மனிதர்களுக்கு மிக மூத்தவை தாவரங்கள். தாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு மிகவும் பழமையானது. மனித குலத் துவக்க காலத்திலிருந்து தாவரங்களை ஏதேனும் ஒரு வகையில் மனிதன் பயன்படுத்தி வருகிறான்.
தாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை பின்வரும் மூன்று தலைப்புகளில் பிரிக்கலாம் என்கிறார் நூலாசிரியர்.
1.உணவு சார்ந்தது.
2.மருத்துவம் சார்ந்தது.
3.நுகர்வியம் சார்ந்தது.
இம்மூன்று பயன்பாடுகள் ஒருபுறம் இருக்க, வரலாறு, சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல் என்ற மூன்று அறிவுத்துறைகளுக்கும் தேவையான தரவுகளைக் கொண்டதாகவும் தாவரங்கள் விளங்குவதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் சமயம், நம்பிக்கை, சடங்குகள் சார்ந்த வழக்காறுகளாக இத்தரவுகள் வெளிப்படுகின்றன. வரலாறு சமூகவியல் சார்ந்த செய்திகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
இதனை அடிப்படையாகக் கொண்டு சிறுகட்டுரை முதல் பெருங் கட்டுரையாக
நொச்சி, ஆவாரை, மஞ்சணத்தி, எருக்கு, ஆமணக்கு, எள், விளக்குமாறாகும் தாவரங்கள், ஓட்டப்பிடாரம் கத்தரிக்காய், பருத்தி, தமிழர் வரலாற்றில் தாவர எண்ணெய், பெருமரம் என்பவை பற்றிய பதினொரு தலைப்புகளில் இந்த நூல் விரிந்துள்ளது.
*கரிசல் பகுதியில் பருத்தி விவசாயம் ஏற்படுத்திய மாற்றங்களை விளக்குகிறது.
*ஓட்டப்பிடாரம் பகுதியில் கத்தரி சாகுபடி எவ்வாறு மள்ளர்கள் எனப்படும் தேவேந்திரர்களின் வாழ்வில் பொருளாதார ஏற்றத்தை உண்டாக்கியது என்பதை ஓட்டப்பிடாரம் கத்தரிக்காய் அழகுற விளக்குகிறது.
தாவர அறிவியல் ஒரு குறிப்பிட்ட தாவர குடும்பத்தை மட்டுமே மையப்பொருளாகக் கொண்டு ஆராய்வது. ஒரு குறிப்பிட்ட தாவரத்தைப் பேணி வளர்த்து பயன்களைப் பெறுவதை வேளாண் அறிவியல் வெளிப்படுத்துகிறது.
ஆனால் தாவர வழக்காறுகளைக் கண்டறியும்போது, உணவு, மருத்துவம், நுகர்வியம் என்பவற்றைக் கடந்து சமுதாய வரலாற்றுச் செய்திகளையும் அறிந்து கொள்ள முடியும்.
இந்நூல் தாவரங்களைப் பற்றியது ஆனால் தாவர அறிஞர்களுக்கானது மட்டுமல்ல. அனைவராலும் படிக்கப்பட வேண்டியது.
தமிழரின் தாவர வழக்காறுகள்.
எழுதியவர் – ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு – உயிர் பதிப்பகம்
விலை – ரூ.210/-
நன்றி!
இராமமூர்த்தி நாகராஜன்