் கன்னியம்மையும் சுப்பனும் ஓடிக்கொண்டிருந்தார்கள். கன்னியம்மை சுப்பனின் கையை இறுகப் பற்றியவாறு இழுத்துக்கொண்டு ஓடினாள். இவனும் அவள் பின்னாலேயே அரக்கப்பரக்க ஓடினான். தேய்ந்த அரை நிலவு மட்டுமே இவர்களுக்குத் துணையாய் மேகங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தது. கன்னியம்மையின் சொந்தக்காரர்களும் சாதிக்காரர்களும் இவர்களைத் தேடியவாறு தீப்பந்தங்களோடும் லாந்தர்களோடும் விரட்டி ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது கைகளிலிருக்கும் கத்தி, அரிவாள், ஈட்டி, கட்டைகளை விட அவர்களது முகம் கொடூரமாய் இருந்தது. உள்ளத்தில் ஏறிக் கொக்கரிக்கும்  வெறி அவர்களின் முகங்களில் எதிரொலித்தது. இவர்களின் முகங்களைப் பார்க்கச் சகிக்காத நிலா கரிய மேகங்களுக்குள் அடிக்கடி பயந்து மறைந்து ஓடியது. நிலவோட்டத்தின் வெளிச்சமும் இருளும் மாறி மாறி வர அதைக் கணக்கில் கொண்டு அமர்ந்தும் நிமிர்ந்தும் ஓடிக் கொண்டிருந்தார்கள் கன்னியம்மையும் சுப்பனும்.

ஒரு சின்ன வெளிச்ச இடைவெளியில் விரட்டியவர்களில் ஒருவன் அவர்களிருவரையும் கண்டுவிட்டு கத்தினான். அவர்களிருவரையும் இவர்கள் வேட்டை நாய்களைப் போலச் சுத்து போட்டு பிடித்துவிட்டார்கள்.

அந்தக்காட்டின் மையத்திலிருக்கும் அந்தச் சிதிலமடைந்த கல்மண்டபத்தின் மையத்தில் கன்னியம்மையும் சுப்பனும் ஓடிய தவிப்பு அடங்காமல் இரைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள். தேடி வந்தவர்கள் அவர்களைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள் தங்கள் வேட்டையைச் சுவைக்கக் காத்திருக்கும் ஓநாய்களாய்.

சுப்பன் பலிபீடத்திலிருக்கும் ஆட்டுக்குட்டியைப் போல பேந்தப் பேந்த திகைத்து நின்றான். அவனுக்குள் இருக்கும் ஒரே எண்ணம் தான் செத்தாலும் பரவாயில்லை கன்னியம்மைக்கு மட்டும் ஒன்றும் ஆகிவிடக்கூடதென்பது மட்டுமே. ஆனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். கன்னியம்மையோ சினம் கொண்ட சிறுத்தை போல அவர்களை எதிர்நோக்கி நின்றிருந்தாள். அவளது பார்வையில் ஆயிரம் எரிமலைகள் வெடித்துக் கிளம்பக் காத்திருந்தன. செத்தாலும் பரவாயில்லை இவர்கள் அனைவரையும் கொன்று கிழித்துவிட்டுத் தான் சாவேன் என்று தகித்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் அவளது ஈரக்கொலைகளும் இதயமும் சுப்பனோடு எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டுமென்று தவித்துக் கொண்டிருந்தன. சுப்பனை இறுகப் பற்றிய அவளது கை அவர்களின் வெறிப் பார்வையால் இன்னும் இறுக்கமானது.

“அவங்கைய விடுடி முண்ட..” இந்த வார்த்தைக் கன்னியம்மையை ஒன்றும் செய்யவில்லை. அவள் அமைதியாய் இருந்தாள். அவளது கோபம் மட்டும் இன்னும் தீர்க்கமாகி சுப்பனின் கரத்தை இன்னும் அழுந்தப் பிடித்தவள் அவனைத் தனக்குப் பின் தள்ளி மறைத்தாள்.

“அவ திமிரப் பாத்தியா., பத்துப் பேரு நிக்கிறோம்., தாங்குவாளா., என்னாத் தெனாவெட்டு..”

“அவனச் சொல்லனும்ய்யா., இந்த ஓடுகாலிச் சிறுக்கி கூப்ட்டா., வந்துருவானா., தராதரம் வேணாம்., மொதல்ல அவனப் போடணும்ய்யா.. ங்கொம்….ள” சொன்னவன் விருட்டென்று பாய்ந்து சுப்பனை வெட்ட முனைந்தான். இடதுகாலை தரையில் அழுந்தப் பதித்து வலது காலால் வந்தனை நெஞ்சில் ஓங்கி எத்தினாள் கன்னியம்மை. எத்தனை ஆண்டு கால பெண்களின் துடிப்போ அத்தனையும் சேர்ந்து உதையாய் அவன் மீது பாய்ந்தது. பத்தடி தள்ளி விழுந்தவன் அதிர்ச்சியும் கோபமுமாய் எழுந்தான். இவன் தான் சுப்பனும் கன்னியம்மையும் ஓடியதைத் துப்புக் கொடுத்தவன்.

“தே..டியா முண்ட., ஊர்க்காவக்காரன் அவெம்., ம்.. ஆம்பளன்னு பாக்காம..” என சுற்றியிருந்தவர்கள் மொத்தமாய் கன்னியம்மையின் மீதும் சுப்பன் மீதும் விழுந்தார்கள்.

கன்னியம்மைக்குப் பின்னாலிருந்த சுப்பன்., இவர்கள் பாய்ந்ததும் அவளைத் தரையில் உட்கார வைத்து தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் போர்த்துவது போல் அவளைத் தன் உடம்பால் மறைத்துப் படர்ந்தான்.

“ஏன்டாத் தொன்ன., ஒனக்கு அம்புட்டுத் தைரியமா..” என்றவாறு சுப்பனின் முதுகில் ஆயுதங்களால் வரிந்தார்கள். சுப்பன் சக்கை சக்கையாய் சாய்ந்து விழுந்து துடிக்க முடியாமல் துடித்தான்.

கன்னியம்மை ஓவென்று அலறினாள். அவளது  வாயைப் பொத்தித் தூக்கிக் கொண்டு அந்த காட்டின் புதருக்குப் பின்னால் மறைந்தார்கள். வானத்தில் பாம்பெனத் திரண்ட மேகங்கள் நிலவை விழுங்கிக் கொண்டிருந்தன.

“ஏலா முண்ட.. நம்ம சாதியில் ஆம்பளயே கெடக்கிலயா உனக்கு.. இங்கவாரு எத்தன பேரு இருக்கம்ன்னு..” என்றவாறு அவரவர்கள் வேட்டியை அவிழ்த்தெரிந்தார்கள். அந்தக் காட்டு மரங்கள் காற்றின் வேகத்தில் ஊய் ஊய் எனக் கத்தின.

ஆரம்பத்தில் அலறிய கன்னியம்மையின் அலறல் சத்தம் கீனமான முனகலாக மாறி உயிர் அந்த வெறியர்களிடமிருந்து  வெளியேறிக் கொண்டிருந்தது.

தூரத்தில் கேட்ட கன்னியம்மையின் அலறலில் சுப்பன் ஏற்கனவே உயிரை விட்டிருந்தான்.தீட்டம் – ஒன்று

அதிகாலை மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. காவல் நிலையத்தில் மூன்று கான்ஸ்டபிள் மட்டுமே இருந்தார்கள்.

அந்த இன்ஸ்பெக்டர் ஹெஹ்ஹேவ் என தன் ஒற்றைச் சிரிப்பை குரூரம் கொண்ட ஓநாயைப் போல உதிர்த்துவிட்டு வகையாய் சிக்கிக்கொண்ட முயல்குட்டியைப் போல தன் முகத்தைனை வைத்துக் கொண்டவர் தனது நாற்காலியில் சவுகர்யமாய் அமர்ந்து கொண்டார்.

அந்தச் சிரிப்பு நல்லதாகப் படவில்லை இன்ஸ்பெக்டருக்கு எதிரே பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்த அனுசுயாவிற்கும் ஜட்டியோடு தரையில் குத்தவைத்து உடகார்ந்திருக்கும் சுதாகருக்கும்.

டேபிளில் இருந்த வாக்கிடாக்கி இரவு நேரப் பணி குறித்து ஆணைகளை வழங்கிக் கொண்டும் தகவல்களைக் கேட்டுக் கொண்டும் இரைந்து கொண்டிருந்தது.

”இது வேற.. நொய்யி நொய்யின்னுட்டு..” வாக்கிடாக்கியின் சத்தைத்தைக் குறைத்தார் இன்ஸ்பெக்டர்.

“என்னப்பா எங்க இருக்கீங்க..”

“வந்துக்கிட்டே இருக்கோம்., இப்ப வந்துருவோம்..”

“வேகமா வாங்கய்யா., ஸ்டேசன்ல நம்மாளுக கான்ஸ்டபிள் மட்டுந்தான் இருக்காய்ங்கே., நேரமாச்சுன்னா மத்தாளுகளும் வந்துருவாய்ங்கே., பெறகு எல்லாங்கெட்டுப் போச்சுன்னா என்னையச் சொல்லப்புடாது..” இன்ஸ்பெக்டர் செல்போனைத் துண்டித்தார்.

“இங்கவாருங்கப்பா., இவ்வளவு லேட்டாவா வர்றது.,” ஸ்டேசன் வாசலில் காத்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சலித்துக் கொண்டார்.

“எங்க அந்தத் தே..டியா முண்ட..” என்றவாறு அனுசுயாவின் அண்ணன் சுவரில் குத்திக் கொண்டு வேகமாய் உள்ளே நுழைந்தான்.

“யோவ் மாப்ள., நம்ம பிள்ளைய ஏங் கோவிக்கிற., மனசக் கெடுத்தவனுக்கு மரணவலியக் கொடுக்கணும்ய்யா..” போகிற போக்கில் ஸ்டேசனில் ஏதாவது தன் கையமீறி ஏடாகூடமாகி விடக்கூடாதென நினைத்த இன்ஸ்பெக்டர் வந்தவர்களை அமைதிப்படுத்தி ஹாலில் அமர வைத்தார். அவர்கள் ஒருவரும் அமரவில்லை.

“பெறகென்ன அப்படியே நில்லுங்கய்யா., நானும் இப்படியே ஒக்காந்திருக்கேம்., நீங்க போட்ட போனுக்கு ஓடி ஓடி அதுகளக் கண்டுபிடிச்சு சொன்னேன்ல., நல்ல மரியாத கொடுக்குறீங்கய்யா..” இன்ஸ்பெக்டரின் ஆவேசப் பேசுக்கு அமர்ந்தார்கள்.

“யோவ் ஒன் நாட் டூ., என் ரூமில இருக்குற அந்தப் பொண்ண மட்டுங் கூப்பிட்டு வாய்யா..” என்றவர்., வந்தவர்களைப் பார்த்து.,

“பிரச்சன ஏதும் பண்ணாம நம்ம பொண்ண மட்டுங் கூப்பிட்டுப் போங்க., மத்தத நாம்பாத்துக்கிறேம்..” என்றார்.

“அதெப்படிங்க., அந்த சாதிகெட்ட பயலக் கொல்லாம., புள்ளையக் கூப்புட்டு போக மாட்டோம்..” கூட்டத்திலிருந்த ஒருவன் கத்தினான்.

“யோவ் சும்மாருங்கய்யா., வாயில ஏதாவது வந்துரப் போகுது., இம்புட்டுப் பேசுறவெம் புள்ளைய ஒழுக்கமா வளக்கணும்யா., அவளுக்கு அந்த சாதிகெட்ட பயலத்தானப் புடுச்சிருக்கு., இங்கவாருங்க இது போலிஸ் ஸ்டேசன் மொறப்படி பாத்தா அவங்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்து கல்யாணம் பண்ணி வைக்கிறதுதேன் எங்க வேல., ஆளாளுக்குப் பேசிக்கிட்டே போனா முடிவு வராது. நாஞ்சொல்றதக் கேளுங்க.,”

“சொல்லுங்க மாமா..” என்றான் அனுசுயாவின் அண்ணன் இயலாமையின் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு நெஞ்சை நிமிரத்தியவாறு.

“பொண்ணக் கூப்பிட்டுப் போங்க., ஊருல போயி என்ன வேணாலும் பண்ணிக்கங்க., அந்தப் பயல நாம்பாத்துக்கிறோம்.”

“இம்புட்டுத் தூரம் வந்தது பொண்ணக் கூப்பிட்டுப் போறதுக்கு மட்டுமில்ல., பெறகெதுக்கு எங்களுக்கு மீச., அப்படியே போனா வீட்டுப் பொம்பளைகளே செரச்சு விட்டிருவாளுக., அவன வகிராம விடமாட்டோம்..” திரும்பக் கத்தினார்கள்.

கடுப்பான இன்ஸ்பெக்டர்..

“ஆமா., நீங்க செரைக்க விட்டுட்டாலும்., சரி உசிரு போயிராம நாலு தட்டு தட்டிட்டுப் போங்க., ஏதோ ஒங்க கோபத்துக்கு தீனியாதேம் இதச் சொல்லுறேன்., இதேஞ்சோலின்னு கொன்னுபுடாதீங்கய்யா..”

“ஒன் நட் டூ., அந்தப் புள்ளைய வெளில கூப்புட்டு வாய்யா., அப்படியே அந்தப் பயல லாக்கப்புல போடு இவய்ங்க நாலு சாத்து சாத்தட்டும்., மத்த ரெண்டு பேர உள்ள வரச் சொல்லிட்டு நீ வெளில காவலுக்கு நில்லுய்யா..”

இவர்களின் பேச்சுக்கள் அனுசுயாவையும் சுதாகரையும் நிலைகுலைய வைத்தது. அவள் அப்படியே அவனைக் கட்டிக் கொண்டாள்.

“ப்ளீஸ் நீ போயிடு., இல்லன்னா ஒன்ன இங்கேயே கொன்றுவாய்ங்கே..” அவளிடம் கெஞ்சினான் சுதாகர்.

“செத்தா ரெண்டு பேரு ஒன்னாச் சாவோம்..” என்றாள் அனுசுயா. அவளது கண்கள் நீர் வற்றி வார்த்தைகள் மட்டும் அழுது கொண்டிருந்தன.

கட்டிப் பிடித்திருந்தவர்களை கான்ஸ்டபிள் பிரித்தார். பிரிக்க முடியாமல் கத்தினார். சுதாகரை இறுகப் பற்றிக் கொண்டிருந்தாள் அனுசுயா.

“சார் ரெண்டு பேரும் கட்டிப் பிடிச்சுக்கிடாக சார்., பிரிக்க முடியல..” என்ற குரலுக்கு கூட்டமாய் அறைக்குள் நுழைந்தார்கள்.

பக்கத்திலிருந்த லத்தியை எடுத்து அனுசுயாவின் மண்டையில் ஓங்கி அடித்தான் அவள் அண்ணன். மயங்கிச் சாய்ந்தாள். சுதாகர் அலறிக் கொண்டு அவன் மீது பாய்ந்தன்.

பாய்ந்தவனை கீழே தள்ளி மிதிமிதியென மிதித்தார்கள். மயங்கினான். காறித் துப்பினார்கள்.

“தே…டியாப் பய..”

”யோவ் புள்ளையத் தூக்கிட்டுக் கெளம்புங்கய்யா., மத்தத் ஊர்ல பேசிக்கிறலாம்.. இவன நாம்பாத்துக்கிறேம்..” இன்ஸ்பெக்டரின் குரலுக்கு அவர்கள் அனுசுயாவைக் கொத்தாய் தூக்கிக்கொண்டு., ஸ்டேசன் சுவற்றில் போட்டோவுக்குள் சிரித்துக் கொண்டிருந்த பொக்கைவாய் கிழவனையும் தீர்க்கப்பார்வை நீலக் கோட்டுக்காரனையும் தங்கள் தலையைக் குனிந்தவாறு சாதாரணமாகக் கடந்து கிளம்பினார்கள்.

சந்தேகத்தின் பேரில் விசாரணக்கு அழைத்துவரப்பட்ட இளைஞர் வயிற்றுவலி தாங்காது தூக்கு மாட்டிக் கொண்டதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பப்பட்டது. சுதாகர் மயங்கிக் கிடந்தான்.

அனுசுயாவை ஏற்றிக் கொண்ட வண்டி கிளம்பியது.

“யோவ் மாப்ள புள்ளைக்கு மூச்சு நின்னு போச்சுய்யா..”

“சாகட்டுங் கண்டா…லி..” என வெறுப்பாய் முனுமுனுத்தான் அனுசுயாவின் அண்ணன்.

பொழுது விடிய கிராமத்திற்குள் வண்டி நுழைந்தது., யாருக்கும் தெரியாமல் அனுசுயாவின் உடம்பை வீட்டிற்குள் இறக்கிக் கிடத்தினார்கள். பேரழுகையோடு ஓடிவந்த அவள் அம்மாவையும் அழுகையையும் பார்வையாலேயே அடக்கினார்கள்.

இரண்டொரு நாள் கழித்து திடீரென்று அனுசுயா இறந்துவிட்டதாக சொந்தங்களுக்குத் தகவல் சொல்லி அனுப்பினார்கள்.

அனுசுயாவின் இறப்பை..

“நல்ல புள்ள., நல்லாதேன் இருந்தா., சாமிகும்பிடு நேரத்துல எந்தக் காத்துக் கருப்பு அடிச்சுச்சுன்னு தெரில்ல திடீருன்னு செத்துப் போனா.. எல்லாம் அந்தக் குலம் காத்த அம்மனுக்குத்தேம் வெளிச்சம்” என ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.

சுடுகாட்டில் அனுசுயா வெந்து கொண்டிருந்தாள்., அவள் நெஞ்சுக்கூடு காதலைச் சுமந்து கொண்டு கனன்று கனன்று எரிந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் சமமாய் வீசும் காற்றின் வேகத்தை சமாளித்துக் கொண்டு கிடைத்தை எல்லாம் எரித்து விழுங்கிவிடுகின்ற அந்தத் தீ தனது நாவுகளை நாலாபக்கமும் சுழற்றிக் கொண்டிருந்தது.தீட்டம் – இரண்டு

ந்த வட்டத் திட்டு அமைந்திருக்கும் மைதானத்தில் கிராமமே கூடியிருந்தது கன்னியம்மையின் சாதிசனம் அனைவரும் திரண்டிருந்தார்கள். அவளின் குடும்பம் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தது. சுப்பனின் குடும்பம் மைதானத்தின் வெளியே கூனிக் குறுகியபடி பயத்துடன் இருந்தார்கள். அவர்களது சொந்தங்களும் உடன் இருந்தார்கள். அவர்கள் கோபமெல்லாம் சுப்பன் மீதிருந்தது., படியளக்கிற குடும்பத்துல இப்படி செஞ்சுட்டானே என. 

எல்லா சாதிப் பெருசுகளும் பஞ்சாயத்திற்கு திட்டில் அமர்ந்திருந்தார்கள். கன்னியம்மையின் சாதித் தலைவர் தான் தலைமைப் பஞ்சாயத்துக்காரர். அவர் வந்ததும் எல்லோரும் எழுந்து நின்றார்கள். அவர் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தார். நடந்ததெல்லாம் அவருக்குத் தெரியும். ஊர்காவக்காரன் முதலில் தகவல் சொல்லியது அவருக்குத்தான்.

பஞ்சாயத்து தொடங்கியது.

”அய்யா எங்களுக்கு ஒன்னுந் தெரியாதுய்யா.,  புள்ளையையும் எழந்துட்டு நிக்கிறோம்யா..” என சுப்பன் ஆட்கள் அழுதார்கள்.

”ம்.. ம்.. எல்லாந் தெரியும் அமைதியா இருங்க..” என்று அதட்டினார்.

”ஊர்ப் பெரிய சாதிக்காரக எல்லாம் கூடிப் பேசி முடிவெடுத்துட்டோம்.. இதுல விசாரிக்கிறதுக்கு ஒன்னுமில்ல.. ஒன்னுமின்னா இருக்குற ஊரு., தீர்ப்பு யாருக்கும் பாதகமா இருக்காது..”என்றவர் கொஞ்சம் செருமிக் கொண்டு தொடர்ந்தார்.

”சுப்பங் குடும்பமும் சொந்தங்களும் நம்மள அண்டிப் பொழைக்கிறவக., நம்ம தோட்டம் தொரவு வீடுன்னு எல்லா வேலயயும் செய்யுறது அவகதேம். அவக இருக்கனும்ற எடம் எதுன்னு அவகளுக்கும் நல்லாவே தெரியும்., இருக்கமாட்டாம சுப்பன் பண்ணின தப்புக்கு அவகள என்ன செய்ய முடியும்., கொளுத்தவா முடியும்., அதுனால அடுத்த அஞ்சு வருசத்துக்கு அவுக சாதிசனம் நம்மகிட்ட செய்யுற வேலைக்கு கூலி கெடையாது., கூலோ கஞ்சியோ ஊத்திவிட்டுருவோம்.” என்றவாறு மீண்டும் செருமிக்கொண்டு..

”என்னங்கடா ஒங்களுக்குச் சம்மதந்தான..” எனக் கேட்டார். அவர் கேட்கிற அதிகாரத் தோரணைக்கு..

”சரிங்கய்யா சரிங்கய்யா..” என விழுந்து வணங்கி எழுந்தார்கள் சுப்பனின் சொந்த பந்தங்கள்.

” கன்னியம்மை தாய் தகப்பன் குடும்பமுங் கேட்டுக்கங்க..” என ஆரம்பித்தார் பஞ்சாயத்துத் தலைவர். மகளை இழந்த சோகமும்., மகள் கொல்லப்பட்ட விதமும் கன்னியம்மையின் அப்பாவை உலுக்கிக் கொண்டிருந்தது. கொன்னு தொலச்சாய்ங்கே பரவாயில்ல., புள்ளைய நாசம் பண்ணிட்டாய்ங்களே என்ற ஆவேசத்தின் உச்சியிலிருந்தார். அக்காரியத்தைச் செய்தவர்களுக்கு தக்க தண்டனையை பஞ்சாயத்தில் பெற்றுத் தந்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் கன்னியம்மையின் குடும்பத்துக்கே இருந்தது.

பஞ்சாயத்துத் தலைவரின் வார்த்தைக்கு பஞ்சாயத்து முன்னால் வந்த கன்னியம்மையின் அப்பா..

”நான் ஒரு விசயஞ் சொல்லனுங்க..”

”என்ன புதுசாச் சொல்லப் போறீங்க., எல்லாம் எங்களுக்குத் தெரிஞ்ச விசயந்தான..” என்றார் திட்டில் அமர்ந்திருந்த சாதிப் பெருசு ஒருவர்.

”அதில்லங்கய்யா..”

”கலங்காதப்பா அய்யா மொதத் தீர்ப்பச் சொல்லட்டும்.. அய்யா தீர்ப்புல இருந்து தப்பு செஞ்ச ஒரு பய தப்பிக்க முடியாதுல்ல., அய்யாவுக்குச் சொந்தக்கார ஆளு நிய்யி., எல்லாச் சமயமும் ஒன்னையக் கூடயே வச்சிருக்காப்ள., அய்யாவப் பத்தி ஒனக்குத் தெரியாதா., பொறுத்துக் கேளப்பா” என்றது இன்னொரு பெருசு.

” கன்னியம்மை எம்வீட்டுப் புள்ள மாதிரி., புள்ளன்னு வளர்ந்தா அப்படி வளரணும்.,” என ஆரம்பித்த பஞ்சாய்த்துத் தலைவரின் குரலுக்கு கன்னியம்மையின் அப்பா மீண்டும் இடை மறித்தார்.

”என்னய்யா..” என்று கனிவாகக் கேட்ட பஞ்சாயத்துத் தலைவர்..

”வொம் வலி புரிதிய்யா., ஒம்மக எனக்கும் பொண்ணுதேம்.. எல்லாம் நாம்பாத்துக்குறேன்..” என்றவர் சத்தமாய்த் தொடர்ந்தார்..

”ஈனசாதிப் பய ஒருத்தந் தன்னத் தொட்டுட்டானேன்னு அவனையுங் கொன்னுட்டு., தானுந் தன்னையவே குத்திக்கிட்டு செத்துப் போனா.,  புள்ள..” இப்படி சத்தமாய் கத்தியவரின் குரல் திடீரெனத் தாழ்ந்தது. கன்னியம்மையின் அப்பாவை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டு கண்ணீர் சிந்தாமல் அழுதார். அழுது கொண்டே இருந்தவர் படாரெனத் திரும்பி அதே வேகத்தில் உரக்கக் குரலெடுத்து..

”பொம்பளப் புள்ளைய வளத்தா இப்படி வளக்கனும்ய்யா., நம்ம சாதிப் பொம்பளைகளுக்கு கற்பு முக்கியம்ன்னு செத்துப் போனாய்யா., நம்ம சாதிப் பொம்பளைகளுக்கு இவதாய்யா முன்னோடி.. நம்ம மானத்தையும் மரியாதையயும் காப்பாத்துனவய்யா.. குலங் காத்தவய்யா.. நம்ம குலம் காத்த அம்மன்யா அவ… நம்ம குலம் காத்த அம்மன்யா அவ…” என்றவர் மூச்சிரைக்க மூக்கைச் சிந்தினார். சிந்தி நிமிர்ந்தவர்..

”ஊரவிட்டுத் தள்ளி அவளுக்கொரு கோயிலக் கட்டுவம்யா., வருசா வருசாம் ஏழுநாச் சாமிகும்புடுய்யா..” எனச் சொல்லி முடித்தார்.

அப்படியே தனது கைகளிரண்டையும் வானத்தை நோக்கி உயர்த்தி தலையை நிமிர்த்தி கண்களை மூடி பயபக்தியாய் கும்பிடு போட்டவாறு..

”குலம் காத்த அம்மா கன்னியம்மா.. இனி நீதாம்மா.. நம்ம சாதி சனத்த எல்லாங் காப்பத்தணும்..” என்றார். பஞ்சாய்த்துச் சனங்களும் அப்படியே வணங்கிச் செய்தனர்.

மைதானத்தின் விளிம்பில் அமைந்திருந்த செக்கில் செக்கிழுக்கும் மாடொன்று தலையை ஆட்டி ஆட்டி செக்கு வட்டத்தில் சும்மாவே சுற்றி சுற்றி நடந்து கொண்டிருந்தது. இன்னொரு ஓரத்தில் பந்தய மாட்டு வண்டியொன்று சிதிலமடைந்து ஒற்றை சக்கரத்துடன் கவிழ்ந்து கிடந்தது. சிறுவர்கள் சக்கரத்தினைச் சுற்றியவாறு விளையாடிக் கொண்டிருந்தனர்.

முற்றும்.

அய்.தமிழ்மணி,
46கே5, புதிய நகராட்சி அலுவலகத் தெரு,
கம்பம் – 625 516,
தேனி மாவட்டம். 

9025555041, 7373073573 

[email protected]