நூல் பதிப்புரை: வேட்டை எஸ்.கண்ணனின் ’சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை’ – ந.முத்துமோகன்

நூல் பதிப்புரை: வேட்டை எஸ்.கண்ணனின் ’சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை’ – ந.முத்துமோகன்




பால் லஃபார்க் – பூர்வீகம் ஹாய்த்தி நாட்டைச் சேர்ந்தவர். கியூபாவில் பிறந்தவர். “பிறப்பிலேயே நான் சர்வதேசவாதி” என்று இவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவார். கறுப்பினம், ஜமாய்க்கா இந்தியர், பிரெஞ்சு கிறித்தவர், யூதர் என்ற நான்கு இனங்களும் இவர் மீது உரிமை கொண்டாட முடியும். 1842 ல் பிறந்த இவர் 1911 வரை வாழ்ந்தார். பிரெஞ்சு கம்யூனிச இயக்கத்தின் தோற்றுவர்களில் ஒருவர். அதற்கு முன்னோடியாக பிரெஞ்சு சோசலிசக் கட்சியை நிறுவியவர். கியூபர்களும் கறுப்பின மக்களும் சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கு தத்தமது பங்களிப்பாக இவரைக் குறிப்பிடுவார்கள்.

லண்டனில் கார்ல் மார்க்சின் நேரடிச் சீடர்களில் ஒருவராக இருந்தவர் பால் லஃபார்க். மாலை நேரங்களில் இருவரும் நடைப் பயணம் செல்லும்போது மார்க்ஸ் இவருக்குத் தனது “மூலதனம்” நூலின் கருத்துக்களை எடுத்துரைப்பார். மார்க்சுக்கு “மூலதனம்” நூலின் தயாரிப்பில் அவரது இரண்டாவது மகள் லாரா உதவியாளராக இருந்தார். எனது பெண்மக்கள் மூவரில் லாராவே மிகப்பெரிய அழகி என்று அம்மா ஜென்னி குறிப்பிடுவார். பால் லஃபார்க்கும் லாராவும் காதலித்து 1868ல் திருமணம் புரிந்து கொண்டனர். லாராவும் லஃபார்கும் இணைந்து பிரெஞ்சு மொழிக்கு மார்க்ஸ் – எங்கெல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்தனர்.

லஃபார்க் பிரான்சில் மருத்துவக் கல்வியைத் தொடங்கினார். அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறினார். இலண்டனில் கல்வியை முடித்தார். நேர்க்காட்சிவாத விஞ்ஞானங்களில் அவருக்கு ஆர்வம் உண்டு, இளம் வயதில் பிரெஞ்சு அராஜகவாதியான புரௌதனின் செல்வாக்கினைப் பெற்றவராகவும் விளங்கினார். “கடவுளுக்கு எதிரான யுத்தம்! அதுவே முன்னோக்கிய நகர்வு!” என்ற கோஷத்துடன் அவர் பங்கேற்ற இளைஞர் அணி செயல்பட்டது. விரைவில் மார்க்சியராகப் பரிணமித்தார். பின்னாட்களிலும் கூட லஃபார்கின் மீது அராஜக செல்வாக்கு மிச்சம் இருந்தது என்று குறிப்பிடுவார்கள். இருப்பினும், பிரான்சில் கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம், பிரான்சிலும் ஸ்பெயினிலும் அராஜகவாதிகளின் செல்வாக்கை ஒடுக்கியது போன்ற பணிகளைச் செய்ததில் லஃபார்கின் பங்களிப்பு கணிசமானது என்று வரலாற்று ஆசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள். லெஸ்லி டெஃப்லர் (Leslie Defler) என்னும் வரலாற்று அறிஞர், பால் லஃபார்கும் பிரான்சில் கம்யூனிஸ்டு இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

லஃபார்க் சிறந்த பேச்சாளர், நகரப் பகுதிகள், கிராமங்கள், ஆலைகள், வயல்வெளிகள் என உழைக்கும் மக்களைத் தேடி அலைவார். ஃபிரான்சில் மார்க்சியத்தைப் பரப்பியதில் லஃபார்குக்கு முக்கியப் பங்கு உண்டு என இவர் பாராட்டப்படுவார். பிரெஞ்சு சட்டசபையில் இடம் பெற்ற முதல் சோசலிசப் பிரதிநிதிகளில் இவரும் ஒருவர். 1871ல் பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு அரசுப் படைகளால் அதிகம் தேடப்பட்டவர் களில் லஃபார்கும் லாராவும் உண்டு . லாராவும் லஃபார்கும் ஸ்பெயினுக்கு தப்பித்துச் சென்றனர்.

ஜியார்ஜ் சோரல், பெனடிட்டோ குரோச்சே போன்ற சமகாலத்து அறிஞர்கள் லஃபார்கை “மாமனார் வழிபாட்டாளர்” என்று விமர்சித்தது உண்டு .

கீழ்க்கண்ட நூல்கள் பால் லஃபார்கின் எழுத்துக்களில் முக்கியமானவை. “உழைப்பிலிருந்து விடுதலை (Right to be Lazy)”, “சொத்தின் வரலாறு (Evolution of Property)”, “மூலதன மதம் (The Religion of Capital)” போன்றவை முக்கியமான நூல்கள். உழைப்பிலிருந்து விடுதலை என்ற நூல் முதலாளிய உழைப்பு அறம் தொழிலாளி வர்க்கத்தை முதலாளியத்திற்கு அடிமைப்படுத்தும் மிகப்பெரும் ஆயுதம் என விவாதிக்கிறது. எனவே உழைப்பு எனும் முதலாளிய ஒழுங்கிலிருந்து தொழிலாளர்கள் முதலில் உளவியல்ரீதியாக விடுபட வேண்டும் என வாதிடுகிறது. புரட்சிக்காரர்கள் முதலில் தம்மிடமுள்ள உடமை வர்க்க குணாதிசயங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பது லஃபார்கின் பொதுவான நிலைப்பாடாகும். மார்க்சியக் கலாசாரத்திற்கு நாம் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுவார். வர்க்கப் போராட்டத்தின் வடிவங்களில் கருத்தியல் வடிவங்களுக்கு அவர் முன்னுரிமை வழங்குவார். வஃபார்கை அந்தோனியோ கிராம்சியுடன் சிலர் ஒப்பிடுகின்றனர். மூலதனத்தையே (பணத்தையே) கடவுளாக வழிபடும் நவீன முதலாளிய வாழ்வைக் கேலிக்குள்ளாக்கும் ஒரு சித்தரிப்பு அவரது மற்றொரு படைப்பான “மூலதன மதம்” என்ற நூலில் உள்ளது.

பால் வஃபார்கும் அவரது துணைவியார் லாராவும் 1911 ஆம் ஆண்டு இணைந்து ஒரே நேரத்தில் தற்கொலையைத் தழுவிக் கொண்டனர். மிகவும் துக்கமான இந்நிகழ்வை அவரது தோழர்கள் ஆதரிக்கவில்லை . ஆயின் முதிர்ந்த வயதை நெருங்கும் போது, பிறருக்குச் சுமையாகாமல் நமது சாவை நாமே முடிவு செய்து கொள்ளுவதே அறிவு பூர்வமானது (Rational Suicide) என்று அது நியாயப்படுத்தப் படுகிறது.

தனது மரணம் குறித்த சுய அறிக்கையில் லஃபார்க் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்: “எழுபது வயதுக்குமேல் வாழ நான் விரும்பவில்லை . உடலும் மனமும் தளர்ந்து எனக்கும் பிறருக்கும் பாரமாக வாழுவதைத் தவிர்க்க விரும்புகிறேன். கடந்த 45 ஆண்டுகளில் எந்த லட்சியத்திற்காக வாழ்ந்தேனோ, அந்த லட்சியம் விரைவில் வெற்றியடையும் என நான் உறுதியாக நம்புகிறேன். கம்யூனிசம் வாழ்க! இரண்டாவது அகிலம் வாழ்க!” லஃபார்க், லாரா ஆகியோரின் இறுதி ஊர்வலத்தில் 20,000 பேர் கலந்து கொண்டனர். லஃபார்க், லாராவின் இறுதிச் சடங்கில் லெனின் கலந்து கொண்டார்.

“சொத்தின் வரலாறு: நாடோடிக் காலத்திலிருந்து நாகரீகக் காலம் வரை” என்ற லஃபார்கின் நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம், மானுடவியல் போன்ற துறைகளுக்குக் கோட்பாட்டுப் பங்களிப்பை வழங்கும் நூலாகும். “மானுடவியலின் உண்மையான விவிலியம்” என்று இந்நூலை ஒரு விமர்சகர் பாராட்டுகிறார்.

1840 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அராஜக சிந்தனையாளரான பியர் ஜோசெஃப் புரௌதன் “சொத்து என்றால் என்ன?” என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டார். அந்நூல், அந்நாட்களில் காத்திரமான அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர்களுக்கிடையில் வலுவான சலனங்களை ஏற்படுத்தியது. “சொத்து என்பது திருட்டு” என்ற கருத்தை அந்நூலில் புரௌதன் முன்வைத்தார். இளம் மார்க்சுக்கு புரௌதனின் சொத்து குறித்த கருத்து அரசியல் பொருளாதார ஆய்வுகளில் ஒரு திருப்புமுனை யாகத் தென்பட்டது. மார்க்ஸ் புரௌதனுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டார். சிறிது காலத்துக்குப் பிறகு பாரீசில் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டனர். பின்னாட்களில் பிறிதொரு நூல் குறித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருப்பினும் சொத்து குறித்த புரௌதனின் நூலை மார்க்ஸ் முக்கியமானதாகக் கருதி எப்போதுமே பாராட்டி வந்தார்.

லஃபார்கின் “சொத்தின் வரலாறு” என்ற நூல் ஒருவகையில் புரௌதனின் நூலைத் தொடர்கிறது. இருப்பினும், சொத்து எனும் விடயத்தை லஃபார்கின் நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் மையப் பிரச்சினைகளில் ஒன்றாக மாற்றுகிறது. மார்க்சினுடைய “மூலதனம்” நூலின் பல இடங்களில் பேசப்பட்டுள்ள கருத்துக்கள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன என்று ராபர்ட் பில்ஸ் என்ற இந்நூலின் 1890 ஆம் ஆண்டின் பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார். 1884 ல் ஏங்கெல்ஸ் எழுதி வெளியிட்ட “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலின் பிரச்சினைகளை லஃபார்கின் நூல் தொடருகிறது என்றும் சொல்லலாம்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவராலும் பெரிதும் பாராட்டப் பட்ட ஹென்றி லேவிஸ் மார்கன் என்ற மானுடவியலாளர் இந்நூல் குறித்து கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். இந்நூல் “சொத்து குறித்த கருத்தின் பரிமாண அறிவிற்குத் தீர்க்கமான உருக்கொடுத்தது. சில அம்சங்களில் பார்த்தால், மனித இனத்தின் மன வரலாற்றில் மிகவும் முக்கியமான பகுதியாக இது விளங்குகிறது”.

சொத்தின் வரலாறும் மனித மனத்தின் வரலாறும் பரஸ்பரத் தொடர்பும் ஒப்புமையும் கொண்டவை என்ற மார்கனின் கருத்து நமது கவனத்தைக் கவருகிறது. குறிப்பாக இந்தியத் தத்துவங்களில் வாசிப்பினைக் கொண்டவர்களுக்கு இக்கருத்து சில தெளிவுகளை ஏற்படுத்துகிறது. இந்தியத் தத்துவங்களில் பல, குறிப்பாக அற இலக்கியங்கள், மனித மனத்தில் விளையும் பற்று, பந்தம், பாசம், தளை, ஆசை, ஆணவம், அகங்காரம் போன்ற பல விடயங்களைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன. மனித மனத்தின் இவ்வகைப்பட்ட “அழுக்குகளை” அப்புறப்படுத்தினால் மனிதன் உயிர்த் தூய்மை அடைந்து “வீடு” பேற்றை எட்டமுடியும் என்று அவை கூறுகின்றன. மனித மனத்தின் இவ்வகை “அழுக்குகள்” எல்லாம் உண்மையில் தனி உடமைச் சொத்தின் உளவியல் விளைவுகள் என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அர்த்தத்தில் தனி உடமைச் சொத்து என்பது நமது தத்துவங்களில் அதிகம் பேசப்படும் நிலையாமைக் கொள்கைக்கு அடிப்படையாக விளங்குகிறது என்பதையும் நாம் உணர்கிறோம். அற இலக்கியங்களில் பேசப்படும் நிலையாமைக் கொட்பாடு தனி உடமைச் சொத்து குறித்த உளவியல் விமர்சனத்தையும் அழுத்தின் வழி அதனை தாண்டிச் செல்வதற்கான எத்தனிப்பையும் கொண்டுள்ளது என்பதையும் காண்கிறோம். இவ்வகைப் பிரச்சினைகள் தொடர்ந்த ஆய்வுகளைக் கோருகின்றன.

நூலின் அமைப்பை இனி உற்று நோக்குவோம்: இருவகைப் பொதுச் சொத்துக்களையும் மூவகை தனிச் சொத்துக்களையும் நூலாசிரியர் வகைப்படுத்துகிறார்.

சொத்து உருவானபோது அதனுடன் குற்றங்கள், தண்டனைகள், சிறைச்சாலைகள், சட்டம் இன்ன பிற உண்டாகின்றன என்பதையும் காணுகிறோம்.

நிலவுடமைக் காலத்தில் நிலப் பிரபுகள் (நிலக்கோமான்கள்), அரசர்கள், பேரரசர்கள் உருவாகி விட்டார்கள். அவர்கள் காவிய நாயகர் களாகவும் கடவுளராகவும் சித்தரிக்கப்பட்டனர். பண்ணை அடிமைகள் விசுவாசம், கீழ்ப்படிதல், பணிவு, நேர்மை, கடமைகள், நன்றியுணர்வு ஆகியவற்றுக்குப் பழக்கப்படுத்தப் பட்டார்கள். சட்ட வல்லுநர்கள் அரசு நிலங்களை, பொது நிலங்களைக் கோமான்களின் நிலங்களாக ஆக்கிக் கொடுத்தார்கள். கடவுளின் பெயரால் போர்கள், கொள்ளைகள் நிகழ்த்தப்பட்டன. எல்லைகளில் வாழ்ந்த இனக்குழுக்களைக் கடவுளற்றவர்கள் எனக்கூறிப் படையெடுத்து அழித்தனர். அரச அதிகாரம், திருச்சபை அதிகாரம் என்ற இரட்டை ஆட்சி நடைபெற்றது. மடாலயங்களுக்கான கட்டாய நன்கொடைகள் பெருகின.

14, 15 ஆம் நூற்றாண்டுகளில் விவசாயிகள் நிலத்தை விட்டு விரட்டப்பட்டார்கள். இது குறித்து மார்க்சும் எழுதியிருக்கிறார். விவசாயிகளை ஒத்த பல தொல்குடிகள் கடற்கரைகளில் மீனவர்களாக மாற்றப்பட்டனர். விவசாயிகள் பல வேளைகளில் பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டனர். அதே வேளைகளில் பிச்சை எடுப்பது சட்டத்தால் தடை செய்யப்பட்டது. காடுகளின் பரப்புகள் படிப்படியாகக் குறைந்தன. விவசாயிகளுக்குக் கடன்கள் வழங்கப்பட்டு அவர்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் ஊடாக நவீன முதலாளியச் சொத்து உருவாயிற்று.

