கரோனா நோய் தொற்று-பேரிடர் காலம், நமது பொதுக் கல்வி சார்ந்த பலவீனங்களை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது. ஊரடங்கு காலத்தில்- குறிப்பாக ஆட்கொல்லி நோய் வந்து மரணத்தை எதிர்கொண்டாலும் பரவாயில்லை, பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அதையும் தாண்டி புனிதமானவை என்று 13-14 வயது குழந்தைகளை பலியிட மரணத் தேர்வு மையங்களை ஏற்படுத்துகிறது அரசு.

ஆனால் எதிர்ப்பு வலுவானதாக இல்லை.’ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் இல்லாமல் வாழ்க்கை சாத்தியமா? பரிட்சை என்ற ஒன்றில்லாமல் கல்வியை தரம் பிரிக்க முடியுமா? தரமே இல்லாதவர்களுக்கும், உயிரைக் கொடுத்து படித்தவர்களுக்கும்
ஒரே மாதிரி  சட்டமா?  இது  நியாயமா?’  என்றெல்லாம் ஊடகத்தில் கருத்துக்கள் சொல்லப்பட்டன. படுகின்றன…படும்…

உலகிலேயே அதிக துன்பங்களை இன்று அனுபவித்துக் கொண்டிருப்பது கோவிட்-19 நோயாளிகள் கூட இல்லை.  தேர்வு மையம் சென்று தேர்வை எதிர்கொண்டு தனக்கு நோய் வந்துவிடாமல் எப்படி வீடு திரும்புவது. தேர்வுக்கு தயாராவதற்கு எந்த அவகாசமும், ஆசுவாசமும் தராமல் பொதுத் தேர்வு நடத்தப்படும் சூழலில் அதை எப்படி எதிர்கொள்வது என்று  பதறிப் போயிருக்கும்  தமிழக பத்தாம் வகுப்பு குழந்தைகள்,  தங்களது மன உளைச்சலால் படுகின்ற வேதனை யாவற்றையும் கடந்தது.

தேர்வு அட்டவணைகளை வெளியிட்ட நான்கு மாநில அரசுகள், பின்னர் நோய் பரவலைக் கருத்தில் கொண்டு, ஜுன் இறுதி வாரத்தில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளன. மத்திய அரசு பாட திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை ஜுலை ஒன்று முதல் நடத்த அட்டவணை வெளியிட்டு இருக்கிறார்கள். அவர்கள் பத்தாம் வகுப்பு பற்றி ஏதும் சொல்லவில்லை. கரோனா நோய்த் தொற்று உலகம் எங்கும் பல துயரங்களை ஏற்படுத்திவிட்டது. இது ஏதோ நம் தமிழகம் அல்லது இந்தியா சார்ந்த பிரச்சனையாக மட்டுமே அணுகப்படுவதுதான் வேடிக்கை. பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களால் யுனிசெஃப் வழி நின்று பத்தாம் வகுப்பு படிக்கும் 13-14 வயது சிறார்கள் குழந்தைகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

கோத்தாரி குழு

பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை, ஆசிரியர்கள், அதிகாரிகள் அவர்களை மாணவர்கள் என்று அழைத்த காலம் போய் (புதிய கல்விக் கொள்கைப்படி) இப்போது தேர்வர்கள் என்று அழைக்கப்படும் புதிய வர்த்தக காலத்தில் நாம் வாழ்கிறோம். கரோனா, பிளேக் நோய்க்கு அதிகமான பலியை உலகெங்கும் கண்டு வருகிறது. பல லட்சம் குழந்தைகளும் பாதிக்கப்பட்டவர்களில் அடக்கம். ஆனால் எந்த முன் ஏற்பாடும் இல்லாமலே ஊரடங்கை அறிவித்து பிரமாண்ட பட்டினி யுகத்திற்கு நாம் குடும்பங்களை தள்ளியிருக்கின்ற நிலைமை வேறு எந்த நாட்டிலும் கிடையாது. பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவை பள்ளியிலேயே வழங்க உலகிற்கே வழிகாட்டியவர்கள் நாம். இன்று சத்துணவு-இணைந்த வளாகங்களும் பூட்டிக் கிடப்பதைப் பற்றி நாம் முன்பே யோசித்திருக்க வேண்டும். சத்துணவுக் கூடங்களை ஊர் பொது சமையலறையாக்கி, பேரிடர் கால ஊரடங்கில் நாம் ஊருக்கே உணவளித்திருக்க முடியும்.

கோத்தாரி கல்விக்குழு (1966) நம் தேசத்தில் கல்வியின் நோக்கம் என்று கீழ்க்கண்ட ஐந்து விஷயங்களை பட்டியல் இட்டது.

கல்வியின் நோக்கம்:

• சாதாரண அன்றாட வாழ்க்கை போராட்டங்களுக்கு நாம் குழந்தைகளை தயார் செய்தல்.
• சுய கட்டுப்பாடு ஒழுக்கம் உள்ள சட்டப்படியான பிரஜைகளை உருவாக்குதல்.
• பிறர் நலம் நாடும் பொது உணர்வை குழந்தைகளுக்கு விதைத்தல்.
• ‘தேடுதல்’ எனும் அறிவுப் பசியை விதைத்தல்.
• எதிர்கால பிரச்சனைகள்-சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்தல்.

மேற்கண்ட ஐந்து பிரதான நோக்கங்களுக்கும் பள்ளித் தேர்வுகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? பிறகு எங்கிருந்து வந்தன தேர்வுகள்? எஸ்.எஸ்.எல்.சி எனும் பள்ளி-முடிப்பு சான்றிதழை 1886இல் ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்தார்கள். அப்போது அந்த சான்றிதழின் முக்கியத்துவத்தை அதிகரித்திட, சமச்சீர் அந்தஸ்த்தோடு கூடிய பொதுவான மூன்று பாடங்களில் தேர்வு அறிமுகமானது. பதினோராம் வகுப்பு முடிந்து கோபால கிருஷ்ண கோகலே போன்றவர்கள் வாதாடி பெற்ற தேர்வு அது. அதாவது பல்வேறு வகை கல்வியை (திண்ணைப் பள்ளி, மதராஸா அல்லது வீட்டிலேயே கல்வி ) தொடர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அதை எழுதலாம். ஆங்கிலம், கணிதம், தர்க்கம் என்று தேர்வு இருந்தது. அதை எழுதியவர்களில் எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்கள் பி.யூ. எனப் பின்நாட்களில் அழைக்கப்பட்ட எஃப்.எ., எனும் இடைக்கால ஓராண்டு தேர்வில் வென்றால் போதும் எல்.எம்.பி (Licensed Medical Practitioners) முடித்தால் மருத்துவர் ஆகலாம். அப்படியே பதினோறாம் வகுப்பு முடித்து பட்டப் படிப்பு மூலம் பொறியாளர் ஆகலாம்.

BMC News: Medical Practitioners State Dissatisfaction With The BMC

எஸ்.எஸ்.எல்.சி முடித்தால் ஆசிரியர், முடிக்காவிட்டால் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அரசு-அலுவலக கணக்காயர், எழுத்தர் பதவிகள் கூட எஸ்.எஸ்.எல்.சி யையே மய்யமாகக் கொண்டவை. இன்று பத்தாம் வகுப்பு தேர்வாக அது குறைத்து சுருக்கப்பட்டுள்ளது. உண்மையான பள்ளி இறுதித் தேர்வு இப்போது +2 தேர்வுதான் என்றாலும், பாஸ்போர்ட் முதல் ஓட்டுனர் உரிமம் வரை இந்த சான்றிதழ் இன்னமும் பயன்பாட்டில் உள்ளது. பத்தாம் வகுப்பிற்கு அடுத்த படிநிலை கல்வியைத் தொடர்ந்திட (மேல்நிலைக் கல்வி, பாலிடெக்னிக் இப்படி) இந்த படிநிலை மதிப்பெண்களை பரிசீலிக்கிறார்கள். மற்றபடி எஸ்.எஸ்.எல்.சியை அடிப்படையாகக் கொண்ட அரசு வேலை வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது. அலுவலக பணியினர், ரெயில்வே பணியாளர் போன்ற தேர்வாணையங்களிலும் வங்கித் தேர்வுகளிலும் கூட குறைந்தபட்சம் ஒரு பட்டம் பெற்றிருப்பது பெரும்பாலும் நடைமுறையாக ஆகிவிட்டது.

இந்தியா முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு இருந்தாலும், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் அது இப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனை தேர்வாகக் கருதப்படுகிறது. எனவே இந்த நோய்த் தொற்று காலத்தைக் கருத்தில் கொண்டு இத்தேர்வை ரத்து செய்யக் கூடாதா என்றால்… இந்திய அளவில் பள்ளி இறுதி சான்றிதழ் இந்த வருடம் எப்படி தரப் போகிறார்கள் என்பதை சார்ந்தே நாம் முடிவெடுக்க முடியும் என்கிற நிலை.

மொத்தத்தில் நமது கல்வி வரலாற்றை நாம் இப்படி எழுதிவிடலாம். ஆசிரியர் மைய (அல்லது அவரது குலத்தை மையமிட்ட) நம் பண்டைய குருகுல, திண்ணைப் பள்ளி கல்வி முறையை, ஜான் டூவி போன்றவர்கள் வழியே ஆங்கிலேயர்கள் மெக்காலேவின் மேற்பார்வையில் பாடப் பொருள் மைய பொதுக் கல்வி முறையாக மாற்ற, அதை தேர்வுகள் மையக் கல்வியாக ஹண்டர் கமிசன் மாற்றியது. இப்போது அதை பொதுத் தேர்வு மையக் கல்வியாக மாற்றி சம காலத்தில் பேணி வருகிறார்கள். ஹண்டர் கமிசன் காலம் முதல் இந்திய சுதந்திரப் போர் காலம் வரை, சுதந்திர வேட்கையிலிருந்து நாட்டை திசை திருப்ப தேர்வுகள் பயன்பட்டன. காலாண்டுத் தேர்வு  அரையாண்டுத் தேர்வு மற்றும் முழு ஆண்டுத் தேர்வாக பிரித்து ஒரு கல்வி ஆண்டையே தேர்வு தொடர்பான ஆண்டாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள். இன்று இந்தப் பொதுத் தேர்வு, அந்த திசைத் திருப்பல் அரசியலைச் செய்கிறது. டாஸ்மாக்கைத் திறந்து அரசு சமூக அவலத்தை நோய் காலத்தில் பரப்புவதை பற்றி பேசித் தீர்க்கும் மீடியா வகையறாவை, திசை திருப்ப ஜுன் ஒன்றாம் நாள் தேர்வு எனும் பரபரப்பு உதவியது என்பதில் சந்தேகமே இல்லை. எப்படி இருந்தாலும் இவ்வளவு அவசரமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டிய அவசரம் எதற்கு வந்தது? அதற்கான நிர்பந்தம் என்ன?

இது வெறும் தேர்வு அல்ல. பொதுத் தேர்வு. இன்று பொதுத் தேர்வு என்பது ஒரு வர்த்தகம். எப்படி பெரிய திருமணம் செய்யும் முறை, சபரி மலைக்கு போவது எல்லாம் பூக்கடை, டூரிஸ்ட் வேன் மற்றும் இத்யாதி வர்த்தகங்கள் ஒன்றிணைந்த வர்த்தகமாக உள்ளதோ அது போன்றதொரு வர்த்தகம். சிறப்புப் பயிற்சி மையம், டியூசன் சென்டர், தனியார் பள்ளிகள், கேள்வித்தாள்-பிசினஸ், நோட்ஸ்/கைடு வெளியீட்டாளர் என பல கோடி ரூபாய் வணிகமாக,  இந்த பொதுத் தேர்வு இருக்கிறது. இவர்கள் யாவரிடம் இருந்தும் அரசுக்கான ‘பாக்கியை வசூலிக்க’ நிர்பந்தம் உண்டு. இதைத் தவிர நீட் தேர்வு பயிற்சி மையங்கள்-பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்ததுமே ‘பேக்கேஜ்’ அடிப்படையில் இரண்டாண்டு நீட் கோச்சிங்-சேர்க்கையை தொடங்கி பெரும்பாலும் இந்த சமயத்தில் களை கட்டி இருக்கும்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு …

பெரிய அளவிலான வணிகமாய் இன்று வடிவெடுத்திருக்கும் அவர்களது நிர்பந்தத்தையும் நாம் நிராகரிக்க முடியாது. ஆனாலும் தற்போதைய சூழலில் தேர்வு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. பொதுத்தேர்வு நடத்த முடிந்த சாத்தியங்களை முதலில் ஆராய்வோம். எஸ்.எஸ்.எல் சி தேர்வு எழுதும் தமிழக மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 9,45,598 (அதாவது ஏறத்தாழ ஒன்பதரை லட்சம் பேர்) என்று அரசின் புள்ளி விபரம் கூறுகிறது. இது மொரிஷியஸ் நாட்டு மக்கள் தொகையை விட அதிகம். ஏறத்தாழ பக்ரைன் நாட்டு மக்கள் தொகைக்கு இணையானது. எல்லாப் பள்ளிக்கூடங்களையும் தேர்வு மையமாக அறிவித்தாலும் 250 மாணவர்கள்-சராசரியாக-கொண்ட மையங்கள் பல ஆயிரத்தை தாண்டும். கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் சிவப்பு மண்டலம் தடுக்கப்பட்ட பகுதியில் (containmentareas) ஆயிரம் தேர்வு மையங்கள் உள்ளன. இந்த அளவுக்கு குழந்தைகள் கொத்தாக கூடும்போது கோயம்பேட்டில் நடந்ததைப் போல நோய்த் தொற்று 250 குழந்தைகளையும் பீடிக்க வாய்ப்பு அதிகம்.

மே-18 வரையிலான கணக்கீட்டின்படி தமிழகத்தில் கோவிட்-19 நோய் தொற்று பாசிடிவ் ஆன குழந்தைகள் 704 பேர். இதில் 12 வயது முதல் 17 வயது வரையிலான பொதுத் தேர்வு வயதுடையோர் 517 பேர். இதைத் தவிர. தேர்வு எழுதும் மாணவர்களில் 14 சதவீதம் பேர் தடை செய்யப்பட்ட (Containment) பகுதியில் இருப்பதாக தலைமை ஆசிரியர்களின் புள்ளி விபரம் கூறுகிறது. கோவிட் 19 பாதிக்கப்பட்ட ஒரு நபரின் சிகிச்சை செலவுக்கு தனியார் மருத்துவமனைகள் குறைந்த பட்சமாக நான்கு லட்சம் ரூபாயும் அதிகபட்சமாக ஏழு லட்சம் ரூபாயும் பேக்கேஜ் வைத்திருக்கிறார்கள் என்பதே இன்றைய நிலை. கோவிட்- 19 வைரஸ் நோய் தாக்கிய குழந்தைகள் உடனடியாக கவசாகி (Kawasaki) நோய்க்கு தள்ளப்படுகிறார்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இது பாக்டீரியாவால் ஏற்படும் தன்னுடல் தாக்குநோய், ரத்தக்குழாய் உடைப்பு உட்பட பல ஆபத்துகள் கொண்டது. வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.  அதே சமயம் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ள சிறார்களின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். கோவிட்-19 தொற்றை சுமந்து, அவர்கள் பிறருக்கு பரப்பியும் விடலாம் என்பதால் தேர்வு இப்போது நடக்கும் சாத்தியங்கள் மிகக் குறைவு.

நோய் தவிர பிற காரணங்களும் உண்டு.  இந்த ஊரடங்கு 67 சதவிகித அளவுக்கு குழந்தைகளை பசியில் தள்ளியதே உண்மை. அமெரிக்காவில் கூட பள்ளிகள் மூடப்பட்டனவே தவிர 18 வயதுக்கு உட்பட்ட யாரும் உணவு நேரத்திற்கு பள்ளி சென்றால் உணவை பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது. அங்கே அது வரி செலுத்தும் யாவருக்குமான உரிமை. இங்கிருப்பதுபோல (அம்மா/அய்யா) நலத் திட்டம் அல்ல. பல குழந்தைகள் குடும்பத் தேவைக்காக குழந்தை-தொழிலாளர்களாகி விட்டார்கள். நம் தமிழகத்திலும் பல குழந்தைகள் புலம் பெயர்ந்த தொழிலாளர் வீட்டுக் குழந்தைகள். இப்படி பல்வேறு காரணங்களால் தேர்வுகளை நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக முடிவெடுத்தால் மாற்று வழிகளை நாம் முன்மொழிய வேண்டும். ஆன்-லைன் தேர்வு நடத்தலாம் என்கிறார்கள்.

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி வழங்கிவிடலாம் என்றும், அல்லது தொடர் மற்றும் முழுமை கற்றல் (CCE) மாதிரி தேர்ச்சி முடிவு தரலாம் என பலவகையில் பல ஆரூடங்கள் வெளியிடப்படுகின்றன. நம் கல்வி-அதிகாரக் குழுமம் எதற்கெடுத்தாலும் அயல் நாடுகளையே அடையாளம் காட்டும் ஒரு வகை தப்பித்தலை (நீட் உட்பட யாவற்றுக்கும்) செய்து வருவதை பார்க்கிறோம். எனவே அதிகாரக் குழுமம் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு விவகாரத்திலும் மற்ற நாடுகள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை கணக்கில் எடுத்தாலே போதும் என்பதே என்னுடைய  விருப்பம். ஸ்பெயின், பிரான்சு, அயர்லாந்து, கெனடா, உட்பட 67 நாடுகள் (அதில் சீனாவும் அடக்கம்) பள்ளி இறுதி தேர்வுகளை (எஸ்.எஸ்.எல்.சி. உட்பட ) ரத்து செய்துவிட்டன. பிரான்சும், அமெரிக்காவும் வீட்டில் எழுத்து வேலை (Assignment) கொடுத்து கதை முடித்தார்கள். சிறப்பு அந்தஸ்து (கிரெடிட்டட் கிரேடு) கொடுத்தும் மற்றவர்களுக்கு சாதாரண தேர்ச்சியும் வழங்கி மேல் வகுப்பு (கல்லூரி) சேர்க்கைக்கு தேர்வு இல்லாமலேயே அனுப்பி இருக்கிறார்கள்.

Live Chennai: Last chance for private +2 examination candidates ...

பெல்ஜியத்தில் ஆண்டு முழுவதும் குழந்தைகளின் பள்ளி வருகை பதிவேடு, வகுப்புத் தேர்வுகள் மற்றும் ஏனைய தரவுகளைக் கொண்டு பொதுத் தேர்வு இல்லாமலேயே தேர்ச்சி வழங்கி இருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்தே தேர்வு உண்டு என்றும் பள்ளிகளை மூடக்கூடாது என்றும் சொல்லி வந்த  இங்கிலாந்து  கூட காலவரையின்றி தேர்வுகளை ஒத்தி வைத்து பிறகு ரத்தும் செய்து விட்டது. அங்கே முறையீட்டு முறை தரத்தை (Appeal Process) வழங்க இருக்கிறார்கள். அதாவது நான் இத்தனை மதிப்பெண்-கிரேடு பெறத் தகுதி உள்ளவன் என மாணவரிடம் விண்ணப்பம் பெற்று ஆசிரியர் அதற்கான சாட்சிகளை சேர்த்து அனுப்பினால் கேட்ட கிரேடு- மதிப்பெண்ணோடு சான்றிதழ் தருவார்கள். கனடாவில் வீட்டிலிருந்தே குழந்தைகளிடம் புல்லெட் போல வினா-வங்கிகொடுத்து பார்த்து எழுதும் தேர்வு வைத்தார்கள். அதையும் எழுத முடியாத குழந்தைகள் தேர்வு-தேவை இல்லை என்று கருதினால் அந்த ஆப்ஷன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தேர்வு வேண்டாம் என்று முடிவெடுத்தவர்களுக்கு சராசரி மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பட்டியல் வழங்குகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் தேசிய கல்விக் கவுன்சில் தேர்வுகளை ரத்து செய்து பேரிடர் கால சட்டப்படி ஆசிரியர்களின் சிபாரிசின் அடிப்படையில் தேர்ச்சி கொடுக்கிறார்கள்.

பிரான்ஸ் நாட்டில் கைபேசியில் வாய்மொழியாக ஒவ்வொரு குழந்தையிடமும் தேர்வு நடத்தி ஆசிரியர்கள் தேர்ச்சி, மதிப்பெண் வழங்கி பொதுத் தேர்வை எந்த நோய் அச்சுறுத்தலும் இன்றி முடித்தார்கள். தேசிய அளவில் தங்களது மேற்படிப்பிற்காக சீனாவில் நடக்கும் நுழைவுத் தேர்வான காவோ காவோ (Gao kao) மறு தேதி
குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு மேற்படிப்பு சேர்க்கைக்கு மாற்று வழிகள் முன்மொழியப்பட்டுள்ளன.  எத்தகைய கல்வியானாலும் அதன் உண்மையான நோக்கம் சமூக விடுதலை என்பார் கிராம்சி. அச்சமற்ற பிரஜைகளை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என்பார் பேரா.யஷ்பால். இந்த நோய்-பேரிடர் காலத்தில் குழந்தைகளை அச்சுறுத்தாமல் பொதுத் தேர்வுக்கு மாற்றாக எப்படி தேர்ச்சி வழங்கலாம் என மத்திய- மாநில அரசுகள் மாற்று வழிகளை யோசித்தால் மட்டுமே நம் குழந்தைகளின்எதிர்காலம் காப்பாற்றப்படும்.

அதற்கு அரசுகளை நிர்ப்பந்திப்பது நம் அனைவரின் கடமையாகும். மூன்று விதமான மாற்றுகளை அயல் நாடுகளின் பாடமாக இந்த நோய் பரவல் பேரிடர் காலத்தில் நாம் முன்மொழிய முடியும். இந்த ஓராண்டு தேர்வு தேவையில்லை. மேல்நிலையில் (+1) தங்களது விருப்பப்பாடங்களை எடுத்து படிக்க மதிப்பெண் தரப் பட்டியலை தடை செய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மேல் வகுப்பு செல்ல சிறப்பு அனுமதி தந்துவிடலாம். இவர்களில் பாலிடெக்னிக் போகும் மாணவர்கள் 12 சதவிகிதம் மட்டுமே. இவர்களுக்கும் மேற்சொன்ன முறையையே பின்பற்றலாம். பள்ளி விடுப்பு சான்றிதழை கரோனா பேரிடர் காலச் சலுகைச் சான்றிதழ் என அச்சிட்டு வெறும் மாற்றுச் சான்றிதழ் இருந்தால் போதுமானது ‘பொது தேர்ச்சிக்கு’ உட்பட்டவர் என அறிவித்து மாற்றுக் கல்வி சேர்க்கை வழங்கலாம்.

Era Natarasan – Wikipedia

எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் மூலம் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஏனைய ஆவணங்களை பெறும் அரசு விதிகளில் மாற்றம் கொண்டு வந்து வேறு ஆவணங்களை-வயது மற்றும் கல்வித் தகுதிக்கு அத்தாட்சியாக அறிவிக்கலாம். பொதுவாக ஒரு கருத்து பள்ளி இறுதித் தேர்வு என ஒரு பொதுத் தேர்வு போதாதா? பத்து, பதினொன்று பன்னிரண்டு என மூன்று பொதுத் தேர்வுகள் இருப்பதால் நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உள்ளன. பெரும்பாலான மாணவர்கள் எழுதி முடித்து விட்ட +2 தேர்வு முடிவுகளை கால வசதியை ப் பொறுத்து வெளியிடலாம். இனி வரும் ஆண்டுகளில் +2 தேர்வு மட்டுமே பொதுத் தேர்வு என அறிவிப்பதே பலவிதமான அவலங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.  உலக வரைபடத்தில்,  மூன்று பள்ளி இறுதி பொதுத் தேர்வுகள் உள்ள ஒரு நாட்டைக் கூட உங்களால் காட்ட முடியாது.

3 thoughts on “பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் மற்ற நாடுகள் காட்டும் மாற்று வழிகளும் -ஆயிஷா இரா. நடராசன்”
  1. மிக மிக முக்கியமான கட்டுரை.எழுத்தாளருக்கு நன்றி.
    ஓரிடத்தில் இங்கிலாந்து வட என்று வருகிறது.சரிபார்க்கவும்.

  2. Comprehensive and compelling. Beautiful article. I hope everyone concerned reads this article. Spread it away.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *