வாத்தியார்கள் தினம்:- சக.முத்துக்கண்ணன்.

வாத்தியார்கள் தினம்:- சக.முத்துக்கண்ணன்.

“ஆசிரியர்களுக்கு மட்டும் இன்று  டீ இலவசம்” என எழுதிப் போட்டிருந்தார்கள்.

அப்போது நான் பி.எட்., முடித்திருந்தேன்; வேலை கிடைத்திருக்கவில்லை.

சில பேராசிரியர்கள் அங்கு டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். ‘இது ஆசிரியர் தினம் தானே, பேராசிரியர்கள் ஏன் குடிக்கிறார்கள்?’ என மொக்கையான சிந்தனை கூட வந்தது. அவர்கள் சாப்பிட்ட சூடான போளிக்கும் கூட அந்த கடைக்காரன் காசு வாங்கிருக்கமாட்டான் என நடந்து வரும் போது தோணியது. பெயிண்ட்டிங்  வேலைக்கு போகும் எம்.எஸ்.சி., பி.எட்., முடித்த நண்பன் குமரவேல் சொன்னான்.”மாப்ள வேலை கெடச்சதும் இந்த கடைக்கு வர்றோம்.”-  இருவரும் கைகுலுக்கிக் கொண்டு ஒர்ருவா வடைக் கடையில் நின்ற படியே ஆளுக்கு அஞ்சஞ்சு வாங்கி வைத்துக்கொண்டு ஊதி ஊதிக் கடித்துக் கொண்டோம். பத்து ரூவாயில் அந்நாளை கொண்டாடிவிட்டிருந்தோம்.

வேலை கிடைப்பதற்கு முன்பான ஐந்து ஆண்டுகளும்,  ஆசிரியர் தினங்களை கூச்சத்தோடுதான் கொண்டாடினேன். டியூசன் மாணவர்களின் வாழ்த்துச் செய்திகள் வரும். தாளில் ஹேப்பி டீச்சர்ஸ் டே எழுதி,   பூ டிசைன்ல்லாம்  போட்டு ஜிகினா ஒட்டி  வந்து தருவார்கள். அதைப் பிரித்து வாசிப்பதெல்லாம் தனி சுகம். முழுசாய் வாத்தியார் ஆகாமலேயே, நம்மை மேடையேற்றியது மாதிரி ஒரு ஃபீல். அந்த கொண்டாட்டத்தைக் கூட வெளியில் காட்டிக்கொள்ளாமல் அறைக்குள்ளேயே முடித்துக் கொள்வேன். ஆனால் இப்ப நெனச்சுப் பாத்தா… அப்டியொரு  மேடை இல்லவே இல்லை. என்னைச் சூழ்ந்து கொண்டாடும் குழந்தைகளின் எண்ணிக்கை வேண்டுமானால் பெருகியிருக்கிறது. அந்த பழைய ட்டேஸ்ட் மிஸ்ஸிங். அப்போதிருந்த ஏக்கம் தான் அந்த மேடையைக் கற்பனையில் கட்டியிருக்கிறது. நிஜத்தை விட கற்பனை  மேலானது தான்.

‘தனியார் பள்ளிக்கு வேலைக்கு போகமாட்டேன்’ என்கிற வீம்பு அஞ்சு வருசமும் இருந்தது; குமரவேலுக்கும் தான். அதை விட பெயிண்டிங் வேலை பெட்டர் என அவன் முடிவெடுத்திருந்தான். ஒரு நாளைக்கு ஐநூறு சம்பளம்.

Image

அப்பா இல்லாததால் தங்கச்சி உட்பட குடும்ப பாரம் முழுதும் அவன் தலையில். வேலைக்கு போவாத நாட்களில் என்னோடு டியூசனில் உட்கார்ந்து பாடம் நடத்துவான். டியூசன்னதும் பெரிசா யோசிச்சிற வேண்டாம். மாசம் எண்ணூரு நிக்கும் அவ்ளோதான். கடையில் டீ சாப்பிடுவதில்கூட கணக்குப் பார்த்துச் செலவழிப்போம். ஒருநா நான்; இன்னொருநா அவன். டியூசன் நடத்திய அந்த வாடகை இடம்- புத்தகம் வாசிக்கவும்,  நண்பர்கள் கூடிப் பேசவும்,  சம்பாதிக்காத காலத்தின் காயம் ஆற்றும் இடமாகவும் இருந்தது.

அன்று ஆசிரியர் தினம். குமரவேல் பானிபூரி வாங்கி வந்திருந்தான். ரவுண்டுப்படி இன்னிக்கு அவன் தான் வாங்கித்தரணும்.  அதிலும் அன்று வாத்தியார் வீட்டுக்கு வேலைக்குப் போயிருக்கிறான். காண்ட்ராக்டர் உட்பட கை கொடுத்து சீக்கிரம் வேலை கிடைக்க வாழ்த்தியிருக்கிறார்கள். இப்படியெல்லாம் வேலைத்தளத்தில் நடக்குமா? என நினைத்துக் கொண்டேன்.  ஒருவாத்தியார் வீட்டுக்கு இன்னொரு வாத்தியார் பெயிண்ட் அடிச்ச கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான். இவனைக் கேள்விப்பட்டதும் அந்த வாத்தியார் மதியத்துக்கு மேல் டைனிங் ஹாலில் உட்காரவைத்துப் பேசிக்கொண்டே இருந்துவிட்டாராம். ”ஆனா முழுச்சம்பளம் மாப்ள!” என்றான்.

வாத்தியார் வேலைக்கான லட்சணங்களில் என்னை விட மேலான கூறு அவனுக்கு இருந்தது. டியூசனில் 15 குழந்தைகளை வைத்துக் கொண்டு ஃபங்சன் நடத்துவேன். குழந்தைகள்தினம், ஆசிரியர் தினம், அறிவியல் தினம், டார்வின் பர்த் டே என ஒன்றைக் கூட விடுறதில்லை. குமரவேல் தான் கரும்பலகையில் அழகாக பூக்களும், இலைகளுமாய் எழுத்தோவியம் செய்வான். சனிக்கிழமைகளில் பள்ளி இருந்தால் டியூசன் இருக்காது.

விடுமுறையெனில் டியூசனில் கதை சொல்லும் வகுப்பு நடக்கும். பெரும்பாலும் குமரவேல் தான் கதை சொல்லுவான். ஹார்ட்டூன் கேரக்டர்கள் எனக்கு பரிச்சயமில்லை. அந்த கேரக்டர்களை வைத்து ஜெ.மோ., சுஜாதா, பிரபஞ்சன் கதைகளைக்கூட மிக்ஸ் பண்ணி அடிச்சுவிடுவான். குழந்தைகள் அவனது கதைகளுக்கு மந்திரிச்சுவிட்டது போல் உக்காந்திருக்குங்கள்.

இன்னொரு ஆசிரியர் தினத்தன்று ஒரு தமிழாசிரியரைக் கெஸ்டாக அழைத்திருந்தேன். வெறும் பதினஞ்சு பேர்தானா? என்றவர்,கடைசியில் வர வில்லை. டீவியில் பட்டிமன்றம் பாத்துக்கொண்டே கறிச்சோறு சாப்பிட்டு அவராகவே கொண்டாடிவிட்டார்.  குமரவேலுக்கு அலைபேசினேன், “மாப்ள ஐயா கால வாரிட்டாப்ல நீ வாடா;வந்து என்னித்தியாவது பேசு. கேக் வாங்கி வச்சிருக்கேன் வெட்டி சாப்டலாம்  என்றேன்”.

“ஆள் கெடைக்காட்டி ஒப்பேத்ரதுக்கு நாந்தான் கெடச்சனா. பெயிண்ட்ர ஏம் மாப்ள கூப்டற. நீயே பேசேன்”. சொல்லிட்டு போன கட் பண்ணிட்டான். அந்த டபுள்ஒன் டபுள்ஜீரோ எடைலயே கட்டாச்சா? இல்ல கட் பண்ணிட்டானா? தெரியவில்லை. வீட்டுக்கே போய்விட்டேன். கை,காலெல்லாம் ஒட்டியிருந்த பெயிண்ட் துளிகளை மண்ணெண்ணெய்  தேய்த்து எடுத்துக் கொண்டிருந்தான்.

“டீச்சர்ஸ் டே விஷ்ஸஸ் மிஸ்டர் கண்ணன் ”  என விசு குரலில் மிமிக்ரி செய்துகொண்டு மண்ணெண்ணெய்க் கையை நீட்டிக் கைகொடுக்க வந்தான். கையைப் பிடுச்சுத் திருகி முதுகில் ஒரு குத்துவிட்டேன். குளிச்சிட்டு அடுத்த பத்து நிமிடத்தில்  பேசிக்கொண்டிருந்தான்.

“யார் நெஜமாவே டீச்சரு தெர்ய்மா? இங்காருங்க, நம்ம அம்மா இருக்கு பாரு அதான் நமக்கு மொத டீச்சர்….” இப்டித்தான் ஆரம்பிச்சான். அவன் அப்பா, தாத்தா, மொதமொதல்ல பெயிண்டிங் கூட்டிப்போன பாண்டி, பம்பரம் சுத்த சொல்லித்தந்த நாகராசு, மொச்சக்காட்டுக்கு சுத்துக்கால் வெட்ட சொல்லித்தந்த மணிமாமா, அறிவியல் சொல்லிக்கொடுத்த மெக்கானிக் சசியண்ணன்  என வாத்தியார் வேசம் போடாமல் கற்றுக் கொடுத்த மனிதர்கள் வரிசை வரிசையாய் அவனது பேச்சில் கொண்டாடப்பட்டார்கள்.  நூற்றுக்கணக்கான நாவல்களைப் படிப்பவன் இதைக்கூடப் பேசாட்டி எப்டி!

கடைசியாய் செத்துப்போன சின்னச்சாமி வாத்தியாரைச் சொல்லும் போது மட்டும் தடுமாறினான். லேசாய் செரிமிக்கொண்டு அவன் அழுகையை அடக்கியதை குழந்தைங்க கண்டுபிடிச்சிருக்குங்க.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக 7 நண்பர்கள் அந்த டியூசன் சென்டரில் கூடிப் படித்தோம். முட்டி முட்டி மனனம் செய்யும் வயதைக் கடந்தமையால் அவரவர் வாசித்ததைக் கலந்து பேசிக் கொண்டே இருப்போம். பெயிண்ட் அடிக்கப் போனவன்  சாயந்தரம் லேட்டா வருவான்.  தமிழ் இலக்கணமும், பயாலஜியும் குமரவேலுக்கு அத்துபடி. புத்தகத்திலிருப்பதையே தப்பும்பான். நாங்கள் அப்படியே ஏற்போம். அவனுக்கு தெரிந்த ஆதர்ஸ் பேர்கள் கூட எங்களுக்குத் தெரியாது. ஒரு முறை பொருத்துக பகுதியில் பொய்த்தேவுக்கு நேராக  லா.ச.ரா என்று இருந்தது. அது தப்புடா, அத எழுதுனது க.நா.சு என்றான். “அடப்போய்யா இது மதுர கோச்சிங் சென்டர் மெட்டீரியல்.

டியூசன் சென்டரில் மின்சாரம் தாக்கி ...

தப்புக்கு வாய்பில்ல” என வசந்த் அண்ணன் சொன்னபோது  அவர் வயதை மதித்து விட்டுட்டுப் போய்ட்டான். இதே நானாக இருந்திருந்தால் நிச்சயம் அடித்திருப்பான். மறுநாள் சாய்ந்தரம் பன்னண்டாப்பு வரை தமிழ் புக்கையெல்லாம் முடித்த களிப்பில் ஆங்கிலம் பக்கம்போயிருந்தோம். வீட்டிலிருந்த ‘பொய்த்தேவு’ நாவலை எடுத்து வந்து எங்கள் முன்னால் போட்டு விட்டு கோச்சிங் சென்டரில் வாங்கி வந்த ஸ்பைரல் பைண்டிங்கைத் தலைக்கு வைத்து படுத்துக்கொண்டான். அதன் பிறகு தமிழ் இலக்கணமும், பயாலஜியும் அவன் சொல்லச் சொல்ல நாங்கள் குறிப்பெடுத்துக் கொண்டோம். அவனுக்கு கணக்கு சுட்டுப் போட்டாலும் வராது.  “எவன்டாது அல்ஜிப்ரா கில்ஜிப்ரான்ட்டு ஜிப்ரான் தெர்யுமா உங்களுக்கு” என்பான். கடைசிப் பத்து நாள்கள், இரவும் பகலுமாக படித்துக்கொண்டிருந்தோம்.

போட்டித்தேர்வு முடிவு வந்தது. 150 க்கு 90 எடுத்தால் பாஸ். ஏழு பேரில் ஆறுபேரும் 90ஐத் தொட்டுப் பாஸாகியிருந்தோம்.(அதிகபட்சமாக சேகர் 96 எடுத்திருந்தான்.)குமரவேல் 89 எடுத்து தோற்றிருந்தான். ஒரே ஒரு மில்லி மீட்டர் தூரம் தான் அந்த இடைவெளி. இந்த வட்டத்திற்குப் பதிலாய் அடுத்த வட்டத்தை ஓ.எம்.ஆர் சீட்டில் கிறுக்கியிருந்தால் அவன் வாத்தியார், அப்படி செய்யாததால் பெயிண்டர். காலக்கொடுமை.

ஆறுபேரும் உள்ளூர அழுதோம். கம்ப்யூட்டர் சென்டரிலிருந்து ரிசல்ட் பார்த்துவிட்டு வெளியேறும் போது ‘குமரவேல் காலிங்… ‘ அலைபேசி காட்டியது. நான் பச்சை பட்டனை அழுத்தவே இல்லை. அடுத்தடுத்து ஆறு பேருக்கும். யாருமே எடுக்கவில்லை.

முதலமைச்சர் இருவதாயிரம் ஆசிரியர்களுக்கு சென்னையில் ஒரே நாளில் அப்பாயிண்மெண்ட் ஆடர் வழங்கினார். களேபரமாக நடந்தேறிய அவசர நிகழ்ச்சியது. மாவட்டந்தோறும் தனி தனி பேருந்துகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சிரித்த முகத்தோடு கிளம்பினார்கள்.  எங்கள் ஆறுபேருக்குள்ளும் வழக்கமான சிரிப்பிலிருந்து ஏதோ ஒரு சொட்டு குறைந்த படியே இருந்தது. மேடையில் தற்செயலாக குமரவேல் என அழைக்கப்பட்டபோது நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஒரு ஊனமுற்ற ஆசிரியர் மேடையேறி ஆடர் வாங்கினார். ஆறுபேரும் வெவ்வேறு மாவட்டத்தில் பணியேற்றோம். உள்ளூரில் குமரவேல் அதே பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தான்.

அவனை லீவுக்கு போகும் போதெல்லாம் சந்திக்க முயல்வேன். அவன் சங்கடத்தால் சந்திப்பை தட்டிக்கழிப்பதாகப்பட்டது. இருந்தும் பல முறை சந்தித்திருக்கிறேன். “வீட்டுக்கு மட்டும் வேணாம் மாப்ள ” என்பான். அவனை நினைத்து நான் பட்ட வலிகளைப் புரிந்து கொண்டானாகினும் ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கும் போது  ஏதாவதொரு டாப்பிக்கில் நான் சிக்குவேன். ‘நீயெல்லாம் ஒரு வாத்தியாரு’ என்பதுபோல ஒரு பார்வை பார்ப்பான். உடனே மென் புன்னகையோடு அதை களைத்து என்னை சமாதானம் செய்வது போல ‘செரிச்செரிச்செரி…’ நடுக்கமாய்த் தலையாட்டிக் கொண்டே தட்டிக்கொடுப்பான்.

நான் சம்பாதிப்பதால் மாறிவிட்டேனா? தெரியவில்லை. ஆனால் அவனுக்கு அப்படி தோணியதால் நானும் நம்பினேன். அதற்காகவே கவனமாக நடந்துகொண்டேன். ஒரு ஆசிரியர் தினத்தன்று உத்தமபாளையம் பெரியாஸ்பத்திரியில் வைத்துப் பார்த்தேன். “தங்கச்சி மாப்ளைக்கு ஆப்ரேசன்டா அதான் அலஞ்சிட்டிருக்கேன்” என்றான். ரெண்டு பேரும் டீ சாப்ட போனோம். ‘இன்று ஆசிரியர்களுக்கு மட்டும் டீ இலவசம்’ கடையைக் கடந்தோம். “மாப்ள போறியா?” என்றான். எனக்கு வலித்தது. “வேணா மாப்ள ஒர்ரூவா வடைக்கடைக்கே போலாம்”.

சிரித்துக் கொண்டான்.  “இன்னிக்கு என் ரவுண்டு” அவனே  சொல்லிட்டு அவனே காசு கொடுத்தான். நான் அஞ்சு வடையையும் முடித்திருந்தேன். அவன் நாலோடு நிறுத்தியிருந்தான். கடைசி வடையை “ஹேப்பி டீச்சர்ஸ் டே மாப்ள!” என் வாய்க்கு கொண்டு வந்தான். இது புதுசில்லை. என் பிறந்த நாளுக்கு டியூசனில் பால்பன் வெட்டி, இப்டி அவன் செய்திருக்கிறான். பால்பன் எனக்கு ரொம்ப பிடிக்கும். நாலாய் வெட்டியதில் அவனுக்கான ரெண்டில் ஒரு துண்டை மெதுவாய் சாப்பிட்டு, நான் முடித்ததும் இன்னொரு துண்டை எனக்கு நீட்டுவான். “தேங்ஸ்டா” சொல்லி வாயில் அப்பிக்கொள்வேன். இப்படியான ஊட்டுதல் நாங்கள் தனியாய் இருக்கையில் நடக்கும். இப்போ தெருவில் வைத்து…..

அந்த புளியமரத்தடி,

ஒர்ருவா வடைக்கடை,

அவனன்பு என அவனோடு ஜீவித்த அந்த நிமிடத்தின் வாசனை இன்னும் நாசியில் இருக்கிறது.

” இன்னிக்கு வாத்தியாராகுறதுக்கு லக்குதான் வேணும் மாப்பி திறம இல்ல. சுத்திருக்கவெய்ங்களுக்கு தான் பதில் சொல்ல முடிலடா. அதான் வலிக்குது.” என்றான். அங்கிருந்து பார்த்தால் ‘டீ இலவசம் ‘ கடை தெரியும். அதைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு என்னைப் பார்த்தான் அவ்வளவுதான். அதை எப்படி எழுத.

அவன் விழியில் நீர் கசியாமல் கீழுதட்டின் லேசான துடிப்பில் அவன் அழுவதாகப்பட்டது. “வரன்டா மாப்ள”.  சட்டென திரும்பி டிவிஎஸ். எக்ஸலை அவன் உதைத்துப் புறப்படும்  போது கவனித்தேன். அவன் மடித்துக் கட்டியிருந்த கைலி கிழிந்திருந்தது.

ஆறு பேரில் ஒருத்தன், 20 ஆயிரம் சம்பளத்துக்கு நாமக்கலில் ஒரு பள்ளிக்கு சிபாரிசு செய்கிறேன்னு சொல்லி குமரவேலிடம் செமத்தியா வாங்கிக் கட்டியிருக்கான்.  பச்சை பச்சையாய் வந்ததாம்.  நான் ஒருமுறை அவன் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பப்போய் உடனே திருப்பி அனுப்பிட்டான்.

குமுளியில் காண்ட்ராக்ட் எடுத்து பெயிண்ட்டிங்  வேலை செய்வதாகவும் நல்லா சம்பாதிப்பதாகவும் தகவல். ‘டச் போன் வாங்கிட்டேன் மாப்ள’என்று முதன்முதலாய் வாட்ஸ்அப் ல் மெஸேஜ் போட்டான். அடுத்தொரு நாள் பெயிண்ட் மழையில் நனைந்தவனாட்டம் ஏணியில் நின்று செல்பி போட்டான்.

அந்த ஆசிரியர் தின டீக்கடை பக்கம் போயிருப்பான் போல. அங்கு உக்கார்ந்து டீ கிளாஸோடு செல்பி போட்ருந்தான். கீழ….

“அடுத்த ஆசிரியர்தினத்துல நம்ம இங்க சேந்து ஓசீ டீ சாப்டறோம் மாப்ள!” இது கிண்டலா? வலியா?. சிரிக்க வைக்கிறானா? அழவைக்கிறானா?

எத்தனை பெரிய ஆசான் அவன். எனக்கு சொல்லிக்கொடுத்த எல்லா வாத்தியார்களைவிடவும் மேலானவன்.

இப்படி அவன் செய்யும் போதெல்லாம் ஜாலியாக எடுத்துக்கொள்ளவே முடியவில்லை. ஒன்றை முடிவு செய்திருந்தேன். அடுத்து அவனை எப்போது வேண்டுமாலும் சந்திக்கலாம். ஆனால் ஆசிரியர் தினத்ததில் கூடாது.

ஆண்டவா! எப்படா அடுத்த எக்ஸாம் வரும். குமரவேல் வாத்தியாராவான் என்றிருந்தேன்.

சரியா ரெண்டு வருசம் கழிச்சி

ஆசிரியர் தகுதிதேர்வு அறிவிப்பு வெளியானது; அலைபேசினேன். சாரத்தில் தொங்கிக்கொண்டே பேசினான். “இந்தவாட்டி அடிச்சுடுவோம் மாப்ள” என்றான்.

அம்மாவின் மரணமும் தங்கச்சி வீட்டுக்காரனின் தொந்தரவுகளும் அவனை அந்த தேர்விலும் வதை செய்திருந்தது. இப்போது கேரளாவுக்கு கூலி வேலைக்கு போவதாய் கேள்விப்பட்டேன். அதன் பிறகு அலைபேசவேயில்லை.

Galleries | VIT

போன ஆசிரியர் தினத்தில் கொத்துக்கரண்டியோடு ஒரு செல்பியை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தான். ஆள் சுருங்கிப்போயிருந்தான். முடிவெட்டி ரொம்பநாளிருக்கும் போலிருந்தது. கீழே “அடுத்த வாத்தியார் தினத்துல வாத்தியாராயிடுவேம் மாப்ள!”

அந்த ஆண்டு போட்டித்தேர்வு அறிவிப்பே இல்லை. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவால் இனி ஆசிரியர் பணிநியமனமும் இருக்காதென்பதைப்போல பத்திரிக்கைகள் எழுதத் தொடங்கியிருந்தன.

ன்று ஆசிரியர் தினம். காலை எட்டு மணியிருக்கும். ‘குமரவேல் காலிங்…’ அலைபேசியில் அவன் முகம். திரையில்  சிவப்புவட்டத்தை தொட்டு மேலிழுத்தால் குமரவேல் குரல் ஒலிக்கத் தொடங்கி விடும். அந்த குரலைக் கேட்டு எவ்ளோ நாளாச்சு. ஒருவித பதட்டத்தில் சிவப்பு வட்டத்தைத் தொட  பெருவிரல் நடுங்கியது.. அவகாசம்  இருந்தும் பாதியிலேயே அழைப்பு துண்டிக்கப்பட்டது. அவனது விரல்களுக்கும் என்னைப் போலவே செய்திருக்குமா? யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திறந்தேன்.  தொடக்கப்பள்ளி மாணவனாட்டம் இருந்தான். இவ்ளோ நேரம் தட்டிக்கொண்டிருந்ததாகவும், அண்ணன் கீழே போயிருப்பதாகவும் சொன்னான். “சரி இப்ப என்ன?”

“அவன் இன்னொரு கடல முட்டாய் வாங்க போய்ருக்கான் சார்” என்றான்.

“ஏன்?”

“ஹேப்பி டீச்சர்ஸ் டே சார்!” என்ற படி சின்ன உள்ளங்கையைத் திறந்து காட்டினான்.  இறுகப் பிடித்திருந்த பிசுபிசுப்போடு ஒரு கடலைமிட்டாய் இருந்தது. அவன் உயரத்துக்கு ஒரு காலைத் குத்திட்டு உட்கார்ந்து கொண்டு “தேங்க் யூ” சொன்னேன்.

“யார் உங்கண்ணே?”.

“எய்த் எ ல சரவணன் இருக்கான்ல சார், அவன் சார்..”

“சரி ஒம் பேர் என்ன?”

“குமரவேல் சார்”.

நொடி தாமதிக்காமல் என் கண்ணில் நீர் பூத்துக் கொண்டது.  கடலை மிட்டாயை அவன் கையிலிருந்தபடியே  வாய்க்கு எடுத்துக் கொண்டேன். மெல்லும் போது ஒர்ருவா வடையின், ஒரு துண்டு பால்பன்னின் ஞாபக வாசனை. குமரவேலை அணைத்துக் கொண்டேன்.

Show 5 Comments

5 Comments

  1. Jayaraju M

    அழுதுட்டேன் சார்.
    TET தேர்வு மோசடியானது.
    +2 வில் ப்யூர் சயின்ஸ் படித்து தாவரவியல்/விலங்கியல் படித்தோறும் கணிதம் எழுத வேண்டும் என்பது கொடுமை அல்லவா?!
    அவரவர் பாடத்திலேயே முன்பு போல தேர்வு வைத்தால் போதாதா?!!

  2. Sankar

    நெகிழ்ச்சியாக உள்ளது சார்
    தேர்வுகள் ஒருபோதும் திறமையான ஆசிரியர்களை அடையாளம் காணாது.
    ஆசிரியர் பணி அனுபவத்திலேயே சிறந்த ஆசிரியர்கள் உருவாவார்கள்.
    நண்பர் குமரவேல் போன்ற பல மாணவ -ஆசிரியர்களின் நிலைமை வருத்தமாகவே உள்ளது.

  3. tamilselvan selvan

    கடைசி வரி அற்புதம்.கதையும்தான்

  4. Vidhya.S

    மிகவும் அருமையாக வெளிப்படுத்திஉள்ளீர்கள் சார்.புத்தகத்தின் மீது ஆர்வம் மேலிடுகிறது.நண்பர் குமரவேல் போல் நிறைய பேர் உள்ளோம். வாழ்த்துகள்..நன்றி

  5. Shahul Hameed

    சகோதரா, நான் சாகுல். மாடசாமி சார் இந்தக் கதையைப் படித்துவிட்டு என் தொடர்பான நிகழ்வு ஒன்றைப் பதிவிட்டதைப் படித்தேன், என் ஞாபகம் சாருக்கு வர கதையில் என்ன இருக்கும் என தோன்றியது, உங்கள் இந்தக் கதையை இப்போதுதான் படித்தேன். படித்தவுடன் எனக்கும், வழியில் பாதியிலேயே தொலைந்து போன என் கனவின் நினைவுகள் கண்முன் வந்தன. அதன்பின் என்னால் படிப்பை தொடர முடியவில்லை. முயற்சிக்கும் போது குடும்பச்சுமை, தங்கை, தம்பி… இப்படி பல காரணங்களால். கடின முயற்சிகளால் என் தங்கை நல்ல முறையில் படித்தாள். என்ன உங்கள் குமாரவேல் தனியார் பள்ளிக்கு போவதில் உடன்படாதவர், MA. BEd. MPhill… Phd not completed. UG,PG University rank holder. Gold medal. என் தங்கை தமிம் நிஸா சூழ்நிலை 8000 ரூபாய் சம்பளத்தில் கல்லூரியில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *