‘சங்கமம்’ என்ற தலைப்பில் வெளியான தனிஷ்க் நிறுவனத்தின் ஏகத்துவம் என்ற புதிய விளம்பரப் படத்தை நீங்கள் பார்த்தீர்களா? இல்லையா? இனிமேல் அதை உங்களால் பார்க்க முடியாது. இணையத்தில் நடத்தப்பட்ட ட்ரோல்களுக்கு அடிபணிந்த தனிஷ்க் நிறுவனம், தங்களுடைய அதிகாரப்பூர்வமான அனைத்து தளங்களிலிருந்தும் இருந்து அந்த வீடியோவை அகற்றியிருக்கிறது.
அந்த விளம்பரத்தின் பிரதியை இங்கே காணலாம்.
https://twitter.com/i/status/1315833504253374464
கருத்துக்களை இடுகின்ற வசதியுடனே, முதலில் அந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டனர். விருப்பம்/வெறுப்பு இடுவதற்கும் முதலில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த இரண்டு வசதிகளையும் நீக்கிய அவர்கள் இறுதியாக அந்த வீடியோவையே முழுவதுமாக அகற்றி விட்டனர்.
ஏன் அது நடந்தது?
ஃபேஸ்புக்கில் அந்த வீடியோவிற்கு அவர்கள் மீது வைக்கப்பட்ட கருத்துக்கள் அதற்கான காரணத்தை உங்களுக்கு வழங்குவதாக இருக்கும். இங்கே அவ்வாறு வெளியான கருத்துக்களின் ஒருபகுதி ஸ்னாப்ஷாட் இங்கே தரப்பட்டுள்ளது. தனிஷ்க் நிறுவனத்தின் குறிப்பிட்ட ஊழியர்களைப் பெயரிட்டு அவர்களைத் திட்டுவது உட்பட, இதைவிட நூறு மடங்கு மிகமோசமான கருத்துக்கள் ட்விட்டரில் இன்னும் ஏராளமாக உள்ளன.
உண்மையைச் சொல்வதானால், தனிஷ்க் அல்லது அவர்களது விளம்பர நிறுவனத்தில் உள்ள யாரோ ஒருவர் இவ்வாறான கதையைக் கருத்தில் கொண்டு, அதை தயாரிப்பிற்காக அனுப்பி, இப்போது அதை வெளியிடும் அளவிற்கு தைரியத்துடன் இருந்திருக்கிறார் என்பது என்னைப் பொறுத்தவரை மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது. ‘தைரியமாக’ என்று அதை அழைப்பதே இங்கே இப்போது வித்தியாசமான சூழ்நிலை இருப்பதைக் காட்டுவதாக இருக்கின்றது. மிலிந்த் சோமனும், மது சாப்ரேவும் காலணிகளை விற்பதற்கான விளம்பரத்தில் பாம்பைத் தவிர வேறு எதையும் அணிந்திராத காலம் நம்மிடையே இருந்தது. அப்போது நாம் அதை ‘தைரியம்’ என்று அழைத்துக் கொண்டிருந்தோம்.
இந்த விளம்பரம் வெளியான சில நாட்களிலேயே கடுமையான கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது. மேலும் விளம்பரத்தை வெளியிட்ட அந்த நிறுவனத்தைப் புறக்கணிப்பதற்கான அழைப்புகளும் விடுக்கப்பட்டுள்ளன.
ஆக இந்த விளம்பரத்தை எதிர்ப்பவர்களின் கூற்றுப்படி, அதில் உள்ள பிரச்சனைதான் என்ன? பிப்ரவரி 2020இல் ஆளும் கட்சியைச் சார்ந்த மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி கிஷன் ரெட்டியால் பாராளுமன்றத்தில் திட்டவட்டமாக ‘அது இல்லாத ஒரு கருத்து’ என்று தெரிவிக்கப்பட்ட ‘லவ் ஜிஹாத்தை’ (எந்தவொரு பதிவு, அர்த்தம், விளக்கம், பொருத்தப்பாடும் இல்லாமல் தங்களுடன் பொருந்திப் போகாத எவரையும் இழிவுபடுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற ‘துக்டே துக்டே கும்பல்’ என்ற சொல்லைப் போல), இந்த விளம்பரம் இயல்பாக்கி காட்டுகிறது என்பதுதான் பிரச்சனை. வெவ்வேறு மதப்பிரிவினருக்கிடையில் நடைபெறுகின்ற எல்லா திருமணங்களுமே நிச்சயம் இதுபோன்று அவதூறாகவோ அல்லது கடுமையாகக் கண்டிக்கப்படுவதற்கோ, தள்ளிவைக்கப்படுவதற்கோ தகுதி கொண்டவையாக இருக்கவில்லை.
அந்த விளம்பரம் இந்தக் கதை ஒட்டுமொத்த இந்தியாவிற்கானது என்று கூறுகிறதா? இல்லை.
அந்த விளம்பரம் மக்களுக்கு இடையிலான வன்முறையை வெளிப்படுத்துவதாக இருக்கிறதா? இல்லை.
அந்த விளம்பரம் தங்களுடைய மதத்திற்கு அப்பாற்பட்டு, மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்பதைக் காட்டுகிறதா? ஆம்.
இந்த வகையான நல்லிணக்கம் சாத்தியமே இல்லாததா? இல்லை.
இந்த வகையான நல்லிணக்கம் தேவைப்படுகின்றதா? நிச்சயமாக.
அப்படியென்றால் என்னதான் பிரச்சனை? பிரச்சனை என்னவென்றால், இஸ்லாம் அல்லது பிற மதங்களைச் சார்ந்த வெறி பிடித்த ஆண்களால், எளிதில் ஏமாறக் கூடிய ஹிந்து பெண்கள் (‘லவ் ஜிஹாத்’ சதிக் கோட்பாட்டின் கீழ், அவர்களுக்கென்று யாரும் இருப்பதில்லை, எங்கு வேண்டுமென்றாலும் வழிநடத்திச் செல்லக்கூடிய கைப்பாவைகளாக அவர்கள் இருப்பார்கள்) ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் அந்த ‘லவ் ஜிஹாத்’ கோட்பாட்டின்படி, அதற்கு நேர்மாறாக இருப்பதாகவே இந்த விளம்பரம் இருக்கிறது – ஹிந்து பெண் தன்னுடைய முஸ்லீம் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். அவளுக்கு மிகவும் பிரமாண்டமாக ஹிந்து மத அடிப்படையிலான வளைகாப்பு விழாவை அந்தக் குடும்பத்தினர் நடத்துகிறார்கள்.
விளம்பரத்தில் காட்டப்பட்டுகின்ற அந்த மனிதன் வன்முறையுடன், மோசமானவனாக இருக்கிறானா? இல்லை.
அந்தக் குடும்பத்தினர் தங்களுடைய மருமகளை மோசமாக நடத்துகிறார்களா? இல்லை.
அதுபோன்றதொரு காட்சி சாத்தியமே இல்லாததா? மிகவும் அரிதானது.
ஹிந்து மனைவி – முஸ்லீம் கணவர் என்று இதேபோன்றதொரு அமைப்பிற்குள் இருக்கின்ற குறைந்தது மூன்று நண்பர்கள் எனக்கு உள்ளனர். அவர்கள் அனைவரும் மற்றவர்களைப் போலவே மிகச்சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவருக்குமான பண்டிகைகளை அவர்கள் சமமான ஆர்வத்துடனே கொண்டாடி மகிழ்கிறார்கள்.
எனவே, நடப்பில் இருப்பவற்றை அந்த விளம்பரத்தில் காட்சிப்படுத்த முடியாதா? நிச்சயமாக முடியும். அந்த விளம்பரம் அதைத்தான் செய்திருந்தது – ஏற்கனவே சாத்தியமாகி இருப்பதையே அது காட்டுகிறது. அது உலகம் இவ்வாறு இருக்கிறது என்று ஒருவரை நம்ப வைப்பதற்காக எடுக்கப்பட்டது அல்ல – குறைந்தபட்சம் நான் பார்த்து வருகின்ற எனது நண்பர்களைப் போல, வழக்கமாக இருக்கக்கூடியதைப் பற்றியதாகவே அந்த விளம்பரம் இருக்கிறது. இனி என்னவாகும் என்பது பற்றிய கருத்துக்கள் பயனர்களின் நடத்தை குறித்த நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு, விளம்பரங்களில் வழக்கமாக உள்ள மிகைப்படுத்தலைக் கொண்டிருக்கும்.
என்ன காண்பிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஏதாவது விதிவிலக்குகள் உள்ளனவா? நிச்சயமாக அவ்வாறு இருக்க முடியும்.
அந்த விதிவிலக்குகள் இப்போது வழக்கமாகி விட்டனவா? இல்லை. அவை அவ்வாறு ஆகவில்லை, அப்படி ஆகவும் கூடாது.
மிகவும் கோபமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்களின்படி, அந்த விளம்பரம் ஏற்படுத்தியிருக்கும் மற்றுமொரு பெரிய வலியாக – ‘ஏன் அவர்களைத் தலைகீழாகக் காட்டக் கூடாது? முஸ்லீம் மனைவி – ஹிந்து கணவர் என்று’ என்ற கேள்வி முன்நிற்கிறது.
ஆமாம், ஏன் அவ்வாறாக இல்லை? பற்பசை பிராண்டான க்ளோசப், 2018ஆம் ஆண்டு தன்னுடைய விளம்பரத்திற்காக இரண்டு வெவ்வேறு விளம்பரப் படங்களைத் தயாரித்து இந்த இரண்டையும் காட்ட முயற்சித்தது (ஆனால் அந்த வீடியோக்கள் க்ளோசப் நிறுவனத்தால் அகற்றப்பட்டு விட்டன. எனது 2018ஆம் ஆண்டு பதிவில் அது குறித்துப் பதிவுகள் இருக்கின்றன). அந்த இரண்டு விளம்பரங்களும் அதிக அளவிற்கு ட்ரோல் செய்யப்பட்டதால் க்ளோசப் நிறுவனம் அந்த இரண்டு விளம்பரங்களயும் திரும்பப் பெற்றுக் கொண்டது! ட்ரோலிங்கிற்கு முடிவே இருக்கப் போவதில்லை.
ஆக இது என்ன வகையான எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை நன்கு அறிந்திருந்த தனிஷ்க் நிறுவனமும், அதன் விளம்பர நிறுவனமும் உண்மையில் இதை அனுமதித்தது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்த விளம்பரப் படத்திற்கு என்ன மாதிரியான எதிர்வினைகளை எதிர்பார்க்கலாம் என்பது தெரியாமலே அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது எனக்கு உறுதியாகத் தெரிகிறது.
மகிழ்ச்சியான, விவேகமான மற்றும் அமைதியான மதங்களின் சக வாழ்வைத்தான் அவர்கள் காண்பித்திருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து மக்களைக் கோபமாகவும், அச்சத்துடனும் வைத்திருப்பதற்கான வில்லனை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், இந்த விளம்பரம் மற்றொரு எளிதான இலக்காக மாறியிருக்கிறது.
தனிஷ்க் எந்தத் தவறும் செய்யவில்லை அல்லது யாரையும் அவமானப்படுத்துமாறு எதையும் காட்டவில்லை என்பதால், இணையத்தில் நடத்தப்பட்ட ட்ரோலிங்கிற்கு அடிபணிந்து, அவர்கள் தங்களுடைய விளம்பரத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது உண்மையில் வருத்தமளிக்கவே செய்கிறது.
இந்தச் சூழலில், இரண்டு மதங்களுக்கிடையில் சர்ச்சைகளை ஏற்படுத்திய வேறு சில விளம்பரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை குறிப்பிட்ட காரணங்களுக்காக ட்ரோல் செய்யப்பட்டவை. அவற்றில் சில இப்போதைய விளம்பரத்தைப் போலவே திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டவையாகவும் இருக்கின்றன.
Surf Excel – Holi, February 2019 | Agency: Lowe Lintas Mumbai
Closeup Lost Loves: Naghma & Arghadeep, November 2018 | Agency: Lowe Lintas and VICE Media
Closeup Lost Loves: Adithi & Umar, November 2018 | Agency: Lowe Lintas and VICE Media
Brooke Bond Red Label – Ganesha, September 2018 | Agency: Geometry Encompass
Brooke Bond Red Label – Neighbours, April 2014 | Agency: Ogilvy
Kaun Banega Crorepati promo, July 2014 | Agency: Leo Burnett
https://beastoftraal.com/2020/10/13/tanishqs-ekatvam-the-oneness-broken/