முதலாளியச் சொத்து உருவாக்கத்திற்கு வணிகமும் எந்திரக் கருவிகளும் மிகப்பெரிய உந்து சக்திகளாக அமைந்தன. நாடெங்கும் உருவான சந்தைகள் முதலாளியச் சொத்துடமையை முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் புரட்டிப் போட்டன. தொழில் உற்பத்திக்கான கச்சாப் பொருட்களும் உற்பத்திக் கருவிகளான எந்திரங்களும் சரக்கு களாக மாற்றம் பெற்றபோது, அவற்றுக்கு இணையாகத் தொழிலாளர் களின் உழைப்புச் சக்தியும் சரக்காக மாறியது. முதலாளிய உற்பத்தி வட்டம் முழுமையடைந்தது. இப்போது அனைத்துமே சரக்குமயமாகி விட்டன. முதலாளியத் தொழில் உற்பத்திக்கு எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவே கல்வியும் உடல் ஆரோக்கியமும் இயற்கையும் பாதுகாக்கப்பட்டன. நிதி நிறுவனங்கள், வங்கிகள் மக்களின் சேமிப்புகளை தொழில் அதிபர்களின் சேமிப்புகளாக மாற்றிக் கொடுத்தன. அரசு நிறுவனம் உலகமெங்கும் தமது முதலாளிகளுக்கான சந்தைகளைத் தேடிக் கண்டு பிடித்துக் கொடுக்கும் முகவர்களாகத் தொழில்பட்டன.

சொத்து என்பது ஒரு பொருளோ, உற்பத்திக் கருவிகளோ, வாழ்க்கைக்கான வசதியோ அல்ல. அது சமூகப் பொருளாதார உறவுகளின் சுருக்கமான ஆனால் முனைப்பான வடிவம் என்பது இந்நூலில் விரிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. வரலாறு நெடுக சொத்தின் பரிணாமம் தேடிக் கண்டடையப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரும் அவரவர் நாட்டின் சொத்தின் சொந்த வடிவங்களை நினைவுக்குக் கொண்டு வரும்போது இந்நூலில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

திரு வேட்டை கண்ணன் அவர்கள் இந்நூலை மிகவும் முயன்று தமிழுக்கு மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். இந்நூல் இந்தியச் சூழல்களில் சொத்தின் வரலாறு குறித்த விவாதங்களுக்கும் புரிதல் களுக்கும் நம்மை இட்டுச் செல்லும்.

“மார்க்சிய செவ்வியல் நூல் வரிசை” என்ற புதிய வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இந்நூலை வெளிக் கொணருகிறது. இயக்குனர் குழுவின் வழிகாட்டுதலின்படி நியூ செஞ்சுரியின் மேலாண் இயக்குநர் நண்பர் சண்முகம் சரவணன் மிகுந்த அக்கறையுடன் இந்நூல் வரிசையைத் திட்டமிட்டுள்ளார். பிராங்பர்ட் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் உலகப் புத்தகப் பெருவிழாவில் நேரடியாகக் கலந்து கொண்டு, புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு, உரிமைகள் பெறப் பட்டு, மொழியாக்கம் செய்யப்படுகின்றன. நூலாக்கத்தில் தோழர் தி. ரத்தினசபாபதி மற்றும் திருமதி துர்கா தேவி, நண்பர் ஜெயராஜ் ஆகியோர் உடன் நின்று பணியாற்றியுள்ளனர். இந்நூல் வரிசையில் பல நூல்கள் விரிவான வாசிப்பையும் விவாதங்களையும் வேண்டுவன. அவை தமிழ்ச் சூழல்களில் மார்க்சியத்தின் பரப்பை விரிவாக்கும் என நம்புகிறோம். மதுரை

அன்புடன்
ந. முத்துமோகன்

நூல் : சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை
ஆசிரியர் : தமிழில்: வேட்டை எஸ். கண்ணன்
விலை : ரூ.₹250
வெளியீடு :NCBH
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *