நூல் அறிமுகம்: தமிழர் வளர்த்த தத்துவங்கள் – அந்தோணிராஜ்

நூல் அறிமுகம்: தமிழர் வளர்த்த தத்துவங்கள் – அந்தோணிராஜ்

 

தோழர் தேவ பேரின்பன் பொதுவுடைமை இயக்கத்தின் முழுநேர ஊழியராக இருந்தவர். சிறந்த மார்க்சியவாதி.

உலக தத்துவங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று பொருள் முதல் வாதம், மற்றொன்று கருத்து முதல்வாதம். எல்லா தத்துவ ஞானத்திற்கும் அடிப்படையான மாபெரும் பிரச்சனை சிந்தனைக்கும் வாழ்நிலைக்கும் உள்ள உறவு பற்றியதாகும். இயற்கைதான் மூல முதல் என்று சொன்னவர்கள் பொருள் முதல் வாதிகள், ஆன்மாதான் அந்த இயற்கைக்கு மூல முதல் என்று சொன்னவர்கள் கருத்து முதல்வாதிகள்.

மனிதனின் வாழ்நிலைதான் அவனது சிந்தனையை தீர்மானிக்கிறது. மனித வாழ்நிலை இருவகைப்படும்,

1. மனிதனது இயற்கை வாழ்நிலை
2. மனிதனின் சமூக வாழ்நிலை

சமூகம் என்பது மனிதனிடமிருந்து பிரிக்கப்பட்ட வெறும் யூகக்கருத்தில்லை, அது மனிதர்களின் வெறும் கூட்டத்தொகுதியுமில்லை, சமூகம் ஒன்றின் கீழ் மனிதர்கள் திட்டவட்டமான பொருளியல் மற்றும் கருத்தியல் உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளனர். மனிதனின் அறிவுலக வாழ்க்கையின் செறிவான அங்கம் தத்துவமாகும். மேலை நாடுகளில் மதத்திலிருந்து பிரிந்து தத்துவம் தனித்துறையாக பரிணமித்துள்ளது. ஆனால் இந்தியாவில் தத்துவமும் மதமும் பின்னிப்பிணைந்துள்ளது.

What was the main cause for the formation of Jainism and Buddhism ...

கி.மு நான்காம் நூற்றாண்டளவில் தமிழ் நாட்டில் தொன்மையான குலங்களும் குடிகளும் அழியத்தொடங்கியது. நிலவுடைமைமுறை அழிய தொடங்கியது. விவசாய உற்பத்தி அதிகமானது. அதனையொட்டி வணிகம் செழித்தது. பல புதிய பொருட்களுக்கான தேவை எழுந்தது, இத்தேவை வணிகத்தை வளர்த்தது. நிலக்கிழார் வர்க்கத்திலிருந்து தோன்றிய வணிக வர்க்கம் நிலக்கிழார்கள் நிலப்பிடிப்பை எதிர்த்து நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதுதான் கி.பி முதல் நூற்றாண்டு முதல் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை நிலவிய வர்க்க முரண்பாட்டின் சித்திரம்.

ஆரம்பத்தில் சமணமும் பௌத்தமும் தமிழக தத்துவ அமைப்பில் முதலிடம் பெற்று விளங்கின. அதன்பின் தமிழகம் வந்த வேதவைதீகம் இந்த இரண்டு மதத்தோடு போராடவேண்டியிருந்தது.

தொல்காப்பியத்தாலும், சங்க இலக்கியங்கள் பலவற்றாலும் முன் வைக்கப்படும் தெய்வங்கள் இனக்குழுச் சார்பு தெய்வங்களே. அவை இறை அல்ல, பரம்பொருள் அல்ல. நிலத்துக்கும் பொழுதுக்கும் மேலான உபநிடதக் கடவுள் கொள்கை தொல்காப்பிய காலத்தில் இல்லை. தொல்காப்பியத்தில் காணப்படும் தத்துவங்கள் சமண அடிப்படையில் விளக்கப்படும் முன்னிலைப் பொருள்முதல்வாதம் ஆசிவகம், பௌத்தம் முதலியவையே.

“கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ “என்ற குறுந்தொகைப்பாடல் விருப்பதைச்சொல்லது கண்டதை மட்டும் அதாவது அறிந்ததை மட்டும் சொல்வதை வலியுறுத்துகிறது. அது போலவே உலகப்புகழ் பெற்ற “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடலில் வரும் ஒருவரியை கவனித்தால் தமிழரின் தத்துவம் விளங்கும். அந்தப்பாடலில் திறவோர் காட்சியில் தெளிந்தனம் என்ற வரிகளை பாருங்கள், அவ்வரிகள் கண்டு தெரிந்தது வைத்து ஒரு முடிவுக்கு வந்தோம் என்று வலியுறுத்துகிறது,, அதாவது பொருள்முதல் வாதத்தை முன்வைக்கிறது. மேலும், மலையருவியில் மிதந்து வரும் கட்டையைப்போல வாழ்வின் இன்ப துன்பங்களும் ஒரு நியதிதான் என தெளிவடைந்துவிடவேண்டும் என்று வாழ்வு இயல்பாகக் காட்டப்படுகிறது.

‘ஊழ்’ என்னும் சொல்லுக்கு மலர்தல் என்றும் உதிர்தல் என்றும் இருவேறு பொருள் உண்டு. மலர்வதே உதிர்வதும், உதிர்வதே மலர்வதும் தொடர்ந்து நிகழும் செயலை ஊழ்வினை என்றனர். செயல் -பயன் -செயல் எனச்சங்கிலியாய் தொடர்வதை ஊழ்வினை என்றனர். மனித முயற்சிக்கு முதலிடம் தருகிறார் வள்ளுவர், இயற்கையின் இயல்பை மனித முயற்சியால் தனக்குறியதாக மாற்றிக்கொள்ளமுடியும் என்கிறது வள்ளுவம். ஆன்மிக இறை கோட்பாடு வள்ளுவருக்கு இல்லை

சமயக்கணக்கர் திறம் கேட்ட காதையில் பிரபஞ்சத்தின் தோற்றம், இயல்பு குறித்து வாதம் நடக்கிறது. அதில் சைவவாதி ஐம்பூதங்களையும் ஞாயிறு, திங்கள், இமயம் முதலியவற்றை ஈசன் உடலாக வைத்துள்ளான் என்கிறான், பிரமவாதி நாராயணனையே கடவுளாக அறிவிக்கிறார். வேதவாதி வேதத்தை அளித்தவன் இறைவன் என்கிறான். இதைக்கேட்ட மணிமேகலை “எத்திறத்தினும் இசையாத இவர் உரை” என நிராகரிக்கிறாள். இதிலிருந்து புரிவது வைதீக மதங்களுக்கு மணிமேகலை காலத்தில் தத்துவ அடிப்படை எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதேயாம். பின்னர் ஆசீவகன், நிகண்டவாதி, சாங்கியன், வைசேடிகன், பூதவாதி ஆகியோர் மட்டுமே தத்துவ விவாதத்தில் பங்கேற்பதாக மணிமேகலை கூறுகிறது. தத்துவ உலகில் வேதமறுப்பு ஆன்மீக வாதத்தை மறுக்கும் பொருள்முதல்வாத தத்துவங்களே மேலோங்கி இருந்த தமிழகத்தில் அதை அழிக்காமலேயே ஆன்மீகவாத வளர்ச்சி ஏற்பட அரசுகள் ஊக்கமளித்தன. தமிழகத்தில் நிலவிய தத்துவப் போக்குகளை மணிமேகலையும் நீலகேசியும் 1. ஆசீவகவாதி, 2. சாங்கியவாதி, 3. பூதவாதி என மூன்று தத்துவங்களை முன்வைக்கிறது ஆனால் சிவஞான சித்தியார், 1. உலகாயுதன், 2.ஆசீவகன், 3. நிரீச்சுர சாங்கியன் என மூன்றை முன் வைக்கிறது.

அணுக்கள் பிறந்தவையோ, பிறப்பித்தவையோ அல்ல என்பதையே ஆசீவகம், சாருவாகம், சமணம் முதலிய பொருள்முதல்வாதத் தத்துவங்கள் வலியுறுத்தின. அணுக்கோட்பாட்டின் அடிபடையிலேயே வினை விளக்கப்பட்டது. வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளும், இன்பத்துன்பங்களும் வினையின் விளைவாகவே பார்க்கும் பார்வை வேளாண் சமூக வாழ்வில் பலமடைந்தது. வினையை மறுபிறப்போடு இணைத்த சமண, பௌத்த மத நிலைப்பாட்டினை ஆசீவகம் ஏற்றுக்கொள்ளவில்லை. வினையின் நியதியே ஊழ் எனபட்டது. அது வலிமையானது என்றார் வள்ளுவர், அது தண்டிக்கும் என்றார் இளங்கோவடிகள்.

நீலகேசி எனும் சிறுகாப்பியம் பத்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் அத்தியாயம் சமணத்தின் அடிப்படையைக் கூறுகிறது. அடுத்த நான்கு சருக்கங்கள் பௌத்தத்தை மறுக்கின்றன, அதை தொடர்ந்து ஆசீவகம், சாங்கியம், வைசேடிகம், வேதம், பூதவாதம் போன்றவை மறுக்கப்படுகின்றன. இவை வாதசொற்போர் முறையில் நாடத்தப்படுகின்றன, பிளாடோவின் உத்தி இதில் காணப்படுகிறது. அனைத்து சறுக்கங்களிலும் வினைக்கோட்பாடும், அணுக்கோட்பாடும் விவாதிக்கபடுகின்றன. பொருளின் இருப்பு, இயல்பு, இயக்கம் குறித்த இயக்கவியல் விளக்கப்படுகின்றன. இவையாவும் அறிவியல் உண்மையின் அடிப்படையில் நிலைநாட்டப்படுகின்றன. தமிழரின் தத்துவமான பொருள்முதல்வாதத்தின் அடிப்படைக் கூறுகளை மிகச்சிறப்பான முறையில் நீலகேசி நிலைநாட்டுகிறது.

உணவு, உடல் நலத்திற்கு அடிப்படை என்பதும், உடல்நலம் உணர்வு நலனுக்கு அடிப்படை என்பதும் ஆதிபொருள்முதல்வாதத்தின் கூறு ஆகும்.

தமிழர் வளர்த்த தத்துவங்கள் THAMIZHAR ...

“உண்டியல் உடம்புளதாம்
உடம்பினால் உணர்வாமென்று
.. …. ஈதுனக்கு தெரியாதோ என்று நீலகேசி கேட்கிறது.

” நிலம்பொய் நீர்பொய் நெடுநகர்தாமும் பொய்
கலம் பொய் காற்றோடுத்தீயும் பொய் காடும் பொய்
குலம் பொய்யே எனக்கூறும் செங்கூரையாய்
சலம் பொய் அன்று இது ஒன்றே நுங்கன் சத்தையே ”
என்று மாயாவாதத்தை பொய் எனக்காடுகிறாள் நீலகேசி.

இருநூறு பக்கமுள்ள புத்தகத்தில் ஏறக்குறைய நூறு பக்க அளவிற்கே அறிமுகம் செய்ய முடிந்தது. மிக அருமையான கருத்துக்களை தக்க சான்றுகளோடு நமக்குக் காட்டுகிறார் கட்டுரையாசிரியர். வாசிப்பாளர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய நூல். தத்துவம் என்பது கடினமான விஷயம் அல்ல என்பதை இந்நூல் நிரூபிக்கிறது.

நூல்: தமிழர் வளர்த்த தத்துவங்கள்
ஆசிரியர்: தேவ பேரின்பன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: 160

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/thamizhar-valartha-thathuvangal-281/

அன்புடன்,
அந்தோணிராஜ்
தேனி.

Show 1 Comment

1 Comment

  1. Sisubalan.R

    சிறப்பு.வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *