ஆசிரியர்கள் தேவையற்ற வகுப்பறையை நோக்கித் தள்ளும் கலப்பு முறை கற்பித்தலும், கற்றலும் – தா.சந்திரகுரு2020ஆம் ஆண்டு மே 29 அன்று பல்கலைக்கழக மானியக் குழுவின் 547ஆவது கூட்டத்தில் இணைய வழியிலான படிப்புகள் குறித்து விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிய கருத்து குறிப்பு இப்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தொடர்புடையவர்கள் அது குறித்து ஜுன் 06ஆம் தேதிக்குள் தங்களுடைய கருத்துகளைப் பதிவிடுமாறும் கேட்டுக் கொண்டு பல்கலைக்கழக மானியக் குழு 2021 மே 20 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டதாக கூறுகின்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளர் ஓராண்டு கழிந்து விட்ட நிலையில் இப்போது அந்த அறிவிப்புடன் ‘கலப்பு முறை கற்பித்தலும், கற்றலும்: கருத்து குறிப்பு’ என்ற தலைப்பிலே ஓர் ஆவணத்தை பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளத்திலே வெளியிட்டிருக்கிறார். அந்த ஆவணத்தில் உள்ள  கலப்பு முறை கற்றல் குறித்த கோட்பாடு ரீதியான பின்னணி என்ற இரண்டாவது அத்தியாத்தில் உள்ள நான்காவது உட்பிரிவு கல்வியில் கலப்பு கற்பித்தல் கட்டமைப்புகள் என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த உட்பிரிவில் கலப்பு திறந்தவெளி இணைய வழிப் படிப்புகள் என்ற தலைப்பிலே ‘பெரிய அளவிலான திறந்தவெளி இணைய வழிப் பாடங்களுக்குத் (MOOC) துணையாக தனிப்பட்ட முறையில் நேரடியான வகுப்புகளைப் பயன்படுத்திக் கொள்கின்ற தலைகீழ் வகுப்பறையின் ஒரு வடிவமாகவே கலப்பு திறந்தவெளி இணையப் படிப்புகள் இருக்கின்றன. மாணவர்களால் நேரடி வகுப்பிற்கு வெளியே வேறொரு நிறுவனம் அல்லது பயிற்றுவிப்பாளரிடமிருந்து வெளிப்படையாக பெறக் கூடியவையாக இருக்கின்ற திறந்தவெளி இணைய வழிப் பாடங்களை பெற்றுக் கொள்ள முடியும். அதற்குப் பிறகு விவாதங்கள் அல்லது வகுப்பு சார்ந்த நடவடிக்கைகளுக்காக அவர்கள்  நேரடி வகுப்புகளுக்கு வருவார்கள். 2012ஆம் ஆண்டில் மாணவர்கள் வகுப்பிற்கு வெளியே திறந்தவெளி இணைய வழி பாடங்களைப் பயிலும் அதே நேரத்தில் கூடுதலாக ஏற்படுகின்ற சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள நேருக்கு நேர் வகுப்புகளிலும் கலந்து கொள்ளாலாம் எனும் வகையில் கலப்பு திறந்தவெளி இணைய வழி (blended MOOC) முறையைப் பயன்படுத்தி எம்ஐடியின் சர்க்யூட்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பாடத்தை சான் ஜோஸ் அரசு பல்கலைக்கழகம் நடத்தியது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

சான் ஜோஸ் பல்கலைக்கழகத்தில் கலப்பு திறந்தவெளி இணையவழிப் பாட முறையைப் பயன்படுத்தி பாடம் நடத்தப்பட்டதாக கூறுகின்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆவணம் குறிப்பிட்டுச் சொல்லாத மற்றொரு தகவலும் அந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றிருந்தது. 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வகையிலான பாடங்களை நடத்துவதற்காக எட்எக்ஸ் நிறுவனத்துடன் சான் ஜோஸ் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த நிலையில் அந்தப் பல்கலைக்கழக தத்துவத் துறையைச் சார்ந்த பேராசிரியர்கள் தங்கள் துறை சார்ந்து வீடியோ பதிவு செய்யப்பட்ட விரிவுரையைத் தயார் செய்திருந்த பேராசிரியர் மைக்கேல் சாண்டலுக்கு கடிதம் ஒன்றை எழுதினர். அந்த மோசமான முடிவுகள் வகுப்பறைகளிலிருந்து ஆசியர்களை அகற்றி ஆசிரியர்கள் தேவையற்ற வகுப்பறைகளை நோக்கிச் செல்லும் என்றும், பொது பல்கலைக்கழகங்களை நம்பியுள்ள மாணவர்களுக்கு தரம் தாழ்ந்த கல்வியே இதன் மூலம் கிடைக்கும் என்றும் அவர்கள் தங்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். இனியாவது உயர்கள்வியின் தரம் கருதி இது போன்று வீடியோ தயாரிப்பு வேலைகளில் சமுதாய நலன் சார்ந்த பேராசிரியர்கள் ஈடுபடக் கூடாது என்ற வேண்டுகோளையும் அவர்கள் விடுத்திருந்தனர். மைக்கேல் சாண்டல் இதுபோன்ற இணைய வழியிலான வகுப்பறைகள் நேரடி வகுப்பறைகளுக்கான மாற்றீடாக இருக்க முடியாது என்று அவர்களுக்கு அளித்திருந்த பதிலில் குறிப்பிட்டிருந்தார்.      

பல்கலைக்கழக மானியக் குழுவின் பின்னணியில் இருந்து கொண்டு இந்த கொரோனா காலத்தைப் பயன்படுத்தி ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைத் தட்டிப் பறிக்கத் துடிக்கும் ஒன்றிய அரசின் எண்ணத்தை வெளிக் கொணர்வதாகவே சான் ஜோஸ் பல்கலைக்கழக தத்துவத் துறை பேராசிரியர்கள் எழுதிய கடிதமும், மைக்கேல் சாண்டல் அவர்களுக்கு அளித்த பதிலும்  இருக்கின்றன. 

சான் ஜோஸ் பல்கலைக்கழக தத்துவத் துறையிலிருந்து பேராசிரியர் மைக்கேல் சாண்டலுக்கு எழுதப்பட்ட வெளிப்படையான கடிதம்

2013 ஏப்ரல் 29 

அன்புள்ள பேராசிரியர் சாண்டல்,

இணையவழி கலப்பு படிப்புகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்காக எட்எக்ஸ் (edX – எம்ஐடி மற்றும் ஹார்வர்டுடன் தொடர்புடைய நிறுவனம்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக சான் ஜோஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்துள்ளது. உங்களுடைய ஜஸ்டிஸ் எக்ஸ் (JusticeX) பாடத்தை முன்னிறுத்தி பாடத்தை நடத்துமாறு சான் ஜோஸ் அரசு பல்கலைக்கழக தத்துவத் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. நாங்கள் அதற்கு மறுத்து விட்டோம். அந்தப் பாடத்தை மறுப்பதற்கான எங்களிடம் உள்ள காரணங்களை உங்களுக்குத் தெரிவித்திட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். பிற துறைகளும், பல்கலைக்கழகங்களும் மிக விரைவிலே அல்லது பின்னர் இதுபோன்ற இக்கட்டான நிலையை எதிர்கொள்ளக் கூடும் என்று நாங்கள் உறுதியாக நம்புவதால், எங்களிடம் உள்ள காரணங்களை உங்களுடன் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்திருக்கிறோம்.   

உன்களுடைய ஜஸ்டிஸ் எக்ஸ் தீர்த்து வைக்கக் கூடிய எந்தவொரு கல்வியியல் சார்ந்த பிரச்சனையும் எங்களுடைய தத்துவத்  துறையில் இல்லை. உங்களுடைய பாடத்திற்குச் சமமாக பாடத்தைக் கற்பிக்கும் திறன் கொண்ட ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையும் எங்களிடம் இல்லை. எங்களைப் போன்ற அரசு பல்கலைக்கழகங்களில் இருந்து வரும் நீண்டகால நிதி தொடர்பான சிந்தனையே பெருமளவில் இதுபோன்ற திறந்தவெளி இணையவழி படிப்புகளுக்கான (MOOCS) தேவையை அதிகரித்திருக்கிறது என்றே நாங்கள் கருதுகிறோம். இந்த திறந்தவெளி இணையவழி படிப்புகளை நோக்கிய நகர்வு துரதிர்ஷ்டவசமாக எங்கள் பல்கலைக்கழகத்திற்குப் பெரும் ஆபத்தை விளைவிப்பதாக இருக்கிறது. இதுபோன்ற படிப்புகள் கல்வியின் தரத்தை சமரசம் செய்து கொள்வதாக, சமூக நீதி குறித்த படிப்பின் மீது நிகழ்த்தப்படுகின்ற சமூக அநீதியாக இருக்கும் என்றே நாங்கள் கருதுகிறோம்.  

பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் நல்ல தரமான கல்விக்கான அத்தியாவசியமான கூறுகள் யாவை?

முதலாவதாக, பல்கலைக்கழகப் பேராசிரியராக இருப்பதில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக ஒருவரிடம் உள்ள நிபுணத்துவத்தில் உள்ள கல்வித்திறம் இருக்கிறது. அத்தகைய ஆய்வுகளில் ஈடுபடும் பேராசிரியர்களுடன் ஏற்படுகின்ற தொடர்புகளால் மாணவர்கள் பெரிதும் பயனடைகிறார்கள். அங்கே பாடத் தலைப்புகளில் ஆர்வம், ஈடுபாடு மற்றும் நடப்பாக இருக்கின்ற ஆசிரியர்களைப் பெறுவதோடு மாணவர்களுக்கு வகுப்புகள், தனிப்பட்ட ஆய்வுகள், முறைப்படியாக இல்லாத தொடர்பு ஆகியவற்றின் மூலம் பாடத் தலைப்பிற்குள்  ஆழமாக, முழுமையாக, பகுப்பாய்வு ரீதியாக கருத்து வளம் மிக்கதாக, தற்காலத்திற்கேற்ற வகையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது.  

தற்போது இருந்து வருகின்ற சமூகப் பிரச்சனைகளுக்கான நீதி குறித்த  கருத்துகளைப் பயன்படுத்திக் கொள்வதாகவே சமூக நீதி குறித்த பாடத்தின் பகுதி நோக்கம் அமைந்திருப்பதால், தற்போதைய நிலைமைக்கேற்றவாறே அந்தப் படிப்பு இருக்க வேண்டும். வெளியில் உள்ள விற்பனையாளர்களால் தயாரிக்கப்பட்ட ஒரே அளவில் அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையில் இருக்கின்ற கலப்பு பாடத்தில் உயிர்ப்புடன் செயல்பட்டு வருகின்ற அறிஞர்களுடன் ஈடுபடுவதற்கான வாய்ப்பு, நேரடி வகுப்புகளில் கிடைக்கின்ற நிபுணத்துவம், பன்முகத்தன்மைக்கான உணர்திறன், மற்ற மாணவர்களுடனான நெருக்கமான பரிச்சயம் போன்றவை மாணவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை. 

இரண்டாவதாக இன்றைய டிஜிட்டல் தலைமுறைக்கு பாரம்பரியமாக இருந்து வருகின்ற விரிவுரை மாடல் பொருந்தவில்லை என நாம் விமர்சித்து வருகிறோம். தரம் வாய்ந்த பேராசிரியர்களைப் பற்றி பேசும் போது வெறுமனே பேசுகின்றவர்கள், உள்ளடக்கத்தை வாந்தி எடுப்பவர்கள் என்று எட்எக்ஸ் தலைவரான ஆனந்த் அகர்வால் சான் ஜோஸ் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது விவரித்தார். பேராசிரியர்கள் குறித்த அந்த விவரிப்புகளை அப்போது அவர் பத்து முறையாவது பயன்படுத்தினார்.   தத்துவப் பாடங்கள் பாரம்பரியமாக சாக்ரடிஸ் முறையைப் பயன்படுத்திக் கற்பிக்கப்பட்டு வருவதால், பெரும்பாலும் விரிவுரை மட்டுமே இருப்பதன் போதாமை குறித்து நாங்கள் உடன்படுகிறோம். ஆனால் சொற்பொழிவு, குறிப்பு எடுத்துக் கொள்ளும் பழங்கால முறையின் செயல்திறனைக் கேள்விக்குட்படுத்தியிருக்கும் வாய்ச்சவடால் பேச்சுகளுக்குப் பிறகு, கருத்துக்களைப் பதிவிடுவது, குறிப்புகளை எடுத்துக் கொள்வது போன்ற ஹார்வர்ட் மாணவர்களின் செயல்பாடுகளை உள்ளடக்கி வீடியோ-பதிவு செய்யப்பட்ட விரிவுரைகளின் தொடராக மட்டுமே எட்எக்ஸின் அந்த ஜஸ்டிஸ் எக்ஸின்  முக்கியத்துவம் இருப்பது தெரிய வந்தது. பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் விரிவுரை நிகழ்த்துவதற்கான உங்களுடைய திறனை நாங்கள் போற்றுகின்றோம். ஆனால் அதே வேளையில் கற்றறிந்த அறிஞர் ஒருவர் தனது மாணவர்களுக்கு நேரில் கற்பித்து அவர்களுடன் நேரடியாக உரையாடலில் ஈடுபடுவது என்பது வீடியோவில் வேறொரு அறிஞர் தன்னுடைய மாணவர்களுக்கு கற்பித்து அவர்களுடன் உரையாடலில் ஈடுபடுவதை பார்ப்பதைக் காட்டிலும் மிக உயர்ந்தது என்றே நாங்கள் நம்புகிறோம். உண்மையில் உங்களுடைய மாணவர்களிடம் விரிவுரையாற்றி அவர்களுடன் நீங்கள் உரையாடுகின்ற வீடியோக்கள் அனைத்தும் நேரடியாக தனிப்பட்ட முறையில் மாணவர்களிடம் விரிவுரையாற்றுவது / கலந்துரையாடுவதற்கென்று இருந்து வரும் மதிப்பை நிரூபிக்கும் சான்றாகவே இருக்கின்றன.  

மேலும் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தொடர்ச்சியான விரிவுரைகளை வாங்குவது என்பது படிப்பதற்காக புத்தகம் ஒன்றை ஒதுக்கித் தருவதற்கு மேல் கூடுதலாக எதையும் வழங்கிடப் போவதில்லை. இதுகாறும் அரசியல் தத்துவத்தில் நீங்கள் செய்திருக்கும் பணியை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்; ஆயினும் உங்களுடைய புத்தகங்கள் உட்பட பலவிதமான புத்தகங்களை எங்களுடைய மாணவர்கள் படிப்பது என்பது உங்கள் சொற்பொழிவுகளைக் கேட்பதைக் காட்டிலும் மிகச் சிறந்தது என்றே நாங்கள் கருதுகிறோம். மிகவும் குறைவாகப் படிக்கின்ற டிஜிட்டல் தலைமுறையைப் பொறுத்தவரை அதுபோன்ற செயல்பாடுகள் மிகவும் முக்கியமானவை என்றே கருதுகிறோம். நம்மால் கல்வியாளர்களாக ஏதாவது செய்ய முடியும் என்றால், படிப்பறிவை அதிகரிக்க விரும்ப வேண்டுமே தவிர அதை எந்த விதத்திலும் குறைத்து விடுமாறு செய்து விடக் கூடாது.    

மூன்றாவதாக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தத்துவத் துறைகளில் கற்பிக்கப்படும் சமூக நீதிப் பாடம் ஒரே மாதிரியாகவே இருக்க வேண்டும் என்ற சிந்தனை டிஸ்டோபியன் நாவலைப் போல வெளிப்படையாக அச்சுறுத்துவதாக இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள இந்த துறைகள் தங்களுக்கென்ற தனித்துவமான சிறப்புகளையும் தன்மையையும் கொண்டவையாக இருந்து வருகின்றன. அவை இனிமேலும் அப்படியே இருக்க வேண்டும். ஒரேயொரு குறிப்பிட்ட காரணத்திற்காக பல்கலைக்கழகங்கள் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதில்லை. வெவ்வேறு தாக்கங்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. சிந்தனைகள் மற்றும் பார்வைகளின் பன்முகத்தன்மையே தாராளக் கல்வியின் மையமாக இருந்து வருகிறது.  

தனியார் விற்பனையாளரிடமிருந்து வாங்கப்பட்ட கலப்பு பாடமுறை மூலம் நீதி குறித்து மாணவர்கள் எதைக் கற்றுக் கொள்வார்கள்? 

முதலாவதாக நீதி என்றால் என்ன என்பதை நமது மாணவர்கள் சிறப்புரிமை பெற்றுள்ள ஹார்வர்ட் போன்ற நிறுவனத்தின் பெருமளவிலான வெள்ளை மாணவர்களிடமிருந்து வருகின்ற பிரதிபலிப்புகளைக் கேட்பதன் மூலம் சிறப்பாகக் கற்றுக் கொள்ளலாம் என்று சொல்வோம் என்றால், நாம் மாணவர்களுக்கு அதன் மூலம் என்ன மாதிரியான செய்தியைத் தருகிறோம்? தங்களுக்குள் மாறுபட்டிருக்கும் நமது மாணவர்கள் தங்கள் சொந்த அனுபவத்தை பாடங்களுக்கான மையமாகக் கொண்டிருக்கும் போது, சமூக நீதியுடன் தொடர்புடைய படிப்புகளின் உள்ளடக்கம் குறித்து மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டு வருகின்ற வேறுபட்ட ஆசிரியர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் போது பாடத்திலிருந்து அதிகம் கற்றுக் கொள்கிறார்கள்.    

இரண்டாவதாக ஒரே அளவில் அனைவருக்கும் பொருந்துவதாக விற்பனையாளரால் வடிவமைக்கப்படுகின்ற கலப்பு படிப்புகள் இனிமேல் வழக்கமான ஒன்றாகி விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. தங்களுக்கென்று தனித்து பேராசிரியர்களைப் பெறுகின்ற வகையிலே சலுகை பெற்றிருக்கும் மாணவர்களுக்கென்று நன்கு நிதியளிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஒருபுறமும், மறுபுறத்தில் வீடியோ-பதிவு செய்யப்பட்ட சொற்பொழிவுகளை மட்டும் பார்க்கின்ற மாணவர்கள் தங்களுக்குத்  தேவைப்பட்டால் பேராசிரியருடனான எந்தவொரு தொடர்பையும் தங்களுடைய வீடுகளிலிருந்தே பெற்றுக் கொள்ளும் வகையில் இருக்கின்ற மிகச் சிறந்த கற்பித்தல் உதவியாளர் என்று  போற்றப்படுகின்ற மாடலைக் கொண்டு இயங்குகின்ற நிதிச்சுமையில் இருக்கின்ற தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் என்று இரண்டு வகையான பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு விடுமோ என்றும் நாங்கள் அஞ்சுகிறோம். பொது பல்கலைக்கழகங்களால் இனிமேல் அதே தரமான கல்வியை வழங்க முடியாது, அவற்றால் நன்கு நிதியளிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு இணையாக இருக்க முடியாது. கல்வியில் இதுபோன்று இரண்டு சமூக வகுப்புகளை உருவாக்குவதற்குத் தலைமை தாங்குகின்ற கல்வி மாடலின் மூலம் நீதி குறித்து கற்பிப்பது மிகவும் கொடூரமான நகைச்சுவையாகவே இருக்கும். 

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வியை மேம்படுத்த முடியுமா?

நிச்சயமாக முடியும். கலப்பு படிப்புகள் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக ஒரு சொற்பொழிவைத் திரும்பக் கேட்கவும், நேரம் மற்றும் இடம் குறித்து வழக்கமாக இருந்து வருகின்ற தடைகளைத் தாண்டி வகுப்புகளுக்கு வெளியே விவாத அமர்வுகளை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றன. நாங்களே உருவாக்கியிருக்கும் மிக உயர்ந்த தரமான இணையவழி பாடங்கள், வீடியோ-பதிவு செய்யப்பட்ட பாடங்கள் உள்ளிட்ட பல கலப்பு பாடங்களை எங்களுடைய துறையில் உள்ள ஆசிரியர்கள் பலரும் வழங்கி வருகிறார்கள். இந்த பாடங்கள் அனைத்தும் தொடர்ந்து எங்களால் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் பயன்பாட்டில் மாணவர்களுக்கிடையிலான விரிவான கருத்துப் பரிமாற்றமும் உள்ளது. கூடுதலாக பாடத்தைக் கற்பிக்கும் பேராசிரியருடனான விரிவான கருத்துப் பரிமாற்றத்தையும் அவை உள்ளடக்கி இருக்கின்றன. வீடியோ பதிவு செய்யப்பட்ட விரிவுரைகள், பதிவு செய்யப்பட்ட பயிற்சிகள் மற்றும் தானியங்குவதாக, சகாக்களால் தரப்படுத்துவதாக இருக்கின்ற திறந்தவெளி இணையவழி பாடங்களில் கிடைக்காத  ஒன்றாகவே நாங்கள் வழங்கி வருகின்ற பாடங்கள் இருக்கின்றன.  

வெளிப்புற விற்பனையாளரிடமிருந்து எங்களைப் போன்றதொரு பல்கலைக்கழகம் ஒரு பாடத்தை வாங்கும் போது எங்கள் ​​ஆசிரியர்களால் அந்தப் பாடத்தின் வடிவமைப்பு அல்லது உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களால் விரிவாக்கப்பட்ட, தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்ட திறன், எங்களுடைய மாணவர்களின் தேவைகள் மற்றும் திறன்கள் குறித்த நேரடி அனுபவம் ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட ஒட்டுமொத்த பாடத்திட்டத்துடன் பொருந்தக்கூடிய உள்ளடக்கத்தைக் கொண்டு எங்களால் கற்பிக்க முடியாது. குறுகிய காலத்திற்கு எங்கள் மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றாலும்  திறந்தவெளி இணையவழிப் பாடங்களை நோக்கி நகர்வதற்கான நிதி பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால் நீண்ட காலத்திற்கு அதைக் கொண்டு செல்வது மிகக் கடுமையான பிரச்சனையாகவே இருக்கும்.    

தொழில்நுட்பத்தின் பயன்பாடு கொண்டு கல்வியின் தரத்தை மேம்படுத்த அல்லது மோசமாக்க முடியும் என்றே வரலாறு நமக்கு காட்டுகிறது. உயர்தரப் பாடத்திட்டத்தைக் கற்பிக்கும் பேராசிரியரால் பாடத்திட்டத்தை வடிவமைக்கவும், அதற்குத் தேவையான பொருட்களைத் தேர்வு செய்து கொள்ளவும், மாணவர்களோடு மிக நெருக்கமாகத் தொடர்பு கொள்ளவும் முடியும். ஆனால் முன்பே தொகுக்கப்பட்டு வழங்கப்படும் பாடத்திட்டத்தில் ஆசிரியரே பாடத்தை வடிவமைக்கின்ற தேர்வு இருக்காது. திறந்தவெளி இணையவழிப் பாடங்களை நோக்கி நாம் நகரும் போது மாணவர்களுடனான நெருங்கிய தொடர்பு என்ற ஆசிரியருக்கான தேர்வு மிகப் பெரும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்.  

இது ஏன் என்பதைச் சொல்ல வேண்டிய நேரம் இது  

இணையவழி மற்றும் கலப்பு படிப்புகளை வாங்குவது என்பது கற்பித்தல் முறை குறித்த அக்கறையுடன்  நடக்கவில்லை. நாங்கள் அது பொதுவாக அமெரிக்க பல்கலைக்கழக அமைப்பை – குறிப்பாக நமது கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக அமைப்பை – மறுசீரமைக்கும் முயற்சியாகவே நடக்கிறது என்று நம்புகிறோம். அந்த அக்கறை உண்மையில் கற்பித்தல் முறை ரீதியான நோக்கம் கொண்டதாக இருக்குமென்றால் ஆசிரியர்களைக் கலந்தாலோசிப்பது, தரக் கட்டுப்பாட்டைக் கண்காணிப்பது போன்றவை அதில் இருந்திருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் மாறாக இத்தகைய மாற்றம் நிதியை மட்டுமே கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் போது மிக விரைவிலேயே தரத்தை சமரசத்திற்குள்ளாக்கிக் கொண்டு ஆசிரியர்கள் அல்லது பாடத்திட்டக் குழுக்களைக் கலந்தாலோசிக்காமல், மூடிய கதவுகளுக்குப் பின்னால் இருந்து யாரும் அறியாமல் செய்யும் காரியமாகவே அது இருந்து விடுகிறது. எட்எக்ஸ் உடனான சாஜ் ஜோஸ் பல்கலைக்கழகத்தின் ஒப்பந்தத்திலும் அதுவே நடந்துள்ளது. 2013 ஏப்ரல் 10 அன்று எட்எக்ஸ் உடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதாக அறிவித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலிபோர்னியா லெப்டினன்ட் கவர்னர் கவின் நியூசோம் ‘வெளிப்படையாகச் சொல்வதென்றால் பழைய கல்வி நிதி மாடல் இனி நிலையானதாக இருக்கப் போவதில்லை’ என்று ஒப்புக் கொண்டிருந்தார். அதுவே இந்தப் பிரச்சனையின் முக்கிய அம்சமாக இருக்கிறது.  திறந்தவெளி இணையவழிப்  படிப்புகள் மற்றும் கலப்பு படிப்புகளின் உண்மையான சிக்கலை புதிய தலைமுறை, புதிய உலகம் என்ற வெற்று சொல்லாட்சிக்குப் பின்னால் மறைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. வெளிப்புற விற்பனையாளர்களிடமிருந்து திறந்தவெளி இணையவழிப் படிப்புகள் மற்றும் கலப்பு படிப்புகளை வாங்குவது கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகத்தை (CSU) மறுசீரமைப்பதற்கான முதல் படியாகவே இருக்கிறது. 

நல்ல தரமான இணையவழிப் படிப்புகள் மற்றும் கலப்பு படிப்புகள் (எங்களுக்கு எந்த ஆட்சேபணை இல்லாத) பணத்தை மிச்சப்படுத்தித் தரப் போவதில்லை. ஆனால் முன் தொகுக்கப்பட்ட பாடங்களை வாங்குவது பணத்தை மிச்சப்படுத்தித் தரலாம். மேலும் முன்பே தொகுக்கப்பட்ட திறந்தவெளி இணையவழிப் படிப்புகள் மற்றும் கலப்பு படிப்புகளுக்கு இறுதியில் ஆசிரியர்களும் தேவைப்படப் போவதில்லை. கலப்பு படிப்பை எளிதாக்கித் தர கற்பித்தல் உதவியாளர் ஒருவர் மட்டுமே போதுமானதாக  இருக்கும். வீடியோவில் பதிவு செய்யப்பட்ட வேறொருவரின் வகுப்பைக் கண்காணிக்க பல்கலைக்கழகப் பேராசிரியருக்கு ஊதியம் வழங்குவது பல்கலைக்கழகத்தின் வளங்களை வீணாக்கவே செய்யும் என்றுகூட ஒருவர் வாதிடக் கூடும். கலிபோர்னியாவின் மாணவர்களுக்கும் குடிமக்களுக்கும் இவ்வளவு நீண்ட காலமாக வெற்றிகரமாக சேவை செய்து வந்த பொது பல்கலைக்கழகங்கள் அகற்றப்படும் போது அவற்றில் எஞ்சியிருப்பவை பழமையும், புதுமையும் கலந்த அவியலாக தனியார் நிறுவனங்களின் கிளையாகவே மாறியிருக்கும். சான் ஜோஸ் பல்கலைக்கழக நிர்வாகிகள் தங்களால் போதுமான நிதியைக் கொண்டு இயன்ற அளவு மாணவர்களை அனுமதித்து பட்டம் பெற்றவர்களை உருவாக்க இயலவில்லை என்று கூறுகிறார்கள். இந்த திட்டத்தை எதிர்ப்பதை விட இணங்குவதில் அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்களா என்பது குறித்த விவாதம் நேர்மையாகவும், சரியான புள்ளியிலும் நடைபெற வேண்டும். மலிவான இணையவழி கல்வி கொண்டு ஆசிரியர்களை மாற்றுவதற்கான செயல்முறையை சான் ஜோஸ் பல்கலைக்கழக நிர்வாகிகள் தொடங்கியுள்ளதை நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. எங்களைப் பொறுத்தவரை சான் ஜோஸ் பல்கலைக்கழகமோ அல்லது எந்தவொரு பல்கலைக்கழக அமைப்போ இந்த வழியில் மறுசீரமைக்கப்படுவதால் மட்டுமே அவை ஒருபோதும் மீளப் போவதில்லை என்றே கருதுகிறோம். அதனாலேயே நாங்கள் அதை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க நினைத்தோம். 

பொது பல்கலைக்கழகங்கள் தங்களிடமுள்ள வளங்களை ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஊழியர்களை வழங்குவதற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று கோருகிற தொழில் நிறுவனங்கள் அதே நேரத்தில் பொதுக் கல்விக்கு உதவுகின்ற வரிகளைச் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. (உலகின் ஒன்பதாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள கலிபோர்னியா இன்றைக்கும் இந்த நாட்டில் மிகவும் மோசமாக ஆதரிக்கப்படுகின்ற பொது கல்வி முறைகளில் ஒன்றைக் கொண்டிருக்கிறது). 

இந்த இரட்டை அச்சுறுத்தல்களால், தாராளக் கலைகள் பொது பல்கலைக்கழகங்களில் புதிய வகைத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. கல்வி என்பது ஜனநாயக நாட்டில் பொறுப்பான குடியுரிமை மீது  கவனத்தைச் செலுத்துவதாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் கருதுகிறோம். அத்தகைய கல்விக்கு முக்கியமானவையாக தாராளக் கலைகளில் உள்ள பொதுக் கல்விப் படிப்புகள் இருக்கின்றன. ஜனநாயகம் தழைத்து வளர்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்ற தகவல், அணுகுமுறைகள், ஒற்றுமை, தார்மீக அர்ப்பணிப்பு போன்றவற்றின் கலவையை திறந்தவெளி இணையவழிப் படிப்புகளால் வளர்த்தெடுக்க முடியாது என்பதால் வெளி விற்பனையாளர் மூலமாக அத்தகைய இணையவழிப் படிப்புகளை நோக்கி நகர்வது வருத்தமளிப்பதாக உள்ளது. 

புதிய சிந்தனைகளுடன் தொடர்பு கொள்ள இப்போது வாய்ப்பு கிடைக்காது இருப்பவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தித் தருவதற்கான உங்கள் ஆர்வத்தை நாங்கள் மதிக்கிறோம். அரசியல் தத்துவம், நெறிமுறைகள் போன்ற துறைகளில் உங்களுக்கு இருக்கின்ற புலமையும், கற்பித்தல் குறித்த உங்கள் நீண்ட கால சேவையையும் நாங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். உங்கள் மீதுள்ள மரியாதை மற்றும் சக ஆசிரியர் என்ற காரணத்தால் உங்களையும் எட்எக்ஸ்-பாணி படிப்புகளின் விற்பனை மற்றும் ஊக்குவிப்புடன் தொடர்புடைய அனைத்து பேராசிரியர்களையும் வேலைக்கான வெறும் பயிற்சிக்கு அப்பாற்பட்ட கல்விக்கான வாய்ப்பை பொது பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களிடமிருந்து பறித்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். பேராசிரியர்களை மாற்றுவதற்கு, துறைகளை அகற்றுவதற்குத் துணை போகின்ற  பொது பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு குறைவான கல்வியை வழங்குகின்ற தயாரிப்புகளை உற்பத்தி செய்ய பொதுக் கல்வி மீது அக்கறை கொண்ட பேராசிரியர்கள் யாரும் முன்வரக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம். 

உண்மையுடன், ஒற்றுமையுடன்

தத்துவவியல் துறை

சான் ஜோஸ் அரசு பல்கலைக்கழகம்

மைக்கேல் சாண்டெல் எழுதிய பதில் கடிதம்

இணையவழிப் பாடங்கள் மாணவர்களுடனான ஆசிரியர்களின் தனிப்பட்ட ஈடுபாட்டிற்கு குறிப்பாக வாழ்வியல் சார்ந்த பாடங்களில் எந்த விதத்திலும் மாற்றாக இருக்காது என்றே நான் உறுதியாக நம்புகிறேன். வகுப்பறைக்கு மாறாக திறந்த உலகளாவிய அணுகலைப் பெறுவதற்கான பரிசோதனையாக இலவசமாக இணையவழியில் தருவதற்காக ‘ஜஸ்டிஸ்’ என்ற எனது பாடத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்தேன். விரிவுரை வீடியோக்கள், கலந்துரையாடல் வலைப்பதிவு மற்றும் கல்வி சார்ந்த பிற பொருட்களை அனைவருக்கும், எல்லா இடங்களிலும் இலவசமாகக் கிடைக்கும் வகையில் வழங்குவதே எங்களுடைய குறிக்கோளாக இருந்தது. 

அந்தப் பாடத்தின் மற்றொரு பதிப்பை இந்த வருடம் எட்எக்ஸ் இயங்குதளத்தில் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். சான் ஜோஸ் பல்கலைக்கழகத்துடன் எட்எக்ஸ் செய்து கொண்ட ஏற்பாடுகள் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. மேலும் இது தொடர்பாக சான் ஜோஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த உள் விவாதங்களைப் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. எனது ஆசிரிய சகாக்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ என்னுடைய பாடத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான  சுதந்திரத்துடன், அது சரியான தகுதியுடன் இல்லை என்று கருதினால் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒதுக்கி வைக்கின்ற சுதந்திரத்துடன் கல்வி தொடர்பான அந்தப் பாடத்தை இலவசமாகக் கிடைக்கச் செய்வதே எனது குறிக்கோளாக இருந்தது. 

இணையவழிப் படிப்புகளின் பரவலான பயன்பாடு பட்ஜெட் அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கின்ற பொது பல்கலைக்கழகங்களில் உள்ள துறைகளின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலை எட்எக்ஸ் மட்டுமல்லாது உயர்கல்வி முழுவதும் தீவிர விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய மிகவும் நியாயமான கவலையாகவே இருக்கிறது. எனது இணையவழி விரிவுரைகள் பிற நிறுவனங்களில் உள்ள எனது சக ஊழியர்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி விடக் கூடாது என்பதையே நான் இறுதியாக விரும்புகிறேன்.

மைக்கேல் சாண்டல்

அன்னே டி 

ராபர்ட் எம். பாஸ் 

ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர்