தா.சந்திரகுரு எழுதிய "நட்சத்திரங்களுக்குள் பயணம் செய்தவர்கள் | ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா நினைவுகளில் இருந்து புத்தகம் - www.bookday.in

தா.சந்திரகுரு எழுதிய “நட்சத்திரங்களுக்குள் பயணம் செய்தவர்கள் | ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா நினைவுகளில் இருந்து – நூல் அறிமுகம்

“நட்சத்திரங்களுக்குள் பயணம் செய்தவர்கள் | ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா நினைவுகளில் இருந்து” – நூல் அறிமுகம்

இன்னும் எத்தனை ரோஹித்கள், முத்துகிருஷ்ணன்கள், அனிதாக்கள் மரணத்திற்காக இந்த சமூகம் காத்திருக்க வேண்டும் ?

ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன் மற்றும் அனிதா ஆகிய மூன்று போராளிகளும் நாம் காண முடியாத தூரத்திற்கு சென்று விட்டார்கள். வெளிச்சத்தை தேடி, நட்சத்திரங்களை நோக்கி பயணித்து விட்டார்கள்.

ரோஹித் வெமுலா சமூக அநீதிகளுக்கு எதிரான இயக்கங்கள் ஒவ்வொன்றிலும் தன்னை இணைத்துக் கொண்டிருந்தவர். தான் பயின்ற கல்வி வளாகத்தில் இருந்த சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக தனது வலுவான கண்டனங்களை தெரிவிப்பவராக இருந்தவர்.

முத்துகிருஷ்ணன் சமூக நீதியை பேசும் குழுக்களோடு தன்னை இணைத்துக் கொண்டிருந்தவர். தனது எம்பில் பட்ட ஆய்வுக்கான முன் வரைவை 38 முறை மீண்டும் மீண்டும் எழுதியுள்ள தோழர்.

அனிதா தனது படிப்புக்கான தயாரிப்புகளோடு சேர்ந்து நீட் தேர்வில் இருந்து, தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும் என கேட்டு வழக்கு மன்றத்தின் படிக்கட்டுக்களில் ஏறி இறங்கியவர்.

இவர்கள் மூவரும் ஒவ்வொருவரும் தங்களுக்காக மட்டுமல்ல எல்லோருக்குமான புதிய வாழ்வுக்காக தங்கள் வாழ்வை இழந்து இருக்கிறார்கள்.

ரோஹித் வெமுலாவின் மரணம் என்பது ஒரு நிறுவனமே உருவாக்கிய மரணம் என்பதே உண்மை.

சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக போராடி, நெருக்கடிகளில் தங்களை மரித்துக்கொண்ட ஆய்வு மாணவர்களின் எழுத்துக்களும், இன்றும் களத்தில் சளைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களின் எழுத்துக்களும் ஒருசேர தொகுக்கப்பட்டு இருக்கும் இந்த புத்தகம் உயர்கல்வி வளாகங்களில் தலித் மாணவர்களின், இடமும், குரலும் மறுக்கப்படுவதை பற்றிய கொப்பளிக்கும் தொகுப்பு நூல்தான் இது.

கல்வி நிலையங்களுக்குள் நிகழ்கின்ற மாணவர்கள் தற்கொலைகளில் மிகப் பெரும்பான்மையானவை தலித் மாணவர்களின் தற்கொலைகளாகவே இருக்கின்றன.

கல்விக் கட்டணம் சார்ந்த பிரச்சினைகள், சமூக ஒடுக்குதல், சாதி பாரபட்சம் ஆகியவற்றுடன் தேர்வில் தோல்வி பயம், வளாகங்களுக்குள் சந்திக்கின்ற அவமானங்கள், நிர்வாகங்களில் அடாவடியான விதிமுறைகள், அலட்சியம் போன்றவையும் இத்தகைய தற்கொலைகளுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளதாக இந்நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். உயர்கல்வி நிலையங்களுக்குள் தலித் மாணவர்கள் தினந்தோறும் அவமானப்பட்டு கூனி குறுகி உலவ வேண்டிய சூழலே தொடர்ந்து நிலவி வருகிறது.

பல்வேறு தடைகளை மீறி உயர்கல்வி வளாகங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுகின்ற இந்த விளிம்பு நிலை மாணவர்கள் தரம் என்ற பெயரால் மீண்டும் அங்கே ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவர்களுடைய சாதனைகள் அங்கே பாராட்டப்படுவதில்லை. அவர்களுடைய வெற்றிகள் அங்கே கொண்டாடப்படுவதில்லை. தங்களுக்கு எதிராக கட்டமைக்கப்படுகின்ற இத்தகைய பாகுபாடுகளுக்கு எதிராக எதிர்குரலை மிகச் சில தலித் மாணவர்களே எழுப்ப முடிகின்ற சூழல்தான் உயர் கல்வி வளாகங்களில் இன்றைக்கு தொடர்ந்து நிலவி வருகின்றது.
இதை மீறி சுயமான முனைப்பு கொண்ட தலித் மாணவர்களிடம் சிறிய அளவில் முன்னேற்றங்களை கொண்டு வந்து சேர்த்து இருக்கிறது என்பதை உண்மை.

சமுதாய ஒடுக்குமுறைகளை மீறி இந்த மாணவர்களால் ஏற்படுத்த முடிந்திருக்கிற இத்தகைய சாதனைகள் உயர்சாதி வர்க்கத்தினிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதன் விளைவாக அறிவார்ந்த சமத்துவம் மிக்க மனிதநேய பார்வை கொண்ட பாதையில் நடக்கும் தலித்துகளின் பயணத்தை தடை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் உயர் ஜாதினர் மேற்கொள்ளுகிறார்கள். எதிர்த்து போராடுகின்ற தலித் மாணவர்களின் குரல்கள் நசுக்கப்படுவது மட்டுமல்லாது அவர்களை விடுதியில் இருந்து விலக்குவது, இடை நீக்கம் செய்வது, நிதி உதவிகளை நிறுத்தி வைப்பது போன்ற அனைத்தையும் செய்து அவர்களுடைய வாழ்க்கையை பாதிக்கின்ற வகையில் தண்டனைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கல்வி அறிவு அதிகரிக்கின்ற ஒரு சமூகத்தில், மதவெறியும் சாதி வெறியும் சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நகை முரணான செயல் ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கத்தின் கோர முகத்தை வெளிச்சத்தை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய கல்வி என்ற முழக்கங்களுடன் கொண்டுவரப்படுகின்ற கொள்கை மாற்றங்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை உயர் கல்வி அமைப்புக்குள் இருந்து வெளியே தள்ளி உயர் கல்வியை குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் கொண்டு சேர்க்கும் வகையிலேயே அமைத்து கொள்கிறார்கள் என அருமையாக நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

பள்ளிக்கூடங்களில் தனியாக அமர வைத்தல், தனியாக வைக்கப்பட்டிருக்கும் வேறு பாத்திரங்களில் உணவு பரிமாறுதல், கைகளில் தலித்துகள் என்பதற்கான அடையாளப் பட்டையை கட்டுதல் இவர்களை மட்டும் வகுப்பறைகளையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்ய சொல்லுதல், தலித் சமையல்காரர்கள் தயாரித்த உணவை உண்ண மறுக்கும் சக மாணவர்கள் என்பது போன்ற செயல்களால் இவர்களுடைய சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் தினந்தோறும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றன.

இதுபோன்ற பல்வேறு அமைப்பு சார்ந்த வன்முறைகள் எவ்வித கூராய்களும் கண்டுபிடிக்க முடியாத வகையில், தலித் மாணவர்களின் உடலிலும் மனதிலும் யாருக்கும் புலப்படாத காயங்களை ஏற்படுத்தி விடுகின்றன.

மிக உயர்ந்த நிலையில் முதலாவதாக வைக்கப்பட்டு இருக்கும், பிராமணர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாகவும் அல்லது பூஜை செய்பவர்களாகவும் இருக்கின்றனர். இரண்டாவதாக இருக்கும் சத்திரியர்கள் பெரும்பாலும் ராணுவம் மற்றும் நிர்வாக பணிபுரிவர்களாக இருக்கின்றனர். மூன்றாவதாக உள்ள வைசியர்கள் வணிகம் செய்பவர்களாகவும் இறுதியாக தாழ்ந்த நிலையில் உள்ள சூத்திரர்கள் கடைநிலை வேலை பார்ப்பவர்களாகவும் இருக்கின்றனர்.

தலித் மாணவர்கள் ஏற முடியாத அளவிற்கு மிக உயரமான மலை போன்று ஆங்கிலம் இருக்கிறது . ஆங்கிலத்தில் படைப்பாற்றல் மிக்கவராக தலித் ஒருவர் இருந்தாலும் கூட அவரிடம் இருக்கின்ற தகுதி ஆழமான கருத்துக்கள் தனித்தன்மை ஆகியவை குறித்து மதிப்பிடப்பதுவதில்லை.
மாறாக மிக சரளமான உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் பேசுவதை வைத்து அவர்கள் மதிப்பிடப்படுகிறார்கள்.

இந்திய தலைநகரான புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தில் நிலவுகின்ற ஜாதிய பாகுபாடு குறித்து மிக அருமையாக பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் இந்த சமூகத்தில் ஏராளமான தலித்துகள் தோல்வியடைகின்ற இடங்களாக பல்கலைக்கழகங்கள் மாறி இருக்கின்றது என்ற லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் சார்பில் வெளிவந்த ஆய்வு ஒன்றையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்று பல்வேறு ஆய்வு முடிவுகளை நமக்கு இந்த நூல் வழங்குகிறது. குறிப்பாக சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக போராடி நெருக்கடிகளில் தங்களை மரித்துக்கொண்ட ஆய்வு மாணவர்களின் எழுத்துக்களும் இன்றும் களத்தில் சளைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களின் எழுத்துக்களும் ஒரு சேர தொகுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நூலில் உள்ள அனைத்து கட்டுரைகளையும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் தமிழாக்கம் செய்துள்ளார் நூலாசிரியர் சந்திரகுரு.

நூலாசிரியருக்கும் பதிப்பாளர்களுக்கும் மிகுந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இந்த நூல் அனைவரும் வாசிக்க வேண்டும். நட்சத்திரங்களுக்குள் பயணம் செய்தவர்கள் அத்தோடு பாகுபாடு இல்லாத சமத்துவ உலகத்தை படைப்பதற்கு நாமும் நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும் .

நூலின் விவரங்கள்:

நூல்: “நட்சத்திரங்களுக்குள் பயணம் செய்தவர்கள்… ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா நினைவுகளில் இருந்து..”
ஆசிரியர்: தா.சந்திரகுரு
பதிப்பகம்: வாசல் வெளியீடு
விலை: ரூ.140
தொடர்பு எண்: 98421 02133

எழுதியவர் : 

✍🏻 –  MJ. பிரபாகர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *