நூல்: தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும் – ஒரு சமூக பொருளியல் பார்வை
ஆசிரியர்: ஏ.கே.காளிமுத்து
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.160
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/tamizhagathil-kaalaniyamum-velankudikalum-1411/
வரலாறு என்பது அரசர்களாலும் ஆட்சியாளர்களாலும் உருவாகுவதில்லை. அது அடித்தள மக்களிடம் இருந்தே உருவாகிறது. வேளாண்மை என்றதுமே அதன் மீது ஒருவித புனித பிம்பமும் பெருமித உணர்வும் உண்டாகிவிடும் இங்கு. கரிகால சோழன் கல்லணை கட்டியதிலிருந்து சோழர்களின் நீர் மேலாண்மை சோறுடைத்த சோழ பூமியாகத் தஞ்சாவூரை மாற்றியது தொடங்கி இலுமினாட்டி சதி, கார்ப்பரேட் சதி வரையிலும் வேளாண்மை குறித்துப் பேசப் பலர் உள்ளனர். ஆனால் வேளாண்மை உருவாகிய காலத்திலிருந்து தற்போது வரையிலும் வேளாண் குடிகளின் வாழ்நிலை, பொருளியல், உழைப்பு சுரண்டல், அடிமை முறை குறித்தும் பரவலாக பெரும்பாலும் பேசுவதோ எழுதுவதோ இல்லை.
ஏ.கே.காளிமுத்து எழுதிய “தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும் – ஒரு சமூகப் பொருளியல் பார்வை” நூலானது சங்க காலத்தில் தொடங்கி பல்லவ, சோழ, பாண்டிய, விஜய நகர, நாயக்கர் அரசுகளிலும் அதற்கு பின்னான குறுநில மன்னர்களது அரசுகளின் காலகட்டம் வரையில் சுருக்கமாகவும் காலனிய ஆட்சியிலிருந்து இந்தியச் சுதந்திரம் வரையிலான காலகட்டத்தில் மிக விரிவான புள்ளி விவரங்களுடன் வரலாற்றுத் தரவுகளுடன் வேளாண் குடிகள் நிலை குறித்துக் கூறுகிறது. காலனிய நில வரித்திட்டங்கள் என்ற அத்தியாயத்தில் ஜமீன்தாரி முறை, இரயத்துவரி முறை, இனாம்தாரி முறை எனப் பல நிலவரித் திட்டங்களை அறிமுகப்படுத்திப் பரிசோதித்து பார்த்ததையும், இந்த நிலவரித்திட்ட பரிசோதனை முறையில் நிலப்பிரபுக்களாலும் கம்பெனி ஆட்சியாளர்களாலும் வேளாண் குடிகள் எதிர்கொண்ட இன்னல்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாக இங்கு உண்டான பொருளாதார மந்தத்தாலும் கம்பெனியின் அடாவடி நிலவரி வசூலிப்பாலும் பல சிறு நில உடமையாளர்களான் வேளாண் குடிகள் தங்கள் நிலங்களை பெரும் நிலப்பிரபுக்களுக்கும் வட்டி தொழில் செய்பவர்களுக்கும் விற்று வரிகட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு விவசாய கூலிகளாக மாற வேண்டியதாகியது. ஆனால் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்திய நாட்டை பொருளியல் மற்றும் தொழிற்துறையில் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் கம்பெனி அரசுக்கு உருவானது. அதனடிப்படையில் இங்கிலாந்திற்குப் பருத்தி, கடலை போன்ற பொருட்களை அனுப்ப இங்குள்ள பல ஏக்கர் தரிசு நிலங்கள் வேளாண்மைக்குக் கொண்டு வரப்பட்டன.
இதனால் பெரும் நிலப்பிரபுக்கள் வைத்திருந்த காடுகள், முட்புதர்கள், நீர்வரத்துள்ள பயிர் தொழிலுக்கு ஏற்ற நிலங்களை எல்லாம் மீட்டு அரசு நிலமற்ற மக்களுக்கு வழங்கியது. இதன் மூலம் நிலமற்ற பல ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு பயிர்த்தொழில் செய்ய நிலங்களை வழங்கியது. மேலும் நீர்ப்பாசனத்தை மேம்படுத்தப் பல அணைகள் கட்டும் திட்டங்களையும் தொடங்கி வேளாண் நிலப்பரப்புகளின் அளவை அதிகரித்தனர்.
நீர்வளமுள்ள தஞ்சை, நெல்லை பகுதிகளில் உணவு தானியங்களும் நீர்வளமற்ற பகுதிகளில் பணப்பயிர்களும் பயிரிடப்பட்டன. இதனால் 1849-50ல் 95779ஆக இருந்த நில உடைமையாளர்கள் எண்ணிக்கை, 1850-51ல் 97281ஆக உயர்ந்து ஒரே வருடத்தில் 1502பேராக அதிகரித்தது. இதனால் அப்போது வேளாண் குடிகளின் நிலை ஓரளவிற்கு உயர்ந்தது. இந்தியாவில் முதலாளித்துவம் தொழிற்துறையில் தோன்றுவதற்கு முன்னதாக வேளாண் துறையில் வணிக முதலாளித்துவம் தோன்றியது. அதனால் ஆங்கிலேயர்கள் தங்கள் அந்நிய மூலதனத்தைத் தமிழக, கேரளா மலைத்தோட்டங்களிலும் இலங்கை, மொரிஷீயஸ் போன்ற நாடுகளிலும் ஈடுபடுத்தினர். இதனால் பல விவசாய கூலி அடிமைகள் தேயிலைத் தோட்டங்களுக்கு ஒப்பந்த கூலிகளாகச் சென்றனர்.
ஒப்பந்த கூலிகளாகச் சென்ற விவசாய கூலி அடிமைகளின் நிலையும் மிகவும் பரிதாபத்திற்குரியதாகவே இருந்தது. பல விவசாய கூலிகள் தேயிலைத் தோட்ட முதலாளிகளின் கங்காணிகளால் எளிய வேலைக்கு அதிக கூலி தருவதாகப் பல ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டனர். பலநூறு மைல்களுக்கு அவர்கள் நடந்தே அழைத்துச் செல்லப்பட்டனர். சிறிய தவறுகளுக்காகச் சவுக்கடி வழங்குதல் போன்ற கடுமையான தண்டனைகளும் தரப்பட்டது.
ஆனாலும் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியின் இறுதியில் ஏராளமான விவசாய கூலிகள் மலைத்தோட்டங்களுக்கு ஒப்பந்த கூலிகளாகச் சென்றனர். அதற்குக் காரணமாக 1876ம் ஆண்டு ஏற்பட்ட தாது பஞ்சம், இங்குள்ள சாதிய கொடுமைகள், அடிமை முறை போன்றவைகள் முக்கியமானவையாக இருந்தன. பின் ஆங்கில கல்வி முறை ஏற்பட்ட பின் பல பிராமண நிலப்பிரபுக்கள் தங்கள் நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவிட்டு கல்வி பயின்று அரசுத் துறைகளில் பணியமர ஆரம்பித்தனர். இதனால் உண்டான மறைமுக நிலப்பிரபுத்துவத்தால் பல இடைநிலை சாதிகள் குத்தகைதாரர்களாக மாறியதுடன் சமூக மேலாண்மையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஆரம்பித்தனர்.

உயர் கல்வியிலும் அரசு உயர் பதவிகளிலும் பிராமண ஆதிக்கமே மேலோங்க, பிராமணர் எதிர் பிராமணரல்லாதோர் என்கிற முரண்பாடு உருவாகியது. அவை பிற்காலத்தில் மிகப்பெரிய அரசியல் கருத்துருவாக்கமாகவும் உருவாகியது. மேலும் அரசு பதவிகள் கிடைக்காத பலர் மருத்துவர், வழக்கறிஞர், ஆசிரியர், பத்திரிக்கையாளர்களாக உருவாக ஆரம்பித்தனர். இந்நிலையில் ஆங்கில கல்வி முறையால் ஏற்பட்ட தாக்கத்தின் மூலமாகச் சுதந்திர, தேசிய கருத்துக்கள் எனத் தேசிய இயக்கங்கள் உருவாக ஆரம்பிக்கையில் காலனிய அரசு 1861ம் ஆண்டில் இந்தியச் சட்டமன்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி சொத்துக்கள் வைத்திருப்பவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு நகரசபை, மாவட்ட கழகங்கள் உருவாக்கப்பட்டன.
19ம் நூற்றாண்டின் இறுதியில் காலனிய அரசு தொழிற்துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்ததும் பல தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டன. 1920ல் மதுரையில் மீனாட்சி மில்லும், 1921ல் கோயம்புத்தூரில் ரெங்கா மில் போன்றவையும் ஆரம்பிக்கப்பட்டன. மேலும் வங்கித்தொழில் இந்தியாவில் உருவாகிய பின் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பிரிட்டிஷ் மூலதனத்துடன் பங்குதாரர்களாக இருந்தனர். மேலும் இந்தியன் வங்கி, செட்டிநாடு வங்கி போன்றவையும் அவர்களுக்குரியவையாக இருந்தன.
தொழிற்துறை வளர்ச்சி அடைய ஆரம்பித்ததும் பல விவசாய கூலிகள் நகரங்களை நோக்கி நகர ஆரம்பித்தனர். இதன் விளைவாக நகரங்களில் உள்ள தொழிலாளர்களுக்கும் ஒப்பந்த கூலிகளாகப் பல மலைத்தோட்டங்களுக்குச் சென்றவர்களுக்கும் உணவுப் பொருட்கள் அதிகம் ஆரம்பித்ததால் உணவு தானியங்கள் உற்பத்தியும் அதிகரித்தது. தொழிற்சாலைக்குத் தேவையான பருத்தி போன்ற மூலப்பொருட்கள் தேவை அதிகமானதால் வறண்ட நிலங்களிலும் வேளாண் விரிவாக்கம் அதிகரித்தது. இதனால் தொழிற்துறை, வேளாண்துறை போன்றவை வளர்ச்சியினால் விவசாய கூலிகள், ஒப்பந்த கூலிகள், தொழிலாளர்கள், வாரம்தாரர்கள் போன்றோரின் நிலை ஓரளவு மேம்பட ஆரம்பித்தது.
ஆனால் முதல் உலகப்போருக்குப் பின் 1929ல் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தத்தால் தமிழக தொழிற்துறையும் வேளாண்துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல சிறு நில உடைமையாளர்கள் தங்களது நிலங்களுக்கான வரியைச் செலுத்த முடியாமல் வட்டிக்குப் பணம் வாங்கி செலுத்த வேண்டிய நிலையிலிருந்தனர். பின் வட்டி கட்ட முடியாமல் தங்கள் நிலங்களை வட்டி கடைக்காரர்களுக்கு விற்க வேண்டிய நிலைக்கு ஆளாகினர். இப்பொருளாதார மந்த காலத்தில் மிக அதிகமான இன்னல்களை அனுபவித்தவர்கள் விவசாய கூலிகளே ஆவர். தாங்கள் வாங்கிய கடனுக்காக தங்களையே அடமானம் வைத்து பத்திரப்படியாளாக நிலப்பிரபுவுக்கு அடிமையாகக் கடனை திரும்பச் செலுத்தும் வரையில் பண்ணையடிமையாக இருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகினர்.
ஜமீன்தார்களின் கீழ் இருந்த பகுதிகளில் பல விவசாய கலகங்கள் நடைபெற்றன. பல வன்முறைச் சம்பவங்களும் ஜமீன்தார்களின் ஒடுக்குமுறையும் நிகழ்ந்தன. 1940களில் பொதுவுடைமை கருத்துக்களால் பல இடங்களில் விவசாயச் சங்கங்கள் உருவாக ஆரம்பித்தன. சேலம், இராமநாதபுரம், தஞ்சை போன்ற மாவட்டங்களில் பல விவசாய கலகங்கள் உருவானது. இவ்வாறாகக் காலனிய ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பொருளியல் மாற்றங்கள் வேளாண் குடிகளின் நிலையில் ஏற்படுத்திய மாற்றங்களையும் அவர்களது வாழ்நிலையையும் குறித்து இந்நூல் மிக விரிவாகக் கூறுகிறது. வேளாண்மை குறித்துப் பேசுவதற்கு முன்பாக வேளாண் குடிகள் குறித்தும் அறிந்து கொள்வது மிக முக்கியமாகும். அதற்கு இந்நூல் மிகவும் உதவிக்கரமாக இருக்கும்.
நூல்: தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும் – ஒரு சமூக பொருளியல் பார்வை
ஆசிரியர்: ஏ.கே.காளிமுத்து
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.160
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/tamizhagathil-kaalaniyamum-velankudikalum-1411/
ஆசிரியர்: ஏ.கே.காளிமுத்து
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.160
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/tamizhagathil-kaalaniyamum-velankudikalum-1411/

