முனைவர் பெ.தமிழ் ஒளி (Tamizh Oli) எழுதிய தமிழ்நாட்டுப் பழங்குடிகள் (மானிடவியல் நோக்கில்) - நூல் அறிமுகம் | Tamil Nadu tribes - https://bookday.in/

தமிழ்நாட்டுப் பழங்குடிகள் (மானிடவியல் நோக்கில்) – நூல் அறிமுகம்

தமிழ்நாட்டுப் பழங்குடிகள் (மானிடவியல் நோக்கில்) – நூல் அறிமுகம்

– முனைவர் பெ .இராமமூர்த்தி

தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள் (சக்திவேல், சு. 1998) தமிழகப் பழங்குடிகள் (பக்தவத்சல பாரதி, 2013), வாழும் மூதாதையர்கள்: தமிழகப் பழங்குடி மக்கள் (பகத்சிங், 2019) பண்பாட்டு ஆய்வியல்: பண்பாட்டியல் குறித்த முழுதளாவிய பார்வை (மகேசுவரன்,2023) என்கிற நூல் வரிசையில் தற்போது சமூக மானிடவியலாளர் முனைவர் பெ. தமிழ் ஒளி அவர்கள் எழுதிய “தமிழ்நாட்டுப் பழங்குடிகள்: மானிடவியல் நோக்கில்” எனும் நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில் பழங்குடிகளின் வனம் சார்ந்த வாழ்க்கை, பல்லுயிர் பன்மையம், மரபு வேளாண்மை, சமூகப் பண்பாட்டு அடையாளம், சமூக அமைப்பு, தெய்வ வழிபாடு ஆகியவை பற்றியும் சமகாலத்தில் எதிர்கொண்டு வரும் மாற்றங்கள் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுப் பழங்குடிகள் குறித்து மிக அரிதாகவே நூல்கள் வரும் சூழலில், தனது களப்பணி அனுபவங்களின் அடிப்படையில் ஒரு மூத்த மானுடவியல் ஆய்வாளரால் எழுதப்பட்ட இந்த நூல் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த நூலின் மீதான விமர்சனங்களையும் எதிர்பார்ப்புகளையும் இனி காணலாம்.

புலம்சார்ந்த பார்வைகள்

தமிழ்நாட்டுப் பழங்குடியின மக்களின் உரிமைகளையும் வாழ்வியல் சிக்கல்களையும் இந்நூல் விரிவாகவே பேசியுள்ளது. பழங்குடிகளின் மரபார்ந்த விவசாயம், பல்லுயிர் பன்மயம், கலப்பு வேளாண்மை, காட்டெரிப்பு வேளாண்மை, பழங்குடியின மக்களின் சுயசார்பு பொருளாதாரம் குறித்து பொதுச் சமூகம் புரிந்து கொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் இந்நூல் பயனுள்ளதாக இருக்கும்.

இந்நூலில் புகழ் பெற்ற மானிடவியல் ஆய்வாளர்கள் வெரியர் எல்வின், வோன் பியூரர் ஹேமண்டார்ப், டி.என்.மஜும்தார், எமில் தர்க்கைம், பிரான்ஸ் போவஸ் மற்றும் கமில் வாச்லவ் சுவெலபில் ஆகியோர் குறித்து குறிப்புகள் கொடுத்து, பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக அவர்கள் ஆற்றிய பணிகள் குறித்தும் அவர்களின் ஆய்வுகள் குறித்து விளக்கியிருப்பது நூலின் சிறப்பு.

நிர்வாக குறைபாடுகள்:

பன்மியமும், தனித்துவமும் கொண்ட பழங்குடிச் சமூகங்கள் மீது அரசின் கொள்கைகளும் திட்டங்களும் ஒரு பொதுப்படையான தீர்வாக, அவர்களின் பங்களிப்பு ஏதுமின்றி, முன் அனுபவமும், பழங்குடிகள் குறித்துச் சரியான புரிதல் இல்லாத அலுவலர்களால் கணிசமான அளவு தொகை செலவிடப்பட்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருப்பினும், எதிர்பார்த்த அளவு வளர்ச்சியைத் தமிழ்நாட்டுப் பழங்குடிச் சமூகங்கள் இன்றளவும் அடையவில்லை. பழங்குடி மக்கள் பங்கேற்புடன், அவர்களின் தேவை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால்தான் வளர்ச்சியை எட்ட முடியும் என்கிற நூலாசிரியரின் பார்வை சரியானது. ஆனால், இது பற்றிய நல்ல உதாரணங்களை ஆய்வாளரின் நேரடி கள அனுபவத்தில் இருந்தோ, பிற மாநில அனுபவங்களையோ விளக்கி இருந்தால் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

ஏனென்றால், பழங்குடியின மக்களின் நலனை மேம்படுத்துவதற்காகவும் ஒருங்கிணைத்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காகவும் இந்திய அரசமைப்பின் பிரிவு 275(1) கீழ் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படுகிறது, மேலும், பழங்குடியினர் சிறப்புத் துணை திட்ட நிதி, மாநில அரசால் ஆண்டுக்கு 250 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் தொல்குடி திட்ட நிதி, குறிப்பிடத்தக்க அழிநிலைப் பழங்குடியினர் மேம்பாட்டு நிதி என்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், திட்ட மிடுதலில் உள்ள போதாமைகள், பழங்குடியின மக்களின் தேவை அறிந்து அவர்களின் பங்கேற்போடு திட்டங்களைச் செயல்படுத்தாமல், அதிகாரிகள் மட்டுமே முடிவு செய்வது போன்றவற்றால் தமிழ்நாட்டுப் பழங்குடியின மக்கள் எதிர்பார்த்த வளர்ச்சியை அடையவில்லை. எனவே, விமர்சனங்கள் மாற்று வழிமுறைகளோடு முன்வைக்கப்பட்டால் அது பழங்குடி மக்களுக்கு பயனளிக்கும்.

பழங்குடிகள் நிர்வாகத்தில் பங்கேற்பு:

தமிழ்நாட்டில் பழங்குடி மக்களுக்கான அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை முடிவு செய்யும் அமைப்புகளில் பழங்குடிச் சமூகங்களுக்கான பிரதிநிதித்துவம், அவர்களுடைய உண்மையான பங்கேற்பு, கருத்துக்களைத் தெரிவிப்பது என்கிற அளவில் கூட இல்லை என்கிற நூலாசிரியரின் ஆதங்கம் உண்மையானது.

தமிழ்நாட்டில், தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் (Tribes Advisory Committee) 13.11.2023 அன்று அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 17 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மன்றம் பழங்குடியினருக்கான திட்டங்களில் அரசுக்கு ஆலோசனை கூறவும், ஒருங்கிணைத்த வளர்ச்சியை உறுதி செய்யவும் அமைக்கப்பட்டது. ஆனால், இம்மன்றத்தின் உறுப்பினர்கள் பழங்குடியின மக்களின் உரிமைகளை அரசிடம் கேட்டுப்பெறவோ, பழங்குடியின மக்களின் மேம்பாட்டுத் திட்டங்களில் அரசுக்கு ஆலோசனை கூறவோ வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.

ஆன்றோர் மன்றத்தின் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பொருள் குறித்து மன்ற உறுப்பினர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும், இம்மன்றத்தின் கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை கட்டாயமாக நடத்தப்பட வேண்டும், பழங்குடியின மக்களுக்காகச் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களை ஆன்றோர் மன்றத்தின் ஓப்புதல் பெற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும், என்கிற பேராசிரியர் விர்ஜினியஸ் காகா தலைமையிலான உயர்மட்டக் குழுவின் (High Level Committee) பரிந்துரைகள் இன்று வரை அமல்படுத்தப்படவில்லை.

வன உரிமைச் சட்டம்

தமிழ்நாட்டில் வன உரிமைச் சட்டம் குறித்தும், அதை நிறைவேற்றுவதில் உள்ள போதாமைகள், வன உரிமைச் சட்டம் குறித்து பழங்குடியின மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வின்மை, சம்பந்தப்பட்ட துறைகளின் பொறுப்பின்மை குறித்தும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் நூலாசிரியர் விரிவாகப் பதிவு செய்துள்ளார் (பக். 26, 53,57), வன உரிமைச் சட்டத்தின்படி தமிழ்நாட்டில் நில உரிமை பட்டா கோரி 37,461 விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசுக்கு வந்துள்ளது. இதில் நில உரிமை பட்டா பெற்ற தனியர்களின் எண்ணிக்கை 10, 536, பழங்குடி கிராம சமூகத்தின் (community Forest Rights) சார்பில் பெறப்பட்ட எண்ணிக்கை 531, பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த நிலத்தின் பரப்பளவு 9,626 ஏக்கர் என்று மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் ஜூன் 2024 அன்றைய புள்ளிவிவரத்தை மேற்கோள்காட்டி நூலாசிரியர் தெரிவித்துள்ளார்(பக்.53). தமிழ்நாட்டில் வன உரிமை பட்டா கோரி விண்ணப்பித்த 14,849 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது, 11,545 மனுக்கள் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளதாக மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ஆனால், தமிழ்நாடு சட்டமன்றத்தில், பிப்ரவரி மாதம், 2024 அன்று ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் (Policy Note, Page 98), 15,408 தனியர்களுக்கான பட்டாவும், 8945.5 (22,104.778 ஏக்கர்) ஹெக்டேர் நிலமும், 720 பழங்குடி கிராம பட்டாவாக 24,470.85 (60,468.694 ஏக்கர்) ஹெக்டேர் நிலமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரத்திற்கும், மாநில அரசின் புள்ளிவிவரத்திற்கும் வேறுபாடுகள் உள்ளது. மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சகத்திற்கு உரிய தரவுகளை வழங்கவேண்டிய தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நல இயக்குநகரம், புள்ளி விபரக் குறைபாடு குறித்து ஆய்வு செய்யவேண்டும்.

மரபார்ந்த வேளாண்மையும் தற்போதைய நடைமுறைகளும்:

பழங்குடியின மக்களின் பல்லுயிர் பன்மையம் பாதுகாப்படவேண்டும், அவர்களிடம் சந்தைக்கான பயிர்களை அறிமுகப்படுத்துவதுடன், அவர்களின் மரபார்ந்த பயிர்கள் அழிந்து போவதன்றி அவர்களுடைய உணவு மற்றும் ஊட்டச் சத்து பாதுகாப்பும் இல்லாமல் போகும் நிலைமை வந்துவிடக்கூடாது, சந்தையில் கிடைக்கும் தானியங்களை வாங்கி தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் நலப்பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர் (பக். 83) என்பதை பதிவுசெய்கிறார்.

இது தொடர்பாக வாழும் மூதாதையர்கள் நூலில் (பகத்சிங், 2019) பின்வருமாறு குறிப்பிடுகிறார் “ஆனைமலையில் வசிக்கும் முதுவர் பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய காட்டெரிப்பு வேளாண்மை அரசாங்கத்தால் தடுத்து நிறுத்தப்பட்டதால், தங்களின் பாரம்பரியப் பயிர்களான கேழ்வரகு, தினை, சோளம் ஆகியவற்றைப் பயிற்றுவிக்க முடியாமல், அரசின் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி, மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது, இதனால் இரத்த அழுத்தம், நீரழிவு, மூட்டுவலி போன்ற நோய்களுக்கு ஆட்பட்டு வருகிறார்கள்.’’ பழங்குடிகளின் வாழ்வியல் பாதிப்புகளை பொதுச் சமூகம் அறிய இது போன்ற களப் பதிவுகள் அதிகம் தேவையாக இருப்பதால் இந்நூலிலும் இதுபோன்ற தரவுகளைக் கூடுதலாகக் கொடுத்து இருக்கலாம்.

பழங்குடிகளின் கல்வி மேம்பாடு:

பழங்குடியின மாணவர்களின் கல்வி இடைநிற்றல், மத்திய மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை, திட்டங்கள் குறித்து பழங்குடியின மாணவர்களின் பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வின்மை, கல்வி நிறுவனங்களின் அக்கறையின்மை, இக்கல்வியினால் பயனடைந்து அரசின் வேலைவாய்ப்பினைப் பெற்ற பழங்குடியினர், பழங்குடிச் சமூகங்களிருந்து விலகிப்போவது குறித்து நூலாசிரியர் பதிவுசெய்துள்ளார்.

தமிழ்நாட்டில் பழங்குடிகளின் கல்வி மேம்பாட்டிற்கு கொள்கை வகுப்பதற்கோ, திட்டமிடுவதற்கோ இதுநாள் வரை மானுடவியலாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்றும் இது தொடராமல் கல்வித்துறையும், பழங்குடி மக்கள் நலத் துறையும் மானுடவியலாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று கொள்கை வகுக்க வேண்டும் என்று நூலாசிரியர் பரிந்துரை செய்துள்ளார் (பக். 122,123). பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பாக, மானிடவியல் ஆய்வாளர் எவ்வாறு அரசுக்கு ஆலோசனை அளிக்க முடியும் என்பதை சில உதாரணங்களோடு விளக்கி இருக்கலாம்.

இந்தியாவில் பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார, கல்வி மற்றும் சுகாதார நிலையை ஆராய்வதற்கும் அதை மேம்படுத்துவதற்குத் தகுந்த பரிந்துரைகளை வழங்கப் பேராசிரியர் விர்ஜினியஸ் காகா அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழுவை (High Level Committee), 2013-இல் மத்திய அரசு அமைத்தது, இக்குழு பழங்குடியின மாணவர்களின் தாய்மொழியில் கல்வி, அருகாமை பள்ளிகள் ஏற்படுத்துவது, பழங்குடியின மக்களின் வாழ்வியலோடு தொடர்புள்ள மரபுக் கதைகள், வரலாறு, வழக்காறு , ஓவியம், நடனம், இசை விளையாட்டு ஆகியவற்றைப் பாடத்திட்டத்தோடு இணைக்க வேண்டும்; உண்டு உறைவிடப்பள்ளிகள் அமைப்பது, கிராம சபை மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டுக்குள் தொடக்கப் பள்ளிகளைக் கொண்டுவருவது உள்ளிட்ட பழங்குடியின

மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பாக 27 பரிந்துரைகளை வழங்கியது. இப்பரிந்துரைகளை அமல்படுத்தினாலே பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்படும். இந்திய அளவில் சமூகவியல் பேராசிரியரான விர்ஜினியஸ் காகா அவர்களின் குழு கொடுத்த பரிந்துரைகளிலிருந்து மானிடவியலாளர்களின் பரிந்துரைகள் எப்படித் தனித்துவம் கொண்டது, தமிழ்நாட்டுப் பழங்குடிகளின் தனித்த வளர்ச்சிக்கு அவை எங்கணம் பங்களிக்கும் என்பதை அறிந்திருக்கலாம். அப்படியான வாய்ப்பினை நூலாசிரியர் வழங்கியிருக்க வேண்டும்.

பழங்குடிகளின் தெய்வவழிபாடும் பன்முகத்தன்மையும்

பழங்குடியின மக்களின் மூதாதையர் தெய்வ வழிபாடு குறித்து பதிவு செய்துள்ள நூலாசிரியர், தெய்வ வழிபாட்டில் அவர்களது மரபார்ந்த உணவும், மாமிசமும், மதுவும் கூட இருக்கும் என்றும், கோழி அல்லது ஆடு பலியிடப்பட்டு அதை சமைத்து தெய்வங்களுக்கு படையல் இடப்படும் (பக். 107) என்றும் தமிழ்நாட்டுப் பழங்குடியின மக்களின் தெய்வ வழிபாட்டு முறையை நூலாசிரியர் பொதுமைப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 37 பழங்குடி இனக்குழுவிற்கும் பண்பாட்டுத் தனித் தன்மையும் தெய்வ வழிபாட்டு முறைகளும் உள்ளன. கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வசிக்கும் மலையாளி பழங்குடியின மக்களும், திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு பகுதிகளில் வசிக்கும் மலை வேடன் பழங்குடியின மக்களும் பன்றி பலியிட்டு தங்களின் குல தெய்வங்களுக்குப் படையலிட்டு பன்றி இறைச்சியை உண்ணும் வழக்கம் இன்றும் உள்ளது. தமிழ்நாட்டுப் பழங்குடியின மக்களின் தெய்வ வழிபாட்டு முறைகளில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.

தமிழ்நாட்டுப் பழங்குடிகள் பிற சனாதன இந்து சமய சாதிச் சமூகங்கள் வழிபாடும் சமஸ்கிருதத் தெய்வங்களான திருமால், சிவன், பார்வதி, முருகன் போன்ற வைஷ்ணவ, சைவ சமய தெய்வங்களையும் தற்போது பழங்குடிகள் வழிபடுகின்றனர். இது அவர்களது வழிபாட்டு முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் எனக்கருதலாம். அவர்கள் வாழும் சூழ்நிலை, சுற்றுப்புறத்திலுள்ள பிற சாதிச் சமூகங்களுடன் அவர்களுக்கு இருக்கும் உறவின் தன்மை, வரலாறு, தேவைகளுக்காக அச்சமூகங்களைச் சார்ந்திருத்தல் போன்ற காரணிகள் மூலம் இந்த வழிபாட்டு நிகழ்வினைப் புரிந்து கொள்ளமுடியும் (பக். 111).

தமிழ்நாட்டுப் பழங்குடியின மக்கள் சைவ, வைணவத் தெய்வங்களை வழிபடுகிறார்கள், இது அவர்களது வழிபாட்டு முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பதை ஒரு மானிடவியல் ஆய்வாளராகப் பகுத்து ஆய்ந்து நிறுவும் நூலாசிரியர், அரசின் பிரதிநிதியாக இனவரைவியல் ஆய்வு மேற்கொள்ளும்போது, இத்தகைய மாற்றத்தைக் காரணம் காட்டி அவர்களைப் பழங்குடியினர் இல்லை என்று நிராகரிப்பது முரண்பாடாக உள்ளது. இது போன்று இரட்டை நிலைப்பாடு உள்ள ஆய்வாளர்களின் ஆய்வு அறம் மீது சந்தேகம் கொள்ளச் செய்கிறது.

மானிடவியல் ஆய்வு அறம்-முறையியலுக்கு முரணாக மானிடவியலாளர்கள்:

சமூக ஆய்வின் போது ஆய்வாளர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார், “ஆய்வின் போது பழங்குடிகளின் நம்பிக்கையைப் பெறுவதும் அந்நம்பிக்கையைத் தொடர்ந்து தக்கவைப்பதும் ஆய்வு நெறியின் ஒரு முக்கிய அம்சம். ஆய்வாளன், அவர்களின் பண்பாடு, நடைமுறை வாழ்க்கை குறித்து எவ்விதமான சுயசாய்வற்ற மனநிலையைக் கொண்டிருப்பது அவசியம். ஆய்வாளன் அம்மக்களின் பண்பாட்டு மதிப்பீடுகளுக்கும், விழுமியங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் மனப்பக்குவம் பெற்றிருக்கவேண்டும்” மேலும், ஆய்வாளன் தான் சார்ந்த சமூகத்தின் மதிப்பீடுகளைக் கருத்தில் கொண்டு, பழங்குடி மக்களின் சமூக பொருளாதார நடைமுறைகளை, செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளவும், மதிப்பிடவும் கூடாது என்று ஒரு மூத்த மானிடவியல் ஆய்வாளராக கள ஆய்வுக்குச் செல்லும் மானிடவியல் ஆய்வாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் நூலாசிரியர்.

தமிழ்நாட்டுப் பழங்குடியின மக்கள் குறித்து இனவரைவியல் ஆய்வு என்பது இனக்குழுக்களின் தனித்தன்மை குறித்து அறிவதற்கும், அவர்களின் சமூக, பொருளாதாரக் கல்வி நிலை குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதும், அம்மக்களின் முன்னேற்றத்திற்கு தங்களால் முடிந்த பங்களிப்பை செய்வதே ஆய்வின் நோக்கமாகும். ஆனால், இந்நோக்கத்திற்கு மாறாகத் தமிழ்நாட்டில் மாநில கூர்நோக்குக் குழு, மற்றும் மாவட்ட அளவில் செயல்படும் சமூக நீதி மற்றும் மனித உரிமைப்பிரிவு அலுவலர்களுக்கு உதவிடும் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஒரு சில மானிடவியல் ஆய்வாளர்கள், இனவரைவியல் கள ஆய்வை மேற்கொள்ளும் போது, அம்மக்களின் வாழ்க்கைச் சூழல் குறித்துப் புரிதலின்றிக் கேள்விகளை முன்வைப்பதும், சுயசார்போடும், முன்முடிவுகளோடும் அம்மக்களை அணுகுவதும், தன் சமூகம் சார்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும் மக்களைப் புரிந்து கொள்ளும் போக்கே பெரும்பான்மையான கள ஆய்வுகளில் உள்ளது என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

பழங்குடியின மக்களின் சமஸ்கிருத வழிபாட்டு முறை, சமீப காலங்களின் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வழக்காறுகள் ஆகியவை குறித்து இனக்குழு வரலாறு ஆய்வு முறையை (Ethno History) பயன்படுத்தலாம் என்கிற நூலாசிரியரின் பரிந்துரை வரவேற்கக்கூடியது. கள ஆய்வுக்குச் செல்லும் மானிடவியல் ஆய்வாளர்கள் பழங்குடியின மக்களின் சமூக ஆய்வின் போது, அம்மக்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகள் குறித்து மட்டுமே ஆய்வு செய்வதும், அம்மக்களின் இனக்குழு வரலாறு தெரியாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தரவு பிழைகள்

நூலின் பக்கம் எண் 91 மற்றும் 98- ல் தமிழ்நாட்டில் ஐந்து பழங்குடியினங்கள் குறிப்பிடத்தக்க அழிநிலைப் பழங்குடியினர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அழிநிலைப் பழங்குடியினங்கள் ஆறு என்று இருக்க வேண்டும். இந்திய ஜனாதிபதியின் அறிவிக்கையில் (Presidential Notification), தமிழ்நாட்டில் 37 பழங்குடியினங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில், குறிப்பிடத்தக்க அழிநிலைப் பழங்குடியினர் (Particularly Vulnerable Tribal Groups-PVTG) என்று ஆறு பழங்குடியினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இருளர், காட்டுநாயகன், கோத்தர், குறும்பாஸ், பனியன் மற்றும் தோடர். குறும்பாஸ் பழங்குடியினம் நூலில் விடுபட்டுள்ளது.

பக்கம் எண் 134- ல் பழங்குடிச் சமூகங்களில் ஆண் பெண் சமத்துவமும் பாகுபாடும் பற்றிய பதிவில், 1911-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பழங்குடிகளில் கல்வி அறிவு பெற்ற பெண்கள் 54.4 விழுக்காடு, ஆண்கள் 71.7 விழுக்காடு என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், 1961-ஆம் ஆண்டு பழங்குடியின ஆண்களில் 13.83 விழுக்காடு, பெண்கள் 3.16 விழுக்காடு மட்டுமே பழங்குடிகளில் கல்வி அறிவு பெற்றவர்கள். அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு கல்வி விழுக்காடு சாத்தியமே இல்லை.

நூலின் 135, 136 பக்கங்களில், மத்திய அரசின் அட்டவணை பகுதி (Scheduled Area) நடைமுறையில் உள்ள மாநிலங்களில் மட்டுமே பழங்குடியின பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவராகும் வாய்ப்பு உள்ளது என்றும், பழங்குடி மக்கள் தொகையில் மிகக்குறைந்த எண்ணிக்கையும், சமூக பொருளாதார ரீதியில் விளிம்பு நிலையில் உள்ள பழங்குடிச் சமூகங்களின் பெண்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவராகும் வாய்ப்பு நடைமுறை வாழ்கையில் இல்லை என்றே கூறலாம் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார் (பக். 135,136).

ஆனால், தமிழ்நாட்டில் அட்டவணைப் பகுதிகள் (Scheduled Area) இல்லை என்றாலும், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 144 ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டு, அதில் 72 ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பழங்குடியினப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, பழங்குடியினப் பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவர்ப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நூலில் அத்தியாயம் 10 தவிர, மற்ற அனைத்து அத்தியாகங்களுக்கும் துணை நூல் பட்டியல் கொடுக்கப்படவில்லை. மேலதிகத் தகவல் தெரிந்து கொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இப்பட்டியல் பயணளித்திருக்கும் . அதே போல, நூலில் இடம்பெற்றுள்ள 13 புகைப்படங்களுக்கான அடிக்குறிப்புகள் எதுவும் தரப்படவில்லை.

எதிர்பார்ப்புகள்

தமிழ்நாட்டுப் பழங்குடிகள் என்று நூலின் தலைப்பு இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு சில பழங்குடிகள், அவர்களின் மரபார்ந்த வேளாண்மை, தெய்வ வழிபாடு குறித்து மட்டுமே நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகச் சமவெளிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் குறித்து எவ்விதப் பதிவுகளும் இல்லை. அடுத்த நூலில் சமவெளி வாழ் பழங்குடி மக்கள் பற்றியும் ஆய்வு செய்து எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

மொத்தத்தில், தமிழ்நாட்டுப் பழங்குடிகளின் மரபார்ந்த வேளாண்மை, வேளாண் பன்மையம், கலப்புப் பயிர் முறை, பயிர்ச் சுழற்சி முறை குறித்தும், வன உரிமைச் சட்டத்தின் செயல்பாடுகள், அதன்குறைபாடுகள், பழங்குடியின மக்களின் மரபார்ந்த உரிமைகள் எவ்வாறு அரசின் சலுகைகளாக மாறியுள்ளது என்பது குறித்துத் தெரிந்து கொள்ள இந்நூல் பயனுள்ளதாக இருக்கும்.

நூல் அறிமுகம் எழுதியவர் :


முனைவர் பெ.ராமமூர்த்தி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *