இன்று தொலைக்காட்சி அலைவரிசைகளில் மேலெழுந்து வந்துள்ள ஒரு முக்கியமான முகம். மிகப்பரந்த அறிவார்ந்த ரசிகர்படையைக் கொண்டுள்ள ஓர் ஆளுமை.மார்க்சிய அணுகுமுறையோடு பெரியாரியப் பிடிப்போடு வாதங்களை எடுத்துவைக்கும் பொருளாதார அறிஞர் தோழர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் எழுதி பா.பிரவீன்ராஜ் அவர்களின் அழகான மொழிபெயர்ப்பில் மின்னம்பலம் வெளியீடாக வந்திருக்கும் நூல் இதுகாவேரிப்படுகையில் நிலவும் நிலக்குத்தகை உறவுமுறைகளைப்பற்றி ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் நோக்குடன் களம் இறங்கிய ஜெயரஞ்சன் ஒரு அதிர்ச்சியைச் சந்திக்கிறார்.
“நிலச்சீர்திருத்தம் என்பது தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தித்த ஒரு முயற்சி.இதனை ஆய்வு செய்து பல புத்தகங்கள்,கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.ஒரு ஆய்வாளனாக அவற்றையெல்லாம் வாசித்தும் விவாதித்தும் வந்திருக்கிறேன்.அப்படியானால் முன்பு நிலவிய நிலப்பிரபுத்துவம் அப்படியே தொடர வேண்டும்.அல்லது வேறு வடிவத்திலேனும் தொடர வேண்டும்..
இந்த முடிவோடு காவேரிப்படுகையின் பல பகுதிகளுக்குச் சுற்றி அலைந்தேன். பொதுவுடமைக் கட்சி நிர்வாகிகளைப் பல இடங்களில் சந்தித்து எனது வினாவினை முன் வைத்தேன். எனக்குக் கிடைத்த ஒரே விடை ‘முடிந்துபோன ஒன்றை நீங்கள் தேடுகிறீர்கள்’ என்பதாகும். நான் எவ்வளவு பதைபதைத்துப் போனேன் என்பதைக் கூற இயலாது.
காவேரிப்படுகை மிகுந்த ஆய்வுக்குள்ளான பகுதி. பொதுவுடமைக்கட்சிகள் தீவிரமாக இயங்கும் பகுதி.பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் பல. ஆனாலும் இந்த முடிந்துபோன வரலாறு பேசாப்பொருளாகத் திகழ்ந்தது எங்கனம். களத்திற்கும் ஆய்விற்குமான பெருத்த இடைவெளி எனக்கு அவமானமாக இருந்தது. இதனை ஓரளவேனும் நிரப்ப முயற்சி செய்தேன்.
நிலப்பிரபுத்துவம் இப்பகுதியில் எப்படி வீழ்ந்தது என்பதை இரண்டு ஆண்டுகள் செலவிட்டு ஆவணப்படுத்தியுள்ளேன்.இது ஒரு மிகச்சிறிய முயற்சி. எழுதப்படாத வரலாறுகள் ஏராளமாக உள்ளன என்பதை நாளும் உணர்கிறேன்.அதனை ஆவணப்படுத்தும் வாய்ப்பு பலருக்கும் வாய்த்தால் தமிழ்நாட்டின் நல்லூழ் ஆகும்.”
என்று நூலின் முன்னுரையில் குறிப்பிடும் ஜெயரஞ்சன் பேரளவிலும் (macro) சிற்றளவிலும் (micro) தன் ஆய்வை விரித்து நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதைக்கான தரவுகளை இந்நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்.
ஆறு இயல்களைக்கொண்ட இந்நூலில் காவேரிப்படுகையின் வேளாண் உறவின் வரலாற்றைச் சுருக்கமாக ஓர் இயலில் 70 பக்கங்களில் விளக்குகிறார்.காவேரிப்பகுதியைச் சாராத ஒருவருக்குக் கூடப் புரியும் வண்ணம் மிக எளிமையான மொழியிலும் தேவையான குறிப்புகளோடும் இப்பகுதி எழுதப்பட்டிருப்பது சிறப்பு.

நீர்ப்பாசன வசதியும் வடிகால் அமைப்பு முறையும் கடைமடைப்பகுதி வரையிலும் செய்யப்பட்டு நீண்டகாலமாகப் பயன்பாட்டில் உள்ள பகுதிதான் காவேரிப்படுகை என்றாலும் வேளாண் உற்பத்தி அமைப்பில் இயற்கைக்கும் வேளாண்மைக்குமான சமநிலை மிகவும் பலவீனமான ஒன்றாக இருக்கிறது எனக்குறிப்பிடும் ஜெயரஞ்சன் பருவகால ஆறான காவேரியில் தண்ணீர் வருவது கர்நாடகாவின் கையில் சிக்கிய வரலாற்றையும் சுருக்கமாகக் கூறுகிறார்.
மேற்குக் காவிரிப்படுகை நல்ல நிலத்தடி நீரைக்கொண்டிருப்பதாலும் நல்ல ஆற்று வண்டல் மண்ணைப் பெற்றிருப்பதாலும் நெல்லைத்தவிர மற்ற பயிர்களான கரும்பு மற்றும் வாழை போன்ற வருடாந்திரப் பயிர்களையும் விவசாயிகள் அப்பகுதியில் விளைவிக்க முடிகிறது.ஆனால் கடலோரக் காவிரிப்படுகையில் மண்வளம் களிமண்ணாக இருக்கிறது.
போதுமான வடிகால் வசதி இல்லாததால் பருவமழைக்காலத்தில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்குவது என்பது அப்பகுதியின் தொடரும் துயரமாக இருக்கிறது.நிலத்தடி நீரும் உப்புத்தன்மை கொண்டிருப்பதனால் கால்வாய்கள் மட்டுமே நீர்ப்பாசனத்திற்கான ஒரேவழியாக அமைந்து நெல்லைத்தவிர வேறு எந்தப் பயிர் வகைகளையும் விளைவிக்க வழியில்லை.
இந்த வேளாண் ஏற்படுகளை விவரித்தபின் நில உடமை,நிலக்குவியலின் வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையாகச் சொல்கிறார். காவேரிப்படுகையை பிரித்தானியர்கள் ஆட்சி செய்த பகுதிகளுடன் இணிஅத்த பிறகுதான் நிலங்கள் ஒரு சில நிலப்பிரபுக்களின் கைகளில் குவியத்துவங்கின.
நிலத்தை நிர்வாகம் செய்ய அவர்கள் அறிமுகம் செய்த இரயத்வாரி முறையானது நிலம் ஒருசிலர் கைகளில் குவியும் போக்கை தங்குதடையற்றதாக்கியது என்பதை விளக்கும் ஜெயரஞ்சன் தஞ்சைப்பகுதியை ஆய்வு செய்த ஆய்வாளர் சரஸ்வதி மேனன் குறிப்பிடும் ஒரு உண்மையையும் நினைவு படுத்துகிறார்: “1807இல் மிராசுதார்களில் 27 விழுக்காடு பார்ப்பனர்களாக இருந்தார்கள். காவேரிப் படுகையில் சமூக அமைப்பில் பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான் காவேரிப்படுகையின் வரலாற்று அசைவியக்கத்தை நிர்ணயித்தது”
பண்ணையாள் உழைப்புச் சுரண்டல்,குத்தகை விவசாயிகளைக் கசக்கிப் பிழிதல் என்கிற இரு அச்சின் மீது சுழலும் நிலப்பிரபுத்துவக் கொடுமைகளை விளக்கிய பின் இவற்றுக்கெதிராக செங்கொடி இயக்கம் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்கள், அதற்கு முன்னரே பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு எதிராக தந்தை பெரியார் அப்பகுதியில் நடத்திய பிரச்சாரம், 1952இல் துவக்கப்பட்ட திராவிட விவசாயத்தொழிலாளர்கள் சங்கத்தின் பங்கு என அப்பகுதியின் போராட்ட வரலாற்றைச் சுருக்கமாக முன் வைக்கிறார்.
இப்போராட்டங்களின் காரணமாக காங்கிரஸ் அரசு கொண்டு வந்த பண்ணையாள் பாதுகாப்பு மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் 1952 எத்தகைய பாரிய மாற்றங்களை அப்பகுதியில் கொண்டு வந்தது என்பதையும் 1960இல் கொண்டுவரப்பட்ட நில உச்சவரம்பு சட்டம் பலவீனமான சட்டமானாலும் அது ஆற்றிய பங்கு போன்றவற்றை விளக்குகிறார்.
கலைஞர் தலைமையிலான திமுக அரசு அடுத்தடுத்துக் கொண்டு வந்த சட்டங்களும் சட்டத்திருத்தங்களும் ஏற்கனவே காங்கிரஸ் அரசு கொண்டு வந்திருந்த சட்டங்களில் இருந்த ஓட்டைகளை அடைத்து நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்திய வரலாற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்.
”காவேரிப்படுகைப் பகுதியில் நிலப்பிரபுக்களுக்கும் குத்தகைதாரர்களுக்கும் இடையே நிலவிய குத்தகை உறவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் செயல்போக்கை வரைந்து காட்டுவதே” அவரது இந்த ஆய்வின் நோக்கமாக இருந்ததால் இரண்டு கிராமங்களில் விரிவான ஆய்வை மேற்கொள்கிறார்.
மேற்குக் காவேரிப்படுகையில் காவேரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவில் அமைந்த பேட்டை என்கிற ஒரு கிராமம். கடலோரப் பகுதியில் நாகப்பட்டினத்திற்கு அருகில் அமைந்த குறிச்சி என்கிற கிராமம் ஆகிய இரண்டிலும் நிலப்பட்டா பதிவு ஆவணங்கள்,பிற அரசாங்க ஆவணங்கள்,அக்கிராம மக்களிடையே விரிவாக மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள் இவற்றின் அடிப்படையில் நிலக்குவியல் எப்படி சிதறடிக்கப்பட்டது என்கிற வரலாற்றைத் தரவுகளுடன் நிறுவுகிறார்.
பூதான இயக்கத்தைச் சேர்ந்த திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் வங்கிக்கடன் பெற்று நிலமற்ற சில நூறு விவசாயிகளுக்கு நிலம் வழங்க மேற்கொண்ட முயற்சிகளும் அதற்கு திமுக, சிபிஐ கட்சிகள் உறுதுணையாக இருந்ததுமான (சிபிஎம் பூதான இயக்கத்தை கருத்து அடிப்படையிலும் நடைமுறையிலும் எதிர்த்து நின்றது) வரலாற்றுப் பகுதியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலச்சீர்திருத்தச்சட்டம் தோல்வியடைந்திருந்தாலும்,இச்சட்டங்கள் குத்தகைதாரர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றிவிட்டது. நிலப்பிரபுக்களின் கையிலிருந்து நிலம் முன்னாள் குத்தகைதாரர்களுக்குக் கைமாறும் போக்கைத் துவக்கி வைத்தது; தீவிரப்படுத்தியது.பார்ப்பன நில உடமையாளர்களின் நிலங்கள் அநேகமாக முற்றிலுமாக இடைநிலைச்சாதிகள் மற்றும் சிறு பகுதி தாழ்த்தப்பட்ட மக்களின் கைகளில் சென்று சேர்ந்துள்ளதை பேட்டை கிராமத்தின் உள்ளூர் வரலாறு காட்டுகிறது. மாறாக குறிச்சி கிராமத்தில் எங்கும் கேள்விப்படாத ‘அத்தாட்சிக் குத்தகை’ முறை ஒன்று உருவாகி அமுலில் இருப்பதைக் கண்டு சொல்கிறார்.
இந்நூல் முன் வைக்கும் மிக முக்கியமான மற்றும் ஆழமான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு கருத்து : “காவேரிப்படுகையில் நடைபெற்ற போட்டி அரசியல் இதற்கு வலுச் சேர்த்தது. ஒரு அரசியல் அமைப்பினர் உரிமைகளுக்காகப் போராடினார்கள்(செங்கொடி இயக்கத்தைக் குறிப்பிடுகிறார்). இன்னொரு கட்சி தன் அதிகாரத்தைக் கொண்டு குத்தகைதாரர்களின் நலன்களைக் காக்கச் சட்டம் இயற்றியது.(திமுக) .இது போராட்டம் நடத்திக்கொண்டிருந்த கட்சியின் செயல்திட்டத்தின் வீரியத்தை முற்றிலுமாக வலுவிழக்கச் செய்துவிட்டது.”
இடதுசாரிகளும் சமூக அக்கறை கொண்டவர்களும் பொருட்படுத்தி வாசித்து விவாதிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.
ஜெ.ஜெயரஞ்சன்
“தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை”
.(200 பக்கம்.விலை ரூ.180.)
மின்னம்பலம்
66,3ஆவது மெயின் ரோடு,கஸ்தூரிபா நகர்,சென்னை-20
பொருளிய அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் எழுதிய ‘தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்னும் நூலுக்கான தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களது அறிமுகத்தினைப் படித்தேன்.
ஆழமான ஆய்வுகளின் பதிவுகள்.
நூலினைப் படிக்காமல் கருத்துக்களைக் கூறுவதும் விளக்கங்களை நாடுவதும் முறையன்று.
இருப்பினும், அறிமுகத்தைப் படித்தவுடன் எழுந்த சில எண்ணங்களையும் எதிர்பார்க்கும் சில விளக்கங்களையும் இங்கே குறிப்பிட விழைகின்றேன்.
1. 1960களின் இறுதியில், பொதுவுடைமை இயக்கத்தின் குறிப்பாக, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின், வேளாண் அமைப்பு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் எனத் தனித்தனியே செயல்படத் தொடங்கிய பின்னர் ஏற்பட்ட கள நிலைமைகளின் தாக்கம் நிலச் சீர்திருத்தப் பின்னணியில் எவ்வாறு அமைந்தன?
2. நிலச் சீர்திருத்தச் சட்டத்தை முதலாவதாக 1960இல் கொண்டுவந்த காங்கிரசு பயன்பெறவில்லையா?
3. நிலச் சட்டங்களைக் கொண்டுவந்ததன் வழியே ஆட்சியிலிருந்த திமுக பயன்பெற்று, பொதுவுடைமை இயக்கத்தினை முழுமையாக வலுவிழக்கச் செய்தது என்றால், எப்பிரிவு மக்களிடம் வழுவிழக்கச் செய்தது?
4. 1967இல் ஆட்சிக்கு வருதற்கு முன்னரே திமுக தஞ்சை மாவட்டப் பகுதிகளில், பொதுவுடைமை இயக்கத்தைவிட மிகுந்த செல்வாக்குப் பெற்றது எப்படி?
5. பொதுவுடைமை இயக்கம் வலிமையாக இல்லாத தமிழகத்தின் பிற பகுதிகளிலும், ஆட்சிக்கு வருதற்கு முன்னர், அதாவது, நிலச் சட்டங்களைத் திமுக கொண்டு வருதற்கு முன்னரே , அக்கட்சி எவ்வாறு வலுப் பெற்றிருந்தது?
6. திமுக வலிமை பெற்றதற்கு, நிலச் சட்டங்கள் அல்லாத வேறு ஏதாவது காரணிகள் இருந்திருக்கலாமா?
7. 1807ஆம் ஆண்டு, மிராசுதார் எண்ணிக்கையில் பார்ப்பனர் 27% இருந்தனரா? விளை நிலங்களின் அளவில் 27% பார்ப்பனரிடம் இருந்ததா?
8. ஆங்கில ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ரயத்வாரி முறைதான் நிலக் குவியலுக்கு வழி வகுத்தது என்றால், அதற்கு முன்னதாக நில உரிமை முறை எவ்வாறு இருந்தது?
9. ரயத்வாரி முறைதான் பார்ப்பனரிடம் நிலங்கள் குவிய அடிப்படையாக அமைந்ததா?
10. இடைநிலைச் சாதியினர் என்பவர் யார்? நிலவுடைமைப் பிரிவினரா அல்லது உழைக்கும் பிரிவினரா? நிலவுடைமைப் பிரிவினர் என்றால், அந்தப் பிரிவினருக்கு ‘இடைநிலைச் சாதியினர்’ என்ற சொல்லடுக்குப் பொருந்துமா?
இன்னும் பல உள்ளன. இப்போதைக்கு இவை மட்டுமே.
இவற்றுக்கெல்லாம் நூலில் தெளிவுகள் இருக்கலாம். இருப்பினும், விளக்கங்கள் வேண்டப்படுகின்றன.
———மே.து. ராசுகுமார் 01-05-2020
தோழர் மேதுரா வுக்கு பதில் சொல்ல நான் ஆள் இல்லை.எனினும் தோழர் ஜெயரஞ்சன் புத்தகத்தில் பல கேள்விகளுக்கு விடை இருக்கிறது.தஞ்சை வட்டாரத்தில் பொதுவுடமை இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலை மாற்றியது திமுக ஆட்சியின் திட்டங்கள் என்பதுதான் ஜெயரஞ்சன் முன் வைக்கும் வாதம்.ரயத்துவாரி முறை ஒரு முக்கிய காரணம் என்றே சொல்கிறார்.தமிழக முழுமைக்குமான ஆய்வல்ல இது.நூலை வாசித்துவிட்டு உங்களைப்போன்ற முன்னோடிகள் கேள்வி எழுப்பினால் ஜெயரஞ்சனும் மகிழ்வுடன் பதிலளிப்பார் என்றே கருதுகிறேன் தோழர்.