சிந்தக் கண்ணீர் இன்றி
வறண்ட நொய்யல்
என் கவிதையில் – அதைச்
சிந்திக் கொண்டிருக்கிறது
சத்தமின்றி

கவிதையில்
எழுத முடியாச் சொற்கள்
என் கண்களும் முகமும் சிவக்கின்றன
தொண்டையை அடைக்கும்
விம்மலின் ஊடே

எழுதி முடித்த பின்
கூர்ந்து கவனித்தேன்
கசிகிறது ரத்தம்
எழுத்துக்கள் ஒவ்வொன்றிலிருந்தும்
சொட்டுச் சொட்டாய்

ஆற்றில் வேதிக் கழிவு கலப்போர்- தாயின்
சோற்றில் நஞ்சு கலப்போர்
நீரை உறிஞ்சி விற்போர்
தாய்ப் பாலைத் திருடி விற்போர்
ஆக்ரமித்து அதை நெருங்குவோர்
பெற்ற தாயின் கழுத்தை நெறுக்குவோர்
அடி மணலை அள்ளிச் செல்வோர்
அவளது உயிரையே உருவிச் செல்வோர்
இவரெல்லாம் முறை வைத்து
நொய்யலின் முதுகில் குத்தியதில்
நீரோடு கலந்து ஓடிய ரத்தம் – கவிதையின்
ஒவ்வொரு எழுத்திலும் வடிகிறது

மணலில் ஓடிய நொய்யல் – எங்கள்
மனதிலும் ஓடி – அன்று
சிந்து பாடிய அது – இன்று
நொந்து வாடியது
அன்னையை விற்றுப்
பணம் எண்ணும்
பிணங்களை எண்ணி எண்ணி

பயிருக்கு நீர் தந்த நொய்யல்
நம் உயிருக்கும் தந்த அதை
வரம்பு ஏதுமின்றிச்
சுரண்டிச் சூறையாடிய பின்
நரம்பு அறுந்த அந்த வீணையில்
ஈரம் இழந்த உயிரின் இதயம்
துயரைத் தானே மீட்டும் இனி

காலத்திடம் கேட்க
ஒன்று தான் உண்டு எனக்கு
மரமாக மாற்றி விடு என்னை
நொய்யலின் கரையில் நின்று
காக்கிறேன் கடைசி வரை அதை

அது முடியாது எனில்
நோய் இல் நதி – இன்று
பாயில் சுருண்ட அது
நோயில் விழ – அதைச்
சாவின் விளிம்பில் நிறுத்தியோரை

நீங்காச் சின்னமாய்
நீராய் ஓடிய கற்கண்டை
நினைவுச் சின்னமாக்கிய
நீசரை

காலத்துக்கும்
காணக் கிடைக்கா அமிர்த ஓட்டத்தை
காணக் காண
காணாமல் செய்தோரை
ஓடிக்கொண்டிருந்த
ஓவியத்தைத்
தீவைத்து எரித்தோரை

வணிகம் சார்ந்தோரை
மனிதம் சார்ந்தோராய்

நீரைக் கெடுக்கும் நாசகாரரை
மனிதராய்
மாற்றி விடு

சட்டம் செய்யப்படும் நாளிலேயே
அதன் விலையும் ஓட்டைகளும்
நிர்ணயம் செய்யப்படும் நாட்டிலே
வான் நோக்கிக் கதறும்
என் குரலில் நிறைந்திருக்கிறது
“எத்தனை கொலைகாரர்கள் இங்கே ….
என்னை அவர்களில் ஒருவன் ஆக்கிடாதே” எனும்
என் இயலாமையின் இறைஞ்சல்

ஆதித் சக்திவேல்
கோவை
8903671246

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *